யுத்த காண்டம் ரொம்பப் பக்கம்

By செய்திப்பிரிவு

சொல்லி ரெண்டு நாள் ஆகியிருக்குமா? பாலஸ்தீனிய மேற்குக் கரையை ஒட்டிய நிலப்பரப்பில் எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீன் பேச்சு வார்த்தைகள் இன்றைக்கு முட்டிக்கொண்டு நின்றிருக்கின்றன.

புடலங்காய்ப் பேச்சுவார்த்தை, இத்தனை வருஷமாக ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடித்துக்கொண்டிருப்பது, இப்போது மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. ஆனால் ஒரு பெரிய வருமானத்துக்கான கதவு திறக்கப்படுகிறபோது அயோக்கிய அரசியலின் நிஜ முக தரிசனம் சித்திக்கிறது.

பாலஸ்தீனியர்கள் பெருமளவு வசிக்கும் மேற்குக் கரைப் பகுதியை ஒட்டி இஸ்ரேல் ஒரு தடுப்புச் சுவர் கட்டிக்கொண்டிருக்கிறது. சும்மா நாலடி குட்டிச்சுவரல்ல. சீனப்பெருஞ்சுவரின் சித்தப்பா பிள்ளை என்று சொல்லக்கூடிய விதத்திலான பெரிய சுவர். நல்ல கனமான காங்கிரீட் சுவர். எதற்கு என்று கேட்டால், பாலஸ்தீனியர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள என்று கூசாமல் சொல்லுவார் பெஞ்சமின் நெதன்யாஹு.

இந்தச் சுவரைக் கூட அத்துமீறி பாலஸ்தீனிய நிலப்பரப்பில்தான் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப் பக்கத்து கோயிந்தசாமிகள் சொல்வது அம்பலத்துக்கு வாராத சங்கதி.

அதையெல்லாம் யார் கேட்டார்கள்? என் இஷ்டம்; நான் இப்படித்தான் செய்வேன் என்று வெளிப்படையாக முண்டா தட்டும் கலாசாரத்தைப் பேணுகிற தேசம் இஸ்ரேல். நேற்றைக்குச் சொல்லிவிட்டார் நெதன்யாஹு. இஸ்ரேல் - பாலஸ்தீன் எல்லைக்கோடானது, நான் போடுவதுதான். ஆறுநாள் யுத்த காலத்து அண்டர்ஸ்டாண்டிங்குக்கெல்லாம் இடமில்லை. அதாவது ஓஸ்லோ ஒப்பந்தத்தையெல்லாம் எவன் மதித்தான் என்பதுதான் இதன் நேரடி அர்த்தம்.

என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீனியர்கள்.

இந்தப் பக்கம் நெதன்யாஹு இப்படியொரு பேச்சு பேசினாரா? சொல்லி வைத்தமாதிரி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் சில யூத எம்பிக்கள் இன்னொரு திருவிளையாடல் காவியத்துக்குப் பாயிரம் பாட ஆரம்பித்தார்கள். இதுநாள் வரைக்கும் ஜெருசலேத்தில் அல் அக்ஸா மசூதி அமைந்துள்ள குன்றை ஒட்டிய மேற்குப் பக்கச் சுவரில் முகம் புதைத்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்த யூதர்கள் ஏன் இன்னும் அங்கேயே நிற்க வேண்டும்? அவர்கள் மசூதிக்கு உள்ளே சென்று பிரார்த்தனை செய்யலாமே? அதற்கு சபை ஆவன செய்தால் சலக சம்பத்துகளும் சித்திக்கும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைக்கே அடித்தளம் இந்த மசூதிக்குள்தான் இருக்கிறது. யூதர்களுக்கும் சரி, அரேபியர்களுக்கும் சரி. இது ஒரு புனிதத்தலம். இரு தரப்பும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத நித்ய கொதி கேந்திரம். பாலஸ்தீனியர்களிடமிருந்து இந்தப் புனிதத்தலத்தைப் பிடுங்கும் முனைப்பில் உருவானதுதான் மேற்படிப் பஞ்சாயத்தே. யாரைக் குறை சொல்ல இயலும்?

நேற்றைக்கு நாடாளுமன்றத்தில் ஒரே அமளிதுமளி. எம்பிக்கள் வஸ்தாதுகளாகும் வைபவம் கனஜோராக நடந்தேறியிருக்கிறது. உன் பிராந்தியத்துக்குள் என் சுவர். உன் மசூதிக்குள் என் பக்தர்கள். இன்னுமென்ன? உன் மண்ணின் எண்ணெய்க் கிணறுகள் என்னுடையவை; உரிமை கேட்டால் அல்வாதான் என்றுதான் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எப்படியும் அடுத்து வரும் கிருஷ்ண பட்சத்துக்குள் அதுவும் நடந்துவிடும்.

தனி நாடு என்னும் பெருங்கனவை மென்றுகொண்டு, இப்போதைக்குக் கூடுதல் தன்னாட்சி அதிகாரங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீனத்து அரேபியர்கள் இப்போது அடுத்த இண்டிஃபதாவை (மக்கள் எழுச்சிப் போராட்டம்) ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் போராட்டமாகத் தொடங்கி, கலவரமாக உருப்பெற்று, யுத்தமாக முடிந்த முந்தைய சம்பவங்கள் பெரும் துக்க சுவடுகள்.

அப்போது அவர்களுக்கு அரஃபாத் என்றொரு தலைவர் இருந்தார். ஆயுதப் போராளியாக ஆட்டத்தைத் தொடங்கினாலும் அமைதிக்கும் கொடிபிடித்த அதிசயப் புறா. இப்போதைய அப்பாஸெல்லாம் அந்தளவுக்கு வல்லமை பொருந்தியவராகத் தெரியவில்லை.

பி.எல்.ஓவிலும் சரி, ஹமாஸிலும் சரி. வலிமை மிக்க தலைமை இல்லாத சூழலை இஸ்ரேல் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. பாலஸ்தீனிய நிலப்பரப்பில் வம்படியாக நிறுவியிருக்கும் யூதக் குடியிருப்புகளை அதிகரிக்கும் திருப்பணிவேறு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் 2014 ஜனவரி பிறக்கும்போது பாலஸ்தீனில் மீண்டும் ஒரு யுத்த காண்டம் தொடங்கிவிடும் போலத்தான் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்