குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க கூடுதல் போலீஸாரைப் பணியமர்த்திக்கொண்டே போனால், வீட்டுக்கு வீடு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டுமே என்று திகைத்தது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரக் காவல் துறை. அதனால், மாற்றி யோசித்து கணிதத்தை நாடியிருக்கிறது.
விஷயம் அதுவல்ல, இந்த ‘கணிதக் காவல் முறை’யைக் கடந்த இரண்டு ஆண்டுகள் பரிசோதனை செய்ததில், நல்ல பலனும் கிடைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதுவரையில் சோதனை அளவில் மட்டுமே அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவெடுத்திருக்கிறார்கள். மொத்தமுள்ள 21 காவல் நிலையச் சரகங்களில் 14-ல் இதனை நடைமுறைப்படுத்தப்போகிறார்கள்.
கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணித நிபுணரும், மானுடவியல் ஆய்வாளருமான ஜெப்ரி பிராண்டிங் ஹாம் உடன் இணைந்து இந்தச் சோதனையை 2001-ல் காவல் துறையினர் தொடங்கினர். கணிதத்துக்கும் மானுடவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?
ஏற்கெனவே, திபெத் பகுதியில் நாடோடிகள் குறித்து ஆராய்ந்தவர் பிராண்டிங்ஹாம். ‘பாதையின் குறுக்கே தென்படுகிற முயலைத் துரத்துவதா அல்லது, அதிக மாமிசம் தருகிற காட்டுப் பன்றியைத் தேடிச் செல்வதா?’ என ஆதிவாசிகள் முடிவெடுப்பதற்கும், ‘காவலற்ற தனி வீட்டைக் குறிவைப்பதா அல்லது, பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலான செல்வச் செழிப்பான பங்களாவைக் குறிவைப்பதா?’ என்று திருடர்கள் முடிவெடுப்பதற்கும் ஒற்றுமை இருப்பதைக் கண்டறிந்தார்.
அடுத்தடுத்து திருட்டுகள் நடைபெறும் பகுதியில் போலீஸ் கண்காணிப்பை அதிகரிப்பதன் மூலம், அந்தப் பகுதியில் குற்றம் நடைபெறுவதைத் தடுக்கலாம் என்றாலும், அது திருடுபவர்கள் வேறு பகுதிக்கு மாறும் போக்கைத்தான் தூண்டுகிறது என்பது இவரது கணிப்பு. இந்த வகையான கண்காணிப்பு முறையால் மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னார் பிராண்டிங் ஹாம். இதன் அடிப்படையில்தான், இந்தத் திட்டமே உருவானது.
இதற்காக மூன்று காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த, வீடு புகுந்து திருட்டு, கார் போன்ற வாகனத் திருட்டுகள், வழிப்பறிக் கொள்ளை, தாக்குதல் நடத்தி நிகழ்த்தப்பட்ட கொள்ளைகள் போன்ற குற்றங்களைக் கவனமாகச் சேகரித்துக் கணினியில் பதிந்தார்கள். இந்தப் புள்ளிவிவரங்களை ‘பிக் டேட்டா’ எனும் நவீனக் கணிதம் கொண்டு பகுத்து ஆய்ந்து, குற்றங்கள் நடைபெறும் விதத்தை இனம் கண்டு ‘கணினி அல்காரிதம்’ தயாரித்தார்கள். இதன்மூலம், அடுத்த 12 மணி நேரத்தில், எங்கே… என்ன மாதிரியான குற்றம் நடைபெற வாய்ப்புள்ளது என்று முன்கூட்டியே கணித்து, சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். சக்ஸஸ்!
எங்கெல்லாம் திருட்டுக் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அந்தக் கணினி கணக்கிட்டுச் சொன்னதோ, அங்கெல்லாம் கூடுதல் போலீஸாரை ரோந்து அனுப்பியதில், பல குற்றங்களை வரும்முன் தடுக்க முடிந்தது. மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. ஒரு மாத ஆய்வை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து 21 மாதங்கள் சோதித்துப் பார்த்துள்ளனர். குற்றத் தடய நிபுணரைவிட, இந்தக் கணினி அமைப்பு இருமடங்கு அதிகக் குற்றங்களை முன்கூட்டியே தடுத்துள்ளது. ஒரு குற்றம் நடக்கிற இடத்தை அந்த நிபுணர் 2.1% சரியாகக் கணித்துச் சொல்கிறார் என்றால், இந்தக் கணினி அல்காரிதமோ 4.7% சரியாக மதிப்பீடு செய்தது.
அப்புறமென்ன? இனி கணினியும் கையுமாகத்தான் காவல்துறை ரோந்துக்குப் போகும்போலத் தெரிகிறது. காவலர் கைத்தடியும் கணினியாக மாறலாம். இந்த ‘கணிதக் காவல்’ பயன்பாடு மேலும் மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
- த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர் மற்றும் மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago