வங்கியைத் தின்ற வங்கதேசப் பிரதமர்

கொதித்துப் போயிருக்கிறார்கள் பங்களாதேஷ் மக்கள். இதெல்லாம் உருப்படவே உருப்படாது என்று கத்தித் தீர்த்திருக்கிறார், பொருளாதார நிபுணரும் 2006ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் முகம்மது யூனுஸ்.

யார் சத்தம் போட்டு என்ன பிரயோசனம்? அம்மணி ஷேக் ஹசீனா தெளிவாக அறிவித்துவிட்டார். இனிமேல் கிராமீன் வங்கி அரசுக்குச் சொந்தம். இதன் சட்ட திட்டங்களில் இனி அரசாங்கம் கை வைத்து திருத்தம் செய்யும். அரசாங்கமே இனி கிராமீன் வங்கியை வழிநடத்தும்.

இதைவிட அபத்தமான, முட்டாள்த்தனமான, கேடுகெட்ட, மக்கள் விரோத நடவடிக்கை இன்னொன்று இருக்க முடியாது. பங்களாதேஷ் இருக்கிற லட்சணத்துக்கு இந்த ஒரு வங்கிதான் ஓரளவேனும் ஏழை மக்களின் துயர் துடைத்துக்கொண்டிருந்தது. எளிய குறுங்கடன்கள் வழங்கி, ஜனங்களைக் கந்து வட்டிக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றிக்கொண்டிருந்தது. இனி அது அவ்வளவுதான். ஆமை புகுந்தாலென்ன? அரசு புகுந்தாலென்ன? எல்லாம் ஒன்று.

டாக்டர் முகம்மது யூனுஸ், சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். எதற்கு இந்த ஏட்டுச் சுரைக்காய்? ஏழை மக்களுக்கு உருப்படியாக எந்த விதத்தில் உதவலாம் என்று அவர் சிந்திக்க ஆரம்பித்து உருவாக்கியது இந்த கிராமீன் வங்கி. எளிய கிராமத்து மக்களுக்குக் கடன் கொடுத்துத் தூக்கி விடுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட வங்கி.

கிராமீன் வங்கி பெரும்பாலும் பெண்களூக்கு மட்டும்தான் கடன் கொடுக்கும். காரணம், அவர்களுக்குக் கொடுத்தால்தான் பணம் உருப்படியாகச் செலவிடப்படும். தவிரவும் ஒழுங்காகத் திரும்பி வரும் என்கிற எண்ணம். இந்தக் கடன் காசில் கடலெண்ணெய் வாங்கி பட்சணம் பொரித்துத் தின்றுவிட முடியாது. சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. சிறு தொழில் தொடங்குவதற்காக மட்டுமே இந்தக் கடன் வழங்கப்படும். பெட்டிக்கடை வைக்கலாம். ஆடு, கோழி வாங்கி வளர்க்கலாம். இஸ்திரி வண்டி வைத்துத் தொழில் செய்யலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு தொழில். இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாயில் தொடங்கி ஐந்து, பத்தாயிரம் வரை கடன் தொகை மெல்ல மெல்ல விரிவாக்கப்படும். அது அவரவர் திருப்பிச் செலுத்துவதைப் பொறுத்து இருக்கிறது.

வீடு கட்டக்கூட இந்த வங்கி கடன் கொடுக்கும். அதிகபட்சம் பதினைந்தாயிரம் ரூபாய். ஆனால் வீட்டுப் பத்திரம் பெண்களின் பெயரில்தான் இருக்கவேண்டும். இது கண்டிஷன்.

கிராமீன் வங்கியின் செயல்பாடு பங்களாதேஷில் மௌனமாக சாதித்த காரியங்கள் அநேகம். கிராமப்புறப் பெண்கள், குறிப்பாகப் படிப்பறிவில்லாத பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டி, அவர்களைத் தொழில் தொடங்கவைத்து சொந்தக் காலில் நிற்கச் செய்ததில் இந்த வங்கியின் பங்களிப்பு மறுக்க முடியாதது. நியாயமாக அரசாங்கம் செய்திருக்க வேண்டிய பணி. ஆனால் நாளது தேதி வரைக்கும் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தைத் தவிர இன்னொன்றை உருப்படியாகச் செய்திராத பங்களாதேஷ் பிரதமர், இன்றைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் இந்த வங்கியைக் கபளீகரம் செய்திருப்பதன் மூலம் அடித்தட்டு மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார்.

பச்சையாகச் சொல்வதென்றால் அடித்தட்டு ஜனங்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுத்து லாபத்தில் கொழுக்க வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் பண முதலைகளின் இடைவிடாத நச்சரிப்புக்கு ஹசீனா மசிந்திருக்கிறார். டாக்டர் யூனுஸுக்கு நோபல் பரிசும் பங்களாதேஷ் ஏழைப் பெண்களுக்கு வாழவழியும் பெற்றுத் தந்த கிராமீன் வங்கி

இனி மெல்ல மெல்லத் தன் முகத்தை மாற்றிக்கொள்ளும். அரசின் தந்திரோபாயங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகும். உலகமெங்கும் குறுங்கடன் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, பல்வேறு மூன்றாம் உலக நாடுகளில் வறுமைக்கோட்டுக்கு மிக நெருக்கமாக வசிக்கும் மக்களின் பசி போக்கப் பாதையமைத்துக் கொடுத்த வங்கி, தன் பெயரை இழந்து பரிதாபகரமான தோற்றம் கொள்ளும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. டாக்டர் முகம்மது யூனுஸுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்