பண வேட்டை ஆடும் வாரியம்

By அரவிந்தன்

வருமானம் தரும் வலிமை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை ஒரு ரவுடியாக மாற்றியுள்ளது.

அதைச் சொன்னால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். 1964-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்வதாகத் திட்டம் இருந்தது. ஆனால், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அந்தப் பயணத்தை ரத்துசெய்துவிட்டது. ஏன் தெரியுமா? சுற்றுப் பயணத்துக்கான செலவை ஏற்குமளவுக்கு வாரியத்துக்கு வசதி இல்லை.

அதே பி.சி.சி.ஐ. இன்று உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம். பல நாடுகளின் வாரியங்கள் வருமானத்துக்கு இந்தியாவை நம்பியிருக்கின்றன. இந்திய அணி தங்கள் நாட்டுக்கு வந்தால் பணத்தை அள்ளிவிடலாம் என்பதே பல நாடுகளின் நிலை. சமீபத்தில், இந்தியா நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, அந்நாட்டின் வாரியத்துக்கு ஒளிபரப்பு உரிமைகளின் மூலம் மட்டும் 3.5 கோடி அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைத்தது.

ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேல் வருமானம், மொத்த மதிப்பு 6,000 கோடிக்கும் மேல் என்று பணத்தில் திளைக்கும் இந்திய வாரியத்துக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் ஐ.சி.சி. ஒரு முடிவை எடுத்துள்ளது. அதிக வருமானத்தை ஈட்டித் தரும் நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குத் தன் வருமானத்தின் பெரும் பகுதியைத் தர அது முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் வரும் எட்டு ஆண்டுகளில் ஐ.சி.சி.யிடமிருந்து ரூ.4,000 கோடி வருமானம் பெறும். கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தத் தொகை ரூ. 300 கோடியாக இருந்தது.

பணம் பந்தியிலே

வருமானம் பார்ப்பதில் தவறு அல்ல. ஆனால், வருமானமே குறியாக இருப்பதுதான் விமர்சனத்துக்கு உரியது. இந்திய கிரிக்கெட்டின் தரத்தையோ உலக கிரிக்கெட்டின் தரத்தையோ உயர்த்துவதற்கான பங்களிப்பு எதையும் இந்திய வாரியம் செய்துவிடவில்லை. இந்திய கிரிக்கெட்டின் புகழ், சாதனை எல்லாமே அதன் ஒரு சில ஆட்டக்காரர்களின் அபாரமான திறமைகளின் விளைவுகள்.

இன்னமும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக்கூட இந்தியாவால் உருவாக்க முடியவில்லை (கபில் தேவ், ஜாகீர் கான் ஆகியோர் மிதவேகப் பந்துவீச்சாளர்கள்). வேகப் பந்து வீச்சுக்கு உதவும் களங்களில் ஆடும் திறன் படைத்தவர்களும் இந்தியாவில் குறைவு. இதற்கான சிறப்புப் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடு எதுவும் இந்தியாவில் இல்லை.

வருமானம் தரும் அதிகாரம்

வருமானம் தரும் வலிமை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவைக் கிட்டத்தட்ட ஒரு ரவுடியாக மாற்றியுள்ளது. 2003-ல் தென்னாப்பிரிக்காவில் உலகக் கோப்பைப் போட்டி நடந்தபோது, அந்தக் கோப்பையின் அதிகாரபூர்வ ஸ்பான்சர்களின் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இந்திய ஆட்டக்காரர்கள் பலர் விளம்பர முகங்களாக இருந்தார்கள். இந்த விளம்பரங்களிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச வாரியம் நிர்ப்பந்தித்தது.

எல்லா நாடுகளின் ஆட்டக்காரர்களுக்கும் பொருந்தும் இந்த விதியை ஏற்க இந்திய வாரியம் மறுத்தது. ரொம்ப வற்புறுத்தினால் குறிப்பிட்ட வீரர்களை அனுப்ப மாட்டோம் என்றும் மிரட்டியது. தொடர் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாவது அந்த விளம்பரங்களில் இவர்கள் இடம்பெறக் கூடாது என்று ஐ.சி.சி. கெஞ்சியது. ஒரு வாரத்துக்கு வேண்டுமானால் விட்டுக்கொடுக்கலாம் என்று இந்திய வாரியம் பெருந்தன்மையோடு கூறியது. ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டது.

இப்படிப் பல தருணங்களில் இந்திய வாரியத்தின் நிபந்தனைகள், மிரட்டல்களுக்கு ஐ.சி.சி. பணிந்திருக்கிறது. கள நடுவரின் முடிவை எதிர்த்து முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. எல்லா நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டன. இந்தியா ஏற்கவில்லை. இந்தியா ஆடும் ஆட்டம் எதிலும் இந்த முறை இருக்காது என ஐ.சி.சி. முடிவுசெய்திருக்கிறது.

வாரியத்தின் வரலாறு

இந்தியாவில் கிரிக்கெட் சம்பந்தமான அனைத்து அம்சங்களையும் கையாள 1928-ல் வாரியம் தொடங்கப்பட்டது. அதுவரை கல்கத்தா கிரிக்கெட் கிளப்தான் கிரிக்கெட் விவகாரங்களை நிர்வகித்துவந்தது. இந்த வாரியம் அறக்கட்டளைபோலக் கருதப்பட்டது. கிரிக்கெட்டை முன்னேற்றுவது பொது நலம்சார்ந்த செயலாகக் கருதப்பட்டு வாரியத்துக்கு வரிச் சலுகைகூட வழங்கப்பட்டது.

70-களின் இறுதியில் தொடங்கிய நேரடி ஒளிபரப்பு வசதி, 1983-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது, 80-களின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் என்னும் இளம் நட்சத்திரத்தின் உதயம் எனப் பல அம்சங்கள் இந்திய கிரிக்கெட்டின் வீச்சையும் வருமானத்தையும் கூட்டின.

1979-ல் வாரியத்தின் உறுப்பினரான தொழிலதிபர் ஜக்மோகன் டால்மியா 1983-ல் பொருளாளரானார். 1996-ல் தலைவரானார். இவர் கிரிக்கெட்டைச் சந்தைப்படுத்துவதில் பல புதிய உத்திகளை அமல்படுத்தினார். டிக்கெட் விற்பனை, ஒளிபரப்பு உரிமை ஆகியவை தவிர, எல்லாவற்றிலும் ஸ்பான்சர்ஷிப் என்ற அம்சத்தைப் புகுத்தியதில் இவரது பங்கு அதிகம். மைதானத்தில் விளம்பரங்கள், எல்லைக் கோட்டில் கயிறுக்குப் பதில் விளம்பரப் பட்டைகள் என வருமான சாத்தியங்களை விரிவுபடுத்தினார். ஆட்டக்காரர்களின் சட்டையிலும் மட்டையிலும் வணிகச் சின்னங்கள் முளைத்தன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியும் வாரியத்துக்குச் செல்ல ஆரம்பித்தது.

2008 நவம்பரில் வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி, முன்னாள் தலைவர் இந்தர்ஜித் சிங் பிந்த்ரா ஆகியோரின் துணையுடன் ஷரத் பவார், தலைவரான பிறகு வாரியம் தன் வருமானத்தை மூன்றே ஆண்டுகளில் எட்டு மடங்காக உயர்த்தி, 150 கோடி டாலரை (சுமார் 7,000 கோடி ரூபாய்) எட்டியது. பணம் கொழிக்கும் ஐ.பி.எல். வந்த பிறகு இது பொதுநலம் சார்ந்த செயல்தானா என்னும் கேள்வி எழுந்தது. இந்திய வரித் துறை, வாரியத்தின் ‘அறக்கட்டளை’ அந்தஸ்தை 2009 நவம்பரில் நீக்கியது.

இந்த வணிக வேட்டையின் உச்சம் ஐ.பி.எல். ஆனால், இது வாரியத்தின் கண்டுபிடிப்பு அல்ல. ஜீ குழுமத்தின் சுபாஷ் சந்திரா இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) என்னும் போட்டியைத் தொடங்கினார். இதன் வெற்றியைக் கண்டு பொருமிய வாரியம், ஐ.சி.எல்லில் ஆடுபவர்களுக்கு இந்திய அணியில் ஆடத் தடை விதித்ததுடன் புதிய லீக் போட்டியைத் தொடங்கியது. வாரியத்தின் கட்டுப்பாட்டில் ஆட்டக்காரர்கள் அனைவரும் இருப்பதாலும் பிற வாரியங்களின் ஒத்துழைப்பினாலும் இது பெரும் வெற்றியைப் பெற்றது. வாரியத்தின் பணபலமும் அதிகார பலமும் சர்வதேச செல்வாக்கும் சேர்ந்து ஐ.சி.எல்லை முடக்கியது.

மிகுதியும் மேட்டுக்குடி ஆட்டமாக இருந்துவந்த கிரிக்கெட், கபில்தேவின் வருகைக்குப் பிறகும் 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகும் மக்களின் ஆட்டமாக மாறிவிட்டது. ஆனால், அதன் நிர்வாகம் இன்றும் பெரும் வசதி படைத்த மேட்டுக்குடியினர் கைகளில்தான் இருக்கிறது. பெரும் பணக்காரர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகளில் முக்கிய இடம் வகிப்பவர்கள் முதலானோரின் பிடியில்தான் கிரிக்கெட் நிர்வாகம் உள்ளது. கோடிக் கணக்கான வருமானத்தின் மீதான கட்டுப்பாடு இவர்கள் கையில்தான் இருக்கிறது. இந்நிலையில், அதன் செயல்பாடுகளில் அதிகார மமதையும் ஊழலும் இருப்பதில் வியப்பென்ன?

வாரியத்தைக் கலைத்துவிட்டு கிரிக்கெட்டை அரசாங்கம் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மட்டுமே இந்தத் தனிநபர்களின் ஆட்டம் மட்டுப்படும். அரசின் கையில் இருந்தால் சிறப்பாக நடைபெறுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை என்றாலும் அது சட்டபூர்வமாகப் பொது அமைப்பாக இருக்கும். நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கும். அதைச் சீர்திருத்துவதற்கான ஜனநாயகபூர்வமான வழிமுறைகள் பற்றி யோசிக்கலாம். இத்தகைய சீர்திருத்தங்கள் வரும்வரையிலும் நபர்கள் மட்டுமே மாறுவார்கள். அழுகுணி ஆட்டம் தொடரும்.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

41 mins ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்