காபூலில் மிதமான குளிர்காலம். ஆனால், ஆஃப்கனின் அரசியல் அதிகார மட்டங்கள் மாறுதல்களின் வருடமான 2014-ஐ அச்சத்துடன் எதிர்நோக்கியவாறு இருப்பதால் இறுக்கமான, மூட்டமான ஒரு மனநிலையே அவற்றிடையே காணப்படுவதைச் சமீபத்திய எனது காபூல் பயணத்தின்போது உணர்ந்தேன். பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதால், காபூலின் கடைவீதிகளிலும் அதே மாதிரியான நிலைதான்.
ஆஃப்கனின் நகர்ப்புற இளைஞர்கள் சற்று அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அராஜகமும் உள்நாட்டு மோதல்களும் நிலவிய நாட்களை நோக்கி மறுபடியும் நாடு செல்லக் கூடாது என்பதில் அவர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். தலிபன்களின் கலகப் போக்கும் வன்முறையும் பஸ்துன் பிரதேசங்களில் அதன் செல்வாக்கும் ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறது. இருப்பினும், மேற்குலகின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்பட்சத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி குறிக்கப்பட்டிருக்கும் அதிபர் தேர்தல் நியாயமான முறையில் நடந்து ஒழுங்கான அரசு அமையுமென்றால், மேற்கண்ட அச்சுறுத்தலை ஆஃப்கன் பாதுகாப்புப் படையினரால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தானின் கவனமெல்லாம் அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் மீதும், தலிபன்களுடனான உள்நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீதும், அதிபர் தேர்தல் மீதும் மையம் கொண்டிருக்கிறது. இன்னொரு விஷயமும் இந்த விவாதத்தினூடே இழையோடிக்கொண்டிருக்கிறது; 2014 செப்டம்பருடன் முடிவடையக்கூடிய தனது பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கும் விளையாட்டுகளில் ஹமீத் கர்சாய் ஈடுபடுவாரா என்பதுதான் அது.
பதவியில் நீடிக்க ஆசையா?
தனது ‘ஓய்வு’ குறித்த நல்ல செய்திகளை எல்லாம் தன் பங்குக்கு அதிபர் கர்சாய் சொல்லியிருக்கிறார். மிக முக்கியமாக, அதிபர் தேர்தலுக்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதிபர், துணை அதிபர் ஆகிய பதவிகளுக்கான 11 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இறுதிசெய்துள்ளது.
எனினும், தொடர்ந்து பதவியில் நீடிப்பதையும் அதே நேரத்தில் அதற்காக விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இருப்பதையும் கர்சாய் விரும்புகிறார். இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த கர்சாயின் நிலைப்பாடு பெரும்பாலான ஆஃப்கானியர்களுக்கு உவப்பானதாக இல்லை. இந்த ஒப்பந்தம் நவம்பர் மத்தியில் இறுதிசெய்யப்பட்டது. அதைக் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கர்சாய் அனுப்புவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவசியமாக இருந்தது. நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் முன்னே மரபான லோயா ஜிர்காவை (மாபெரும் சபை) அழைத்து அதன் ஆதரவைப் பெறுவதென்று கர்சாய் முடிவெடுத்தார்.
இருதரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து லோயா ஜிர்கா எடுத்திருந்த நிலைப் பாட்டில் நாட்டு மக்களின் மனநிலை நன்கு வெளிப்பட்டிருந்தது. கர்சாய்தான் அதைத் தவறாக எடைபோட்டுவிட்டார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
பன்னாட்டுப் படைகள் வேண்டும்
தலிபன்களைக் குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஆஃப்கன் வீடுகளுக்குள்ளேயெல்லாம் புகுந்து தேடியிருக்கிறார்கள். இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தானின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள பஸ்துன் மக்களிடையே ஆழமான கசப்புணர்ச்சி காணப்படுவது உண்மைதான். அதே போல் அமெரிக்கக் குண்டுவீச்சின்போது அப்பாவிப் பொதுமக்கள் பலியானது குறித்தும் கோபம் நிலவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, காட்டாட்சியை நோக்கி மறுபடியும் சென்றுவிடுமோ என்று ஆஃப்கன் மக்கள் அஞ்சுகிறார்கள். 2014-க்குப் பிறகும் அமெரிக்க, நேட்டோ படைகளின் சிறு பகுதி ஆஃப்கானிஸ்தானில் இருக்க வேண்டியது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அவசியம் என்று பெரும்பாலானோர், பஸ்துன் மக்கள் உட்பட கருதுகிறார்கள். அடிப்படையில், இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு லோயா ஜிர்கா ஒருமனதாக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அதன்மூலம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கர்சாய் விரும்புகிறார்.
இருந்தபோதிலும், இந்த ஒப்பந்தத்துக்கு ஜிர்கா ஒப்புதல் அளித்ததோடு மட்டுமல்லாமல் டிசம்பர் இறுதிக்குள் கர்சாய் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவிடம் புதிய நிபந்தனைகளை கர்சாய் விதித்ததும் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் 2014, ஏப்ரல் மாதம்தான் கையெழுத்திடுவேன் என்று அவர் கூறியதும் ஜிர்காவின் தலைவரான ஹஸ்ரத் சிப்கத்துல்லா மொஜெதெடியைக் கோபத்துக்குள்ளாக்கின.
அமெரிக்காவுடன் விரோதப் போக்கு
கர்சாய் இப்போது அமெரிக்காவுடன் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்; இரு தரப்புக்கிடையேயும் பரஸ்பர நம்பிக்கை இல்லை என்றும் கூறுகிறார். ஆரம்பத்தில் இப்படி எல்லாம் இல்லை. இந்தக் கட்டுரையாளர் 2002-ல் கர்சாயை முதன்முதலில் சந்தித்தபோது, தலிபன்களின் கொடுங்கோன்மையிலிருந்து ஆஃப்கானிஸ்தானை விடுவித்ததில் அமெரிக்கா ஆற்றிய பங்கை கர்சாய் மிகவும் மெச்சினார். அந்நாள் அதிபர் புஷ்ஷுடன் நெருக்கமாக இருந்த கர்சாய், ஒபாமாவிடம் அப்படியெல்லாம் இல்லை. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமைப் பட்டியலில் இனி ஆஃப்கானிஸ்தான் இருக்காது என்ற உண்மையையும் ஆஃப்கானிஸ்தானிலிருந்து முறையான வெளி யேற்றத்தையே அமெரிக்கா விரும்புகிறது என்ற உண்மையையும் கர்சாயால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் எப்படியும் கர்சாய் கையெழுத்திட்டுவிடுவார். ஆஃப்கானிஸ் தானின் எதிர்காலத்துக்கு மிகவும் இன்றி யமையாத மேற்குலகின் முழுமையான ஆதரவு – அதாவது, ராணுவ ரீதியிலான ஆதரவும் மக்கள் ஆதரவும்- இதனுடன் தொடர்புடையது என்பதை கர்சாய் அறிவார். இந்தத் தாமதம் மேலும் பல நிச்சயமற்ற தன்மைகளை அதிகரித்திருக்கிறது. இதனால், ஆஃப்கன் பணமதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. கூடவே, ஆஃப்கனுக்கு வெளியே வசிக்கும் ஆஃப்கானியர்கள் தங்கள் தாய்நாட்டில் முதலீடுசெய்வது குறித்து எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளைத் தள்ளிப்போட வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தலிபன்களுடன் நல்லுறவு
தலிபன்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான தேடலை கர்சாய் இடைவிடாது மேற்கொண்டுள்ளார். தலிபன்களின் பிடி வாதத்தால் டோஹா முயற்சி தோல்வியைத் தழுவியது. அடிப்படையில் பார்த்தால் கர்சாயுடன் சமரசம்செய்துகொள்வதில் தலிபன்களுக்கு ஆர்வமே இல்லை. ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க, நேட்டோ படைகள் இருப்பதை தலிபன்கள் எதிர்த்துவருவதால், இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் தலிபன்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தலிபன்களுடனான பேச்சுவார்த்தையை முடுக்கிவிடுவதற்காக, பாகிஸ்தானால் ‘விடுவிக்கப்பட்ட’ முல்லா பரதர்மீது கர்சாய் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளார். .
தலிபன்களிடையே முல்லா பரதரின் இடம்குறித்து எந்தத் தெளிவுமில்லை. எது எப்படி இருப்பினும் தலிபனின் பிரதானத் தலைவர்கள் தங்களின் இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளை விட்டுக்கொடுப்பதாக இல்லை. உண்மையில், பழமையான ஆஃப்கன் மரபுகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பல வகைகளில் எதிரானவையே இந்தக் கோட்பாடுகள்.
பதவியில் தான் தொடர்வது பேச்சு வார்த்தையின் வெற்றிக்கு அவசியம் என்று தன் நாட்டு மக்களுக்கு கர்சாய் சொல்லக் கூடும்். கர்சாய் போய்த்தொலைய வேண்டும் என்றும் அதன் பின் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படுத்தலாம் என்றும் நினைப்பவர்கள் இருந்தாலும், சில ஆஃப்கானியர்கள் கர்சாயின் மேற்கண்ட நிலையை ஆதரிக்கவும் கூடும்.
ஸ்திரத்தன்மையற்ற அரசியல் காட்சிகள்
நாட்டில் ஏற்படும் கலகங்களை அடக்குவதற்கு அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடக்க வேண்டியது அவசியம். 2009 தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் தகிடுதத்தங்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. முன்னாள் வெளியுறவு அமைச்சர்களான டாக்டர். அப்துல்லா, ஜல்மாய் ரசூல், முன்னாள் நிதி அமைச்சர் அஷ்ரஃப் கனி ஆகியோர்தான் பிரதான வேட்பாளர்கள். அப்துல்லாவைத் தவிர எல்லாருமே பஸ்துனியர்கள்தான்.
அதிபர் வேட்பாளர்கள் பட்டியலே ஆஃப்கனின் அரசியல் ஸ்திரமின்மையையும் ஆஃப்கானிஸ்தானின் அரசியல் களத்தில் இனக் குழுக்கள், இனத் தலைவர்கள் தொடர்ந்து பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகிறது. தன் சகோதரர் கய்யும் கர்சாய் உட்பட எந்த வேட்பாளரையும் தான் ஆதரிக்கப்போவதில்லை என்று கர்சாய் கூறியுள்ளார். ஆனால், தனது பிரியத்துக்குரிய ஒருவருக்கு (அநேகமாக ஜல்மாய் ரசூலுக்கு) திரைமறைவில், தனது நிர்வாகத்தின் ஆதரவை கர்சாய் தரலாம் என்று பலரும் சந்தேகிக்கிறார்கள். இப்போதைக்கு டாக்டர் அப்துல்லாதான் முன்னணி வேட்பாளர்.
ஆஃப்கானிஸ்தானை முன்னோக்கிச் செலுத்துவதில் முக்கியப் பங்கும் பொறுப்பும் அதிபர் கர்சாய்க்கு இருக்கிறது. விரும்பத் தகாத விளையாட்டுக்களை விளையாட நினைக்கும் மனப்போக்கை அவர் கைவிட்டு விட்டு, மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நாட்டைத் தயார்ப்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்கான, தொலைநோக்குப் பார்வை அவருக்கு இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி.
விவேக் கட்ஜு, ஆஃப்கானிஸ்தானுக்கும் மியான்மருக்குமான இந்தியத் தூதராக இருந்தவர்.
‘தி இந்து’, தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago