தொட்டபெட்டாவில் கொல்லப்பட்ட ஆட்கொல்லிப் புலியைப் பார்த்துச் சிலர் வேதனைப்படுகிறார்கள். உண்மையில், அது தேவையான ஒன்று. இந்த என்கவுன்டர் நடவடிக்கையும்கூட புலிகள் பாதுகாப்பின் ஒரு முக்கிய அம்சமே. ஏனெனில், புலிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை அதன் இதர பாதுகாப்பு அம்சங்களையும்விட புலிக்கும் மனிதனுக்குமான சுமூக உறவு இன்றியமையாதது.
புலிக்கும் மனிதனுக்குமான உறவு
புலி ரகசிய வாழ்வு மேற்கொள்ளும் பிராணி. அது தனது ஜோடியைக்கூடத் தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் இருப்பதைப் பெரும்பாலும் விரும்புவது இல்லை. பாலியல் தேவைக்கு மட்டுமே ஜோடிகள் கூடும். குட்டிகள் ஈன்ற பின்பு தாய்ப் புலி இரண்டு ஆண்டுகள்வரை குட்டிகளை உடன் வைத்து பயிற்சி அளிக்கும். பின்பு விரட்டிவிடும். அந்த குட்டிகள் தாயின் எல்லைக்குள்ளும் இருக்க இயலாது; பிற புலிகளின் எல்லைக்குள்ளும் செல்ல இயலாது. புலிகள் அதன் இரை விலங்குகள் ஆதாரத்தைப் பொறுத்து, சராசரியாக ஐந்து சதுர கிலோ மீட்டர் முதல் 50 சதுர கிலோ மீட்டர்வரை தனது எல்லையை வரையறுத்துக்கொள்கின்றன.
அவை சிறுநீர் தெளிப்பு மூலமோ மரங்களில் நகக்கீறல்களைப் பதிவுசெய்வதன் மூலமோ தங்களின் எல்லை அதிகாரத்தை நிலைநாட்டுகின்றன. புலிகள் மனிதர்களை விரும்புவதும் இல்லை; பொருட்படுத்துவதும் இல்லை. மனிதர்களைக் கண்டால் விலகிச் சென்றுவிடும். மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இவ்வாறான மோதல் இல்லாத போக்கே அவற்றின் பாதுகாப்புக்கும் காட்டின் உயிர்ச் சூழலுக்கும் உகந்தது.
கடினமான சூழலில் கட்டமைத்த பிம்பம்!
தொடக்கத்தில் மனிதர்களின் பொழுதுபோக்குக்காகவும் வீரத்தை நிரூபிக்கவும் புலிகள் வேட்டையாடப்பட்டன. பின்பு,மருத்துவத்துக்காகவும் மூட நம்பிக்கைகளுக்காகவும் சீனா மற்றும் ஜப்பானின் வனப் பொருள் மாஃபியாக்கள் புலிகளின் தோல், எலும்பு, பல் முதலான உறுப்புகளுக்கு ரத்தினக் கம்பளம்விரித்தன. லட்சம் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1,700 ஆகக்குறைந்தது. இவ்வாறாக தொடங்கிய புலிகள் மீதான வேட்டைமோகம், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் தணிந்தது.
புலிகள் மீது மக்களுக்கு அக்கறையை ஏற்படுத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம், வனப் பொருட்கள் கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய அமைப்பான டிராஃபிக் போன்றவை மேற்கொண்ட நடவடிக்கைகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்தியாவில் கடந்த மாதம் நடந்த முதல்கட்ட புலிகள் கணக்கெடுப்பில்தான் புலிகள் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்திருப்பது தெரியவந்தது. இவ்வாறாக, புலிகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஓரளவு ஓங்கியிருக்கும் நிலையில்தான் ஆட்கொல்லிப் புலியால் மூன்று மனித உயிர்கள் வேட்டையாடப்பட்டன.
ஆயுள் அல்லது மரண தண்டனை!
முதலில் அந்தப் புலியை உயிரோடு பிடிக்கத்தான் வனத்துறை முயற்சித்தது. மூன்று மனிதர்களைக் கொன்று, ஒரு மாட்டைக் கொன்ற பிறகும்கூட, புலி பதுங்கியிருந்த இடத்துக்கு மிக நெருக்கமாக மறைவிடங்களை அமைத்து, வன ஊழியர்கள் காத்திருந்தார்கள். உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது. ஆனால், புலி சிக்கவில்லை.
புலியைக் கொல்ல வனத் துறையில் யாருக்குமே மனம் வராத சூழலில், மக்களின் பாதுகாப்புக்கும் உயிர்களின் இழப்புகளால் ஏற்பட்ட மன உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்க வேண்டிய சூழல். அதனாலேயே புலியைச் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டது. உயிரோடு சிக்கினால், ஏதாவது ஒரு சரணாலயத்தில் அடைத்து வைத்துப் பராமரிக்கலாம். ஆயுள்தண்டனை; இல்லை எனில் மரண தண்டனை. கடைசியாக, அந்த ஆட்கொல்லிப் புலி தேயிலைப் புதருக்குள் சிக்கியபோதும்கூட புலியை வெளியே வரவழைக்க வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்கள். அப்போதும் புலி வெளியேறாததால் புதருக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு புலி கொல்லப்பட்டது. இப்போது கொல்லப்பட்ட புலிக்கும்கூட தமிழக வனத் துறை தேசியப் புலிகள் ஆணையத்துக்கும் தக்க காரணங்களுடன் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயம்.
புலிகள் மீதான வெறுப்பு மக்கள் மனதில் தேங்கிவிடக் கூடாது என்பதுதான் புலி கொல்லப்பட முக்கியக் காரணம். ஓர் ஆட்கொல்லிப் புலியால் மீண்டும் அதன் இயல்பான வன வாழ்க்கைக்குத் திரும்ப இயலாது. புலி எதிர்பாராதவிதமாக மனிதனைத் தாக்கி உப்புச் சுவையுள்ள ரத்தம், மாமிச சுவை கண்ட பிறகே அவை ஆட்கொல்லியாக உருவெடுக்கிறது. மீண்டும் மனித வசிப்பிடங்களைத் தேடி வருகிறது.
ஏன் கொல்ல வேண்டும்?
ஆட்கொல்லிப் புலியால் வனப் பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் புலி உள்ளிட்ட வன உயிரினங்களின் மீதும் வெறுப்பு வளரும். அவை மீதான காழ்ப்புணர்ச்சியால் இறந்த கால்நடைகளின் இறைச்சியில் விஷம் வைப்பது, நாட்டு வெடிகுண்டுகளை வைப்பது போன்றவையும் நடக்கலாம். சமயத்தில் ஆட்கொல்லிப் புலி அடித்துவிட்டுப்போக, அப்பாவிப் புலி மாட்டிக்கொள்ளும். விலங்குகளின் மீதான வெறுப்பு காடுகளின் மீதும் பற்றிக்கொள்ளும். வளமான காட்டின் குறியீடு புலிகள். உயிர்ச்சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் குறியீட்டை நாம் அழித்துவிடக் கூடாது. அந்த வகையில், ஆட்கொல்லிப் புலி கொல்லப்பட்டதும்கூட புலிகள் பாதுகாப்பின் ஓர் அம்சமே.
டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago