மாயமான் வேட்டை

By கே.சந்துரு

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் சம்பவங்கள் வருத்தத்தை அளிக்கின்றன. உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனங்களுக்காக அனுப்பப்பட்ட பட்டியல் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

பட்டியலில் இரு பெண் வழக்கறிஞர்கள் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று திராவிட கழகத்தின் சார்பாக உயர் நீதிமன்ற வாயிலில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. டெல்லி பெண் வழக்கறிஞர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி யை வழக்கறிஞர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாமில் பேசிய இந்திய தலைமை நீதிபதி மறுத்துள்ளார். மூத்த வழக்கறிஞர் காந்தியும் மற்றும் சில வழக்கறிஞர் சங்கத் தலைவர்களும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியைச் சந்தித்து நீதிபதிகள் நியமனப் பட்டியல்பற்றி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். அதற்கு எதிர்வினை ஏதும் ஏற்படாததால் காந்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதியுடன் மூத்த நீதிபதிகள் இருவரும் உள்ளிட்ட கொலிஜியம் அனுப்பிய பட்டியலில் ஒளிவுமறைவற்ற தன்மையில்லையென்றும், இதுவரை பிரதிநிதித்துவமில்லாத சாதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பட்டியலில் இடம்பெறவில்லையென்றும், குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கு வரம்பு மீறி அதிகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறைகூறினார்கள். அந்த வழக்கு நிலைக்கத் தக்கதுதானா என்பது இன்னும் நீதிமன்றத்தால் முடிவுசெய்யப்படவில்லை.

அதிர்ச்சி அலைகள்

அந்த வழக்கை விசாரிக்க முதலில் நியமிக்கப்பட்ட இரு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டதால் வேறு இரு நீதிபதி கள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அந்த நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாதென்று எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வழக்கு வேறு இருவர் கொண்ட மூன்றாவது அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும் தினத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றப் புறக்கணிப்புக்கு முடிவுசெய்தது. நீதிபதி பதவிக்கு இதுவரை கருதப்படாத மற்ற சாதியினருக்கும் பங்களிக்கும் வகையில் நியமனப் பட்டியல் இருக்க வேண்டுமென்றும், மூன்று பிராமண வழக்கறிஞர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது சமூகநீதிக்கு விரோத மென்றும், எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்த, ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கும் திறமையின் அடிப்படையில் வாய்ப்பளிக்க வேண்டுமென்று கூறிவருகின்றனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஊர்வல மொன்றும் நடைபெற்றது. வழக்குக்கு கிளைமாக்ஸ்போல் பதவியில் இருக்கும் நீதிபதியொருவர் நேரில் ஆஜராகி, பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்டியல் தனக்கும் அதிருப்தி அளிப்பதால், தானும் வழக்கு தொடரப்போவதாக கூறிச்சென்றது அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் நியமனம் குறித்து அதிருப்தி தெரிவித்து வழக்கறிஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளதும், நீதிபதிகளின் (கொலிஜியம்) முடிவுகளுக்கெதிராக வழக்கறிஞர்களும் – நீதிபதியும்கூட - நேரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதும் வேதனை அளிக்கிறது. போராடத் துணிந்துள்ள பிரச்சினை குறித்துப் பொதுநல வழக்குகள் போடப்பட்டு விசாரணையில் இருக்கும்போதே நேரடிப் போராட்டத்தில் ஈடுபடுவது சட்ட உலகுக்கு கௌரவம் அளிக்காது.

தற்போதுள்ள நடைமுறை

தற்போதுள்ள நீதிபதிகள் நியமன நடைமுறை 1993ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அட்வகேட்ஸ்-ஆன்-ரெகார்டு என்ற வழக்கின் தீர்ப்பு அதற்குப் பின்புலமாக இருந்தது. உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அந்தத் தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் நியமனத்தை நீதித் துறையே தன் கையிலெடுத்துக்கொண்டது. நீதித் துறையின் சுதந்திரத் தன்மையை பாதுகாக்கவே அந்தத் தீர்ப்பு என்ற நியாயமும் கூறப்பட்டது.

1993-ம் ஆண்டு நியமன நடைமுறைப்படி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதி நியமனத்துக்குத் தகுந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, இரு மூத்த நீதிபதிகளின் கருத்துகளைப் பதிவுசெய்து பட்டியலை மாநில ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியல்பற்றி முதலமைச்சரின் கருத்துக்களை அறிந்துகொண்டு மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பும் வேண்டும். மத்திய அரசின் சட்டத் துறை அந்தப் பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பும் போது வேண்டுமெனில் கிடைக்கப்பட்ட உளவுத்துறையின் குறிப்புகளையும் உச்ச நீதிமன்றத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பட்டியல் வரும் மாநிலத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பதவி வகிக்கும் நீதிபதியின் கருத்தையும் தெரிந்துகொண்டு, அவருக்குக் கீழேயுள்ள இரு மூத்த நீதிபதிகளின் கருத்தை எழுத்து மூலமாகப் பதிவுசெய்து, நியமனப் பட்டியலை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அமைச்சரவையின் உயர் நியமனக் குழு ஒப்புதலுக்குப்பின் அந்தப் பட்டியல் குடியரசுத் தலைவர் நியமன ஆணை வழங்க அனுப்பப்படும். சிபாரிசு செய்யப்பட்ட பெயர் ஏதேனுமொன்றில் ஆட்சேபணையிருந்தால் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தனது கருத்தைத் தெரிவிக்கலாம். அதற்குப் பின்னும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் மறுபடியும் பரிந்து ரைத்தால் அந்தப் பெயரைக் குடியரசுத் தலைவருக்குக் கட்டாயமாக மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும். இதன் பின்னரே குடியரசுத் தலைவர் நீதிபதி நியமனத்திற்கான உத்தரவை பிறப்பிப்பார். அப்படியொரு நபர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுவிட்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்க நாடாளு மன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிப்பு தேவை. இன்றுள்ள நடைமுறையில் வழக்கறிஞர்களின் பிரதி நிதிகளைக் கலந்தாலோசிக்க எவ்வித ஏற்பாடுமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

நியமனம்பற்றிய விமர்சனங்கள்

கடந்த 20 ஆண்டுகளில் உயர் நீதிமன்றங் களின் நீதிபதிகள் நியமனத்தில் அநேகமாக எந்த விதப் பங்கும் அரசுக்கு வழங்காமல் நியமனங்கள் நடைபெற்றதுபற்றிப் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகள் ரூமா பால், ஆர்.எம். சஹாய், யு.எல். பட், முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சொராப்ஜி எனப் பலரும் கொலிஜியம் நியமன நடைமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பல தரப்பினரின் அதிருப்திக்கு ஆளான நீதிபதிகள் நியமன நடைமுறையை மாற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதுடன் அதற்குண்டான அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங் களையும் மேற்கொண்டது. நியமன நடைமுறை மாற்றத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது இந்திய பார் கவுன்சில். அதன் உதவித் தலைவர் பிரபாகரன் தனது அறிக்கையில் புதிய நியமனக் குழுவில் பார் கவுன்சில் பிரதிநிதிகளுக்கு இடமில்லையென்றால் வழக்கறிஞர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்துவார்களென்று கூறினார். நீதிபதிகளின் நியமனச் சட்டத்தை ஆதரித்துப் பேசிய சட்ட அமைச்சர் கபில் சிபல், பார் கவுன்சிலின் எதிர்ப்பு அநாவசியமானதென்றும், புதிய நியமனக் குழுவில் சட்டநிபுணத்துவம் பெற்ற இருவர் நியமிக்கப்படுவார்களென்றும், அதன் படி வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் நியமனத் தில் பங்கிருக்குமென்றும் கூறினார்.

பலவீனமான வாதம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும், மெட்ராஸ் பார் அசோசியேஷனும் இந்தப் புதிய நியமனச் சட்டத்துக்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய சட்ட நடைமுறை வராவிட்டால் நீதிபதி நியமனங்கள் பழையபடி கொலிஜியத்தின் பரிந்துரைகள்படிதான் நடக்கும். அதில் வழக்கறிஞர்களுக்கு எவ்வித பங்கும் இருக்கப்போவதில்லை. அப்படி இருக்கும்போது நியமனங்களில் வழக்கறிஞர்களின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூறுவதற்குச் சட்டத்தில் இடமில்லை. அதேபோல் கொலிஜியத்தில் இடம்பெறும் தலைமை நீதிபதியும், இரண்டாவது (அ) மூன்றாவது இடத்தில் இருக்கும் நீதிபதிகளும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகிவிடுவதால் அவர்களுக்கு உள்ளுர் வழக்கறிஞர்கள்பற்றி போதிய ஞானமிருக்காது என்று கூறுவது கொலிஜிய நியமன நடைமுறையை மறைமுகமாக எதிர்ப்பதாகும். வெளிமாநிலத்திலிருந்து தலைமை நீதிபதிகள் நியமிப்பதை எதிர்க்காமல் தற்போதைய நடைமுறையிலேயே தங்களது குரல்களுக்கும் பங்கு கேட்பது வழக்கறிஞர்களது வாதத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது.

எல்லாச் சமூகத்தினருக்கும் இடமளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் அந்தப் பதவிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்திய தலைமை நீதிபதி, அனைத்து சமூகத்தினரையும் குறிப்பாக, சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களையும் மற்றும் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்படி புதிய நியமனங்களுக்குப் பரிந்துரைக்கும்படி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், நியமன நடைமுறையில் ஒளிவுமறைவற்ற தன்மை கோருவதும், அதில் தங்களது கருத்துகளுக்குப் பங்களிக்குமாறு போராடுவதும் வழக்கறிஞர்களது கோரிக்கைகளிலுள்ள முரண்பாட்டைத்தான் காட்டுகிறது. தற்போதுள்ள கொலிஜிய நடைமுறை மாற்றப்பட்டாலொழிய, ஒளிவுமறைவற்ற நீதிபதி நியமன நடைமுறை வரப்போவதில்லை. வழக்கறிஞர்கள் தங்களது மாயமான் வேட்டையைத் தவிர்த்து, புதிய நியமன நடைமுறைக்குக் குரல்கொடுப்பது காலத்தின் கட்டாயம்.

- சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்