மூன்றாம் பாலினத்தவருக்கு இதே வேகத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டும்
தமிழகக் காவல் துறையில் இனி திருநங்கைகளைப் பார்க்கலாம். அவர்களைப் பணியில் அமர்த்துவதற்கான தடைகள் நொறுங்கிவிட்டன. ‘ஆண், பெண், அல்லது மூன்றாம் பாலினம் என்ற மூன்றில் ஏதாவது ஒரு பிரிவில் இனி திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மூன்றாம் பாலினம் என்ற பிரிவைத் தேர்வுசெய்பவர்களைப் பெண் என்ற பிரிவுக்குரிய உடல் தகுதிகள், கல்வித் தகுதிகள் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் இடம்பெறுவார்கள் என்று தெளிவான விதிமுறைகளை வகுத்துவிட்டது தமிழகம். இத்தகைய மாற்றங்களைச் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெறுகிறது தமிழ்நாடு.
புதிய சகாப்தம்
காவல் துறை உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கேற்பது முதல் தேர்வாகிறவரை, பிரதீப் குமார் எனும் பிரிதிகா யாஷினி எனும் திருநங்கை நீதிமன்றத்தில் போராடி வெற்றிபெற்றது நினைவிருக்கிறதா? போராட்டத்தில் அவர் வென்றார். இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பும் மூன்றாம் பாலினத்தவர் காவல் துறையில் சேர முயன்றுள்ளனர். ஆனால், அதற்கான விதிமுறைகள்தான் இல்லை. அதனால், அவர்கள் வேலைக்கான மனு போடும் நிலையிலேயே நிராகரிக்கப்படுவார்கள்.
2013-ல் பெண் என்ற பிரிவில் விண்ணப்பம் போட்டு ஒரு திருநங்கை வேலையில் சேர்ந்தார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவர் ‘பெண் இல்லை’என்று அடையாளம் காணப்பட்டார். பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் அனைத்துத் தகுதிப் போட்டிகளிலும் பெண் என்ற வகையில் காவலர் பதவிக்குத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் நீதிமன்றம் போனார். தான் பெண் என்ற முறையில் பள்ளிச் சான்றிதழ் பெற்றுள்ளதைக் காட்டினார். தடகள வீராங்கனையாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மறுபடி பதவியில் அமர்த்தியது.
மூன்றாம் பாலினத்தவர் ஆண் என்றோ அல்லது பெண் என்றோ விண்ணப்பிப்பார்கள். அவர்களின் உடல் தகுதியைப் பரிசோதிக்கும்போது தொடர்ந்து பிரச்சினைகள் வந்திருக்கின்றன. ஆனால் தற்போது ஆண், பெண், அல்லது மூன்றாம் பாலினம் இதில் எது ஒன்றையும் தேர்வுசெய்வது திருநங்கைகளின் விருப்பம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. இது இந்தியாவின் வரலாற்றில் ஒரு பெரும் நகர்வு. மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமத்துவ உரிமைகள் கிடைக்கும் சகாப்தம் மீண்டும் தொடங்குகிறது.
ஆங்கிலேயரின் அநீதி
தென்னிந்தியாவில் திருநங்கைகள் தங்களை அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த அரவான் வழி வந்தவர்கள் என்று நம்புகிறார்கள். அதனால், தங்களை அரவாணிகள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வேதங்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழின் தொன்மையான தொல்காப்பியம், இந்தியாவின் புகழ்பெற்ற பாலியல் படைப்பான காம சாஸ்திரம், மநு சாஸ்திரமும்கூட திருநங்கைகள் பற்றிப் பேசியுள்ளன. இந்திய ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிற ஒன்பது கிரகங்களில் சனியும் புதனும் மாற்றுப் பாலினமாகவே குறிப்பிடப்படுகின்றன என்கிறார் ஆய்வாளர் எம்.மைக்கேல்ராஜ்.
அரசர்களுக்கான பாதுகாப்பு வீரர் களாகவும், ஆண்கள் நுழையக் கூடாத ராணிகளின் அந்தப்புரங்களைப் பாதுகாப்பவர் களாகவும் பழங்காலத்தில் திருநங்கைகள் இருந்துள்ளனர். செல்வாக்கு படைத்த அதிகார மையங்களிலேயே நீண்ட காலம் அவர்கள் வாழ்ந்துள்ளனர். அதனால், சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாகத்தான் இருந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆதிக்கம் இந்தியாவில் ஏற்படும்வரை அவர்களுக்குப் பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நவீன இந்தியாவில் திருநங்கைகளின் நிலை சீரழிந்து போனதற்கு ஆங்கிலேய அரசுதான் காரணம். 1871-ல் அவர்கள் குற்றப் பழங்குடிகள் சட்டம் என்ற ஒன்றை அறிவித்தனர்.
அதன் மூலம் பிறவிக் குற்றவாளிகள் என்று இந்தியாவின் சுமார் 600 இனக் குழுக்களுக்கு முத்திரை குத்தினார்கள். திருநங்கைகளையும் கிஜ்ரா என்ற பெயரில் ஒரு சாதியாகக் கருதி அந்தப் பட்டியலில் சேர்த்தனர். அவர்கள் குழந்தைகளைக் கடத்தி ஆண்மை நீக்கம் செய்வதாகவும் பொது இடங்களில் அவர்களை ஆட வைப்பதாகவும் காரணம் சொல்லப்பட்டது. அதைச் செய்தால், இரண்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டம்தான் திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வையை எதிர்மறையாக மாற்றியது. 80 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டம், பல்வேறு கொடுமைகளைத் திருநங்கைகளுக்குச் செய்துவிட்டது.
கிடைக்காத சுதந்திரம்
சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தச் சட்டம் 1952-ல் ரத்து செய்யப்பட்டாலும் ‘குற்றம் செய்வதை வழக்கமாகக் கொண் டோர் சட்டம்’என்னும் பெயரில் அதே வருடத்தில் மறுஅவதாரம் எடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் காவல் துறையினர் திருநங்கைகள் , குறவர்கள், ஒட்டர்கள் உள்ளிட்டோரைச் சந்தேகமாகவே பார்க்கும் காலனியாதிக்கக் கண்ணோட்டம் தொடர்கிறது.
குழந்தைக் கடத்தல் மற்றும் இயல்புக்கு மாறான குற்றங்களைச் செய்கிற திருநங்கை களைப் பதிவுசெய்து கண்காணிக்க வேண்டும்என்று கர்நாடகக் காவல் துறைச் சட்டம் 1964 (பிரிவு 36 ஏ) கூறியது. பழைய குற்றப் பரம்பரையினர் சட்டத்தின் தொடர்ச்சிதான் இது. அதை 2012-ல்தான் கர்நாடகம் மாற்றியுள்ளது. காலனியாதிக்கக் காலகட்டம் முதலாகக் காவல் துறையினால் வேட்டையாடப்பட்ட மக்களில் பல பிரிவினர் மீண்டு விட்டனர். தங்களை வேட்டையாடிய காவல் துறையிலேயே பணி கிடைக்கும் போது, அவர்கள் அடையும் மன நிறைவை, நாம் அவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
முன்னோடி தமிழ்நாடு
அரசியல் சாசன உரிமைகள் திருநங்கைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று 2012-ல் தேசியச் சட்ட சேவைகள் மையம் வழக்கு தொடர்ந்தது. அதில்தான் திருநங்கைகளுக்கும் அரசியல் சாசன உரிமைகள் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆண், பெண் என்று மட்டும் பார்க்காமல் சட்டத்தின் பார்வையை மேலும் விரிவுபடுத்தியது அது. அதன் தொடர்ச்சியாகவே மாநிலங்களில் திருநங்கைகளுக்கு ஆதரவான சட்டமாறுதல் கள் நிகழ்ந்துவருகின்றன. அதைத் தருவதில் இந்திய மாநிலங்களில் முதலாவதாகத் தமிழகம் மாறிவிட்டது. இதே வேகத்தில் இன்னும் நிறைய நாம் செய்ய வேண்டும்!
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago