இந்திய ஆய்வு நிறுவனங்கள் விண்ணில் ஏவிய அஸ்ட்ரோசாட் விண்வெளித் தொலைநோக்கி, லேசர் ஒளியைப்போல் ‘கதிர் முனைவாக்கம்’ எனப்படும் போலரைசேஷன் தன்மை பெற்றவை இந்தக் காமா கதிர்கள் என்று கண்டுபிடித்துள்ளது.
விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் அனைத்தும் வானியல் ஆய்வுக்கானவை அல்ல. சில செயற்கைக்கோள்கள் எதிரி நாடுகளை வேவு பார்ப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படுபவை. அப்படி சில செயற்கைக்கோள்களை 1960-களில் அமெரிக்கா விண்ணுக்கு அனுப்பியிருந்தது.
அதன் நோக்கம் சோவியத் ரஷ்யாவின் எந்த மூலையில் ரகசியமாக அணுகுண்டு சோதனை நடத்தினாலும், அதனை மோப்பம் பிடிப்பதுதான். அணுகுண்டு வெடித்தால், அதிலிருந்து திடீரென பெருமளவிலான காமா கதிர்கள் வெளிப்படும். அதனை வைத்து அணுகுண்டு வெடிப்பை உறுதிப்படுத்தலாம் என்பது அமெரிக்க விஞ்ஞானிகளின் கணிப்பு.
எதிர்பார்த்தபடியே அந்த செயற்கைக்கோள்களில் இருந்த காமா கதிர்களை உணரும் கருவி, திடீர் திடீரென காமா கதிர் வெடிப்புகள் நடைபெறுவதாக இனம்கண்டு பதிவு செய்தது. ஆரம்பத்தில், ஆஹா! ரஷ்யாவில் அணுகுண்டு சோதனை நடத்துகிறார்கள் போலும் என்று கருதிய அமெரிக்க விஞ்ஞானிகள் இன்னும் நுட்பமாக ஆராய்ந்தபோது, வேறெங்கிருந்தோ வருகிற காமா கதிர்களைத்தான் அந்தச் செயற்கைக்கோள்கள் பதிவு செய்கின்றன என்று கண்டறிந்தார்கள். காரணம், அந்த காமா கதிர் வெடிப்புகளின் சக்தி அளப்பரியதாக இருந்தது. சோவியத் அணுகுண்டுகளில் இவ்வளவு ஆற்றல் வெளிப்பட முடியாது என்பதை உறுதி செய்த விஞ்ஞானிகளுக்கு ஒரு வகையில் திருப்தி. அதேநேரத்தில், அப்படியானால் இந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? எப்படி உருவாகிறது என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
இறுதியில், இந்த காமா கதிர் வெடிப்பானது விண்வெளியில் வெகுதொலைவுக்கு அப்பால் ஏற்படுகிறது என்று இனம் கண்டார்கள். தீபாவளி நேரத்தில் கணப்பொழுதில் வெடிக்கிற வெடியானது வானில் ஒளி&ஒலி வாணவேடிக்கையை நிகழ்த்திவிட்டு மறைந்துபோவதைப் போல, விண்மீன்கள் மடிந்து கருந்துளைகள் பிறப்பெடுக்கும்போது பெருமளவிலான காமா கதிர்கள் வெளிப்படும் என்பதையும் உணர்ந்தார்கள்.
பிரசவத்தின் போது, வீல் என்று கத்திக்கொண்டே குழந்தை பிறப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தாயின் கர்ப்பப்பையில் உள்ள (பனிக்குடம்) திரவமானது மூக்கு, வாய், தொண்டை போன்ற இடங்களில் புகுந்திருக்கும் என்பதால் அதனை வெளியேற்றவும், இதயச் செயல்பாட்டை சரிசெய்யவுமே பிறப்பின் போது குழந்தை அழுகிறது. ஆனால், கருந்துளை பிறக்கும்போது எதற்காக பலத்த காமா கதிர்களை வீசி, உரத்த குரல் எழுப்பி அழுகிறது என்பது புரியாத புதிராக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்திய ஆய்வு நிறுவனங்கள் தயாரித்து விண்ணில் ஏவிய அஸ்ட்ரோசாட் விண்வெளி தொலைநோக்கியில் உள்ள காமா கதிர் தொலைநோக்கியானது காமா கதிர்கள் லேசர் ஒளிபோல் ‘கதிர் முனைவாக்கம்’ எனப்படும் போலரைசேஷன் தன்மை பெற்றவை என்று கண்டுபிடித்துள்ளன.
‘டார்ச் லைட்’ வெளிச்சத்தை தூரத்தில் உள்ள சுவரை நோக்கி செலுத்தினால், அது விரிந்துகொண்டே செல்வதுடன், தொலைவில் செல்லச் செல்ல ஒளியும் மங்கி விடும். ஆனால், லேசர் போன்ற ஒளியைச் செலுத்தினால், அது வெகுதொலைவு வரையில் சிதைவுறாமல் ரசென்று சேரும். காரணம், அது கதிர்முனைவாக்கம் கொண்டது என்பதைப் பள்ளியில் படித்திருப்பீர்கள். அதைப் போலவே இந்த காமா கதிர்களும் கதிர்முனைவாக்கம் பெற்றிருக்கின் றன; எனவேதான் கற்பனைக்கு எட்டாத தூரத்திலிருந்து வந்தாலும்கூட அதனை உணர முடிந்திருக்கிறது.
இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்வதன் மூலம், கருந்துளைகள் எப்படி கருக்கொள்கின்றன என்பது குறித்த புதிய அனுமானங்களை எட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத்தான் முடிவே கிடையாதே!
- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago