சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி, டவுன் பஸ் பிடித்து, சீலநாயக்கன்பட்டியை அடைந்தபோது வானம் இருட்டி விட்டிருந்தது. கூடவே மழை. கெஜல்நாயக்கன்பட்டிக்கு மினி பஸ் பிடிக்க வேண்டும் என்றார்கள். பச்சை நிற பஸ்ஸில் ஏறி கெஜல் நாயக்கன்பட்டியில் இறங்கினால், அது பொட்டல்காடு. மழையுடன் முழு நிலவும் பொழிந்துகொண்டிருந்தது. சுற்றிலும் குன்றுகள். பள்ளத்தாக்கில் நின்றுகொண்டிருக்கிறேன். சேலமே பள்ளத்தாக்குதானே. சைலம் என்றால் மலைகள் சூழ்ந்த பகுதி என்று அர்த்தம்.
நரிகள் ஊளையிடும் சத்தம். ஊளைச் சத்தங்களை ஊகித் தேன். நான்கைந்து நரிகள் இருக்கலாம். ஆச்சரியம்தான். அந்த இடம் வளமையாக இருப்பதன் அறிகுறி அது. மனித சஞ்சாரத்துக்கான அறிகுறிகளையே காணோம். மழை வலுத்தது. ஒதுங்க இடம் இல்லை. ஸ்கூட்டியில் வந்தார் அந்த இளைஞர். “வணக்கம் சார், என் பேரு செந்தில். டாக்டர் சொன்னார்” என்றார். கரடுமுரடான பாதையில் பத்து நிமிடப் பயணம். ஒரு மலையின் அடியில் பெரியதாக இருந்தது அந்தக் கட்டிடம். சுற்றிலும் காடு போன்ற தோற்றம்.
உள்ளே சென்று மெழுகுவத்தியைப் பற்றவைத்தார். “பொதுவாவே கரன்ட் இருக்காது, மழை வந்துச்சுன்னா சொல்லவா வேணும்” என்றார். என்னிடம் திரும்பி, ‘இந்த ரூம்ல படுத்துக்கோங்க. வெளியே போக வேண்டாம். செந்நாய் கூட்டம் சுத்துது, ஆபத்து. மேல் ஃப்ளோருக்குப் போகாதீங்க. அது அதைவிட ஆபத்து” என்றார். பின்னர், வெளிக் கதவைப் பூட்டி, கூடவே பெரிய சங்கிலியால் கிரில் கதவைப் பிணைத்து இன்னொரு பூட்டுப் போட்டுச் சென்றுவிட்டார்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும். தலைமாட்டில் தொலைபேசி ஒலித்தது. டாக்டர் மோகன வெங்கடாசலபதிதான் பேசினார். “என்ன பாஸ் தூங்கிட்டீங்களா, எங்கே படுத்திருக்கீங்க. தைரியமா நீங்க மேலே போய்ப் படுங்க. அப்பதான் உங்களால முழுமையா உள்வாங்கிக்க முடியும். ஒண்ணும் ஆகாது. என்னை நம்புங்க” என்றார்.
உரையாடல் ஊளைகள்
கிறீச்சிட்ட படிகள் வழியே ஏறிச் சென்றேன். வரிசையாகப் படுக்கைகள். இருட்டில் சுமார் 20 பேர் படுத்திருந்தார்கள். காலியாக இருந்த ஒரு படுக்கையில் படுத்து, நோட்டம்விட்டேன். ஓரிருவரின் கை, கால்கள் துணியால் கட்டில் கம்பியோடு கட்டப்பட்டிருந்தன. தூங்க முயற்சித்தேன். கட்டிடத்துக்கு வெளியே ‘ஊஊஊஊ....’வென ஊளை. அதே நேரம் ‘ஊஊஊஊஊ…’ என மனிதக் குரலிலும் ஊளை. பகீரென்றது. வெளியே ‘ஊஊஊ…’ என்றால் உள்ளே இன்னும் பெரியதாக ‘ஊஊஊஊஊ….’ செந்நாய்க்கும் மனிதனுக்குமான உரையாடல்போல இருந்தது அது. தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோமோ?!
ஒரு வழியாக அந்த உரையாடல் முடிந்தது. மணியைப் பார்த்தேன் 12.40. ஒருவர் படீர் என்று எழுந்து அமர்ந்தார். செல் பேசியைக் காதில் வைத்துக்கொண்டு சத்தமாக, “தொள்ளாயிரம் பேருக்கு இட்லி, பொங்கல், வடை டெலிவரியாயிடணும். உளுந்தையும் அரிசியையும் தனித்தனியா அரைச்சுத்தானே கலந்தீங்க. உப்பை மட்டும் அம்மாவைப் போடச் சொல்லுங்க. ஹோட்டல்ல பிராய்லர் வேண்டாம். நாட்டுக் கோழியை மட்டும் போடுங்க. அப்படியே காலேஜ் கரஸைப் பார்த்து மூன்றரை லட்சம் ரூவா செக்கை வாங்கிட்டு வந்துடுங்க” என்றார். இவர் ஏன் அத்துவானக் காட்டில் அமர்ந்துகொண்டு மானாவாரியாக டிபன் ஆர்டர் செய்கிறார்?
மீண்டும் அந்தப் பக்கம் ‘ஊஊஊ…’ உரையாடல் தொடங்கி விட்டிருந்தது. எதிர்ப் பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்தேன். சிறிது நேரத்தில் என் காதில் சூடாக யாரோ மூச்சுவிட்டார்கள். பயத்தில் வியர்த்தது. இடுப்பில் மென்மையாக ஒரு ஸ்பரிசம். இது வேறயா? பதறி எழுந்து இன்னொரு படுக்கையில் படுத்து, இழுத்துப் போர்த்திக்கொண்டேன். தூரத்தில் மெல்லிய குரல். “லூயிஸ் ப்ளாக் ஹாம்மெட். கர்டின் ஹாம்மெட் விதிகளின்படி கனிமத் துகள்களை ஊடுருவிப் பகுப்பாய்வு செய்யும்போது ஏற்படும் எதிர்வினைகள்... ஃபிஸிக்கல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி...” என்றது.
தலை, ஆளைத் தூக்கிடவா?
கொஞ்ச நேரம் ஆழ்ந்த அமைதி. திடீரென நிறைய பேர் கிசுகிசுவெனப் பேசினார்கள். “தலை, ஆளைத் தூக்கிடவா?” என்றது ஒரு குரல். லேசாகப் போர்வையை விலக்கிப் பார்த்தேன். ஏழெட்டுப் பேர் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள். தாக்குவார்களோ? ஒருவர் என் காலை அழுத்திப் பிடித்துக் கொண்டார். பயத்தில் சிறுநீர் முட்டியது. “பேய் இல்லை மனுஷன் தான். கால் இருக்கு” என்றார் கிசுகிசுப்பாக. ஒருவழியாக ஒலிகள் ஓய்ந்தன. போய்விட்டார்கள். பெருமூச்சு விட்டேன்.
அரை மணி நேரம் கடந்திருக்கும். “மன்னா, எதிரிகள் நம் கோட்டைக்குள்ளேயே நுழைந்துவிட்டார்கள். இப்போது ஊடுருவியிருப்பது ஒற்றன் அல்ல. தளபதி வல்லவராயனே வந்துவிட்டான். இதோ பக்கத்தில்தான் படுத்திருக்கிறான், ஆணையிடுங்கள். இப்போதே அவன் கழுத்தைக் கரகரவென அறுத்து, குருதியைக் குடித்து, தலையை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்” என்றான். கூடவே, ஏதோ உலோகத்தைச் சாணைப் பிடிக்கும் சத்தம். தலையை அறுக்காமல் விட மாட்டான் போலிருக்கிறது. ஒரு விநாடி தாமதித்தாலும் ஆபத்து. படீர் என்று போர்வையை உதறிக்கொண்டு எழுந்தேன்.
எந்த உலகத்தில் இருக்கிறேன் நான்?
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago