சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம் சிறப்புப் பேட்டி

By சமஸ்

இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.

எந்த வயதில் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது?

பள்ளிக்கூட நாட்களிலேயே. குடும்பத்திலும் அதை எதிர்பார்த்தார்கள். ஒரு பத்திரிகையை நடத்தும் குடும் பத்தில் இது சகஜம் இல்லையா?

உங்கள் தந்தை நரசிம்மன் பத்திரிகையாளர் அல்ல; நிர்வாகத்தில்தான் இருந்தார் அல்லவா?

ஆமாம். குடும்பத்தில் அப்போதே எங்கள் எல்லோருக்கும் இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பத்திரிகையின் நிர்வாக இலாகா அல்லது ஆசிரியர் இலாகா. அதற்கேற்ற கல்வியும் பயிற்சியும் முக்கியம். எனக்குச் சின்ன வயதிலிருந்தே எழுத்து ஆர்வம் இருந்ததால், ஆசிரியர் இலாகாவையே தேர்ந்தெடுத்தேன். இந்த விஷயத்தில் எனக்கு முன்மாதிரி என்றால், கஸ்தூரி ரங்க ஐயங்கார். நேரில் பார்க்கவில்லை என்றாலும், அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்களே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் பத்திரிகையாளர் மட்டும் அல்ல; சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தவர்.

திலகரின் ஆதரவாளர். பூரண சுதந்திரத்துக்காகக் குரல்கொடுத்த காங்கிரஸின் தீவிரமான குரல்களில் ஒன்று அவருடையது. அடுத்து, நீண்ட கால ஆசிரியர்களாக இருந்த கஸ்தூரி ஸ்ரீனிவாசனும் ஜி. கஸ்தூரியும். கஸ்தூரி ஸ்ரீனிவாசனின் கச்சிதத்தை எல்லோருமே குறிப்பிடுவார்கள். அதிகம் எழுத மாட்டார். ஆனால், எல்லாப் பிரதிகளையும் பார்த்துத் திருத்துவார். சின்னத் தவறுகள்கூட அவரை ரொம்பவும் சங்கடப்படுத்தும். ஜி. கஸ்தூரி வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் பத்திரிகையை அடுத்த தளத்துக்கு எடுத்துச்சென்றவர்.

இவர்களை எல்லாம் அருகில் இருந்து பார்த்தபோது, எழுத்தார்வம் கொண்ட ஒருவனுக்கு ஆசிரியர் இலாகாதானே ஆசையைத் தூண்டும்? ஆனால், வேலையில் விசேஷ சலுகை எல்லாம் கிடையாது. நிருபராகத்தான் சேர்ந்தேன். அடுத்து உதவி ஆசிரியர் பணி. என். ரவி, கே.வேணுகோபால், மாலினி பார்த்தசாரதி எல்லோருமே இப்படித்தான் உருவானோம்.

பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் உங்களுடையது. ஒரு காலகட்டம் வரை ‘தி இந்து’வும்கூட காங்கிரஸை ஆதரிக்கும் பத்திரிகையாகவே இருந்தது. நீங்கள் இடதுசாரியாக ஆனதையும் தீவிர அரசியலில் பங்கேற்றதையும் குடும்பம் எப்படிப் பார்த்தது?

அதிர்ச்சியாகத்தான் பார்த்தார்கள். கொஞ்சம் பேர் எதிர்க்கவும் செய்தார்கள். அதே அளவுக்கு ஆதரவும் இருந்தது. ஆனால், அரசியலில் தீவிரமாக இறங்கியபோது, நானே பத்திரிகையை விட்டு விலகியிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு வருஷம் கட்சி வேலைகளில் தீவிரமாக இருந்தேன். நெருக்கடிநிலைப் பிரகடனத்தின்போதெல்லாம் அதை எதிர்த்து வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு காலகட்டத்தில் ‘தி இந்து’ நிர்வாகத்துக்கு எதிராக நடந்த ஒரு பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது நான் ஊழியர்கள் பக்கம் இருந்தேன். ஆனால், குடும்பத்தினர் யாரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடவில்லை.

போபர்ஸ் செய்தி ‘தி இந்து’வுக்கே புலனாய்வு இதழியல் மீது ஒரு புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஆனால், அதற்குப் பின்னர் - நீங்களே தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலகட்டத்திலும்கூட - அப்படிப்பட்ட ஒரு பெரிய ‘ஸ்கூப்’ செய்தி வெளிவரவில்லை. ஏன்?

போபர்ஸுக்கு முன்பே 1981-ல் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினோம். இந்தியா நெருக்கடியில் இருந்த காலகட்டம் அது. சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) உதவ முன்வந்தது. அதேசமயம், ஏராளமான நிபந்தனைகளை இந்தியா ஏற்க வேண்டியிருந்தது. அந்த நிபந்தனைகளின் பின்னணியை அம்பலப்படுத்தினோம். அதேபோல, தாராப்பூர் அணு உலைக்கு அமெரிக்கா எரிபொருளைப் படிப்படியாகக் குறைத்தபோது, இந்தியா நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தையை வெளியே கொண்டுவந்தோம்.

இவை எல்லாம் அன்றைக்குப் பெரிய செய்திகள். போபர்ஸ் செய்திக்குப் பிறகும் அவ்வப்போது செய்திருக்கிறோம். சமீபத்திய உதாரணம் ‘விக்கிலீக்ஸ்’. ஆனால், போபர்ஸுடன் இவற்றை ஒப்பிட முடியாது என்பது உண்மைதான். அப்படி ஒரு காலச் சூழல் அமையவில்லை என்றும்கூடச் சொல்லலாம். உண்மையில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டுவர ஒரு அணியே செயல்பட்டோம்.

செய்தியில் கோணம் கலக்கக் கூடாது என்ற கொள்கையை வலியுறுத்துபவர் நீங்கள். ஒரு காலத்தில் பத்திரிகை படித்தால்தான் செய்தியைத் தெரிந்துகொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படியல்ல; இணையம் - சமூக ஊடகங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், 24 மணி நேரத் தொலைக்காட்சிகளே திணறுகின்றன. முந்தைய நாளே எல்லாச் செய்திகளும் வாசகர்களை அடைந்துவிடும் நிலையில், மறுநாள் பத்திரிகையிலும் வெறும் தகவல்களே செய்தியாக வந்தால் எடுபடுமா?

உண்மைதான். பெரிய சவால்தான் இது. ஆனால், இன்றைக்கும் இணையமோ தொலைக்காட்சிகளோ பத்திரிகைகளைப் போல செய்திகளை ஆழமாகக் கொடுப்பதில்லை. இத்தகைய சூழலில், பத்திரிகைகள் ஒரு நிகழ்வைத் தருகின்றன என்றால், வெறும் சம்பவத்தை மட்டும் செய்தியாகத் தராமல், அதன் பின்னணி, அதையொட்டிய தகவல்கள் என்று ஒரு திரட்டாகவும் சுவையாகவும் செய்தியை அளிப்பதன் மூலம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு காரணத்தை நாம் சாக்காக்கிக் கொள்ளலாம். ஆனால், செய்தியில் நம் பார்வைகளையும் முன்முடிவுகளையும் கலந்து கொடுத்தால் என்னவாகும்? ஆளாளுக்குச் செய்தியில் கை வைத்தால், படிக்கும் வாசகருக்குக் குழப்பம்தான் வரும்.

எப்போதுமே மதவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் ‘தி இந்து’ கடுமையாக இருந்திருக்கிறது. ஆனால், மதவாத எதிர்ப்பில் காட்டப்படும் தீவிரம், சாதிய எதிர்ப்பில் இல்லை என்ற விமர்சனம் ‘தி இந்து’ மீது உண்டு…

உண்மைதான். இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். சாதி நம் நாட்டின் பெரும் சாபம். அதை ஒழிக்க வேண்டிய கடமை எல்லோருக்குமே இருக்கிறது. முக்கியமாக ஊடகங்களுக்கு. ஒரு காலகட்டம் வரை நாம் போதிய கவனம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது அதன் போதாமை புரிகிறது. அதே சமயம், இதற்கான பின்னணியில் பல காரணிகள் உண்டு.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலும் சரி; சுதந்திரம் அடைந்த சூழலிலும் சரி, மக்களிடம் பிளவை உண்டாக்கும் செய்திகளைத் தவிர்க்க வேண்டும்; ஒற்றுமைதான் முக்கியம் என்ற கொள்கையை அன்றைய பத்திரிகைகள் பலவும் கடைப்பிடித்தோம். அப்புறம், சாதியப் பிரச்சினைகள் பல வெளியே தெரியவராமல் உள்ளூருக்குள்ளேயே அசமடக்கப்பட்டன. அப்புறம், இந்தத் தொழிலில் ஏனையோருக்கு இல்லாமல் இருந்த பிரதிநிதித்துவம். இன்றைக்கும் பத்திரிகைத் துறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இப்படிப் பல காரணிகள். ஆனால், இப்போது சரியான திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன்.

ஊழியர்கள் நலனுக்குப் பேர்போனது ‘தி இந்து’ குழுமம். ஆனால், 135 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாகக் குடும்ப நிர்வாகத்திலிருந்து தொழில்முறை நிர்வாகத்துக்கு (புரொஃபஷனல் மேனேஜ்மென்ட்) மாற்றப்பட்ட பின் கொண்டுவரப்பட்ட ஆசிரியர், தலைமை நிர்வாக இயக்குநர் இருவரும் ஒரே நாளில் பணியிறக்கம் செய்யப்பட்டபோது, ஊழியர் பணிப் பாதுகாப்பில் நீங்கள் காட்டும் அக்கறை கேள்விக்குள்ளானது…

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ‘தி இந்து’ குழுமத்தின் பெறுமானம் என்பது அதன் வியாபாரம், சந்தை மதிப்பை மட்டும் உள்ளடக்கியது இல்லை; அது காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் மதிப்பீடுகள், அறநெறிகளையும் உள்ளடக்கியது. அது கேள்விக்கு உள்ளானபோதுதான் மீண்டும் குடும்ப நிர்வாக முறைக்குத் திரும்பினோம். ஏனென்றால், இந்த மாதிரி அடிப்படை மதிப்பீடுகளைப் பேணுவதில் உரிமையாளர்களும் இயக்குநர்களுமாகிய எங்களுக்குள் என்றைக்குமே இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.

அதேசமயம், தொழில்முறை நிர்வாகத்தை (புரொபஷனல் மேனேஜ்மென்ட்) குறைத்து மதிப்பிட முடியாது; தொழில்முறை நோக்கு (புரொபஷனலிஸம்) இல்லாத ஓர் ஊடக நிறுவனம் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாது என்பதையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். ஆகையால், இனி தொழில்முறைப் பாதையில்தான் செல்லப்போகிறோம்; ஆனால், வெளியாட்களும் குடும்பத்து ஆட்களும் இணைந்து பங்கேற்பதாக அது இருக்கும்.

தமிழ் அடித்தளத்திலிருந்து எழுந்த ‘தி இந்து’ தமிழ்க் கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் பெரிய கவனம் கொடுத்திருக்கிறது. ஆனால், தமிழ் அடையாளத்தின் மையமான மொழி விஷயத்தில் எப்போதும் விளிம்பு நிலையிலேயே இருந்திருக்கிறது. என்ன காரணம்?

அக்கறை இல்லாமல் இல்லை. அதைச் செய்யக் கூடிய ஆட்கள் எங்களில் இல்லை என்பதும் செய்யக்கூடியவர்களை எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதும்தான் காரணம். அந்தக் குறையை எல்லாம் போக்கத்தான் இப்போது தமிழில் ‘தி இந்து’வைக் கொண்டுவந்திருக்கிறோம்.

ஆங்கிலத்திலிருந்து பிராந்திய மொழிகளில் அடி எடுத்துவைக்கும் முயற்சியைத் தமிழிலிருந்து தொடங்கியிருக்கிறீர்கள். தமிழ் அனுபவம் என்ன சொல்கிறது?

தமிழில் நல்ல விஷயங்களைக் கொடுத்தால் அதை வரவேற்க ஒரு பெரும் வாசகர் கூட்டம் இருக்கிறது என்பதும், ஆங்கிலத்தைவிட தமிழில் நாம் சொல்லும் விஷயம் எல்லாத் தரப்பு மக்களையும் போய்ச் சேர்கிறது என்பதும் தமிழ்ச் சூழல் சார்ந்து புரிந்துகொண்டது. சந்தை சார்ந்து சொல்ல வேண்டும் என்றால், பிராந்திய மொழி இதழியலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பது புரிகிறது. எனினும், ஆங்கிலத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவில் அது ஆழ வேரூன்றி இருக்கிறது. ஆங்கில இதழியல் நாடு முழுவதும் சென்றடைவதோடு, சர்வதேசக் கவனத்தையும் பெறுகிறது.

அடுத்து என்ன மாதிரியான திட்டங்களில் ‘தி இந்து’ இறங்கும்?

பேசிக்கொண்டிருக்கிறோம். தென்னக மொழிகளிலிருந்து வரிசையாகத் தொடரலாம்.

சரி, பத்திரிகையாளர் பார்வையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இந்தியாவைப் பார்த்திருக்கிறீர்கள். இந்தியாவின் பலம், பலவீனம், அது எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

பலம் - சோதனைகளுக்கு நடுவிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு நாம் வளர்ந்துகொண்டிருப்பது. பலவீனம் - சமத்துவமின்மை; பாகுபாடு; அதனால் விளைந்திருக்கும் வறுமை. மிக அடிப்படையான தேவைகள் கல்வியும் மருத்துவமும். இங்கு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைக்கும் கல்வி, மருத்துவ வசதிகளை ஒப்பிடுங்கள். எவ்வளவு பெரிய வேறுபாடு? இந்தப் பிளவுதான் நம் முன் இருக்கும் பெரும் சவால் என்று நினைக்கிறேன்.

இந்திய வரலாற்றில் நடந்த மாபெரும் வரலாற்றுத் தவறு என்று எதைச் சொல்வீர்கள்?

இந்திரா பிரகடனப்படுத்திய நெருக்கடிநிலை.

சமகாலத்துக்கு வருவோம். மோடி X ராகுல்: உங்கள் கருத்து என்ன? மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுமா?

மோசமான சூழல். தேர்தலில் என்னவாகும் என்று கேட்டால், காங்கிரஸின் ஊழல்கள், மோசமான கொள்கைகளின் விளைவாக, பந்தயத்தில் மோடி முந்தலாம்; ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா என்று கேட்டால், எனக்கு ஆழமான சந்தேகம்தான்.

மோடியின் பேரலை ஒட்டுமொத்த இந்தியாவையும் சூழும் என்று பலரும் ஆரூடம் கூறும் நிலையில், நீங்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறீர்கள். மோடி ஏன் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி. எல்லோராலும் பழிக்கப்படும் அவரது பெருமை 2002 கலவரங்களில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டது. அந்தப் பெயரை நீக்குவதற்கான தந்திரம்தான் ‘விகாஸ் புருஷ்’ அல்லது ‘வளர்ச்சியின் நாயகன்’ படிமம். சட்டம், அரசியல், தார்மீகம் ஆகிய எந்த அடிப்படையில் பார்த்தாலும் 2002-ல் நடந்தவை இப்போதைக்கு மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது. மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும்.

ஒருபுறம் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறது; இன்னொரு பக்கம் பா.ஜ.க-வையும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், இடதுசாரிகள் எப்படி வலுவாக இருக்க வேண்டும்? ஆனால், அவர்களோ காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓர் இடதுசாரியாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடதுசாரி இயக்கம் என்பது, எந்நேரமும் வேட்டையாடப்படும் அபாயத்தின் நடுவே செயல்படுவதுதான். வெற்றிகள், தோல்விகள், எழுச்சிகள், வீழ்ச்சிகள் எல்லாம் இடதுசாரிகளுக்கு சகஜமானவை. அதேசமயம், இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது. ஆனால், இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டெழுவோம் என்றும் இந்தியாவில் ஒருநாள் இடதுசாரிகள் மாபெரும் சக்தியாக உருவெடுப்போம் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளில் நீங்களும் சரி; ‘தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஓர் உண்மை தெரியுமா? இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி இந்திய அளவில் வேறு எந்தப் பத்திரிகையைவிடவும் அதிகமாக எழுதியிருப்பது ‘தி இந்து’தான். அதிலும் 1983 இனப்படுகொலைக்குப் பின், தமிழ் ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளையும் தமிழர் போராட்டங்களையும்பற்றி விரிவான செய்திகளையும் கட்டுரைகளையும் ‘தி இந்து’ வெளியிட்டிருக்கிறது.

நானும் டி.எஸ். சுப்பிரமணியனும் சேர்ந்து எடுத்த பிரபாகரனின் விரிவான பேட்டி இந்திய அளவில் பேசப்பட்ட ஒன்று. ஜெயவர்த்தனே அதிபராக இருந்தபோது ‘தி இந்து’ செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார். நான் கொழும்பு சென்று ஜெயவர்த்தனேவுடன் பேசினேன்; சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் குரல் எழுப்பினோம்; அவர் விடுவிக்கப்பட்டார். இவை எல்லாம் வரலாறு.

விடுதலைப் புலிகளை ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடு தான் அணுகினோம்; அவர்களுடைய நியாயங்களை எழுதினோம். ஆனால், ரொம்ப சீக்கிரமே அவர்கள் மிகக் குரூரமாகத் தங்கள் முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக் குழுக்கள், போராட்டத் தலைவர்கள் எல்லோரையும் அழித்தொழித்தார்கள். பின், வெவ்வேறு காலகட்ட உரையாடல்களின்போது பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும் புரிந்து விட்டன. உண்மையில், பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட்.

துப்பாக்கிகள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையில் துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்திலோ இல்லை. ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்குத் தெளிவாகிவிட்டது. தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள், செய்த அட்டூழியங்கள், பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள், எல்லாவற்றுக்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை… புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள். புலிகள் எதிர்ப்பு என்பது எப்படி இலங்கைத் தமிழர்கள் அல்லது தமிழ் விரோதப் போக்காகும்?

இலங்கைப் பிரச்சினை மட்டும் அல்ல; காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் பெரிய அளவிலான கவனம் கொடுக்கவே செய்திருக்கிறோம். ஆனால், எது உண்மையில் சாத்தியமோ, எது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதோ அதையே எழுதுகிறோம். போலித்தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை.

புலிகள் எதிர்ப்புதான் தமிழீழ எதிர்ப்பாகவும் உருவெடுத்ததா?

இல்லை. தொடக்கம் முதலே ‘தி இந்து’ தனித் தமிழீழம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.

தமிழீழம் சாத்தியம் இல்லை; நல்லது இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.

அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.

உங்கள் நண்பர் ராஜபக்‌ஷ முன்னெடுத்த இறுதிப்போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும் போர்க் குற்றங்கள் நடந்ததும் இப்போது அம்பலமாகிவிட்டது. என்ன சொல்கிறீர்கள்?

போர்களை ஆதரிப்பவன் அல்ல நான். முன்னரே சொன்னேன் – பிரிவினையும் துப்பாக்கிகளும்தான் தீர்வு என்ற முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான் விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன் என்று. இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க ராஜபக்‌ஷ தயக்கமின்றிச் செயல்பட வேண்டும். அதேசமயம், இந்த விவகாரம் மட்டும் பிரதானம் இல்லை; மீள்கட்டமைப்பும் உச்சபட்ச அதிகாரப் பகிர்வும் வேண்டும். அவைதான் தமிழர்களின் எதிர்கால நலனை நிர்ணயிக்கும்.

ஒரு காலத்தில் திராவிட நாடு கோரிக்கை இங்கு இருந்தது; அந்த அளவில் இல்லாவிட்டாலும், தனித் தமிழ்நாடு கோரிக்கை இன்றும் உயிரோடு இருக்கிறது. பிராந்திய உணர்வுகள் மேலெழும் சூழலில், இன்னும் நூறாண்டுகளுக்குப் பின் தமிழகம் எப்படி இருக்கும்; இந்தியா எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

கற்பனைக்கு அப்பாற்பட்ட கேள்வி இது. எப்படி இருக்கும் என்பதைவிட, எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்லலாம். ஏழை - பணக்காரர் பிளவுகள் அற்ற மக்கள் நலன் பேணும் நாடாக இந்தியாவும் அதன் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

- தொடர்புக்கு: samas@kslmedia.in
படம்: ம.பிரபு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்