மோடியின் அனைவருக்குமான இந்தியா

By டி.எம்.கிருஷ்ணா

மோடி ஆட்சியின் இரண்டாண்டுகள் நிறைவு, நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது. அற்புதங்களின் இரண்டாண்டுகளாகவும் நவீன இந்தியாவின், லட்சிய வேட்கை கொண்ட இந்தியாவின், முன்னோக்கிச் செல்லும் இந்தியாவின் இரண்டாண்டுகள் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது. கூடவே, புறக்கணிக்கப்பட்ட ஆன்மிக, இந்து இந்தியாவின் தொன்மையும் ஆர்ப்பாட்டத்துடன் முன்வைக்கப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள பலரையும் பொறுத்தவரை இதுதான் பொற்காலத்தின் தொடக்கம். இன்னும் ஒரு பத்தாண்டுகளாவது இந்தப் பொற்காலம் நீடிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நேரு குடும்பத்தின் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்று ஒரு வகையில் நிம்மதி அடையலாம். கூடவே, ‘ஒருவழியாக நமது நலன்களை (இந்துக்களின் நலன்களை என்று படிக்கவும்) பாதுகாக்க ஒரு ரட்சகர் வந்துவிட்டார்’என்ற முழக்கத்தையும் உணர்வையும் நம்மால் உணர முடிகிறது.

கலாச்சாரச் சங்கடம்

‘கலாச்சார உலக’த்தைச் சார்ந்தவன் என்ற முறையில் சந்தேகத்துக்கு இடமின்றி ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன்: என்னால் நினைவுகூர முடிந்த அளவில் இந்த இரண்டு ஆண்டுகள்தான் என்னை மிகவும் கவலைகொள்ள வைத்த ஆண்டுகள். ஒரு கலாச்சார அடையாளமாக இந்த தேசத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்த சங்கடமான கேள்விகளைக் கேட்கும்படி என்னைச் சுற்றியுள்ள அரசியல் சூழல் தூண்டிய காலகட்டம் இது. அடிப்படையில் மதரீதியான விஷயத்தைக் குறிக்க நான் கலாச்சாரம் என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தியிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி நான் செய்திருப்பேனா? செய்திருக்க மாட்டேன். தற்போதைய ஆட்சியின் பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று. செங்கோட்டையில் நின்றுகொண்டு, இந்தியா என்றழைக்கப்படும் பாரதம் உடலாலும் மனதாலும் ஒற்றைக் கலாச்சாரத்தைக் கொண்டது, அதன் பேர் இந்துத்துவா என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி முழங்கவில்லைதான். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பேசும்போது ‘அனைவருக்குமான இந்தியா’ என்றுதான் மோடி பேசுகிறார். ஆனால், அவரது சகாக்களும் அரசியல் கூட்டாளிகளும் அப்பட்டமாக இந்துத்துவாவைத் சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மறுத்து ஒரு வார்த்தைகூட மோடி பேசவில்லை.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்துக்கள் இந்த நாட்டில் பலிகடாக்களாக ஆக்கப்பட்டு, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக இந்துத்துவாவின் பிரச்சார கர்த்தாக்கள் இந்துக்களிடம் பேசிவந்திருக்கிறார்கள். இப்படிப் பிரச்சாரம் செய்யப்பட்ட இந்தப் பொய்க்கு வரலாற்றுபூர்வமான ஆதாரம் இருப்பதுபோல் தோன்றும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். ஒவ்வொரு இந்துப் பண்டிகையும் வெகு விமரிசையாகத்தான் கொண்டாடப்பட்டுவருகிறது. விநாயகர் சதுர்த்தி, துர்க்கை பூஜை போன்றவற்றுக்குப் போடப்படும் பந்தல்கள் பெரிதாகிக்கொண்டேதான் வருகின்றன. கோயிலுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அதிகரித்திருப்பது வெளிப்படை. இந்து மதம் மூழ்கிப்போகும் சூழலோ, ஒட்டுமொத்தமாக இந்து மதத்தினர் மதமாற்றம் செய்யப்படும் சூழலோ நம் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் காணவில்லை. எனினும், இதெல்லாம் நடக்கும் என்ற பயம் ஒவ்வொரு இந்துவின் மனதிலும் விதைக்கப்பட்டிருக்கிறது.

மதம் சார்ந்த வன்முறை

மதரீதியிலான / கலாச்சார ரீதியிலான வன்முறை என்பது அரசியல் கட்சிகள், அவற்றைச் சார்ந்துள்ள உதிரி அமைப்புகள் போன்றவற்றின் வழிமுறையாக மட்டும் ஆகிவிடவில்லை. அந்த வழிமுறையைப் பெருமிதத்தின் சின்னமாக அணிந்துகொண்டு அவர்கள் பீடுநடை போட்டுக்கொண்டிருப்பதுதான் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்துக்கள் தங்கள் மதத்தைக் கொண்டாடினால், அவர்கள் வலதுசாரி என்று முத்திரை குத்தப்படுகிறது. ஆனால், ஒரு முஸ்லிம் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்படுவதில்லையே என்று கோபத்துடன் கேட்கப்படுகிறது. இன்றைய உலகச் சூழலில் மேற்கண்ட வாதத்தை நாம் எழுப்ப முடியுமா? இது உண்மை என்று நம்மால் நம்ப முடியுமா? உலகம் முழுவதும் முத்திரை குத்தப்பட்டுக் கடுமையாக ஒடுக்கப்பட்ட இனமென்று ஒன்று இருக்குமானால், அது இஸ்லாம் மதத்தினர்தான். எனினும், நடுத்தர மற்றும் மேல்தட்டு இந்துக்களைவிட இஸ்லாமியருக்குப் பரவலான நல்ல அங்கீகாரம் இருக்கிறதென்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். முஸ்லிம்களும் தலித் மக்களும்தான் இந்தியாவிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களும் தரவுகளும் இருக்கின்றன.

அரசியல் ஆதாயம்

மாறி மாறி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு முஸ்லிம் தலைவர்களும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக சாதாரண முஸ்லிம் வாக்காளர்களைத் தொடர்ந்து ஏமாற்றியே வந்திருக்கின்றனர் என்றாலும் அதற்காக முஸ்லிம்களின் நிலை குறித்து நாம் அலட்சியம் காட்ட வேண்டியதில்லை. இந்துக்களுக்குச் சேர வேண்டிய பலன்களெல்லாம் முஸ்லிம்களுக்குத்தான் போய்ச்சேர்கின்றன என்று நினைப்பது இதைவிட மோசம்.

இப்படி நினைப்பது, இந்த நாடு இந்து தேசம், முஸ்லிம்களெல்லாம் விருந்தாளிகள் என்று நினைக்கும் நினைப்போடு இரண்டறக் கலந்திருக்கிறது. முஸ்லிம்களெல்லாம் பயங்கரவாதிகள் என்றோ பயங்கரவாதிகள் ஆகக் கூடியவர்கள் என்றோ உருவாக்கப்பட்டிருக்கும் கருதுகோளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்துச் சிந்தனை என்பது இஸ்லாமியர்களுக்குள் ஊடுருவினால்தான் அவர்களின் இந்த நிலை மாறும் என்றும் சூபியிசம் என்பது அடிப்படையிலேயே இந்து மதம்தான் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

உண்மை வேடமிட்ட பொய்

இன்னொரு பொய்யும் உண்மை வேடம் சூட்டப்பட்டு உலவ விடப்படுகிறது. கல்வி அமைப்பே இந்து மதத்துக்கு எதிரானதாகவும் மதச் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற பொய்தான் அது. மேற்கத்திய சோஷலிச சிந்தனையாளர்களுடன் கூட்டுசேர்ந்துகொண்டு இந்திய இடதுசாரிக் கல்வியாளர்கள் இந்து மதத்தின் நன்மைகளையும் சாதனைகளையும் நம் வரலாற்றிலிருந்து அழித்தொழித்துவிட்டனர் என்று சொல்லப்படுவதுதான் மிகவும் நகைப்புக்குரியது. இந்த நாட்டில் உள்ள மதம் சார்ந்த கல்வி ஆய்வுகள், கலைத் துறைகள், வெவ்வேறு மொழித் துறைகள் போன்றவற்றை உற்றுநோக்கினோம் என்றால், நமக்கு ஒரு உண்மை தெரியவரும். மற்ற மதங்கள், சித்தாந்தங்களைவிட இந்து மதம் சார்ந்துதான் அதிக அளவில் முனைவர் பட்டங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதை மறுப்பவர்கள் சொல்வதுதான் உண்மையென்றால், இந்நேரம் இந்தியா ஒரு குட்டி சோவியத் ஒன்றியமாக ஆகியிருந்திருக்க வேண்டுமே! அப்படி ஆகாதது நம் அதிர்ஷ்டம்.

இந்துப் பெருமிதத்தை நாம் எல்லோரும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரப்படும் அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாகப் பெண்வெறுப்புக் கருத்தாக்கமாகவும் (பெண் வெறுப்பு என்பது ஆண்களுக்கு மட்டுமே உரிய குணம் அல்ல என்பதை நினைவில் கொள்க), உயர்சாதி, உயர் வர்க்கக் கருத்தாக்கமாகவும் ‘இந்தியா’ என்பது முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்துக் கலாச்சாரத்தை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்து மதத்தை அதன் அமைப்புரீதியாக எதிர்த்துக் கேள்வி கேட்ட எல்லாவற்றையும் எல்லோரையும் விழுங்குவதற்கான திட்டமும் அதில் இருக்கிறது. இந்து வரலாற்றை விதந்தோதும் செயலில் வேறொரு வாசத்தையும் என்னால் உணர முடிகிறது. பிற சித்தாந்தங்களை அபகரிக்கும் செயலும், இந்து என்பதைப் பற்றி நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து உருவாகியிருக்கும் கருத்தாக்கமும் கலந்து வீசும் வாசம்தான் அது. பாலினங்கள் ரீதியிலான பிரச்சினைகள், சாதி போன்ற விஷயங்களைப் பற்றிப் பேச்சே காணோம். ஒடுக்குமுறை என்பது இன்று சர்வாதிகாரத் தடையுத்தரவைக் கொண்டு நிகழ்த்தப்படுவதில்லை, அச்சத்தின் மூலம்தான் அது நிகழ்த்தப்படுகிறது.

மதச்சாயம் கொண்ட கலைகள்

கலையுலகத்தினர், குறிப்பாக சாஸ்திரியக் கலைகளின் வட்டாரத்தினர், இந்த அரசாங்கத்தைப் போற்றிப் புகழ்கின்றனர். திரைமறைவிலிருந்து ஏராளமான இந்துத்துவவாதிகள் வெளிப்பட்டிருக்கிறார்கள். இந்தியக் கலைத் துறைகளைப் பொறுத்தவரை தெளிவாக இந்து மதச் சாயம் கொண்ட கலைகள் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்து மதம் சார்ந்த கலைகள் ஒருபோதும் ஒடுக்கப்பட்டதில்லை என்றாலும், கலையும் கலாச்சாரமும் தற்போது ஒரு வலதுசாரிக் காலகட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்தின் முதன்மையான சின்னமாக எப்போதுமே பரத நாட்டியம்தான் உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

மதத்திலும் அது சார்ந்த விஷயங்களிலும் கலாச்சாரத்தைக் கொண்டுவந்து கலப்பதற்கு யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஆனால், சமூகத்தில் பெரும்பாலானோர் இது குறித்து அக்கறை ஏதும் கொண்டிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. சமூகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், கலாச்சாரரீதியான சுதந்திரச் சிந்தனையாளர்கள் பலரும் இந்தியாவின் பன்மை அடையாளத்தை நமக்கு உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதமான மனிதர்கள் நம் காலத்திலேயே இருப்பதால் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட சிறு எண்ணிக்கையிலானவர்களுக்கு இனிமேல் எந்த விதத்தில் முக்கியத்துவம் இருக்கப்போகிறது? உண்மையில் அப்படிப்பட்ட மனிதர்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு மாறாக, தன்னை இந்து என்ற புனிதமான, புராணீக ஜீவியாகக் கருதிக்கொள்ளும் நபர்களுக்குத்தான் உண்மையான இந்தியர் என்ற உறுதிச்சான்று வழங்கப்படுகிறது.

இந்த அரசின் மற்றுமொரு சாதனையும் எனக்குப் புலப்படுகிறது: கலாச்சார அவநம்பிக்கை, குறைந்தபட்சம் எனக்குள்ளாவது.

- டி.எம். கிருஷ்ணா, கர்னாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூகச் செயல்பாட்டாளர்,

தொடர்புக்கு: tm.krishna@gmail.com சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்