ஜெயிக்குமா ஜெயலலிதா வியூகம்?

By ரஷீதா பகத்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த உப்புச்சப்பற்ற தொலைக்காட்சிப் பேட்டியைப் பற்றி தேசிய ஊடகங்களும் சமூக ஊடகங்களும் விவாதிப்பது ஒருபுறமிருக்க - எவராலும் தடுத்து நிறுத்த முடியாத வகையில் டெல்லி நோக்கி நரேந்திர மோடி முன்னேறிக்கொண்டிருப்பதாகக் கருதப்படும் வேளையில், தமிழ்நாட்டில் மிகவும் சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பிரதமர் பதவியைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் மன உறுதியோடு, தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்த்து 40 மக்களவைத் தொகுதிகளும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கே கிடைக்குமாறு ‘வெற்றிக்கனியைப் பறித்துத் தா’ என்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டார் ஜெயலலிதா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் தேர்தல் உடன்பாட்டை முடித்துவிட்டார்.

தங்கள் இரு கட்சிகளுக்கிடையில் உடன்பாடு ஏற்பட்டதும் நிருபர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன், “பிரதமர் பதவிக்கான வேட்பாளர் ஜெயலலிதாதான்” என்பதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். “ஜெயலலிதா பிரதமராவாரா?” என்ற கேள்விக்கு, “நாங்கள் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றால், அதற்கான வாய்ப்புகள் தானாகவே தோன்றிவிடும்” என்று பதில் அளித்திருக்கிறார்.

கலக்கத்தில் தி.மு.க.

தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் காரணமாக, தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. “ஸ்டாலினின் நாள்கள் எண்ணப்படுகின்றன” என்று அழகிரி எச்சரித்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பேட்டி அளித்தார். அழகிரியைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருப்பதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட பூசல்கள் இன்னமும் ஓயவில்லை.

காங்கிரஸ் கட்சி இப்போதிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியாது என்பதால், தி.மு.க-வின் ஆதரவைப் பெற கருணாநிதிக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு விடுக்கப்படுகிறது. எங்கோ திருமணத்துக்கு வந்த மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் முதலில் சென்னையில் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். பிறகு, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். இரு சந்திப்புகளுமே மரியாதை நிமித்தமான சந்திப்புகள்தான் என்றே கூறப்பட்டன. கருணாநிதி இன்னமும் பிடி கொடுக்காமல் இருக்கிறார்.

காத்திருக்கும் பா.ஜ.க.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு சில இடங்களையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற தீவிரத்தில், மோடியின் பா.ஜ.க. தன்னை ஆதரிக்கக் கூடிய கட்சிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டுவருகிறது. வைகோவின் ம.தி.மு.க., பா.ஜ.க-வுடனான கூட்டணியை உறுதிசெய்துவிட்டது; பா.ம.க. தலைவர்களுடனும் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.

தே.மு.தி.க-வையும் அணியில் சேர்த்துக்கொள்ளத் தீவிரமாக முயற்சிகள் செய்தும் விஜயகாந்த் இன்னமும் தனது முடிவைத் தெரிவிக்காமல் இருக்கிறார்.

குழப்பத்தில் தே.மு.தி.க.

உளுந்தூர்பேட்டையில் ‘ஊழல் எதிர்ப்பு மாநாடு’ நடத்திய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஊழல் எதிர்ப்பு என்று அறிவித்து விட்டதாலேயே தி.மு.க-வுடன் கூட்டணி இருக்காது என்கிறார்கள். சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் அரசியல் நடத்தும் கட்சிகளையும் மாநாட்டில் அவர் கண்டித்துப் பேசியிருக்கிறார். எனவே, பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்கள். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான் என்று குற்றம் சாட்டிய விஜயகாந்த், அழகிரியைக் கண்டித்துப் பேசியபோது புருவங்கள் நெறிந்தன. ஆனால், கருணாநிதி குறித்தோ, மு.க. ஸ்டாலின் குறித்தோ அவர் ஏதும் பேசவில்லை.

வாய்ப்புகள் பிரகாசம்

எதிரிகள் இப்படி உடைந்திருக்கும் சூழலில்தான், ஜெயலலிதா அரசியல்ரீதியாக மேலும் வலுவாக இருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாகவே மக்களிடம் செல்வாக்கை இழந்துவரும் தமிழக காங்கிரஸ், இப்போது மீட்சிபெற முடியாத நிலையில் துவண்டுகிடக்கிறது. உடன் பிறந்தவர்களின் சகோதர யுத்தத்தால் கிழிந்து கந்தலாகிவிட்ட தி.மு.க. அரசியலில், தனக்கு ஆதரவாகப் பெரும் அலை எதையும் உருவாக்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அவர்களுக்கு அனுசரணையான தலைவர் ஜெயலலிதாதான். மோடியிடம் அவருக்குள்ள நட்பு ரகசியமானது அல்ல.

அ.இ.அ.தி.மு.க. இல்லை என்பதால் ம.தி.மு.க., பா.ம.க. சேர்ந்தாலும் பா.ஜ.க-வால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்துவிட முடியாது. எனவே ‘மோடி மஸ்தான்’ வேலை இங்கே எடுபடாது.

பிரதமராகிவிட வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு இருந்தாலும், அது கைகூடாது என்கிற பட்சத்தில் அவருடைய ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காகத்தான் இருக்கும் என்பது பா.ஜ.க-வுக்கு ஆறுதலைத் தரக் கூடும். ஜெயலலிதாவின் ஆதரவில்தான் மோடி பிரதமராக முடியும் என்ற நிலை வந்தால், இரும்பு மனிதரான மோடி, தென்னிந்தியாவின் ஜான்சி ராணியான ஜெயலலிதாவிடம் அடங்கி, பணிந்துதான் தீர வேண்டும்.

ஆயிரம் கனவுகள்

ஒருவேளை அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வட இந்தியாவில் கணிசமான இடங்களைப் பெற்று, பாஜ.க-வுக்கு 180 தொகுதிகள் கிடைப்பதுகூடக் கடினம் என்ற நிலை ஏற்பட்டு, மாநிலக் கட்சிகள் கணிசமான தொகுதிகளைப் பெறும்பட்சத்தில் மூன்றாவது அணி வாயிலாக டெல்லிக்கு ஒரு பிரதமரை அனுப்பிவைக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டுக்குக் கிட்டும். ஆனால், அதற்கேற்ப மற்றவர்களை ஒருங்கிணைக்கவும், அரவணைக்கவும், அவரவருக்கு வேண்டியதைக் கொடுத்து ஆதரவைப் பெறவும் ஜெயலலிதா தன்னுடைய அனுபவம், அரசியல் சாதுர்யம் என்று அனைத்தையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

அரசியலில் பழுத்த அனுபவமும், சூழ்ச்சித் திறனும் உள்ள சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், தனக்கென்று தனி வழி கண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, அடக்கமான – ஆனால், ஆழமான அரசியல்வாதியான பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக், நிமிடத்துக்கு நிமிடம் குணம் மாறிக்கொண்டேயிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிஹாரின் நிதீஷ் குமார் என்று அனைவரையும் சரிக்கட்ட வேண்டியிருக்கும். மேற்கு வங்கத்தில் இம்முறை இடதுசாரிகள் கணிசமான தொகுதிகளைப் பெறாவிட்டால்தான் மம்தாவுக்கு அரசியல் செல்வாக்கு தொடர முடியும்.

தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்குடனும் வலுவுடனும் ஜெயலலிதா திகழும் அதே வேளையில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கின் செல்வாக்கும் ஆதரவும் சரிவைக் கண்டுவருகிறது. முசாபராபாத் வகுப்புக் கலவரமும் அதற்குப் பிறகு முஸ்லிம்கள் நடத்தப்பட்ட விதமும் அவருக்கு முஸ்லிம்களுடைய வாக்கு வங்கியில் இருந்த செல்வாக்கில் பெரிதும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது.

பிஹாரில் நிதீஷ் குமாரும் தனித்துவிடப்பட்ட நிலையில், கூட்டணியிலிருந்து வெளியேற்றிய காரணத்தால் கொலை வெறியில் இருக்கும் பாரதிய ஜனதாவின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது, போதாக்குறைக்கு காங்கிரஸ் கட்சி லாலு, ராம்விலாஸ் பாஸ்வானுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் பல்வேறு செய்கைகளால் மக்கள் அதிருப்தி அடைந்துவருகிறார்கள். எனவே, சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது கிடைத்த ஆதரவு தொடருவது சந்தேகம்.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் செல்வாக்கு எப்போதுமே கண்ணுக்குத் தெரியாமலிருந்து தேர்தல் சமயத்தில் மட்டுமே வெளிப்படும். இந்த முறை அதற்கும் வாய்ப்பு குறைவு.

உத்தரப் பிரதேசம்தான் பா.ஜ.க-வுக்குக் கர்ம பூமி. அங்கு முலாயம், மாயாவதி இருவரும் வலுவில்லாமல் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் இழந்த செல்வாக்கைப் பெறவில்லை. மோடிக்குப் பெருத்த ஆதரவை உத்தரப் பிரதேசத்தில் திரட்ட முயற்சி நடக்கிறது. ஆனால், குஜராத்தில் நடந்த சம்பவங்களுக்கு முஸ்லிம்கள் இங்குதான் அவருக்குப் பாடம் புகட்ட முடியும். அதேசமயம், முஸ்லிம் சமுதாயம் அனைத்தும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு குறைவு, அது நல்லதும்கூட. எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு வங்கியாகச் செயல்படும் வரையில் முஸ்லிம்களுக்கு முன்னேற்றம் என்பதே கிடையாது. அதேசமயம், அவர்கள் சிந்தித்து வாக்களிப்பது அவசியம்.

ஆக, இந்தத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும் சரி, மூன்றாவது அணிக் கட்சிகளுக்குக் கணிசமான தொகுதிகள் கிடைத்தாலும் சரி - மகிழ்ச்சியடையப்போவது ஜெயலலிதாதான். இவ்வளவையும் தாண்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நீங்கள் இப்போதும் கருதுவீர்களேயானால், நல்ல மருத்துவராகப் பார்த்து உங்களைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது!

© பிசினஸ் லைன், தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்