அரசியல் பணமயமாதல் தேசியப் பிரச்சினை.. ஆர்.கே. நகர் அதன் எல்லை அல்ல!

By சமஸ்

தேர்தல் ஆணையம் ‘ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் ரத்து’ என்று அறிவித்தபோது, உடைந்து உட்கார்ந்தவர்களில் எங்களுடைய புகைப்படக்காரரும் ஒருவர். ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. அவருடைய மரணத்துக்குப் பின் ஆளும் அதிமுக இரண்டாகிவிட்ட நிலையில், அடுத்து கட்சியின் லகான் யார் கையில் என்பதையும் தீர்மானிக்கும் காரணிகளால் ஒன்றாக இந்த இடைத்தேர்தல் மாற்றப்பட்டிருந்தது. விளைவாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஊடகர்கள் பெரும் அலைச்சலில் இருந்தார்கள். இனி ஒரு இடைவெளி விட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திரும்பவும் அலைய வேண்டும். தேர்தல் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், களத்தில் நிற்கும் 62 வேட்பாளர்களில் பெரும்பாலான சிறிய கட்சிகள் / சுயேச்சை வேட்பாளர்களின் நிலையும் இதுதான். திரும்பவும் செலவழிக்க வேண்டும், திரும்பவும் அலைய வேண்டும். மாறாக, யாரை முன்வைத்துத் தேர்தலை ரத்துசெய்திருக்கிறார்களோ அவர்களுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் கிடையாது; இன்னும் சொல்லப்போனால், கூடுதல் அனுகூலம். இப்படியான அமைப்பை எப்போது மாற்றப்போகிறோம்?

தொகுதிக்குள் நான் ஒரு சுற்று சுற்றி வந்தேன். ஒரு ஓட்டுக்கு ரூ.7,000 கிடைப்பதாகச் சொன்னார்கள். ஆளுங்கட்சியின் ஒரு பிரிவின் சார்பில் ரூ.4,000; இன்னொரு பிரிவின் சார்பில் ரூ.3,000. பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சியின் சார்பிலும் ரூ.2,000 போயிருக்கிறது. “ஜெயலலிதாம்மா தேர்தல்ல நின்னப்பவே ரெண்டு முறையும் பணம் கொடுத்தாங்களே, இப்பம் என்ன எல்லாம் ஏதோ புதுசா நடக்குற மாதிரி பேசுறாங்க?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி அதிமுகவினரிடம் கேட்டால், அவர்கள் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று சொல்லி திமுகவை நோக்கிக் கை காட்டுவார்கள். திமுகவினரைக் கேட்டால், “காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே ஓட்டுக்கு அரையணா காசு கொடுக்கும் கலாச்சாரம் இருந்ததே!” என்பார்கள். எல்லாவற்றுக்குமே ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. அதனாலேயே அசிங்கங்களைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. உண்மையில், இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் நாள்பட்ட ஒரு புற்றுக்கட்டியின் சீழையே ஆர்.கே.நகர் தொகுதி வெளிப்படுத்துகிறது. ஆனால், அதை வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகளால் மறைத்து, புனுகுத் தைலம் பூசி இதுகுறித்த விவாதத்தைத் தமிழக எல்லையோடு, சுருக்கிவிட முற்படுகிறது இந்திய அரசு.

ஒவ்வொரு மாநிலத் தேர்தலின்போதும் கவனித்துவருகிறேன். தேர்தலில் பணத்தின் பங்கு தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை எங்கும் உருப்படியான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையத்தால் எடுக்க முடிந்ததே இல்லை. உத்தர பிரதேசத்திலும் மணிப்பூரிலும் வீடியோ ஆதாரங்களோடு சிக்கினார்கள். என்ன செய்ய முடிந்தது? பஞ்சாபில் பாஜக - சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் அளிப்பது பெரும் விவாதம் ஆனபோது, “யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், ஓட்டை மட்டும் எங்களுக்குப் போடுங்கள்” என்றார் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால். தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடிந்தது? அர்விந்த் கேஜ்ரிவாலுக்குத்தான் நோட்டீஸ் அனுப்ப முடிந்தது. பிஹாரில்

2015-ல் தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்விலேயே 80% வாக்காளர்கள் “ஓட்டுக்குப் பணம் வாங்குவதிலோ, பலன்களைப் பெறுவதிலோ தவறு இல்லை” என்று பகிரங்கமாகச் சொன்னார்கள். கள்ள மௌனத்தைத் தவிர இதற்கு இந்திய அரசின் எதிர்வினை என்ன?

ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டின்பேரில், நாட்டிலேயே முதல் முறையாக - 2016 சட்டசபைப் பொதுத் தேர்தலின்போது - அரவக்குறிச்சியிலும், தஞ்சாவூரிலும் தேர்தலை ரத்துசெய்து, ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் நடத்தியது தேர்தல் ஆணையம். தேர்தல் முடிவில் இந்நடவடிக்கையால் என்ன மாற்றத்தை உண்டாக்க முடிந்தது? எந்த இரு கட்சிகளின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டப்பட்டார்களோ, அவர்களே முதல் இரு இடங்களிலும் வந்தார்கள். இப்போதும் அதே நடவடிக்கையை எடுப்பதன் மூலம் எதைச் சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறது தேர்தல் ஆணையம்?

இப்போது இதனூடாகவே நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், வருமான வரித் துறையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டபூர்வ அதிகாரம் இருக்கிறதா? உதாரணமாக, மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படியொரு குற்றச்சாட்டு எழுந்தால், இதே மாதிரியான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையத்தால் அங்கு எடுக்க முடியுமா? உள்ளபடி இந்தப் பிரச்சினையின் மைய வேர் தேர்தல் ஆணையத்திடம் இல்லை; நம்முடைய சட்ட அமைப்பிடம் இருக்கிறது; இந்திய அரசிடம் இருக்கிறது.

இந்திய அரசியல் பணமயமாகிவருவதை நாம் வாக்காளரிடம் பணம் போகும் இறுதிப் புள்ளியிலேயே பேச விரும்புகிறோம்; மாறாக, அரசியல் கட்சிகள் வசம் பணம் வந்தடையும் அதன் தொடக்கப் புள்ளியில் நாம் பேச வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை அதிகாரப்படுத்துவது, தேர்தல் ஆணையத்தை மேலும் அதிகாரப்படுத்துவது தொடர்பில் ஆரம்ப நாட்களிலிருந்து பேசப்பட்டுவந்தாலும், மத்தியில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் இதில் அக்கறை காட்டவில்லை. தேர்தல் சீர்திருத்தத்தைப் பற்றி, குறிப்பாக தேர்தல் செலவுகளை அரசே ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறுவதை வெளிப்படையாக்குவது குறித்தும் தொடர்ந்து மக்கள் இயக்கங்கள் பேசிவருகின்றன. ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகவே செய்கிறது.

வருமான வரித் துறைக்குக் காட்டிய கணக்குப்படியே 10 ஆண்டுகளில் ரூ. 11,367 கோடியை நன்கொடையாக வாங்கியிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள். ஏறத்தாழ இதில் 70% எந்த வகையில், யாரிடமிருந்து வந்தது எனத் தெரியாது என்கின்றன. நன்கொடை பெறுவதிலும் சரி, ஆதாரம் தெரியாது என்று சொல்வதிலும் சரி, முதலிடத்தில் இருக்கும் இரு கட்சிகள் காங்கிரஸும் பாஜகவும். மாற்றம் எப்படி வரும்?

ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் மோடியின் அரசு சமீபத்தில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை, அரசியலைப் பணமயமாக்குவதை மேலும் பல மடங்கு அதிகரிக்கக் கூடியது. நிறுவனங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமீபத் திய திருத்தத்தின்படி, இனி நிறுவனங்கள் தாங்கள் எந்தக் கட்சிக்கு நிதி வழங்கினோம் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டியதில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் நிதி வழங்கலாம், வெளியில் சொல்ல வேண்டியதும் இல்லை.

இப்படியெல்லாம் வரும் பணம்தானே கீழே வாக்காளர் வரை பாய்கிறது? ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஓட்டுப் போடச் சொல்லி பணம் கொடுக்கிறார்கள் என்றால், தினகரன் வீட்டுப் பணத்தையா கொடுக்கிறார்கள்? ஏதோ ஒரு நிறுவனத்தின் / முதலாளியின் பணம்தானே அது? அந்த நிறுவனம் / முதலாளி பின்னாளில் அரசின் கொள்கை முடிவுகளில் சாதகங்களை எதிர்பார்க்கத்தானே செய்வார்? தேசிய அரசியலில் மோடி கோலோச்ச தொடங்கிய காலகட்டத்தில் அதானியின் செல்வம் 152% உயர்ந்ததற்கும் பாஜகவுக்கு அதானி குழுமம் அளித்த நன்கொடைக்கும் துளி சம்பந்தம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

2014-ல் அதிகாரபூர்வ அறிவிப்பின்படியே பாஜகவின் தேர்தல் செலவு ரூ.712 கோடி. காங்கிரஸின் தேர்தல் செலவு ரூ.486 கோடி. “அதிகாரபூர்வமற்ற கணக்குகளையும் சேர்த்தால், எல்லோருடைய செலவும் சேர்த்து மொத்தம் ரூ.30,000 கோடி இருக்கலாம். இந்தத் தொகை வருங்காலங்களில் மேலும் பல மடங்கு அதிகரிக்கும்” என்கிறது ஊடக அறிவியல் மைய ஆய்வறிக்கை. நடப்பு மக்களவை உறுப்பினர்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள்.

இந்திய அரசியல், ஏழைகளுக்கும் சாமானியர்களுக்கும் முற்றிலுமாக அந்நிய மாகிக்கொண்டிருக்கிறது. செல்வத்திலும் ஊழலிலும் திளைக்கும் அரசியல்வாதி களைப் பார்க்கும் சாதாரண மக்கள் வெறுத்துப்போய் நிற்கிறார்கள். பலர் அரசியல்வாதிகளிடம் தண்டத் தொகை வசூலிப்பதுபோலவே பணம் பெறுவதைக் கருதுகிறார்கள். நமக்கு உண்மையாகவே துர்நாற்றம் பிரச்சினை என்றால், நாம் பார்வையைச் சாக்கடையின் தோற்றுவாய் நோக்கித் திருப்ப வேண்டும். மாறாக, நாம் மூக்கை மூடுவதோடு முடித்துக்கொள்ளவே விரும்புகிறோம்.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்