ஜூன் மாதம் மேட்டூர் அணை திறந்த ஆறாவது நாளில் காவிரியின் எல்லாக் கிளைகளிலும் காவி நிறத்தில் நுங்கும்நுரையுமாகத் தண்ணீர் கரை தொட்டு ஓடும். இதே ஆறாவது நாளில் காவிரிப் பகுதி நகரங்கள், கிராமங்களில் உள்ள எல்லாக் குளங்களையும் குட்டைகளையும் புதுத் தண்ணீரால் நிரப்பிவிடுவார்கள்.
புது மினுக்கு
அப்போதெல்லாம் மேட்டூரில் 22,000 கன அடி தண்ணீர் திறந்தால், காவிரி தன் கிளைகள் எல்லாவற்றிலும் கரைததும்பி ஓடும். வளமான வண்டலைத் தாங்கி வருவதால், நீர் காவி நிறத்தில் வரும். சன்னஞ்சன்னமாக இந்த நிறம் மாறி, ஆடி மாத இறுதிக்குள் நீர் தன் இயல்பு நிறத்துக்கு வந்துவிடும். பிறகு ஐப்பசி, கார்த்திகை போன்ற அடைமழை நாட்களில் காவிரி வடிகாலாகவே மாறி, களிமண் கலந்த கலங்கலாக ஓடும். மார்கழி, தை மாதங்களில் மணல் தெரியும் அளவுக்குக் கண்ணாடியாகத் தெளிந்த நீராக ஓடும்.
வழிப்போக்கர்களின் காவிரி
வண்டலோடு காவி நிறத்தில் கலங்கலாக வரும் புதுத் தண்ணீரைக் குடத்தில் எடுத்து வந்து தேத்தாங்கொட்டையை இழைத்துக் கலந்துவிட்டால், சற்று நேரத்தில் வண்டல் கீழே படிந்து தண்ணீர் தெளிந்துவிடும். வீட்டுத் திண்ணைகளில் வந்து அமரும் வழிப்போக்கர்கள், ஆற்றுத் தண்ணீர் கொடுங்கள் என்று ஆசையாகக் கேட்டு வாங்கிக் குடிப்பார்கள்.
ஆடிப்பெருக்கில் காவிரி
காவிரி பழைய டெல்டா என்பது (12 லட்சம் ஏக்கர்) காவிரிப் பாசனப் பகுதி, வெண்ணாற்றுப் பாசனப் பகுதி என்று இரண்டு சம கூறுகளாகப் பரந்திருக்கிறது. இதில் வெண்ணாற்றுப் பகுதிக் கிராமங்களில் பதினெட்டம் பெருக்கு நிகழும் அல்லது நிகழ்ந்த விதம் மிகவும் அலாதியானது.
வயதில் பெரியவரான கட்டுக்கழுத்தி (சுமங்கலி) கிராமத்தில் உள்ள மற்றவர்களை அழைத்துக்கொண்டு, காவிரிக் கரைக்குச் செல்வார் (காவிரியின் கிளை ஆறுகள் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு, முள்ளியாறு, வெட்டாறு இப்படி எதுவாக இருந்தாலும், அதைக் காவிரி என்றுதான் அழைப்பார்கள்). எல்லோரும் தேங்காய், பழங்கள், பேரிக்காய், வெற்றிலை பாக்கு, பதினெட்டாம் பெருக்குக்கே உரிய சிவப்புக் காதோலை, கருப்பு வளையல், வெல்லமும் தேங்காய்ப்பாலும் கலந்த, ஊற வைத்த பச்சரிசி முதலியவற்றை எடுத்துச் செல்வார்கள்.
ஆற்றில் முழுகி முழுகித் தாம்பாளங்களில் மணலை அள்ளிக்கொண்டு கரையேறு வார்கள். இந்த மணலால் படுகையில் சதுரமாக, வாசல் ஒன்று வைத்து வீடு கட்டுவார்கள். பூஜை எல்லாம் இந்த வீட்டுக்குள்தான். ஈரச் சேலையைப் பிழிந்து கட்டிக்கொண்டு வழிபடுவார்கள். மஞ்சள் தோய்த்த சரடு ஒன்றைக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். இந்தச் சரட்டை வீட்டில் உள்ள ஆண்களுக்கும் மணிக்கட்டில் ரட்சையாகக் கட்டிவிடுவார்கள். பூஜை முடிந்தவுடன் பழங்கள், காதோலை, வளையல் போன்றவற்றைக் காவிரி வெள்ளத்தில் விடுவார்கள். இதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஆற்றில் குதித்து, நீந்திச் சென்று பழங்களை எடுத்துக்கொள்வார்கள். இவர்களின் கும்மாளத்தில் ஆறு இரண்டாகி விடும். புதுமணத் தம்பதிகள், திருமணத்தில் அணிந்திருந்த முகூர்த்த மாலைகளை அப்படியே வைத்திருந்து, பதினெட்டாம் பெருக்கு அன்று காவிரி வெள்ளத்தில் விடுவார்கள். சிறுவர்கள் சப்பரம் கட்டி அதில் கழிக்க வேண்டிய பொருள் எதையாவது வைத்துக் காவிரிக்கு இழுத்துச்சென்று அங்கே விட்டுவிடுவார்கள்.
ஜாலவித்தைக்காரி
அடைமழைக் காலத்தில், சில நேரங்களில், வெண்ணாற்றுப் பகுதிகளில் காவிரி செக்கச்செவேலென்று கரைததும்பிப் பாயும். இந்த நிறத்தைப் பார்த்துவிட்டால், அந்தப் பகுதி விவசாயிகளுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டதுபோல் பயம் வந்துவிடும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்யும் மழை முதலைமுட்டி வாரி வழியாக வெண்ணாற்றில் வந்து விழுவதுதான் இந்த சிவப்புத் தண்ணீர். வெண்ணாற்றில் இது கலக்கும் இடத்துக்குப் பிறகு, கிழக்கே இதை மடைமாற்றுவதற்கோ தேக்குவதற்கோ வழியில்லாததால் வெள்ளம் வந்துவிடும் என்று விவசாயிகள் நடுங்கிப்போவார்கள்.
காவிரி கரைபொழிந்து ஓடும்; பார் அடங்கி ஓடும் (பார் - உள்கரை); இறங்கிக் கடந்தால் கால் நிலைக்கும் அளவுக்கு ஓடும்; பிறகு, ஆற்றுக்குள்ளேயே ஓரமாக நெளிந்து, சிலுசிலுத்து, மெலிந்த ஓடையாக ஓடும். இப்படி நிறமும் உருவமும் மாறிமாறிப் பருவங்களின் ஊடாகக் காவிரி ஜாலவித்தை காட்டுவாள்.
பெண்களின் காவிரி
ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத காலைப்பொழுதில், குளிப்பதற்காக பெண்கள் காவிரிப் படித்துறைக்குச் செல்வார்கள். படித்துறைகளில் விளக்கு மாடங்கள் இருக்கும். கைவிளக்கை எடுத்துச்சென்று விளக்கு மாடத்தில் வைத்து விட்டு, அந்த வெளிச்சத்தில் குளியலை முடித்துவிடுவார்கள். பிறகு, ஆறு மணியிலிருந்து காவிரியின் படித்துறைகளை ஆண்கள் ஆக்கிரமித்துக்கொள்வார்கள். சுமார் எட்டரை மணிக்கு மேல் மாடு இறங்கு துறைகளில், பசு மாடுகளைக் குளிப்பாட்டுவார்கள். இப்படியாக ஐந்து மணியிலிருந்து காவிரியின் துறைகளெல்லாம் களேபரமாக இருக்கும்.
ஆண்டு முழுதும் அலங்காரம்தான்
புது வெள்ள வரவேற்பு பதினெட்டாம் பெருக்கோடு முடிந்துவிடுவதில்லை. கோடை முடிய முடிய ஒவ்வொரு கிராமத்திலும் மராமத்துப் பணிகள் மும்முரமாக நடக்கும். வரும் பசலிக்கு (சாகுபடி ஆண்டு) நீராணிக்கத்துக்காக (கிராம நீர் மேலாண்மைக்கு) ஆட்கள் நியமித்துச் சம்பளம் நிர்ணயிப்பது, பாசன வாய்க்கால், வடிகால், குளம் குட்டை தூர்வாருவது, மற்றும் பஞ்சையான இடத்தில் கரையெடுத்துக் கட்டுவது இவையெல்லாம் வேகவேகமாக நடக்கும். இதற்கான செலவுகளுக்கு நில உடைமைக்குத் தக்கவாறு வரி வைத்து வசூலித்துக்கொள்வார்கள். பொதுப்பணித் துறையும் தன் பங்குக்கு மதகுகளைச் செப்பனிடுவது, கண்மாயின் பலகைத் திருகாணிகளுக்கு எண்ணெய் இடுவது போன்ற பணிகளை விரைந்து முடிக்கும். இவையெல்லாம் சமுதாயம் மேற்கொள்ளும் சடங்கு சாராத காவிரியின் புது நீர் வரவேற்பு நடவடிக்கைகள்.
மீன்களின் காவிரி
அணை திறந்து புது நீர் வந்த ஒரு வாரத்துக்கெல்லாம் கடலிலிருந்து உள்ள கெண்டை என்ற ஒரு வகை மீன் இரவில் வெகு மும்முரமாக ஆற்றுப் போக்கை எதிர்த்து நீந்தி முப்பது முப்பத்தைந்து கிலோ மீட்டர் வரை காவிரியின் பல கிளைகளில் உள்நாட்டுக்குள் வந்துவிடும். இந்தக் காலத்தில் வாளை மீன்களையும் ஆற்றில் பார்க்கலாம். இதைத் தொடர்ந்து புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வெள்ளிப் பாளங்களாகக் காவிரியில் கெண்டை மீன்கள் வெள்ளமாகப் பெருகிவிடும். மார்கழி, தை மாதங்களில் கச்சப்பொடி என்ற மீனை மதகுக்கு மதகு கூடை கூடையாக அள்ளி மாளாது.
காவிரிக்கு எப்போதும் உயிருண்டு
மேட்டூர் அணை, ஜனவரி மாத இறுதியில் மூடியவுடன் காவிரி அப்படியே நீரோட்டமின்றி வறண்டுபோகும் என்று நினைக்க வேண்டாம். தமிழ்நாட்டின் ஜீவநதி என்று சொல்ல முடியாவிட்டாலும், காவிரிக்குக் கோடையிலும் ஒரு உயிர்ப்பு உண்டு. நீர்வரத்து இல்லாவிட்டாலும், கரை ஓரங்களில் நிலைக்காத அளவுக்குப் பெரிய பெரிய மடுக்களில் நீர் தேங்கி, கிட்டத்தட்ட மறுவருடம் அணை திறக்கும் வரை காவிரி ஆங்காங்கே ஆற்றுப்போக்கில் தண்ணீர் திட்டுகளாகக் கிடக்கும். மணலில் சிறிதும் பெரிதுமான ஊற்றுக்களைத் தோண்டி தண்ணீர் எடுத்துக்கொள்வோம். வேண்டும் போதெல்லாம் புதிய ஊற்றுக்களை மணலில் தோண்டிக்கொள்வோம். இதற்கென்று கூரை ஓடு போன்று பித்தளையில் ஊற்றுவட்டா என்ற பாத்திரம் உண்டு. பெண்கள் மாலை நேரத்தில் குடமும் ஊற்றுவட்டாவுமாகக் காவிரிக்குச் சென்று ஊற்று நீர் எடுத்துவருவார்கள்.
கோடையில் மடு, ஊற்று போன்றவை மட்டுமல்லாமல் கரை ஓரங்களில் துலவாக்குழிகளும் உண்டு. படுகைகளில் இருக்கும் கத்திரி, மிளகாய்த் தோட்டங்களுக்காக ஆற்றில் இந்தத் துலவாக்குழிகளைச் செவ்வக வடிவில் ஆழமாக வெட்டி, அதிலி ருந்து ஏற்றமரத்தைக் கொண்டு தண்ணீர் இறைத்துக்கொள்வார்கள். கடும் கோடையில், காவிரியின் இந்தத் துலவாக்குழிகள், குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படும். எப்போதும் ஏதாவது ஒரு வழியில் காவிரி தன் மக்களுக்குத் தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருக்கும். இதுதான் வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி.
நதி நீர் பிரச்சினை, வெள்ளம், வறட்சி, கரை உடைப்பு என்ற அதீத நிலைகளுக்கு அப்பால், காவிரியின் அழகு நிலைகள் நம் கண்களுக்குப் படுவதில்லை என்பது உண்மைதானே!
- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago