அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள், இயக்கங்கள் - இவை எல்லாவற்றையும்விட உலகம் முழுவதும் ஓர் அமைப்பு மதுவுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பது தெரியுமா? அது ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’. அடையாளம் அற்றவர்கள் அல்லது அடையாளம் விரும்பாதவர்கள். அழிவைத் தொட்டு மீண்டவர்கள். இப்போது மீட்பர்கள். உசிலம்பட்டி தொடங்கி உகாண்டா வரை கிளைகள் உண்டு.
விளம்பரம் விரும்புவதில்லை; தவிர, அவர்கள் சூழல் அப்படி. அங்கு அரசியல் கிடையாது; மதம் கிடையாது; பணம் கிடையாது. மனிதம் மட்டுமே பிரதானம். மது ஒழிப்பில் அக்கறை கொண்ட ‘தி இந்து’ (ஆங்கிலம்) பல ஆண்டுகளாக நகரில் நடக்கும் இவர்களுக்கான கூட்ட நிகழ்ச்சி நிரலை வெளியிட்டுவருகிறது.
இவர்கள் நேற்று இன்று அல்ல. 79 ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள். சரியாகச் சொல்வதானால் 1935-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி அமெரிக்காவில் தொடங்கப்பட்டது ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ அமைப்பு. மதுவால் பாதிக் கப்பட்ட குடிநோயாளிகளான பில் மற்றும் பாப் ஆகியோரால் தொடங்கப் பட்டது இது. ஆனால், இதற்கான வித்து 1840-களிலேயே விதைக்கப்பட்டுவிட்டது.
இன்றைய தமிழகம்போல் அன்று வாஷிங்டன் இருந்திருக்கும் போல. எங்கும் மது. ஏராளமான குடிநோயாளிகள். குடிநோயாளி களை மீட்க ‘வாஷிங்டோனியன்’ என்கிற அமைப்பு உருவானது. தொடர்ந்து நியூயார்க்கில் ‘ஆக்ஸ்ஃபோர்டு குழு’ உருவானது. 1920-களில் முதல்முறையாக மதுப்பழக்கத்தை ‘குடிநோய்’ என்று கண்டுபிடித்து அறிவித்தார் டாக்டர் வில்லியம் டி. சில்க்வொர்த். 1930-களில் குடிநோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்பாக ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டார்.
இப்படியாக, பல்வேறு அமைப்புகள், மீளத் துடித்த குடிநோயாளிகள் என தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொண்டு உருவானதுதான் ஆல்கஹாலிக் அனானிமஸ். இந்த அமைப்பு உருவாக்கிய புத்தகம் ‘பிக் புக்’. அதுதான் குடி நோயாளிகளின் கீதை, குரான், பைபிள். இன்று உலகம் முழுவதும் 182 நாடு களில் 30 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் கிளை பரப்பி நிற்கிறது இந்த அமைப்பு.
10-ம் வகுப்பிலிருந்தே…
‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடருக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. தொலைபேசியில் அழைக்கிறார்கள். ஒருநாள் தனது மகனை மீட்க வழி தெரியாமல் அலுவலகம் வந்து சுமார் இரண்டு மணி நேரம் கதறி அழுதார் தந்தை ஒருவர். “என் நிம்மதி பறிபோய் பனிரெண்டு வருஷமாச்சு. நானும் என் மனைவியும் ராத்திரியில தூங்குறதே கிடையாது. எப்ப என்ன நடக்கும்னு பயத்துலயே இருக்கிறோம். எங்களுக்கு ஒரே மகன். எப்படியோ பத்தாவது படிக்கிறப்பயே மது குடிக்கப் பழகிட்டான். குடிநோய் முத்தி இப்ப வீட்டுல 24 மணி நேரமும் குடிக்கிறான்.
அடிக்கடி ராத்திரி பைத்தியம் பிடிச்சவன் மாதிரி ஆயிடறான். என்னையும் என் மனைவியையும் அடிக்க வர்றான். உடனே குடிக்கணும்ங்கிறான். ரத்தம் வர்ற அளவுக்கு நாக்கைக் கடிச்சிக்கிறான். விடிகாலை நாலைஞ்சு மணிக்கு நான் எங்கேங்க போவேன். அவனை வெளியே விடவும் முடியாது. ‘நான் இடம் சொல்லுறேன் போ’ங்கிறான். அவன் சொன்ன கடையில விடியற்காலை அஞ்சு மணிக்கு நான் போய் பிராந்தி பாட்டில் வாங்கிட்டு வருவேங்க. பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பிச்சு எல்லா மருத்துவமனையிலும் சேர்த்தாச்சு. உள்ளூர் தொடங்கி வடநாட்டுக் கோயில்கள் வரைக்கும் கூட்டிட்டுப் போயாச்சு. எதுக்குமே அடங்க மாட்டேங்கிறான். இப்படியே தொடர்ந்தால் என் மகன் ரொம்ப காலம் இருக்க மாட்டான். சாமிக்கு நேர்ந்ததா நெனைச்சிக்கிறேன். அதுக்குப் பதிலா ஒரு வேண்டுகோள், நம்ம ஊர்ல இருக்குற அத்தனை மதுக்கடைகளையும் மூடச் சொல்லுங்க! இருக்கிற பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். மதுவுக்கு இப்படி எத்தனை பேரைத்தான் நேர்ந்துவிடுவது?
மது மட்டுமே தேவை
மெத்தப் படித்தவர். கவுரமான அரசு உத்தியோகம். திராவிடப் பாரம்பரியம் மிக்க குடும்பம். ஆனால், இந்த விஷயத்தில் அவருக்கு யாராலும் உதவ முடியவில்லை. அப்படி உதவ முன்வருபவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் மகன் ஏன் மது அருந்துகிறார் என்பதையும் மருத்துவர்களால் சொல்ல முடியவில்லை. தமிழகத்தின் பிரபல மனநல மருத்துவர்கள் எல்லோரிடமும் காட்டியாயிற்று. கடன், காதல், குடும்பத் தகராறு என எந்தப் பிரச்சினையும் இல்லை. வயது 27-தான் ஆகிறது. எதற்கு வெறிபிடித்ததுபோல குடிக்க வேண்டும்?
அவர் வீட்டுக்குச் சென்றேன். செல்லும் வழியில் குன்றத் தூர் தொடங்கி போரூர் வரை மொத்தம் எட்டு கிலோ மீட்டர். அந்த எட்டு கிலோ மீட்டரில் பத்து மதுக்கடைகள். கிலோ மீட்டருக்கு ஒன்று என்று கணக்கைவிட அதிகம். நான் வீட்டுக்குள் வந்ததைகூட உணரவில்லை அந்த இளைஞர். ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்துகொண்டு குடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேச முற்பட்டேன். ஏறெடுத்துப் பார்த்தவர், எந்த உணர்ச்சியும் காட்டாமல் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். வீட்டுக்கு யாரோ புதிய நபர் வந்திருக்கிறாரே, எதற்கு வந்திருக்கிறார்? ஏன் வந்திருக்கிறார் என்பதுகூட அவருக்குத் தேவையாக இல்லை. மது மட்டுமே அவர் தேவை.
“நீங்கள் வீட்டில் இல்லாதபோது உங்கள் மனைவி எப்படிச் சமாளிப்பார்கள்?” என்று கேட்டேன் அந்த தந்தையிடம்.
“அவதான் கடைக்குப் போய் பாட்டில் வாங்கிட்டு வருவா...” என்கிறார் பரிதாபமாக. சமையலறை வாசலில் ஒடுங்கி நின்று கொண்டிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். 45 வயது இருக்கலாம். டாஸ்மாக் கடைக்குச் செல்ல வேண்டிய பெண்ணா அவர்?
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago