காந்தியின் பரிசோதனைக்கூடம் | சத்தியம் என்றொரு போராட்ட ஆயுதம்

By பழ.அதியமான்

காந்தியின் பரிசோதனைக்கூடமாக இருந்த சத்தியத்தின் வரலாறு… - நன்றியின் அடையாளமாக உப்பும், மானத்தின் குறியீடாக ஆடையைத் தரும் ராட்டையும், மனசாட்சியின் பிரதி பலிப்பாகச் சத்தியமும் விடுதலைக் கால இந்தியரின் மூன்று போராட்ட ஆயுதங்கள். அக உணர்வைத் தூண்டும் தன்மை கொண்ட அவை இந்தியர்களிடம் எழுச்சியை உருவாக்கின. காந்தி இந்த எழுச்சியை வெற்றியாக மாற்றினார், இந்தியாவின் தந்தையானார்.

விடுதலை அடைந்த இந்தியாவில் உப்பும் ராட்டையும் பல மாற்றங்கள் பெற்றன. வைரம்போல மின்னும் கல் உப்பு உடைந்து தூளாகி, இன்று அயோடின் கலந்து ஆரோக்கியத்தின் அடிப்படையாகிவிட்டது. பெருநிறுவனங் களும் அரசாங்கமுமே அதன் விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ராட்டைகள் பெரும் தொழிற்சாலைகளில் ராட்சச வடிவம் எடுத்துத் துணிகளை நெய்துதள்ளுகின்றன. தெருவுக்கு நான்கு பிரம்மாண்ட துணிக் கடைகள்.

இப்படி முன்னிரண்டும் கால ஓட்டத்தில் மிதமிஞ்சிப் பெருகச் சத்தியத்துக்கு மட்டும் சோதனை. சத்தியத்தின் இருப்பு முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அருகிவிட்டது. புராண அரிச்சந்திரனின் பிறந்த நாள் உறுதியாகத் தெரியாத நிலையில், கண்கண்ட அரிச்சந்திரனான காந்தியின் பிறந்த நாளில் சத்தியத்துக்கும் நமக்குமான பண்பாட்டு உறவைக் கொஞ்சம் அசை போடலாம்! இதை சத்தியாக் கிரகத்திலிருந்தே தொடங்கலாம்.

சத்தியாக்கிரகத்தின் தோற்றம்: சத்தியத்துக்கும் காந்திக்குமான உறவு, அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. சத்தியத்தைப் போராட்ட உத்தியாக மாற்றியதோடு, தன் ஆன்ம ஈடேற்றத்துக்கும் காந்தி பயன்படுத்திக்கொண்டார். சத்தியாக்கிரகம் என்ற சொல்லைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்தத் தத்துவம் அவருக்குத் தோன்றிவிட்டது. அதை இன்னதென்று அழைப்பது என அவருக்கு முடிவாகவில்லை. பாஸிவ் ரெஸிஸ்டென்ஸ் (Passive resistance) என்று முதலில் சொல்லிப்பார்த்திருக்கிறார்.

‘சாத்வீக எதிர்ப்பு’ என்ற பொருள் தரும் அது, பலவீனங்களின் ஆயுதமாகவும், பகைமைக்கு இடம் தருவதாகவும், பின்னர் பலாத்காரமாக மாறிவிடவும் வாய்ப்புண்டு என்று காந்தி உணர்ந்தார். அதற்கொரு சொல் தேடினார். ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை மூலம் போட்டியைக்கூட அறிவித்தார். மகன்லால், சதாக்கிரகம் (சத்+ஆக்கிரகம்) என்ற சொல்லைப் பரிந்துரைத்துப் பரிசு வென்றார். இந்தச் சொல்லை மேலும் தெளிவாக்கி, சத்தியாக்கிரகம் என்று காந்தி மாற்றினார். வாழ்நாள் முழுவதும் அதையே பயன்படுத்தினார். இதை சத்திய சோதனையில் விவரித்துள்ளார்.

மக்கள் பேச்சில் சத்தியம்: பேச்சின் இடையில் ‘சத்தியமா சொல்றேங்க’, ‘நிஜமாதான் சொல்றேங்க’, ‘உண்மையைத்தான் சொல்றேன்’, ‘மெய்யாகவே’, ‘மெய்யாலுமே’ என்றெல்லாம் மக்கள் பேசுவதன் அடிப்படைக் காரணம் என்ன? ‘சத்தியமாய்ச் சொல்லுகிறேன்’ என்று சொல்பவர், தான் சொல்லுவதை அழுத்தமாகச் சொல்ல விரும்புவதால் அப்படிச் சொல்கிறார். ஆனால், அப்படிச் சொல்லும்போது, தான் அதுவரை பொய் சொன்னதாக ஒப்புக்கொள்கிறார்.

அதோடு கேட்கிறவரையும் ஒருவகையில் அவமானப்படுத்துகிறார் என்று இதைப் பற்றி விமர்சிக்கிறார் வ.ரா. கேட்பவர் நம்ப வேண்டும் என்று சொன்னாலும் இத்தகைய முன்னீடுகளைப் போட்டுப் பேசப்படும் பேச்சுகள் எப்போதும் நம்பகமற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. சத்தியத்தைப் பெரிதும் நம்புகிற, மதிக்கிற சமூகமாக இருக்கிறதே தவிர, கடைப்பிடிக்கிறதாக இந்திய சமூகம் மாறவில்லை. அதனால், இத்தகைய வார்த்தைகள் தங்க முலாம் பூசுவதுபோலப் பகட்டாக, பயனற்றதாகவே முடிந்து விடுகின்றன.

‘சத்தியமாய்ச் சொல்லுறேன்’ என்ற வாய் வார்த்தையை நம்பாத உலகம், உண்மை அறியும் கருவி வரை மனிதர்களைக் கொண்டுபோய் நிறுத்தி விட்டது. உண்மை அறியும் சோதனை தோன்றும் முன்னர், பலவிதமான புற அடையாளம் மற்றும் உபகரணங்களையும் சேர்த்துத் தங்கள் தரப்பை மனிதர்கள் மெய்ப்பிக்க முயன்றுள்ளார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் சத்தியம் செய்யும் சடங்குகள் தோன்றியிருக்கலாம்.

சத்தியத்தின் சடங்குகள்: கடவுள் படம் முன்னால் எரியும் கற்பூரத்தை அணைத்துக் கிராமத்தில் சத்தியம் செய்வார்கள். எரியும் கற்பூரம் கையில் தீக்காயத்தை ஏற்படுத்துமே என்று பயந்து உண்மையைச் சொல்லிவிடுவார்கள் என்று மக்கள் நினைத்திருக்கலாம். தெய்வ நிந்தனை நேரலாம் என்ற பயத்தில் பொய்யைத் தவிர்ப்பார்கள் என்பது இந்தச் சடங்கை உண்டாக்கியவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம். கிராமசபையில் கற்பூரம் என்றால் நகர நீதிமன்றத்தில் புத்தகம் (என்ன இருந்தாலும் படிச்சவங்க இல்ல!). இந்துக்கள் பகவத் கீதை மீதும், கிறிஸ்தவர்கள் பைபிள் மீதும் சத்தியம் செய்கிறார்கள். “குழந்தைகளை அடிக்க மாட்டேன், கம்ப ராமாயணத்தின் மீது சத்தியம்” என்று டைரியில்

கு. அழகிரிசாமி எழுதி வைத்திருக்கிறார். புத்தகத்தை முத்தமிடுவது பழங்காலத்தில் சத்தியம் செய்யும் முறையாக இருந்திருக்கிறது. ஐரோப்பியர் பழைய ஏற்பாட்டை முத்தமிட்டுச் சத்தியம் செய்திருக்கிறார்கள். இப்போது புத்தகத்தின் மீது இரு கைகளையும் வைத்துச் சத்தியம் செய்யும் முறை நிலவுகிறது.

தலை, கை, தொடை: அம்மாவும் தெய்வம்தானே? ‘தாயின் மீது சத்தியம்’ செய்வது மிகவும் பிரபலம். குழந்தையைத் தாண்டுவது இன்னொரு பழக்கம். துண்டு போட்டுத் தாண்டுவது கிராம ஆண்களிடம் இன்றும் நீடிக்கும் சத்திய வழக்கம். மலைவாழ் மக்கள் சிலர் சேலையைப் போட்டுத் தாண்டுவார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். கடவுள், தாய் இவற்றோடு உடல் உறுப்புகளில் ஒன்றான ‘தலையில் அடித்து’ சத்தியம் செய்வதும் வழக்கம். ‘கையில் அடித்தும்’ செய்வார்கள். கையில் அடித்துச் சத்தியம் செய்தல் என்பது ‘உண்மையைச் சொல்லுகிறேன்’ என்ற பொருளில் அல்லாமல், ‘உறுதி செய்தல்’ என்ற தன்மையில் நடப்பதே அதிகமாக இருக்கிறது.

பைபிள் நூலில் சொல்லப்பட்டுள்ள ஒரு சத்தியம் பின்வருவது: தொடையின் கீழ் கைவைத்துச் சத்தியம் செய்யும் பழக்கம் யூதர்களிடம் இருந்திருக்கிறது. ‘பின்பு அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின் கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக் குறித்து அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்’ (ஆதியாகமம், 24-9) என்பதாக வருகிறது அந்த வாக்கியம். ‘ஊழியக்காரன் செய்த ஆணை’ என்பது சத்தியம்தான்.

மனசாட்சியின் பேரில்: இந்திய அரசியலமைப்புச் சட்டப் பதவிகளை வகிக்க இருப்பவர் எடுத்துக்கொள்ளும் ரகசியக் காப்புப் பிரமாணங்களைச் சத்தியம் என்ற வகையில் கொண்டுவர முடியாது. அவை உறுதி ஏற்புகள். ஆனால், எதன் பேரால் உறுதி தருகிறார்கள் என்பதில் வருகிறது சத்தியம் என்ற உணர்வு. இந்த உறுதி ஏற்புகள் பெரும்பாலும் கடவுளின் பேரால் எடுக்கப்படுவதே உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. கடவுள் நம்பிக்கை அற்றவர் பெருகியதன் விளைவாக உருவானது மன சாட்சியின் பேரால் உறுதி எடுக்கும் நடைமுறை. கடவுளை நம்பாதவர் கடவுளின் பேரால் உறுதி எடுப்பது சத்தியத்தை மீறியதாகிவிடும். சத்தியம் கடவுளைவிட உயர்ந்தது என்று மனிதர்கள் உண்மையாகவே நம்பியிருக்கிறார்கள். நக்கீரன் தமிழ் உதாரணம். சார்லஸ் பிராட்லா இங்கிலாந்து சான்று.

கடவுளைத் தவிர்த்து, மனசாட்சியின் பேரால் அரசாங்க உறுதிமொழிகள் அமையும் நடை முறைக்குக் காரணமானவர் சார்லஸ் பிராட்லா (1833-1891). இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவர், ‘கடவுள் பேரால்’ உறுதி

மொழி ஏற்க மறுத்துவிட்டார். நாடாளுமன்ற விதி, உறுதி ஏற்காமல் அவரை அவையில் அமர அனுமதிக்கவில்லை. அவரும் உறுதியாக நின்றார். தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. மறபடியும் நின்றார். மறுபடியும் மறுத்தார். இப்படி மூன்றுமுறை நடந்த பிறகு வேறு வழியில்லாமல் நாடாளுமன்றச் சட்டத்தைத் திருத்தி அவரை உறுப்பினராக்கிக்கொண்டது அரசு. மனசாட்சி முறை இப்படித்தான் உலகத்தில் தொடங்கியது. பெர்னார்ட்ஷா உட்பட பலர் பிராட்லாவின் பக்கம் நின்றனர். 1891-ல் காலமான பிராட்லாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட 3,000 பேரில் நம்முடைய 22 வயது காந்தியும் ஒருவர்.

சத்தியத்தின் பெயர்கள்: சத்தியம் பேசினார்களோ இல்லையோ, சத்தியத்தை மதித்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டார்கள் இந்தியர்கள். பெருமளவில் கிடைக்கும், ‘சத்திய’ என்னும் சொல்லைக் கொண்ட புராண, வரலாற்றுப் பெயர்கள் அதற்குச் சான்று. சத்திய விரதன், சத்திய கீர்த்தி (அரிச்சந்திரனுக்கு அமைச்சர்), சத்தியவதி (திரிசங்கின் மனைவி), சத்தியவந்தன், சத்தியவான் (சாவித்திரியின் கணவன்), சத்திய விரதன் (இப்பெயரில் பலர் இருந்திருக்கின்றனர்) இன்னும் ஏராளம்.

சத்தியவிரதன் என்பவர் 14 வருடம் பொய் சொல்லாமல் இருக்கும் விரதத்தைக் கடைப்பிடித்தவர்.(அதே சமயம் அவர் வாய் பேச முடியாதவர் என்பதுதான் இதில் உச்சமான செய்தி). ஆனால், அண்மைக் காலத்தில் இதுபோன்ற பெயர் சூட்டல்கள் குறைந்துவிட்டன. சத்தியமூர்த்தி, சத்தியவதி, சத்தியராஜ் போன்ற சில பெயர்களை ஆங்காங்கே காணலாம். வைக்கம் போராட்டத்தில் பெரியாரோடு கலந்துகொண்ட ஒருவர் பெயர் சத்திய விரதன்.

தற்காலத்தில் நிறுவனங்கள் தங்கள் கொள்கை முழக்கங்களுக்குச் சத்தியத்தைத் துணை கொள் கின்றன. சத்தியம், சிவம், சுந்தரம் என்ற வேத வாக்கியத்தை ஒரு ஒளிபரப்பு நிறுவனம் தன் கொள்கை விளக்கமாக்கியது. ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற உபநிடத வாக்கியம், தமிழக அரசின் ‘வாய்மையே வெல்லும்’ எனத் தமிழ் முழக்கமாகியுள்ளது.

சத்தியாக்கிரகத்தை காந்தி போராட்ட ஆயுமாக மாற்றினார். இப்போது அந்த ஆயுதம் போராடு பவர்களின் தகுதியின்மையால் நகைப்புக்கு இடமாகி யுள்ளது. எப்படியோ சத்தியம் (எப்போதாவது) வெல்லும் என்ற நம்பிக்கை இந்தியர்களிடம் இன்னும் அழியவில்லை.

- பழ. அதியமான், ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் - தொடர்புக்கு: athiy61@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்