24X 7 - ஒளிபரப்புகளின் பின்னியங்கும் அரசியல்!

By எஸ்.வி.வேணுகோபாலன்

ஒரு நிமிடக் கட்டுரை



24X7 கொடுமையும் அதன் அரசியலும் சாதாரணமான தல்ல. 2008 தாஜ் ஓட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்ததை அடுத்து, தேசிய சேனல்கள் தங்கள் கேமராக்களுடன் தாஜ் விடுதி முன்பு நாட்கணக்கில் உட்கார்ந்திருந்ததைச் சொல்லலாம். நவம்பர் 26, 2008 அன்று நடந்தது தாக்குதல். நவம்பர் 27 அன்று முக்கிய மனிதர் ஒருவர் மரித்தார். கடந்துபோகிற செய்தியாக மட்டுமே வாசிக்கப்பட்டது அவர் பெயர். அதன் அரசியல் ஆழமானது. ஏனெனில், இறந்துபோன அந்தத் தலைவர், பிற்பட்ட வகுப்பினருக்கான சமூக நீதிப் போராட்டத்தில், சாதகமான முடிவெடுத்து அமலாக்கும் பொறுப்பில் இருந்தவர். மிகக் கடுமையான எதிர்ப்பு - மிரட்டல் எல்லாவற்றையும் புறந்தள்ளி, அமலாக்கம் செய்துவிட்டுத்தான் பதவியை விட்டு இறங்கியவர். வி.பி.சிங் என்று அறியப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்கின் புகழ்மிக்க அரசியல் வாழ்க்கை, தனித்துவமிக்க கலைத்திறன், முக்கியத்துவம் வாய்ந்த மண்டல் கமிஷன் அமலாக்கம் எல்லாம் சிலவரிச் செய்திகளாக முடிக்கப்பட்டன.

அப்படியான ஒரு அரிய மனிதருக்கே இந்தக் கதி எனில், தமிழகத்தில் மிக எளிய மனிதர்களது வாழ்க்கைப் போராட்டங்களோ, பொருள்மிகுந்த சாதனைகளோ, எதிர்வினைகளோ, அதிகாரத்துக்கு எதிராக நிற்கத் துணியும் கதைகளோ எந்த மூலைக்கு?

கடந்த வாரத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து 24X7 மிக அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் ஜனநாயகம். அடுத்தது, சட்டப்படியான ஆட்சி. குறைந்தபட்ச ஜனநாயக உணர்வோடாவது தாங்கள் சட்டமன்றத்தையோ, ஆட்சியையோ, நிர்வாகத்தையோ நடத்திவந்ததாகக் கூறிக்கொள்ள எந்த தார்மிக உரிமையும் அற்றவர்கள் ஜனநாயகம் பற்றி முழங்கிக் கொண்டிருப்பதை எப்படிச் சகிப்பது? சட்டமன்றத்தில் விவாதிக்கவோ, கலந்து ஆலோசிக்கவோ, மாற்றுக் கருத்துகளுக்குச் செவிசாய்க்கவோ மாட்டோம் என்ற அகந்தையோடு, விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளைச் செய்வதில் ருசி கண்டிருந்த ஆட்சியாளரின் தொடர்ச்சிதானே இவர்கள்?

ஆக, சட்டத்தை மதிக்க இம்மி அளவேனும் விருப்பமோ, மரியாதையோ அற்றவர்கள், கடந்த வாரம் முழுவதும் ‘சட்டம் சட்டம்’ என்று துள்ளத் துடிக்கக் கதறியதை 24X7 அலைவரிசைகளில் நாம் காணக் கொடுத்து வைத்திருந்தோம். ஜெயலலிதா அதிகாரத்தைப் பயன்படுத்தி கிரிமினல் குற்றம் இழைத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பதை வசதியாகக் கடந்துபோய், அந்தத் தீர்ப்பை அந்தக் கட்சியினரின் ஒரு பகுதியினரே, போட்டி கோஷ்டிக்கு எதிரான வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

ஆரோக்கியமான ஜனநாயக மாற்றுச் சிந்தனைகளுக்கு மறந்தும் இடம்தராது, முரண்பாடுகளை விவாதிக்கவே நேரம் வழங்காது, மக்கள் நலன் சார்ந்த விவாதப் பொருள்களுக்கு மேடையே அமைக்காது பார்த்துக்கொள்வது தற்செயலானதா, நுட்பமான அரசியல் சார்ந்ததா என்பதே இளைய தலைமுறையினர் உற்று கவனிக்க வேண்டிய செய்தி. அதுதான் வரலாறு திரும்பத் திரும்ப மக்களுக்கு போதிப்பது!

தொடர்புக்கு: sv.venu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்