வாழும்போது வைக்காதேடா சேத்து. ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து… - மரண கானாவின் சில வரிகள் இவை. போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டும் அல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடியவை கானா பாடல்கள்.
கானா கச்சேரி சபாக்கள்
சென்னையில் குடிசைப் பகுதிகளிலும் ஆதரவற்றோர் வசிக்கும் நடைபாதைகளிலும் கானாவைக் கேட்கலாம்; முக்கியமாக, சாவு வீடுகளில். யாராவது இறந்தால், முதலில் தெரிந்தவர்களுக்குச் சொல்லுவார்கள். பிணத்தை ராத்திரியில் வைத்திருக்கும்போது கானா கச்சேரி ஏற்பாடுகள் தொடங்கும். இரண்டு மாட்டு வண்டிகளை ஒன்றாகச் சேர்த்து, அவசர மேடை அமைக்கப்படும். செத்தவரைப் பற்றியும் அவரது குணநலன்களையும் சம்பவங்களையும் வைத்து அங்கேயே அப்போதே பாடல்கள் தயாராகி கச்சேரியில் அரங்கேறும். விடிய விடிய கானா நடப்பதும் உண்டு. கையில் கிடக்கிற தட்டு, தகரம் என ஓசை தருகிற எதுவும் கானா பாடலுக்கான இசைக் கருவிகளாகிவிடும். செத்த நாளில் மட்டும் அல்ல; இப்போது எல்லாம் 16-ம் நாள் காரியம் நடக்கும் அன்றும் முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு நினைவுநாளிலும்கூட கானா பாடுகிறார்கள்.
கானாவின் மொழி
முறையற்ற ஒரு முறையை வடிவமாகக் கொண்டது கானாவின் மொழி. பேசுவதைப் போலவே அது பாடப்படுவ தாலும் அந்த வடிவத்துக்குள்ளேயே அழகியலும் வாழ்வின் உணர்ச்சியும் பீறிட்டு வருவதாலும் கானா அவ்வளவு காந்த சக்தியோடு இருக்கிறது. காலங்காலமாக அடிமைத்தனத்தில் அழுத்தப்பட்டிருந்த, எழுத்தறிவற்ற, ஆனால் உலக அனுபவமும் சிறந்த உணர்ச்சிகளும் கொண்ட மனிதனே கானாவின் பிரம்மா. இன்று படித்தவர்கள்கூட அந்தப் படிப்பறிவற்ற மனிதனின் மெட்ராஸ் பாஷை வழக்கில் தங்களை மாற்றிக்கொண்டு கானா பாடுகிறார்கள்.
கானாவைப் பாடும் பெரும்பாலான மக்கள், மொழிகளைக் காதுகளால் மட்டும் கற்றுக்கொண்டவர்கள். கண்களால் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள். பெரும்பாலும், எழுத்தறிவு அற்ற மக்களால் கானா பாடப்படுவதால்தான் அதன் மொழியும் அப்படி ஒரு கதம்பமாக இருக்கிறது.
மலரும் கானா
முதலில் கானாவை எல்லோரும் பாடி இருக்கலாம். அதன் பிறகு, இயல்பான திறமையோடு கானா பாடுபவர்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டு சாவுக்கு கானா பாடுவதே ஒரு தொழிலாகக் கொண்ட பாடகர்கள் உருவாகியுள்ளனர். மரண கானா விஜியில் தொடங்கி, கானாவில் தொடங்கினாலும் இசைக் கல்லூரியில் கர்நாடக இசையும் பயின்று இரண்டிலும் திறமை பெற்ற முனு கோட்டீஸ்வரன் (எ) ஆதி வரை உதாரணங்கள். தமிழ்நாடு இசைக் கலைஞர்கள் சங்கத்தின் நாகூரான், ‘புத்தர் கலைக் குழு’ மணிமாறன், சென்னையின் மக்கள் பிரச்சினைகளைக் கானாவாகப் பாடும் இசையரசு என ஒரு பெரும் கலைஞர் பட்டாளமே இன்று உருவாகியுள்ளது.
தேவா வளர்த்த கானா
சென்னையோடு இருந்த கானா புகழைத் தமிழகம் எங்கும் எடுத்துச் சென்றவர் என்று இசையமைப்பாளர் தேவாவைச் சொல்லலாம். அவர் படங்களில் பயன்படுத்திய கானா இசை தமிழ்த் திரை உலகில் அவரைத் தாண்டியும் பலரை கானாவை நோக்கித் தள்ளியது. ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ மாதிரியான பாடல்கள் அழியா கானா புகழுக்கு உதாரணங்கள்.
கல்லூரிகளும் சபாக்கள்தான்
கானா வளர்ச்சியில் ஒரு பங்கு அங்கீகாரம் நடைபாதைகளுக்கும் சேரிகளுக்கும் என்றால், இன்னொரு பங்கு அங்கீகாரம் சென்னையின் கல்லூரிகளுக்கும் கல்லூரி வழிச் செல்லும் பஸ்களுக்கும் உரித்தானது. மரணத்துக்கு மட்டும் பொதுவாகப் பாடப்பட்ட வடிவத்துக்குள்ளே காமமும் காதலும் கேலியும் புரிய வாய்ப்பில்லாத கல்வியின் மீதான கிண்டலுமாகக் கானா பல வடிவங்கள் எடுப்பது இங்கே நிகழ்கிறது. பல ரகமான இளைஞர்கள் கல்லூரியில் ஒன்றுகலப்பதால் பல எல்லைகளைக் கானா கடக்கிறது.
கானாவும் குற்றமும்
இதுதான் வாழ்க்கை எனப் பொதுவாகக் கருதப்படும் வரையறையை மீறியது அடித்தட்டுமக்களின் வாழ்க்கை. நீதிமன்றம், காவல் துறை, தண்டனை என்பதற்கு எல்லாம் அங்கே அர்த்ததங்கள் வேறு.
‘‘எத்தனயோ சிறையக் கண்டேன்
நானும் கண்டேன் கடுஞ்சிறைய
அழகான சென்ட்ரலோரம்
அருமையான சிந்தாரிப்பேட்ட
அச்சடிச்ச சோறு அட
அவுன்சு கணக்கு மோரு”
- சிறையில் அளவுச் சாப்பாடு தட்டில் கவுத்தப்படும்போது அச்சடித்த துல்லியத்தில் இருக்கும். அதுவும் அழகியல் வர்ணனை ஆகிவிட்டது.
கானாவும் பிற இசை வடிவங்களும்
கானாவுக்குத் தனியான உள்ளூர்த்தன்மை இருந்தாலும், கிராமப்புற மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களின் சென்னை வடிவமாகவே அது இருக்கிறது. நாட்டுப்புறப் பாடல்கள் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை மனித வாழ்வின் பல்வேறு உணர்வுகளைப் பாடும் விதமாக இருக்கிறது. அதில் ஒப்பாரியோடும் மாரடித்தலோடும்தான் கானா ஆரம்பத்தில் அதிகம் இயைந்துபோவதாக இருந்தது.
வெளிநாட்டு இலக்கியத்தோடு ஒப்பிட்டால், கருப்பின மக்களிடமிருந்து உருவாகி மைக்கேல் ஜாக்சனால் பிரபலப்படுத்தப்பட்ட பாப் இசை என்பதை இங்கிலீஷ் கானா என்றும் சொல்லலாம்.
அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கருப்பு மனிதர் வேகமாக காரை ஓட்டினார் என்பதால், வெள்ளைக்காரக் காவல் துறை அதிகாரிகளால் தாக்கி உருக்குலைக்கப்பட்டார். அமெரிக்காவில் அது 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சமூகக் கொந்தளிப்பானது. அதன் எதிரொலியாக ‘தே டோன்ட் கேர் அபௌட் அஸ்’ (They don’t care about us) எனும் பாடலை மைக்கேல் வெளியிட்டார். அது மனிதர்களுக்கு இடையில் பாகுபாடுகள் வேண்டாம் என்ற அர்த்தத்தில் இருந்தது. அது உலகப் புகழ்பெற்றது.
இந்தப் பாடலின் ஆங்கில வரிகளைப் புரிந்துகொள்ள நாம் பயன்படுத்தும் ஆக்ஸ்போர்டு அகராதி பயன்படாது. அங்கே சேரி ஆங்கிலத்துக்கும் தனி அகராதி உருவாக்கப் பட்டுள்ளது. நாமும் நமது சேரித் தமிழை மற்றவர்களும் புரிந்துகொள்ள அகராதி உருவாக்கும்போது, கானாவும் மொழிகளின் எல்லைகளைத் தாண்டிப் பயணப்படும்.
நேற்றைய பாப் என்பது இன்றைய கானாதான். நாளைய சென்னை கானா என்பது இன்றைய பாப் போலப் பல விஷயங்களை விடுதலை உணர்வோடு பாடக் கூடியதாக நிச்சயம் மாறும். இன்றே அதற்கான அழுத்தமான அடையாளங்கள் தெரிகின்றன. மரணத்தைப் பற்றிய ஒப்பாரியாக மாரடித்தலாகப் பிறந்த கானா, காதலையும் சிறைவாழ்வையும் பாடி அடுத்த வாழ்க்கை நிலைக்கு முன்னேறுவதுபோல சமூக விடுதலைக்கான அரசியல், சுற்றுச்சூழல், பெண்ணியம் எனப் பல தளங்களில் முன்னேறும்.
(இந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை ‘தி இந்து’ பொங்கல் மலரில் வாசிக்கலாம்) - த. நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago