ஒரு நகரத்தைப் பற்றி இப்படி ஒரு தலைப்புடன் எழுதலாமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பிழைப்பதற்காகச் செத்துக்கொண்டிருப் பவர்கள் வாழும் ஒரு நகரத்தைப் பற்றி எழுதும்போது வேறு எப்படித் தலைப்பிட முடியும்? நீங்கள் அலாங்கைப் பார்க்க நேரில் வர வேண் டாம்; அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் கதைகளைக் கொஞ்ச நேரம் கேளுங்கள். இதைவிட மோசமான ஒரு தலைப்பையே தேடு வீர்கள். அலாங்கின் கதை நாம் அவசியம் பேச வேண்டியது. ஏனென்றால், அதன் அழிவு, வளர்ச்சி என்ற சொல்லிலிருந்தே தொடங்குகிறது.
காம்பே வளைகுடாவின் கரையோரத்தில் இருக்கும் அலாங் ஒரு சுமாரான ஊர். கப்பல் உடைப்பு எனும் தொழில் இங்கே அறிமுகம் ஆகாமல் இருந்திருந்தால், அங்குள்ளவர்கள் இன்றைக்கும் மீன் பிடிக்கவும், அருகில் உள்ள ஊர்களுக்கு விவசாய வேலைகளுக்கும் சென்றுகொண்டிருக்கலாம். அது ஒரு நகரமாகவே உருமாறாமல் இருந்திருக்கலாம். ஆனால், குஜராத் ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் வளர்ச்சி தேவைப்பட்டது. விளைவு, இன்றைக்கு ஆசியாவின் மிகப் பெரிய கப்பல் உடைக்கும் தளமாக - வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியாக - உருவெடுத்து நிற்கிறது அலாங்.
அலாங்கில் ஆண்டுக்கு ஐநூற்றுச் சொச்சக் கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. ரூ. 10 ஆயிரம் கோடிக்குத் தொழில் நடக்கிறது. சுங்கத் துறைக்கு மட்டும் சுமார் சில நூறு கோடிகள் போகின்றன. உள்ளூர்க்காரர்களைத் தவிர உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா என வெளி மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. குஜராத் அரசு சொல்லும் புள்ளிவிவரங்களை மட்டும் கொண்டு அணுகினால், அலாங்கின் கதை வளர்ச்சியின் ஒரு குறியீடுதான். ஆனால், அலாங்கில் மனித வாழ்க்கை எதிர்கொள்ளும் அவலங்களைச் சந்தித்தால் அது ஒரு பெரும் எச்சரிக்கை!
ஆசியாவின் மிகப் பெரிய நச்சுத்தொட்டி
ஊர்க்காரரான லோவால்கரே முதலில் பேசினார். “எண்பதுகளில்தான் இந்த ஊரை, கப்பல் கழிவு ஊராக மாற்றினார்கள். கப்பல் உடைப்பு என்பது வெளியே பெரிய தொழில் மாதிரி சொல்லப்பட்டாலும், அடிப்படையில் இது கழிவுகளை வைத்துக் காசுபார்க்கும் தொழில்தான். ஒரு கப்பலை உடைக்கும்போது அதில் உள்ள அலங்காரப் பொருட்கள், மரச் சாமான்கள், மின்பொருட்கள் எல்லாம் போக எஞ்சுவது உலோகங்களும் ரசாயனங்களும். இப்படி எஞ்சுவதில் பத்தில் ஒன்பது பங்குக்கு மேல் இரும்பு கிடைக்கும். இந்த இரும்புதான் இந்தத் தொழிலின் மூலாதாரம். அது போக மீதி எஞ்சுபவை எல்லாம் ஆஸ்பெஸ்டாஸ், பாலி க்ளோரினேட் பைபினைல்ஸ், பாதரசம், ஆர்சனிக் போன்ற நச்சுப் பொருட்கள்.
ஒரு சாதாரண ரோந்துப் படகின் எடையே பல நூறு டன்கள் இருக்கும். அப்படியென்றால், கப்பலின் எடை? சுமார் 10 ஆயிரம் டன் தொடங்கி 50 ஆயிரம் டன் வரைகூட இருக்கும். இதில் ஒரு சதவீதம் நச்சுப் பொருட்கள் இருந்தாலே எவ்வளவு எடை இருக்கும்; அது ஊரை எவ்வளவு நாசமாக்கும் என்பது புரியும். இங்கே, வருஷத்துக்கு ஐநூறு கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. அதுவும் எந்த வழிமுறையும் இல்லாமல். என்னவாகும்? யோசித்துப்பாருங்கள்” என்கிறார்.
அலாங் கடற்கரையில் மோதும் அலைகள் வெறும் நுரைகளைத் தள்ளுவதில்லை. கும்பிபோல பாசியோடு எண்ணெயையும், இனம்காண முடியாத கழிவுகளையும் சேர்த்துத் தள்ளுகின்றன. ஒரு லிட்டர் தண்ணீரில் கிட்டத்தட்ட 22 மில்லி கிராம் வரை எண்ணெய்க் கழிவுகள் மட்டும் கலந்திருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அலாங்கைச் சுற்றி எங்கும் நிலத்தடி நீராதாரம் நாசமாகிவிட்டது. ஏராளமானோர் தோல்நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். புற்றுநோய், சிறுநீரக நோய், தொழுநோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். தொழுநோயாளிகள் சர்வ சாதாரணமாக உலவுகிறார்கள்.
“பிச்சை எடுக்கும் இந்தத் தொழுநோயாளிகளை யார் என்று நினைக்கிறீர்கள்? இங்கு வேலை செய்த முன்னாள் தொழிலாளர்கள்தான். கதிர்வீச்சு அபாயம் மிக்க இந்த ரசாயனங்களைக் கையாள்வதற்கான எந்த வசதிகளும் தொழிலாளர்களுக்கு இங்கு செய்துகொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம், தாங்கள் எவ்வளவு அபாயம் மிக்க பொருட்களைக் கையாள்கிறோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. ஏனைய இடங்களைவிடவும் கூடுதலாகக் கிடைக்கும் நூறு இருநூறுக்காகத்தான் அவர்கள் இங்கு வேலைக்கு வருவது. ஆனால், இந்தத் தொகை அவர்களுடைய உழைப்புக்கு அல்ல; உயிருக்குக் கொடுக்கப்படுவது’’ என்கிறார் சூழலியலாளர் ராஜ் படேல்.
புதைக்கப்படும் மரணக் கணக்குகள்
பலேஷ்வர் சொல்லும் தகவல் இன்னும் அதிர்ச்சிகரமானது. “ஒவ்வொரு வாரமும் இங்கு பிணம் விழும். இரும்புத் தட்டுகள் சரிந்து விழுந்து நேரிடும் விபத்தோ அல்லது எதாவது ஒரு ரசாயனம் தீப்பற்றியோ. ஆனால், விஷயம் வெளியே போகாது. நாலைந்து பேருக்கு மேல் செத்தால்தான் காவல் துறை வழக்குப் பதிவுசெய்யும். 1997-ல் நடந்த விபத்து நாடு முழுவதும் செய்தியானது. ஆனால், அப்போதும்கூட செத்தவர்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது 16 பேர். உண்மையில் செத்துப்போனவர்கள் 30 பேர்.
இங்கே உள்ள எல்லா முதலாளிகளும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். கோடிக் கோடியாக அள்ளுகிறார்கள். குறைந்தபட்சம் இந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல மருத்துவமனையைக்கூட அவர்கள் அமைத்துக் கொடுக்கவில்லை. ஒரு தொழிலாளி அடிபட்டால், 50 கி.மீ. தொலைவில் இருக்கும் பவநகருக்குத்தான் கூட்டிக்கொண்டு ஓட வேண்டும். புற்றுநோய், சிறுநீரக நோய்களைப் போல அல்லாமல், தொழுநோய் பரவுவது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்ட சூழலில்கூட, இந்த முதலாளிகள் என்ன செய்தார்கள் தெரியுமா? மாதா மாதம் தொழுநோய்ப் பரிசோதனை முகாம்களை நடத்த உதவுகிறோம் என்று அறிவித்தார்கள். அதுவும்கூட எதற்காக? அப்படி நோய் அறிகுறி தெரியும் தொழிலாளர்களை முன்கூட்டியே வேலையிலிருந்து அனுப்பிவிடுவதற்காக” என்கிறார் பலேஷ்வர்.
அலாங்கின் பூர்வக்குடிகள் ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, வெளியிலிருந்து வந்தவர்கள் இந்த ஊரை வரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஊரின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் தொழிலாளர்கள்தான். மனைவியையும் வேலைக்குக் கூட்டிச் சென்றால், கூடுதலாக ஐம்பது நூறு கிடைக்கும் என்பதால், பெரும்பாலான வீடுகளில் இருவருமே இந்த வேலைக்குத்தான் செல்கிறார்கள். ஆகையால், ஊரையும் தொழிலையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. வீதிக்கு நான்கு நோயாளிகளைப் பார்க்க முடிகிறது. “இன்னும் இந்தத் தொழில் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பார்க்கவில்லை. அதற்குள்ளேயே ஊரை இவ்வளவு நாசமாக்கிவிட்டது.போகப்போக என்னாகுமோ தெரியவில்லை. எங்கள் ஊர் இப்போது ஒரு அழிவுசக்தி. தன்னையும் அழித்துக்கொண்டு எங்களையும் அழிக்கும் சக்தி” என்கிறார்கள்.
அரசாங்கம் இதையெல்லாம் தடுக்க ஒன்றுமே செய்யவில்லையா? கேட்டால், ஆவேசமாகிறார்கள் மக்கள். “இங்கே பணம்தான் ஒரே அரசாங்கம். எந்த ஆட்சி வந்தாலும் இதுதான் நிலை. அரசாங்கம் இன்னும் எங்களை வதைக்காமல் விட்டாலே போதும்” என்கிறார்கள். அலாங்கிலிருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கும் மிதிவிருதியில் அணு உலை அமைக்க, சில மாதங்களுக்கு முன்புதான் அனுமதி அளித்ததாம் குஜராத் அரசு. இந்த ஆலைக்காகக் கையகப்படுத்தப்படும் 777 ஏக்கர் நிலத்தில் 603 ஏக்கர் விவசாய நிலமாம். விவசாயிகளின் கடும் எதிர்ப்பை அரசாங்கம் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை என்கிறார்கள்.
அலாங் கடற்கரையின் அலைகளின் இரைச்சலுக்கும் ‘டங்… டங்’ என்று இடிபோல இறங்கும் கப்பல் உடைக்கும் சத்தத்துக்கும் இடையில் இந்தக் குரல்கள் யாவும் அமுங்கிப்போகின்றன. எங்கோ எரிக்கப்படும் கழிவுகளிலிருந்து வெளியேறும் புகை எதிர்க் காற்றில் கலந்து மூச்சை அடைக்கிறது.
அலாங் எழுப்பும் கேள்வி
இந்திய நகர்மயமாக்கலின், தொழில்மயமாக்கலின் மோசமான உதாரணம் என்று அலாங்கைச் சொல்லலாம். ஆனால், அலாங் குஜராத்தில் மட்டும் இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு ரூபங்களில் இருக்கிறது. அதன் உச்சபட்ச வடிவம் அலாங். தொலைநோக்கற்ற தொழில் கொள்கை, இயற்கையையும் சூழலையும் நாசமாக்கும் பேராசை நோக்கங்கள், உழைப்பைச் சுரண்டிக்கொண்டு ஈவிரக்கமற்ற வகையில் தொழிலாளர்களை வதைக்கும் கலாச்சாரம் எல்லாவற்றையும் வணிகம் - வருமானம் - வேலைவாய்ப்பு என்கிற காரணங்களால் மூடி மறைக்கிறோம். வளர்ச்சி என்று அதற்குப் பெயரிடுகிறோம். நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு இவை எதுவும் நமக்குத் தெரியாததுபோலச் சாமர்த்தியமாகக் கடந்துபோகிறோம். உண்மையில், வளர்ச்சி என்ற வார்த்தையின் பொருள்தான் என்ன? வளர்ச்சியை முன்னேற்றம் என்று நாம் சொல்ல முடியுமா? அலாங்கிலிருந்து இந்தக் கேள்வி துரத்திக்கொண்டேயிருக்கிறது.
சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago