தலித் வரலாறு: தலைகீழாக்கத்தை நேர்செய்தல்

By ஸாலின் ராஜாங்கம்

வரலாற்றுரீதியான தேடல்கள் மூலம், தலித்துகளின் முன்னோடியான கருத்துகளுக்கும் போராட்டங்களுக்கும் பின்னர், அவற்றிலிருந்து உந்துதல்களையும் உள்வாங்குதலையும் பெற்று திராவிட இயக்கங்கள் உருவாயின என்ற வரலாற்றை தலித்துகள் கண்டெடுத்திருக் கிறார்கள். தங்களின் தொடக்ககாலச் செயல்பாடுகளைக் கூறி, திராவிட இயக்கங்களே தங்களுக்குக் கடமைப்பட்டவை என்ற புதிய வாசிப்பை முன்னெடுத்து இருக்கிறார்கள்!

பண்ணையடிமையாக இருந்து நெருப்பில் மூழ்கி, சிவனடியாராக மாறிய நந்தனார் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். நந்தன் என்ற பெயரில் வேறொரு கதையும் இருந்திருக்கிறது. தஞ்சை வட்டார ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்காறுகளில் நந்தன் என்ற மன்னன் பற்றிய நினைவுகள் இருந்ததைச் சான்றுகள் காட்டுகின்றன. தஞ்சை வலங்கைமானுக்கு அருகேயுள்ள ஆண்டாள் கோயிலில் நடிக்கப்பட்டுவரும் மனுநீதிச் சோழன் நாடகத்தின் ஒரு பகுதியான வெட்டியான் பாட்டில், நந்தனை மன்னனாகக் கூறும் கதை இருப்பதை ஆய்வாளர் சுந்தர்காளி கூறுகிறார். மேலும், 1798-ல் ஆங்கிலேய அதிகாரி காலின் மெக்கன்சி உத்தரவின்பேரில் தஞ்சை வேதநாயக சாஸ்திரி சேகரித்த கதைகளில் நந்தன் மன்னன் என்ற கதை இருந்ததை இடங்கை வலங்கையர் வரலாறு (1995) என்ற நூல் காட்டுகிறது.

ஆனால், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை (1861) என்ற சைவ சமயப் பிரதியில், நந்தன் என்ற பெயர் நந்தனராக மாற்றப்பட்டு, அவன் பண்ணையடிமையாக இருந்த சிவனடியார் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்காறுகள் காட்டும் சித்தரிப்புக்கு நேரெதிர்த் திசையில் இந்தப் பண்ணை அடிமை என்ற சித்தரிப்பு இருக்கிறது. காலப்போக்கில் பண்ணையடிமை என்னும் சித்தரிப்பே செல்வாக்குப் பெற்றுவிட்டது. அதாவது, நந்தன் கதை இங்கு தலைகீழாக்கப்பட்டது.

மாற்று வரலாறு

ஆனால், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அயோத்திதாசர் இந்தப் பண்ணையடிமை நந்தனார் என்ற கதைக்கு மாறாக, ஒடுக்கப்பட்ட குழுவினரின் நினைவுகளில் இருந்த நந்தன் மன்னன் என்ற கதையாடலை எடுத்து, பவுத்த மரபின் நந்தன் கதையோடு இணைத்து, நந்தன் பவுத்த மன்னன் என்று எழுதினார். நந்தன் கதையைத் தலைகீழாக்கி, பண்ணையடிமை என்று எழுதியதன் மூலம், தாழ்த்தப்பட்டோரின் தாழ்ந்த நிலையை நிரந்தரமாகத் தக்கவைக்கப் பார்த்தார்கள் என்று கூறிய அயோத்திதாசர், அந்த வரலாற்றை நேர்செய்வதாகக் கருதியே மன்னனாகிய நந்தனின் வரலாற்றை எழுதினார். இத்தகைய மாற்று வரலாறு எழுதும் முயற்சிகள் யாவும் இவ்வாறு தலைகீழாக்கம் செய்யப்பட்ட தங்களின் வரலாற்றை நேர்செய்வதற்கான போராட்டமாக இருந்துவருவதையே இப்போது வரையிலும் பார்க்க முடிகிறது.

தமிழக சபாநாயகரின் சாதிரீதியான குற்றச் சாட்டு ஒன்றினை ஒட்டிக் கடந்த வாரத்தில், ஒடுக்கப்பட்ட மக்களைத் திராவிட இயக்கத்தோடு தொடர்புபடுத்தும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களிலிருந்த முக்கியமான பிரச்சினையே அது தலித் மக்களுக்கான முகமையையே கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான்.

தக்கவைக்கப்படும் ‘வரலாறு’

தலித்துகள் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடாமலேயே இருந்துவந்தவர்கள் போலவும் திராவிடக் கட்சிகள் வந்ததாலேயே உரிமை பெற்றார்கள் என்பதுபோலவும் சில கூற்றுகள் அமைகின்றன. இது தலித் மக்களின் தற்சார்பை மறுப்பதோடு, அவர்கள் இதுவரை நடத்திவந்த போராட்டங்களையே மறைப்பதாக மாறிவிடுகிறது. இப்போக்கு இப்போதைய பிரச்சினையோ, குறிப்பிட்ட நபர் சம்பந்தப்பட்ட பிரச்சினையோ அல்ல. திராவிடக் கட்சியினர் வாய்ப்பு நேரும்போதெல்லாம் எழுத்தாகவும் பேச்சாகவும் சொல்லித் தக்கவைத்துவரும் ‘வரலாறு’.

1990-களின் தலித் எழுச்சியென்பது, தலித் மக்களுக்கான அரசியல் கட்சிகளை மட்டும் உருவாக்கவில்லை. அது கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு என்கிற தளங்களிலும் செயல்பட்டிருக்கிறது. தலித் மக்களின் தற்கால நிலையை மட்டுமல்ல, கடந்தகால நிலைகளையும் தேடி ஆராய்ந்து, அதன் வழியாகத் தங்களைப் பற்றி நிலவிவரும் நம்பிக்கைகளை மாற்றியமைக்க அது முயன்றது. அவற்றில் ஒன்றுதான் ஐரோப்பியர் வருகைக்குப் பின் நடந்த நவீன சமூக அரசியல் மாற்றங்களில் தலித்துகள் முன்னோடியாக இருந்த வரலாறு பற்றிய அவர்களின் தேடலும் தொகுப்பும். 19-ம் நூற்றாண்டிலேயே இதழ்களையும் அமைப்புகளையும் தொடங் கிய அவர்கள் திராவிடம், தமிழன், பிராமண எதிர்ப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட கருத்து களைத் தொடக்க காலத்திலேயே விவாதித்து வந்ததன் வழியாக 20-ம் நூற்றாண்டில் கால் கொண்ட திராவிட இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களுக்கான கருத்தியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்திருக் கிறார்கள் என்ற வரலாற்றை முன்வைத்தி ருக்கின்றனர்.

தி.பெ.கமலநாதன் கூற்று

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்குத் திராவிடர் இயக்கமே காரணம் என்று சொல்லப்பட்ட கூற்றினை மறுத்து, தி.பெ.கமலநாதன் என்ற தலித் வரலாற்று அறிஞர் 1980-களின் மத்தியில் ஆங்கில நூலினை எழுதினார். அந்நூலின் பின்னிணைப்பில் 1891 முதல் 1935 வரை தலித்துகளால் நடத்தப்பட்ட மாநாடுகள், கூட்டங்கள், தீர்மானங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார். பிராமணர் அல்லாத அரசியலின் மூல ஊற்றுக்கண்களை ஆராயும் விதத்தில் தான் எழுதிய ஆங்கில நூலில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கமலநாதனின் கூற்றை ஏற்கிறார். இவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் தமிழக தலித் சாதிகளிலிருந்து உருவாகி வந்திருக்கும் அறிவுஜீவிகள் வெவ்வேறு தளங்கள், வெவ்வேறு பார்வைகள் சார்ந்து பல்வேறு அனுபவங்களை முன்வைத்து வருகிறார்கள். தலித்துகளின் அரசியல் பயணத்தில் திராவிட இயக்கத்தோடு மட்டுமல்ல, வெவ்வேறு இயக்கங்களோடு உறவும் முரணும் சேர்ந்தே இருந்திருக்கின்றன. அதோடு, தங்களுக்கான இயக்கங்களைத் தாங்களே கட்டமைத்தும் இருக்கிறார்கள்.

இத்தகைய வரலாற்றுரீதியான தேடல்கள் மூலம் தலித்துகளின் முன்னோடியான கருத்துகளுக்கும் போராட்டங்களுக்கும் பின்னர், அவற்றிலிருந்து உந்துதல்களையும் உள்வாங்கு தலையும் பெற்று திராவிட இயக்கங்கள் உருவாயின என்ற வரலாற்றை தலித்துகள் கண் டெடுத்திருக்கிறார்கள். தங்களின் தொடக் ககாலச் செயல்பாடுகளைக் கூறி திராவிட இயக்கங்களே தங்களுக்குக் கடமைப் பட்டவை என்ற புதிய வாசிப்பை முன்னெடுத் திருக்கிறார்கள். இதுவரை உங்களுக்கு நாங்களே முதல் என்று கூறிவந்ததை மறுத்து, நாங்கள்தான் உங்களுக்கு முதல் என்று தலித் தரப்பு சொல்லியிருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே தலித்துகளின் நவீன அரசியல் முயற்சிகளுக்கான ஆதாரங்கள் பரவலாகக் கிடைக்கப்பெற்றுள்ள இன்றைய நிலையில், நேர்செய்தல் என்ற இந்தப் போராட்டம் பொருத்தமானதாகவே இருக்கிறது.

தலித்துகளின் தற்சார்பான பயணத்தைக் காட்டும் இம்முயற்சிகள் போதிய அளவு வெளிப்பட்டும்கூட, திராவிட இயக்க ஆதரவுக் கண்ணோட்டம் கொண்டவர்கள் அவற்றைப் புறக்கணித்து மீண்டும் மீண்டும் பழைய விளக்கங்களிலேயே போய் நின்றுகொள்வது பகுத்தறிவுக்கு எதிரானது. தலித்துகளின் இந்த நேர்செய்தல் மூலம் தாங்கள் சொல்லிவந்த தலைகீழ் வரலாறு மெல்ல தங்களிடமிருந்து நழுவிச் செல்வதைக் கண்டு அவர்கள் பதற்றம் கொள்கிறார்கள். புதிய மாற்றங்களைப் புறந்தள்ளி, தலித்துகள் மீதான தங்களின் உரிமைகோரலைத் திரும்பத் திரும்பச் சொல்லி, அவற்றை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். இந்நிலையில், தலித் தரப்பு தங்களின் வரலாற்றை நேர்செய்யும் போராட்டத்தை நடத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

- ஸ்டாலின் ராஜாங்கம்,

தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்