அடிப்படைகளைக் கண்டுகொள்ளாத அணைக்கட்டுத் திட்டங்கள்!

By செல்வ புவியரசன்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அணைக்கட்டுகளை மையமாகக் கொண்டு உருவான பாசனத் திட்டங்களுக்கு முதன்மைப் பொறியாளராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் கன்னூரி லட்சுமண ராவ். அவர், ஆந்திரத்தின் பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியாளர் ஆனவர். அவருக்குத் துறை சார்ந்து முடிவெடுக்கும் முழுமையான அதிகாரத்தை நேரு வழங்கியிருந்தார். அப்போதைய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியுடன் முரண்பட்டு வெல்லும் வகையில் அவரும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார். கே.எல்.ராவ் அதிகாரியாக இருந்து ஆற்றிய பணிகளுக்காகப் பின்பு மத்திய அமைச்சராகவும் பதவியளிக்கப்பட்டவர். அவர் தனது சுயசரிதையில் இலங்கைக்குச் சென்றுவந்த அனுபவங்களை ஆச்சரியத்தோடு எழுதியிருக்கிறார்.

இலங்கையின் நவீன பாசனத் திட்டங்களுக்கு அத்தீவின் பண்டைக்கால பாசன அமைப்புகளே அடிப்படை ஆதாரமாக இருக்கின்றன என்பதுதான் கே.எல்.ராவ் அடைந்த வியப்புக்குக் காரணம். ஆனால், அதில் வியப்படைவதற்குப் பெரிய நியாயங்கள் இல்லை என்பதை இன்று உணர்கிறோம். ஏனெனில், அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் அத்தகைய பாசன அமைப்புகள் 50,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தன. அந்தப் பாசன அமைப்புகளில் சிலவற்றைத்தான் தற்போதைய தெலங்கானா அரசு ‘மிஷன் காகதீயா’ திட்டத்தின் கீழ் புனரமைத்துவருகிறது. அப்படியென்றால், அதையெல்லாம் அறியாதவராகவா கே.எல்.ராவ் இருந்திருக்கிறார்?

அன்றைக்கு அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றிய கே.எல்.ராவ் போன்ற பொறியாளர்கள் பாரம்பரிய அறிவை பொருட்படுத்தவில்லையோ என்றும் தோன்றுகிறது.

நிலத்துக்கு ஏற்றபடி பாசனம்

இந்தியா முழுவதும் அந்தந்த நில அமைவுகளுக்கு ஏற்பத் தனித்துவமான பாசன அமைப்புகளை முந்தைய தலைமுறையினர் உருவாக்கியுள்ளனர். அவை பாசனத்துக்கு மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்ட அளவைப் பராமரிப்பதற்கும் உதவியாக இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலும் ஆந்திரத்திலும் ஏரிகள், இமாச்சல பிரதேசத்தில் - குல், பிஹாரில் - அஹார், ராஜஸ்தானில் - ஜோஹத், தார் பாலைவனத்தில் - காடின் என்று இந்தியா முழுவதும் பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டுவரும் இந்த பாரம்பரியப் பாசன அமைப்புகள் குறிப்பிட்ட நிலப்பரப்பின் நீராதாரங்களுக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்றவாறு அனுபவ அறிவின் துணைகொண்டு உருவானவை.

இத்தகைய சிறு பாசன அமைப்புகளைப் பற்றிய ஐந்தாவது கணக்கெடுப்பு தற்போது நடந்துவருகிறது. 2006-07-ல் மேற்கொள்ளப்பட்ட நான்காவது கணக்கெடுப்பின்போது, இந்தியா முழுவதும் 5,23,816 நீர்நிலைகள், சிறு பாசன அமைப்புகளாக இருப்பது தெரியவந்தது. ஆனால், தேசிய அளவில் இன்னும் அவை முறையாக வகைப்படுத்தப்படவில்லை. ஏரி, குளம், குட்டை என எல்லாமும் நீர்நிலைகள் என்ற பொதுப் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. இந்தச் சிறு பாசன அமைப்புகள் ஒருங்கிணைந்த நீராதார மேலாண்மைக்கு வலு சேர்ப்பவை. ஜப்பானில் இத்தகைய ஒருங்கிணைந்த முறையே பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்படியான ஒருங்கிணைந்த பாசன முறை பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே தாமிரபரணியில் பின்பற்றப்பட்டுவருகிறது.

சிறிய அளவிலான பாசன அமைப்புகள் வடிநில அமைப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன என்பது மிக முக்கியமானது. இந்தியாவின் மிகப் பெரிய அணைக்கட்டுத் திட்டங்கள் வடிநிலங்களில் நீர் வெளியேறுவதற்கான வழிகள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.

அணைகள் முழுமையான தீர்வல்ல

இந்தியா முழுவதும் பெரியதும் சிறியதுமாக 4,400 அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பொறியாளர்கள் அணைகள் கட்டுவதையும் மின் உற்பத்தி செய்வதையும் மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் 251 பில்லியன் கியூபிக் மீட்டர் நிலத்தடிநீர் ஆழ்குழாய்க் கிணறுகளின் மூலமாக உறிஞ்சப்படுகிறது. நிலநீரியல் நிபுணர்களோ நிலத்தடி நீர் ஆதாரத்தை மென்மேலும் எந்தெந்த வகைகளில் பெறுவது என்று மட்டுமே திட்டமிடுகிறார்கள்.

இந்தியாவின் நீர்த்தேவைக்கு அணைக்கட்டுத் திட்டங்களோ, ஆழ்குழாய்க் கிணறுகளோ தீர்வாக இருக்க முடியாது. நாட்டில் உள்ள மொத்த அணைக்கட்டுகளில் 40% மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால், அந்த மாநிலம் தன்னுடைய தண்ணீர்த் தேவைக்கு 80% மழையைத்தான் நம்பியிருக்கிறது.

நிலத்தடி நீரே முதன்மையானது

தற்போது நாட்டின் ஒட்டுமொத்த நீர் அளிப்பில் ஏறக்குறைய 80%-ஐ நிலத்தடி நீரமைப்புகளே வழங்கிவருகின்றன. ஒட்டுமொத்த பாசனப் பரப்பிலும் ஏறக்குறைய 60% நிலத்தடி நீரமைப்புகளைத்தான் சார்ந்துள்ளன. ஆற்றுப்பாசன அமைப்புகளும் நிலத்தடி நீரமைப்புகளும் தனித்தனியாகவே நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், அவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

ஆற்றுநீர்ப் பாசனத்தின் காரணமாக நிலத்தடிநீர் மட்டம் பாதுகாக்கப்படுகிறது என்றும்கூட தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்றால் நிலத்தடிநீர் மட்டத்தை முறையாகப் பராமரித்துவந்தால்தான் நதியின் நீரோட்டமே சீராக அமையும். கங்கை நதிச் சமவெளிப் பகுதியில் அளவுக்கதிகமான நிலத்தடிநீர் ஆழ்குழாய்கள் மூலமாகச் சுரண்டப்பட்டதன் விளைவாக, தற்போது வண்டல் மண் பகுதிகளில் நீரோட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக ஆழ்குழாய்க் கிணறுகள் எங்கெங்கு, எந்தெந்த ஆழங்களில் உள்ளன என்று பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

மாநிலங்களின் குரல்களுக்கு மதிப்பில்லை

அரசும் அதிகாரிகளும் ஆற்றுநீர்ப் பாசனத்துக்குக் கொடுத்த கவனத்தை ஏரி, குளங்கள் போன்ற நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் சிறிய பாசன அமைப்புகளுக்குக் கொடுக்கவில்லை. இந்திய விடுதலைக்கு முன்பே உருவான மத்திய நீர் ஆணையம்தான் இன்னும் இந்தியாவின் நதிநீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்கிவருகிறது. அணைக்கட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசின் வசம் இருப்பதால், மாநில அரசுகளின் குரல் அங்கு எடுபடுவதில்லை. மத்திய நீர் ஆணையமோ நிலத்தடிநீர் அமைப்புகளைப் பற்றி கவனம் கொள்வதே இல்லை.

1971-ல் நிறுவப்பட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறது. நதிநீர் ஆணையத்துக்கு இருக்கும் நிதியாதார வசதிகள் நிலத்தடி நீர் வாரியத்துக்குக் கிடைப்பதில்லை. அதே நேரத்தில், இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. முக்கியமாக, இந்த இரண்டுமே சிறிய அளவிலான பாரம்பரிய பாசனத் திட்டங்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. விளைவு, நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு குறைந்திருப்பதோடு, அதன் தரமும் மோசமடைந்துவருகிறது.

திட்டக்குழு உறுப்பினராக இருந்த மிகிர் ஷா தலைமை யிலான நிபுணர் குழு, கடந்த ஆண்டு இறுதியில் அளித்துள்ள அறிக்கையில் இந்த இரண்டு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தேசிய நீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்த அறிக்கையிலும்கூட பாரம்பரிய முறையிலான சிறிய பாசனத் திட்டங்களுக்கு உரிய கவனம் கொடுக்கப்படவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

அணைக்கட்டுத் திட்டங்களின் மூலம் பாசனப் பரப்பை அதிகப்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற கனவு நியாயமானது. அக்கனவு நிறைவேறியதன் காரணமாகவே உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றோம். கூடவே, அக்கனவு சில அடிப்படை உண்மைகளைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டது. முடி வெடுக்கும் அனைத்து அதிகாரங்களையும் பொறியாளர் களிடம் வழங்கியதற்கு மாறாக, வேளாண்மை, சூழலியல், பொருளாதாரம் முதலிய பல்துறை வல்லுநர்களின் மதிப்பீடுகளுக்கும் உரிய கவனம் கொடுத்திருந்தால் இந்தக் குறைகளையும் இழப்புகளையும் முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும். இனிவரும் காலத்திலாவது பெருந்திட்டங்களை வகுக்கையில் இக்குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்