வட இந்தியக் குளிர்: சில அனுபவங்கள்

By ஆர்.ஷபிமுன்னா

தமிழ்நாட்டில் உட்கார்ந்துகொண்டு “மார்கழிக் குளிர் ரொம்பப் படுத்துகிறது” என்றார் நண்பர் ஒருவர். நானும் அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தவன்தான். அது ஒருகாலத்தில். உண்மையில், இந்தியாவில் குளிர் என்கிற வார்த்தையின் ‘முழுச் சூடு’ம் உங்களைச் சூழ வேண்டும் என்றால், வட இந்தியாவில் இருக்க வேண்டும்.

குளிர் சாகடிக்குமா?

இந்த ஆண்டு வட இந்தியாவில் குளிருக்கு இத்தனை பேர் சாவு, கடந்த ஆண்டு வட இந்தியாவில் குளிருக்கு அத்தனை பேர் சாவு என்கிற மாதிரி செய்திகளை எல்லாம் படிப்பவர்களுக்கு ஓர் ஆச்சரியம் ஏற்படலாம். குளிர் சாகடிக்குமா? உண்மை. குளிர் காரணமாக இங்கு உணவு, உடை, வாழ்கைமுறை எல்லாமே மாறும்.

குறுகிய பகலும் நீண்ண்ண்ட இரவும்

காலை ஏழு மணிக்கு மேல் தொடங்கி மாலையில் ஐந்து மணிக்கே முடிந்துவிடும் பகல். ‘சூரியனைக் காணவில்லை’ எனப் பல நாட்கள், இயற்கையிடம் புலம்ப வேண்டி இருக்கும். நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டிருந்தால் உடம்பு இதமாக இருக்கும் அல்லது உடற்பயிற்சி எதாவது செய்ய வேண்டும். இல்லை என்றால், எந்நேரமும் குளிரால் ஒரு நோயாளிபோல ஆகிவிடுவோம்.

கேரட் அல்வா, வெந்தய லட்டேய்…

குளிரைப் பாதுகாக்கும் நடவடிக்கை கள் உணவிலிருந்தே தொடங்கும். வட இந்தியாவில் வருடம் முழுவதும் கிடைக்கும் கீரை பாலக்கீரை. குளிர் காலத்தில் பசலைக் கீரை, தண்டுக் கீரை, வெந்தயக்கீரை, சிறுகீரை, பத்துவா கீரை போன்றவையும் கிடைக்கும். அதேபோல, கோடையைவிட குளிர் காலத்தில்தான் காய்கறிகளும் விதவிதமாகக் கிடைக்கும். தாங்க முடியாத குளிரைச் சமாளிக்க பத்துவாக் கீரை உதவும். கோதுமை மாவில் இந்தக் கீரையைக் கலந்து ரொட்டி அல்லது பூரி சுட்டுச் சாப்பிடலாம். குளிருக்குக் கொழுப்பு கொஞ்சம் தேவை இல்லையா? அதனால், கேரட் அல்வா, வெந்தய லட்டு, வேர்க்கடலை அல்லது வெள்ளை எள்ளில் வெல்லம் கலந்த இனிப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

உடலுக்குச் சூடு தருவதால், கடுகு எண்ணெயை எல்லோரும் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்கள். இதன் வாடை சிலருக்குச் சகிக்காது. வாடையை எப்படி விலக்குவது? கடுகு எண்ணெயைக் காய்ச்சி, பின் பயன்படுத்த வேண்டும். இரவில் குளிரைச் சமாளிக்க கை, கால்களில் தடவிக்கொண்டால் உடம்பில் சூடு பரவிவிடும்.

சர்வம் ‘ஸ்வெட்டர்’-‘ரஜாய்’மயம்

வீட்டுக்குள்ளேயும் செருப்பு அணியும் கால்களுக்கு சாக்ஸையும் சேர்த்து அணிந்தால் குளிரைக் கொஞ்சம் சமாளிக்கலாம். நம்மூரில் ‘ஸ்வெட்டர்’ அணிந்தவர்களைப் பார்த்து ‘என்னப்பா உடல்நிலை சரியில்லையா’ எனக் கேட்போம் இல்லையா? ஆனால், இங்கு ‘ஸ்வெட்டர்’அணியவில்லை என்றால், கண்டிப்பாக உடல் வெளிறிப்போகும். பொதுவாக, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்வெட்டர்கள் மற்றும் லெதர் ஜாக்கெட்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். படுக்கையில் கம்பளிக்குள் புகுவதுவரை, வீட்டிலும் வெளியிலும் என எந்நேரமும் அணிந்திருக்க வேண்டியிருக்கும். சரி உடலை ‘ஸ்வெட்டர்’ - ‘ரஜாய்’ சகிதம் பாதுகாத்துக்கொள்ளலாம். தலை முடியை? உல்லன் குல்லாக்களும் மப்ளர்களும் உதவும்.

இந்தக் குளிரில் சாதாரண போர்வை கள் உங்களுக்குக் கை கொடுக்காது. கம்பளிப் போர்வைகளும் பஞ்சு அடைத்துத் தயாரிக்கப்படும் ‘ரஜாய்‘ எனும் மெல்லிய மெத்தைகளும் சேர்த்துப் போர்த்திக்கொள்ள அல்லது அவற்றுக்குள் பதுங்கிக்கொள்ள உதவும்.

இந்த உடைகளை அணிவதில், போர்வையைப் போர்த்திக்கொள்வதில் நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்து கிறீர்களோ, அதே கவனம் அவற்றைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் செலுத்த வேண்டும். சாதாரண சோப்பு, டிடர்ஜென்ட் தூள் இவற்றைச் சலவை செய்ய உதவாது. ‘ஈஸி வாஷ்’ திரவ உதவி தேவைப்படும்.

பிள்ளைகளுக்குக் குஷி… முதியவர்களுக்கோ தொல்லை!

குளிரின் காரணமாகப் பள்ளிகளின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு விடும். குளிரின் உச்ச நாட்களான டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரியில் சுமார் 10 நாட்களுக்குப் பள்ளிகள் விடுமுறையாக இருக்கும். இந்தக் குளிர் நீடித்தால், விடுமுறை நாட்களை யும் நீட்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார். இதனால், குழந்தைகள் வீட்டில் கும்மாளமிடுவர். ஆனால், முதியவர்களுக்கோ தொல்லைதான். பெரும்பாலானவர்களுக்குச் சளியும் மூச்சிரைப்பும் பெரும் சவாலாக வந்துவிடும். அதுவும் பழக்கம் இல்லாத தென்னிந்தியர்களுக்கோ பெரும் தொல்லையாக மாறிவிடும். ஆகையால், தென்னிந்தியர்கள் தம் சொந்த ஊருக்கு வீட்டுப் பெரியவர்களை அனுப்பிவிடுவது வழக்கம்.

சூரியக் குளியலின் அவசியம்

எல்லோருமே ஓர் அரை மணி நேரமாவது ‘சூரியக் குளியல்’ கட்டாயம் எடுக்க வேண்டும். குழந்தைகளை வெயில் வரும் நேரமாகப் பார்த்துக் குளிப்பாட்டலாம். அப்போது சூரியனைப் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். வெயில் காலங்களில் வதைக்கும் அதே சூரியன்தான். ஆனால், சூரியனின் அருமை குளிரில்தான் புரியும்!

தொடர்புக்கு: shaffimunna.r@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்