வெளியே எங்கு போனாலும் குடிநீர் பாட்டிலும் கையுமாக அலைகிறோம். அலுவலகங்கள், வீடுகள் தோறும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே வாங்கி குடிக்கிறார்கள். தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டி யிருக்கிறது. பணம் கிடக்கட்டும். அது இன்று வரும், நாளை போகும். ஆனால், தண்ணீர்? உலகின் நீர்வளத்தில் 97 சதவீதம் கடல் நீர். எஞ்சிய 3 சதவீதத்தில் 68.7 சதவீதம் பனிக்கட்டி.
30.1 சதவீதம் பயன்படுத்தவே முடியாத கடின நீர். 0.3 சதவீதம் மட்டுமே ஆறு, ஏரி, குளம் மற்றும் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீராக இருக்கிறது. இதுவேதான் நீரியல் சுழற்சியாக மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட மறுபயன்பாடு (reuse) செய்துகொண்டிருக்கிறோம். இதனால் கிடைக்கும் நீரின் அளவு குறையுமே தவிர அதிகரிக்காது. இதைத்தான் நாம் உட்பட உலகின் அத்தனை உயிரினமும் பகிர்ந்துகொண்டாக வேண்டும். ஆனால், நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது என்பது என்பது உங்களுக்கு தெரியுமா? அதன் பெயர் மறைநீர் (Virtual water).
மறைநீர் என்றால் என்ன?
நிலத்தில் ஓடும் நீரின் வேர்களைப் பார்த் தோம். நிலத்தடியில் ஓடும் நீரின் வேர்களைப் பார்த்தோம். கடலுக்குள் ஓடும் நீரின் வேர்களையும் பார்த்துவிட்டோம். இவை தவிர, நம் கண்ணுக்குத் தெரியாத நீர் ஒன்று மறைந்திருக்கிறது. அதுதான் மறைநீர்.
மறைநீர் என்பது ஒரு பொருளாதாரம். மறைநீர் என்பது ஒரு தத்துவம். காற்றைப் போன்றது அது. கடவுளைப் போன்றது அது. தூணிலும் இருக்கிறது. துரும்பிலும் இருக்கிறது மறைநீர். மறைநீரை பார்க்க முடியாது. உணர மட்டுமே முடியும். நீரின்றி அமையாது உலகு என்பது சங்க காலம். மறைநீரின்றி அமையாது என்பதுதான் நவீன காலம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளேயும் மறைந்திருக்கிறது மறைநீர். இதோ நீங்கள் படிக்கும் இந்த காகிதத்துக்குள் மறைந்திருக்கிறது மறைநீர். கணினித் திரைக்குள் புதைந்திருக்கிறது மறைநீர்.
ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத் தைக்கொண்டு மதிப்பிடுவதைப் போல நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம் தான் மறைநீர். இதைக் கண்டுபிடித்தவர் இங்கி லாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்தக் கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். எப்படி? கோதுமையை விளைவிக்க நீர் தேவை. ஆனால், கோதுமை விளைந்தவுடன் அந்த நீர் இருக்காது. எங்கே போனது அது? கோதுமைக் காக செலவிடப்பட்ட நீர் கோதுமைக்குள்தானே மறைந்திருக்க வேண்டும். இதுவே மறைநீர்.
ஒரு ஜட்டியின் விலை ரூ. 27,000
இந்திய நூற்பாலைகளில் ஆண்டுக்கு 36 லட்சம் டன் பனியனுக்கான ‘ஓசைரி’ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 7.20 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், வெறும் 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறைநீர் தேவை 2,495 லிட்டர். அப்படி எனில் 7.20 டன் ஏற்றுமதிக்கு எவ்வளவு மறைநீர் தேவை? நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 20 சத வீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப் படுகிறது. இதனால், ஆண்டுக்கு ரூ.18,000 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்கிறார்கள் பெருமையாக.
திருப்பூரின் நீர் பற்றாக்குறை ஆண்டுக்கு 22 மில்லியன் கனமீட்டர். ஆனால், ஒரு ஜட்டியைத் தயாரிக்க தேவையான மறைநீர் 2,700 லிட்டர். தமிழகத்தில் அரசு விற்பனை செய்யும் ‘அம்மா குடிநீர்’ ஒரு லிட்டர் விலையே ரூ.10. அப்படி என்றால் ஒரு ஜட்டிக்காக நாம் கொடுக்கும் விலை ரூ. 27,000. அக்கிரமம் இல்லையா இது. இது திருப்பூர் நிலவரம்.
முட்டை உற்பத்தியில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது நாமக்கல். அங்கு ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் தினசரி 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள். 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறைநீர் தேவை. ஐந்து ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்? இது நாமக்கல் நிலவரம்.
சென்னையில் குடிக்க தண்ணீர் இருக்கிறதோ, இல்லையோ? பன்னாட்டு கார் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் தருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே கார்களை உற்பத்திசெய்து அவர்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொள்கின்றன. ஏன் இதை அவர்கள் நாட்டிலேயே செய்தால் என்ன? இங்கு வந்து ஏன் செய்ய வேண்டும்? 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறைநீர் தேவை 4 லட்சம் லிட்டர்கள். இது சென்னை நிலவரம்.
தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ. 5,500 கோடிக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இதில் 72 சதவீதம் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ தோல் பதனிட 17 ஆயிரம் லிட்டர் மறைநீர் தேவை. இது வேலூர் நிலவரம்.
தாமிரபரணியை அந்நிய குளிர்பான நிறுவனத்துக்குத் தாரை வார்த்திருக்கிறது தமிழக அரசு. ஒரு லிட்டர் குளிர்பானம் உற்பத்தி செய்ய தேவையான மறைநீர் 56 லிட்டர். இது நெல்லை, தூத்துக்குடி நிலவரம். பவானி கரையெங்கும் கால் பதித்திருக்கிறது பன்னாட்டு காகித நிறுவனம். ஆண்டுக்கு லட்சக்கணக்கான டன் காகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு ஏ-4 அளவு கொண்ட காகிதத்தை உற்பத்தி செய்ய தேவையான மறைநீர் 10 லிட்டர். இது கோவை நிலவரம். இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்!
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும் என்கிறது மறைநீர் பொருளாதாரம். சீனா, இஸ்ரேல் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கு 5,988 லிட்டர் மறைநீர் தேவை. இதனால், பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கு சீனாவில் அனுமதி இல்லை. ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறைநீர் தேவை 560 லிட்டர். இஸ்ரேலில் ஆரஞ்சு ஏற்றுமதி செய்ய முடியாது. இந்த நாடுகள் ஒவ்வொரு பொருளுக்குமான மறைநீர் தேவையைக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
சவுதி அரேபியா 90-களின் தொடக்கத்தில் அந்நியச் செலாவணியை ஈட்ட ஏராளமான கோதுமையை ஏற்றுமதி செய்தது. இதனால், 10 ஆண்டுகளின் சவுதி 6 பில்லியன் கனமீட்டர் நீர் பற்றாக்குறை கொண்ட நாடாகிவிட்டது. விழித்துக்கொண்ட அந்த நாடு இப்போது கோதுமையை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதற்காக மென்பொருள் நிறுவனங்களை இங்கே வைத்து நம்மை கூலிக்கு மாரடிக்க வைக்கின்றன? இங்கே கூலி குறைவு என்பது மட்டுமில்லை. சென்னையில் ஒரு நபருக்கு பி.பி.ஓ. பணியைத் தருவதன் மூலம் அந்த நாடுகள் சேமித்துக்கொள்ளும் மறைநீரின் அளவு நாளொன்றுக்கு 7,500 லிட்டர். இப்படி நம் நாட்டின் மறை நீரை சுரண்டுவதால்தான் அந்த நாடுகளில் ஒரு நபரின் தினசரி மறைநீர் நுகர்வு 4000 லிட்டராக இருக்கிறது. இங்கு ஒரு நபருக்கு 1,400 லிட்டர் மறைநீருக்கே திண்டாட்டமாக இருக்கிறது.
தண்ணீருக்கு இல்லையா விலை?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன. இப்படி எல்லாம் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னாவது என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. வரைமுறையின்றி வளர்வதின் பெயர் வளர்ச்சி அல்ல; அது வீக்கம். மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் இந்திய விவசாயிக்கு நிச்சயம் ஓர் இடம் இருந்திருக்கும்.
நிறைவாக ஒன்று... நீர் அடித்து நீர் விலகுவதில்லை. நீர் அடித்து நாமும் விலகுவதில்லை. நீரும் நாமும் தாயும் பிள்ளைகளும்தானே. தாயை காப்போம் வாருங்கள்! பிறகொரு சமயம் மீண்டும் சந்திப்போம்.
- நீர் நிறைந்தது
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago