மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி

By வித்யா சுப்ரமணியம்

நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபபாய் படேலுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி, ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கமானது, தனக்கு அரசியல் அல்லாத கடமைதான் பணிகள் என்று 1949-ல் வகுத்துக்கொண்டது. ஆனால், 2013-ல் அது வெளிப்படையாக மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையின் மூலம், தான் வகுத்துக்கொண்ட அமைப்பு விதிகளுக்கே முரணாக நடந்துகொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அமைப்பு விதிகளிலேயே, "அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்போம்" என்று வெளிப்படையாகக் கூறப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, வேறு எந்த உறுதிமொழியையும் அதனிடமிருந்து படேல் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்பதால் வேறுவழியின்றி அத்தகைய உறுதிமொழியை அளித்தது ஆர்.எஸ்.எஸ்.

2013-ல் நடந்துள்ள நிகழ்வுகள் இந்திய வரலாற்றின் பழைய பக்கங்களை அழிக்கும் வகையில் இருக்கிறது. பாரதிய ஜனதாவை ஆர்.எஸ்.எஸ். இப்போது தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை (நரேந்திர மோடி) அறிவிப்பதில் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பை அது அடக்கிவிட்டது. இதைவிட வெளிப்படையான அரசியல் நடவடிக்கை வேறு இருக்க முடியாது.

மூத்த ஆலோசகர்

ஆர்.எஸ்.எஸ். என்பது இப்போது பாரதிய ஜனதாவுக்கும் இதற்கு முன்னால் பாரதிய ஜன சங்கத்துக்கும் உற்ற ஆசானாக, வழிகாட்டியாக, ஆலோசனை கூறும் மூத்த குருவாகவே இருந்துவருகிறது. அதன் ஆலோசனையையோ வழிகாட்டுதலையோ ஏற்க முடியாதென்று நிராகரிக்க முடியாத நிலையிலேயே கட்சியும் இருக்கிறது. காரணம், ஜன சங்கக் காலத்திலிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கும் நிர்வாகப் பொறுப்புக்கும் தேவைப்பட்ட தலைவர்களை, முழு நேர ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ்-தான் அனுப்பிவைக்கிறது. கட்சியின் இதயமாகவும் மூளையாகவும் ஆர்.எஸ்.எஸின் தீவிரத் தொண்டர்களே செயல்படுவதால் அதன் ஆலோசனைகளும் கட்டளைகளும் சிந்தனைகளும்தான் கட்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆர்.எஸ்.எஸ். தனக்கென்று அரசியல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று கைவிட்டுவிட்டது. ஆனால், தன்னுடைய தொண்டர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்து பணிபுரிய அது அனுமதிக்கிறது.

அமைப்பு விதிகளில் உள்ள இந்தப் பிரிவை அது பயன்படுத்தி தன்னுடைய இயக்கத் தொண்டர்களை முன்னர் பாரதிய ஜன சங்கத்திலும் இப்போது பாரதிய ஜனதாவிலும் பணிபுரிய வைக்கிறது. லால் கிருஷ்ண அத்வானி முதல் நரேந்திர மோடி வரை அனைத்து முக்கியத் தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ். 'இதய'த்திலிருந்து கட்சியின் நிர்வாகத்துக்கு நேரடியாக வந்தவர்களே. அப்படி வரும் அவர்கள் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் முடிவுசெய்ய நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கும் தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் அடிக்கடி 'தீர்த்த யாத்திரை' மேற்கொண்டே தீர வேண்டும்.

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். உறவில் சொல்லப்படாத விஷயம் ஒன்று என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பொறுப்பில் இருக்கும் 'சர்சங்கசாலக்'என்ன நினைக்கிறார், என்ன செய்ய வேண்டும் என்று கட்சியிடம் எதிர்பார்க்கிறார் என்று எவருக்கும் தெரியாது. "அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம்" என்று படேலுக்கு 1949-ல் அளித்த வாக்குறுதி காரணமாகவும் இந்துத்துவா என்றாலே இயல்பாக ஏற்படும் அரசியல் எதிர்ப்புணர்வு காரணமாகவும் திரைமறைவிலேயே வேலைகள் நடத்தப்படுகின்றன. 1977 - 79, 1998 - 2004 காலங்களில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்ததற்குக் காரணமே, "எவர் கண்ணிலும் படாமல் ஒதுங்கியிருப்போம்" என்று ஆர்.எஸ்.எஸ். ஒப்புக்கொண்டதால்தான். 2013-ல் நடந்திருக்கும் சம்பவங்கள் முக்கியமானவை. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர மேலும் பல தோழமைக் கட்சிகள் தேவைப்படுகின்றன. தோழமைக் கட்சிகள் வேண்டும் என்றால், ஆர்.எஸ்.எஸ். பங்கு குறைவாகவோ கண் மறைவாகவோ இருக்க வேண்டும். ஆனால், முன்னெப்போதும் இல்லாததைவிட இந்த முறை கண்ணுக்குத் தெரியும் வகையில் வெளிப்பட்டதோடல்லாமல் கட்டளையிடும் தொனியிலேயே பேசியிருக்கிறார் 'சர்சங்கசாலக்'.

2005-லேயே கட்சியின் பொறுப்புகளை நேரடியாகக் கையில் எடுத்துக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். தயாராகிவிட்டது. பாகிஸ்தானுக்குச் சென்ற அத்வானி அங்கு முகம்மது அலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து பேசிவிட்டார். உடனே கோபத்தில் கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ். தலைமை, அத்வானியைக் கட்சிப் பதவியிலிருந்து கீழிறக்கியது. 2009 மக்களவை பொதுத் தேர்தலின்போது கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்டபோதிலும் ஆர்.எஸ்.எஸ். அவருக்கு அளித்திருந்த இடத்திலிருந்து அவரை இறக்கியதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதோ அவர் அப்பட்டமாகத் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்.

2005-ல் ஆர்.எஸ்.எஸ். பதவியிறக்கிய அத்வானி, 2005 செப்டம்பரில் சென்னையில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கலக்காமல் கட்சியால் எந்தவித முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இப்படி மற்றவர்கள் நினைப்பது கட்சிக்கோ ஆர்.எஸ்.எஸுக்கோ நன்மையைத் தராது. நல்ல மனிதர்களையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுருங்கிவிட இது வழிவகுக்கும். இந்த எண்ணம் மறைய ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா இரண்டுமே அந்த வழியில் செயல்பட வேண்டும்" என்றார்.

சங்கத் தலைமையோடு பல தலைவர்கள் மோதி மூக்குடைபட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அத்வானியோ ஒருகாலத்தில் அந்த அமைப்பின் செல்லப்பிள்ளை. ஜன சங்கத்தை வளர்க்கும் பணிக்காக சங்கத் தலைமையால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர். ஆர்.எஸ்.எஸ். என்பது அடுத்தவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது என்று அத்வானி பின்னர் பட்டவர்த்தனமாகவே சொல்ல நேர்ந்துவிட்டது, அது உண்மையும்கூட. அதேசமயம் அத்வானி போன்ற மூத்த தலைவரை, நெடிய அரசியல் அனுபவம் மிக்கவரை கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலக்கியிருப்பதுதான் அதுவரை நடந்திராதது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். இப்போது மீண்டும் கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. அதுவும் ஒரு தலைவருக்கு இரட்டைப் பதவி உயர்வு அளிப்பதற்கு. 2013 ஜூனில் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வுசெய்யப்பட்டார். 2013 செப்டம்பரில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். 2005-லாவது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வுசெய்தது என்பதை அவரே சொல்ல உணர்ந்துகொண்டோம். இப்போதோ அதையும் தூர வீசிவிட்டு, மோடிதான் பிரதமர் பதவிக்கான எங்களுடைய வேட்பாளர் என்று ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டது.

கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதை எதிர்த்து கட்சிப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ். தலைமையின் கட்டளைகளுக்கேற்ப அந்த எதிர்ப்பைத் திரும்பப் பெற்றார். இதைக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.

"ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அத்வானியுடன் பேசினார், ''பாரதிய ஜனதா ஆட்சிமன்றக் குழு எடுத்த முடிவை மதியுங்கள், தேசிய நலனில் அக்கறைகொண்டு கட்சியைத் தொடர்ந்து வழிநடத்துங்கள் என்று கோரினார்" என்று ராஜ்நாத் சிங் 2013 ஜூன் 11-ம் தேதி பத்திரிகைகளுக்கு அறிக்கை மூலம் தெரிவித்தார். கட்சியின் ஆட்சிமன்றக் குழு அத்வானிக்கு 'வேண்டுகோள்'தான் விடுத்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவரோ 'கட்டளை'யே பிறப்பித்தார். வார்த்தைகள் நளினமாக இருந்தன. ஆனால், அவற்றிலிருந்த கண்டிப்பு அப்படிப்பட்டதல்ல.

கட்சியின் தலைமைப் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். ஏற்பது 2005-ல் தொடங்கி 2013 செப்டம்பரில் நிறைவுற்றது. பிரச்சாரக் குழுத் தலைவராக மோடியை நியமிக்கக் கூடாது என்று அத்வானி 2013 ஜூனில் வலியுறுத்தினார். ஆனால், அவர்தான் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சிக்குள் மோடிக்கு எதிராக இருந்த எதிர்ப்பாளர்களைக் களைப்படையவைக்கும் உத்தி இது.

அரசியல் எமது வேலையல்ல

ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும்… அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949-ல் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்ட தடையை விலக்க, படேல் இதை நிபந்தனையாகவே விதித்தார்.

காந்திஜியின் படுகொலையில் தங்களுடைய இயக்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்போதைய 'சர்சங்கசாலக்'மாதவ சதாசிவ கோல்வால்கர் மன்றாடினார். அந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடவில்லை என்பதில் படேலும் தெளிவோடு இருந்தார். அதை 1948 பிப்ரவரி 4-ல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே கருத்தைப் பின்னரும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், சங்கத்தின் வன்முறை சார்ந்த வழிமுறைகள்தான் காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கான சூழலை உருவாக்கிவிட்டது என்பதில் உறுதியாக இருந்தார். காந்திஜி படுகொலை தங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது என்று பிரதமர் நேருவுக்கும் உள்துறை அமைச்சர் படேலுக்கும் கோல்வால்கர் தந்திகள் அனுப்பியிருந்தாலும், அந்த அமைப்பின் மீதான கோபத்தைத் தணிக்க அது எந்த வகையிலும் உதவவில்லை.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 பிப்ரவரி 4-ல் வெளியான அரசு அறிக்கையிலும், காந்திஜியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணம் என்று கூறப்படவில்லை. "ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும் காவல் துறை – ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும்கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன" என்று அரசு வெளியிட்ட தடை நடவடிக்கையில் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுரையை ஏற்காமலேயே, தங்கள் மீதான தடையை அரசு விலக்க வேண்டும் என்று கோல்வால்கர் விரும்புகிறார் என்று படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் 1948 நவம்பர் 14-ல் அறிக்கை வெளியிட்டது. அத்துடன் அந்த அமைப்பு தேச விரோதமாகவும் சட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறைப் பாதையிலும் கடந்த காலங்களில் இருந்ததைப் போல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு இட்டுச் செல்லும் வகையிலும் செயல்படுவதாகப் பல்வேறு மாகாண அரசுகளிலிருந்து தங்களுக்கு அறிக்கைகள் வருவதாகவும் அது தெரிவித்தது.

இரு கடிதங்கள்:

இதற்கும் முன்னதாக, படேல் இரு கடிதங்களை எழுதினார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக சியாமா பிரசாத் முகர்ஜி முன்வைத்த வாதங்களை நிராகரித்து ஒரு கடிதம் எழுதினார். "ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் அரசுக்கும் தேசத்துக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளன. காலம் செல்லச் செல்ல ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் அமைப்பாகவே இருக்கிறது, நாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் முன்னெப்போதையும்விட அதிகமாகவே ஈடுபடுகிறது" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கே ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். வெறுப்புணர்வு பொங்க முஸ்லிம்களை அவர்கள் தாக்குவதையும் இந்த வகுப்புவாத வெறியின் உச்சகட்டமாக மகாத்மாவையே நாம் பலிகொடுக்க நேரிட்டதையும் காந்திஜியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் மக்களுக்கு இனிப்புகளை வழங்கியதையும் படேல் அதில் சுட்டிக்காட்டினார். காந்திஜியைக் கொல்லக் காரணமாக இருந்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்கப்படவில்லை; வன்முறையை வளர்த்தது, அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்து அதைச் சீர்குலைக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காகத்தான் தடை விதிக்கப்படுகிறது என்பதை அதில் அவர் விவரித்திருந்தார் (காந்திஜியின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசு பின்னர் முறையாகவே அறிவித்தது.)

இதற்குப் பிறகே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். "இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்" என்பது அந்த நிபந்தனைகளில் சில. (ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய இயக்கக் கொடியையே குருவாக மதிக்கிறது, அந்தக் கொடியை மட்டுமே தன்னுடைய அலுவலகங்களில் ஏற்றுகிறது). தங்களுடைய அமைப்புக்கு எழுத்துப்பூர்வமான அமைப்பு விதிகளை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். தலைமை மறுத்தது. அரசுக்கும் அதற்கும் இடையில் நீண்ட போராட்டம் நடந்தது. முடிவில் படேல் வென்றார். இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது. அன்று 'அரசியலிலிருந்து விலகி நிற்போம்'என்று படேலுக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இப்போது பின்வாங்கிவிட்டது.

தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்