ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நிபந்தனையற்றே நீக்கப்பட்டது

By எஸ்.குருமூர்த்தி

'தி இந்து' நாளிதழில், 'மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி' என்ற தலைப்பில் வித்யா சுப்ரமணியம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அதில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கமானது, தனக்கு அரசியல் அல்லாத கடமைதான் பணிகள் என்று 1949-ல் சர்தார் வல்லபாய் படேலுக்குக் வாக்குறுதி கொடுத்ததாகவும், அதன் பின்னரே ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், 2013-ல் ஆர்.எஸ்.எஸ்., தான் வகுத்துக்கொண்ட அமைப்பு விதிகளுக்கே முரணாக நடந்துகொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வெகுஜனங்களுக்குத் தெரிந்த சில கூற்றுகளை இங்கே நினைவு கூர்ந்தால், அவை வித்யா சுப்ரமணியத்தின் கருத்துக்கு முற்றிலும் முரணாகவே இருக்கிறது.

மகாத்மா காந்தி படுகொலைசெய்யப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அப்போதைய தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் கைது செய்யப்படுகிறார். இங்கே தான், எல்லாம் தொடங்கியது.

1948-ஆம் ஆண்டு, பிப்.4-ல் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கம் தடை செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர், சட்டவிரோதமாக ஆயுதங்களை சேகரித்தனர், மக்களை வன்முறைக்கு தூண்டினார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறார் கோல்வால்கர். ஆறு மாதங்கள் நகர்ந்தன. ஆகஸ்ட்11-ல் பண்டித நேருவுக்கு, கோல்வால்கர் ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில்: ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக அவசர கதியில், பாகுபாட்டுடன் அதிகார உயர்மட்டத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், நெருக்கடிச் சூழலை கருத்தில் கொண்டு தான் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

சரியாகவோ அல்லது சாதுர்யமாகவோ, கோல்வால்கர் எழுதிய அந்தக் கடிதத்தை, படேலுக்கு அனுப்பி வைத்தார் நேரு. ஏனென்றால், காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் லக்னோவில் பேசிய படேல், தேசபக்தி கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நசுக்கும் வகையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசார் நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித்திருந்தார்.

கோல்வால்கர் கடிதத்திற்கு படேல் எழுதிய பதிலில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இந்து சமூகத்தினருக்கு ஆற்றிய தொண்டினையும்; பெண்கள், குழந்தைகளை பாதுகாத்ததையும் பாராட்டி இருந்தார். அதேவேளையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அப்பாவி இந்துக்கள் அடைந்த வேதனைகளுக்கு பழி வாங்க வேண்டும் என பற்றி எரிந்த காழ்ப்புணர்சியால், முஸ்லிம்களை குறி வைத்ததாகவும், மேலும் காந்திஜியின் உயிரைப் பறித்த மதவாத விஷயத்தைப் பரப்பியதாகவும் சாடியிருந்தார். இருப்பினும், ஆர்.எஸ்.எஸ். தேசத் தொண்டாற்றுவதை காங்கிரஸுடன் இணைந்து தொடர வேண்டும், காங்கிரஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால், இந்தக் கடிதம் கோல்வால்கருக்கு சென்றடையவில்லை.

செப்டம்பர் 24-ல் படேலுக்கும், நேருவுக்கும் கோல்வால்கர் மீண்டும் கடிதம் எழுதியிருந்தார். நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், புலனாய்வில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக எந்தவித ஆதாரமும் கிடைக்காததால், ஆர்.எஸ்.எஸ். மீதான குற்றச்சாட்டுகளையும், தடையையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

செப்டம்பர் 26-ம் தேதி, ஆர்.எஸ்.சுக்லா-விடம் (மத்திய மாகாணங்கள் மற்றும் பெரார், தலைவர்) படேல் பதில் கடிதம் கொடுத்து அனுப்புகிறார். அத்துடன், கோல்வால்கரிடம் சென்றடையாத அவரது முந்தைய கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதில், அனைத்து மாகாணங்களும் ஏக மனதாக ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை வலியுறுத்துவதால், அதற்கு அடித்தளமாக ஏதோ இருக்க வேண்டும். எனவே ஆர்.எஸ்.எஸ். காங்கிரஸின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இயங்குமாறு அறிவுறுத்தியிருந்தார். 'அடித்தளமாக ஏதோ இருக்க வேண்டும்' என்ற வார்த்தைகள், நிஜத்தில் அப்படி ஏதும் இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 27-ம் தேதி, பிரதமர் அலுவலக அதிகாரி கோல்வால்கருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்குவது உள்துறை அமைச்சகத்தின் முடிவு. ஆனால் அரசாங்கத்தின் வசம், ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. இது குறித்து, உ.பி., அரசு ஏற்கெனவே கோல்வால்கருக்கு குறிப்பு அனுப்பியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோல்வால்கர், உ.பி. அரசிடம் இருந்து எந்த ஒரு குறிப்பும் தனக்கு வரவில்லை என்றதோடு ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக இருப்பதாக கூறப்படும் வலுவான ஆதாரங்களையும் வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு சவால் விடுக்கிறார். அவரது சவாலுக்கு பதில் கிடைக்கவில்லை. எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.

அதே ஆவேசத்துடன் படேலுக்கு, ஆர்.எஸ்.எஸ். மீதான புகார்களை மறுத்து கடிதம் எழுதுகிறார். காங்கிரஸுடன், ஆர்.எஸ்.எஸ். இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற படேலின் யோசனைக்கு, அரசியல் களத்தில் இருக்கும் காங்கிரஸும், கலாச்சார கட்டமைப்பில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ம் பரஸ்பரம் உதவிக் கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தார்.

நவம்பர் 10-ல் கோல்வால்கருக்கு நேரு எழுதிய கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக அரசிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறுகிறார். நேரு, குறுகிய மனதுடன் செயல்படுவதாக கூறிய கோல்வால்கர், வலுவான ஆதாரங்கள் என்ன என்பதை வெளியிடாமல் இருப்பது, ஒரு நபரை அவருக்கு எதிரான சாட்சியத்தை வெளியிடாமலேயே அவரை குற்றவாளி என கூறுவதற்கு இணையாகும் என்றார்.

நவம்பர் 10-ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க முடியாது என உள்துறை செயலர் திட்டவட்டமாக அறிவிக்கிறார். மேலும், கோல்வால்கரை நாக்பூருக்கே திரும்பிச் செல்லுமாறு கூறுகிறார். வெகுண்டு எழுந்த கோல்வால்கர், பண்படுத்தப்பட்ட சமூகத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நிகழாது. இவை அடக்குறை ஆட்சியின் நிலையற்ற செயல்கள் என விமர்சித்தார். ஒன்று ஆர்.எஸ்.எஸ். மீதான குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள்; இல்லையெனில், புகாரை வாபஸ் பெறுங்கள் என படேலுக்கு சவால் விடுத்தார்.

டெல்லியை விட்டு வெளியேற மறுத்ததோடு, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மீண்டும் பணியில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார். கோல்வால்கர் கைது செய்யப்படுகிறார். டிசம்பர் 9-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ். சத்தியாகிரஹம் தொடங்குகிறது. ஆர்.எஸ்.எஸ். மீதான குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும், அல்லது தடையை நீக்கவும், கோல்வால்கரை விடுவிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. ஒரே மாதத்தில், 80,000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும், ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

அப்போதுதான், மெட்ராஸ் அட்வகேட் ஜெனரலும், செர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி தலைவருமான டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி இவ்விவகாரத்தில் தலையிடுகிறார். மிகுந்த அங்கலாய்ப்புடன், 'தி இந்து' நாளிதழுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதோடு நில்லாமல், சர்தார் பட்டேலையும் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க கோருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்.-க்கு என்று தனியாக எழுதப்பட்ட சாசனம் இல்லாததால், அந்த அமைப்பு ரகசியமாகவே இயங்குவதாக கருதப்படுகிறது, எனவே, ஒன்று ஆர்.எஸ்.எஸ். - காங்கிரஸுடன் இணைய வேண்டும் அல்லது காங்கிரஸ் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்ற முகாந்தரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. சாஸ்த்ரி, ஆர்.எஸ்.எஸ்.-க்கு என்று தனியாக வரைவு சாசனம் எழுதினார். ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

ஜூலை 9, 1949-ல், ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க முடியாது என அரசு மீண்டும் பிடிவாதம் பிடிக்கிறது. சில அடிப்படை வேற்றுமைகள் இருப்பதாகக் கூறி தடையை விலக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, சாஸ்திரி, பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்ற தகவல்களை வெளியிடுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு, அவருக்கு அடுத்து தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளவரை பரிந்துரைப்பதற்கான அதிகாரத்தை வழங்குவது குறித்தும், இளம்பருவத்தினர் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் பங்கு பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சாஸ்திரி தெரிவிக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.-ஸும் அரசியலும் என்ற பார்வையில் விளக்கமளித்த சாஸ்திரி, அரசியல் சார்பற்ற அமைப்பு என்று ஆர்.எஸ்.எஸ். தங்களை அடையாளப்படுத்தினாலும், ஓர் இரவிலேயே, ஆர்.எஸ்.எஸ். அரசியல் இயக்கமாக மாறலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அவ்வாறு மாறுவது ஒன்றும் குற்றமாகாது என்றார்.

காந்திஜி படுகொலையில், ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமே, அடிப்படை ஆதாரமற்றது என்பது அறியப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிலையற்றதாக இருக்கின்றன. எனவே ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை தொடர்வதற்கான எந்த முகாந்தரமும் இல்லை என சாஸ்திரி தெரிவித்தார்.

ஆச்சரியப்படும் வகையில், ஜூலை 11-ம் தேதி அன்று சாஸ்திரியின் அறிக்கை 'தி இந்து' நாளிதழக்கு அனுப்பப்பட்ட அன்றே (பிரசுரமானது ஜூலை 14-ல்) ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அரசு நீக்கியது. எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல், ஓர் அமைப்பை தடை செய்வது என்பது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பது அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்.

எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் இதோ... 1949 செப்டம்பர் 14-ல் பாம்பே சட்டமன்றத்திற்கு உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் அனுப்பிய கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ். மீதான தடை தேவையற்றது; எனவே எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் தடை நீக்கப்பட்டது என ஒப்புக்கொண்டார்.

1949-ல் ஆர்.எஸ்.எஸ். எந்த ஒரு உறுதிமொழியும் அளிக்காத நிலையில், அதை 2013-ல் மீறுவதற்கு வாய்ப்பு எங்கே இருக்கிறது?

தமிழில் - பாரதி ஆனந்த்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்