இன்று, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-ம் பிறந்த நாள். நாட்டின் கடைக்கோடி சாமானிய ஏழைகளுக்கும் சட்டம், நீதியின் வெளிச்சம் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கித்தான் அவரின் செயல்பாடுகள் இன்னும் இருக்கின்றன.
நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல வடிவங்களைக் கடந்துவந்தவர். இந்தப் பயணம் நெடுகிலும் ஏழை மக்களுக்கான சமூக நீதி மீதான கரிசனத்தினை வெளிப்படுத்தினார்.
பொதுவுடைமை இயக்கத் தொடர்பு
அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கேரளத்தின் பாலக்காட்டில் அவர் பிறந்தார். அவரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டிக்கு இடம்பெயர்ந்தது. புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடிவந்தார். இதனால் ஒரு சமயம் நீதிபதி ஒருவர்கூட அவரைத் தனியே அழைத்து “கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆஜராகி ஏன் பெயரைக் கெடுத்துக்கொள்கிறீர்கள், உங்களை போலீஸார் உளவு பார்ப்பார்கள்” என்று எச்சரிக்கையும் செய்தார். நாடு விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், காவல் துறையினர் கோபத்துடன் இருந்தனர். தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகப் பாதுகாப்புச் சட்டத்தில் 1948 மே மாதத்தில் வழக்குப் பதிவுசெய்து, காவல் துறை அவரைக் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைத்தது. சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் அவர் நேரடியாக உணர இது உதவியது.
பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் 1952 தேர்த லில் போட்டியிட்டபோது, வி.ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாணப் பிரச்சினைகளுக்காக அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் ராயலசீமா மக்களுக்குக் கஞ்சித் தொட்டி நிர்வகிப்பது குறித்தும், மலபார் நெசவாளர்களின் நிலைகுறித்தும் சட்டமன்றத்தில் அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தையும் வறுமையையும் மக்கள் எதிர்கொண்ட நிலையில், அன்றைய முதல்வர் ராஜாஜி, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகை அறிவித்தார். அரசு ஊழியர்களைக் கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை, வி.ஆர். கிருஷ்ணய்யர் 1952 ஜூலையில் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை சுட்டிக்காட்டியது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957-ல் அவர் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.
அமைச்சர் கிருஷ்ணய்யர்
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது. கேரள முதல்வர் நம்பூதிரிபாடும் வி.ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர். ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சினையை ஏற்படுத்தினர். காமராஜர் தலையீட்டால் பிரச்சினை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது. இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு வி.ஆர். கிருஷ்ணய்யர் திட்டமிட்டார். ‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார். மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சட்டமன்றத்திலிருந்து நீதிமன்றத்துக்கு
1959-ல் அவர் பங்கேற்றிருந்த மந்திரி சபை நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின் 1960-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, இறுதியில், ஐந்து வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மீண்டும் சட்டமன்றம் சென்றார். இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியதும், கட்சி பிளவுபட்ட சூழலில் 1965-ல் தேர்தலைச் சந்தித்து வி.ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்தார். அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி.ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது செங்கோல் ஏந்தி 'உஸ்’என்று ஒலி எழுப்பி, ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேய நீதிபதிகள், இந்தியர்களைக் காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காகப் பின்பற்றிய அந்த வழக்கம் ஜனநாயக சமூகத்துக்கு ஏற்றதல்ல என்று வி.ஆர். கிருஷ்ணய்யர் அதை மறுத்தார்.
நெருக்கடி நிலை
1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். பின் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் அவருடைய தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தவை. வெறும் சட்டவாதமாக மட்டும் வழக்குகளைப் பார்க்காமல் அவற்றின் பின்னால் உள்ள சமூக, அரசியல், ஜனநாயகப் பிரச்சினைகளை அவர் தனது தீர்ப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார். 1975-ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முன் வந்தது. இந்திரா காந்தி பிரதமராகத் தொடரலாம் என்றும் ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பால் ஆறு மாதத்தில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு உருவானது. இதன் தொடர்ச்சியாகத்தான், 1975 ஜூன் 24-ம் தேதி நெருக்கடி நிலையை அவர் அறிவித்தார்.
ஏழைகளுக்கான நீதி
உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் வழங்கிய பல தீர்ப்புகள் ஏழைகளுக்கு அனுசரணையாக இருந்தன. இக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் சாமானிய மக்கள் எழுதிய கடிதங்கள்கூட சில சமயம் வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மரண தண்டனையை வி. ஆர். கிருஷ்ணய்யர் முற்றிலுமாக எதிர்த்தார். அதை, தண்டனை வடிவமாகக் கருத முடியாது என்பதில் உறுதியுடன் நின்றார். மேலும், இலவசச் சட்ட உதவி முறைக்கு அவர் உயிர்கொடுத்தார். 1980 நவம்பர் 14 வரை உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின்பும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும், முகம் அறியாத அனைவருக்காகவும் அவர் குரல்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
பழங்குடியினருக்கான நீதி
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், கர்நாடக - தமிழக அதிரடிப்படையினர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 1996-ல் ‘பழங்குடி மக்கள் சங்கம்’ சார்பில் நாங்கள் மனுத் தாக்கல் செய்தோம். வழக்கை எப்படி நடத்துவதென்ற விதி இல்லை என்று, மாவட்ட மனித நீதிமன்றத்துக்கே அந்த மனு திருப்பி அனுப்பப்பட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு நாங்கள் எழுதிய கடிதத்துக்கு அவர் எடுத்த நடவடிக்கையால், உயர் நீதிமன்றம் அதை வழக்காக எடுத்துக்கொண்டது. அதிரடிப்படை யின் அத்துமீறல்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த அந்த வழக்கு உதவியது. பழங்குடியினருக்காக நாட்டின் முக்கியமான மனிதர்கள் ஆதரவு தர முன்வந்தது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கியது. அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு, 1999-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர்கள் சென்றது, அரச வன்முறையை அம்பலப்படுத்த உதவியது. இந்தப் பின்னணியில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார். அதிரடிப்படையின் அத்துமீறல்களை விசாரிப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் குழு அமைக்கப்படுவதற்கு அந்தக் கடிதம் உதவியது.
நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், சமூகத்துக்குத் தொடர்ந்து நம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறார். மூத்த தலைமுறையினர், முக்கியமாகச் செய்ய வேண்டிய அரும் பணி இது. அவரை அவர் வாழும் காலத்திலேயே நினைவுகொள்வோம்.
- ச. பாலமுருகன், எழுத்தாளர், மனித உரிமைகள் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago