மெல்லத் தமிழன் இனி 4 - "வைகுந்தம் ஆக்ஸிடென்ட் கேள்விப்பட்டிருக்கியா?"

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஓசூர்-கிருஷ்ணகிரி நாற்கரச் சாலை. பயங்கரமான கனவுகள். லேசாக விழிப்புத் தட்டியது. பின்னிரவு மூன்று மணி. கனவுகள் மட்டும் அல்ல, பேருந்தும் பேய் வேகத்தில் தாறுமாறாகச் சென்றுகொண்டிருந்தது. பயணிகள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

தட்டுத்தடுமாறி ஓட்டுநரின் கேபினுக்குச் சென்றேன். உதவியாளர் கீழே சுருண்டு படுத்திருந்தார். ஓட்டுநரின் கண்கள் வெறித்தனமாகச் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவசியமே இல்லாமல் கியரை மாற்றி மாற்றிப் போட்டார். எதிரே எதுவும் இல்லை. அதிவேகமாக பிரேக்கை அழுத்தினார். குலுங்கி நின்று, வேகமெடுத்தது பேருந்து. திடீரென்று வண்டியைப் படுவேகமாக வளைத்தார். சக்கரங்கள் சத்தமாகக் கதறின. பதறி ஜன்னலைத் திறந்தேன். பகீர் என்றது. பேருந்து சர்வீஸ் சாலையிலிருந்தும் விலகி, பாறைகள் வெட்டப்பட்டிருந்த ஒரு மலையை உரசும் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. கத்தினேன். கீழே படுத்திருந்த உதவியாளர் பதறி எழுந்தார். அதற்குள் பயணிகள் சிலரும் கூடிவிட்டார்கள்.

கடுமையாகச் சத்தமிட்டார்கள். பேருந்து வேகம் குறையாமல் பள்ளங்களில் ஏறி இறங்கியது. சிலர் உருண்டு விழுந்தார்கள். உதவியாளர் ஓட்டுநரை உலுக்கித் தள்ளி, சிரமப்பட்டுப் பேருந்தை நிறுத்தினார். மலைப் பாறைகளை உரசி நின்றது பேருந்து. ஓட்டுநர் மயக்கமடைந்து விழுந்தார். எல்லாம் சில நிமிடங்களில் முடிந்திருந்தது. மயக்கம் தெளிந்து எழுந்தார் ஓட்டுநர். சிலர் அவரை அடித்தார்கள். பேருந்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதற்குள் மாற்றுப் பேருந்து வந்து, எல்லோரும் சென்றுவிட, நான் மட்டும் செல்லவில்லை.

தனியாக நின்றுகொண்டிருந்தார் ஓட்டுநர். அவருடைய கண்கள் எதையோ தேடின. காவல் நிலைய காம்பவுண்டுக்குள் பாய்ந்தார். அவர் ஓட்டி வந்த பேருந்து நின்றுகொண்டிருந்தது. அவர் இருக்கைக்குக் கீழே இருந்த பையை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பைக்குள் இருந்து ஆஃப் பாட்டிலை எடுத்தார். அதில் பாதிக்கும் மேல் தீர்ந்திருந்தது. மீதத்தை ஊற்றிக்கொண்டார். அப்போதுதான் கவனித்தேன், அவருக்கு வயது ஐம்பதைத் தொட்டிருக்கும்.

அவர் என்னதான் செய்கிறார் என்று தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். காலை மணி ஆறு. ஏரிக்கரை எதிரில் டாஸ்மாக் கடை சாத்தியிருந்தது. கதவைச் சுரண்டினார். விளக்கு எரிந்தது. சரக்கு வந்தது. ஏரிக்கரை மேடேறிப் புல்வெளியில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தார். அருகில் சென்று அமர்ந்தேன்.

“ஆமா நீ யாரு? டிபார்ட்மென்ட் ஆளா? கேஸ் எல்லாம் முடிஞ்சதில்ல, இன்னும் என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு...” - ஐந்து நிமிடங்களில் ஆஃப் பாட்டில் காலி.

“வைகுந்தம் ஆக்ஸிடென்ட் கேள்விப்பட்டிருக்கியா?”

“என் புள்ளை மாதிரி இருக்கப்பா” - கையைப் பிடித்துக்கொண்டார். விசும்பி அழுதார். “வைகுந்தம் ஆக்ஸிடென்ட் கேள்விப்பட்டிருக்கியா? எழுபது பேர் எரிஞ்சு செத்தாங்களே...” என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அனிச்சையாகப் பிணம் கருகும் வாடை மூக்கில் ஏறியதுபோல உணர்ந்தேன்.

மறக்க முடியுமா? சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. ஈரோட்டிலிருந்து வந்த பேருந்து ஒன்று, எதிரே தாறுமாறாக வந்த டீசல் டேங்கர் லாரியின் மீது மோதியதில் தீப்பிடித்து மொத்தப் பயணிகளும் கருகியிருந்தனர். நாளிதழ் செய்தி சேகரிப்புக்காக அப்போது நேரில் சென்றிருந்தேன்.

“ஆமாம் சொல்லுங்கண்ணே”- என் குரல் கம்மியது.

“அந்த டாங்கர் லாரி டிரைவர் நான்தான். ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டேன். இந்த பாழாப்போன குடியைத்தான் விட முடியல. பொண்டாட்டி, புள்ளைங்க விட்டுட்டுப் போயிட்டாங்க. விஷயம் தெரிஞ்ச யாரும் வேலை தரலை. அங்க இங்க பொய் சொல்லித்தான் வேலை பார்த்துட்டு இருக்கேன்” என்றவரிடம் “அவ்வளவு நடந்தும் திருந்தலையா? ஏற்கெனவே அத்தனை பேரைக் கொன்னிருக்க. திரும்பவும் இப்ப நாப்பது பேரைக் கொன்னிருப்பியே” என்று சத்தம் போட்டேன்.

“தம்பி, குறுக்க நாய் வந்தாக்கூட அதுமேல விட மாட்டேன். ஆனா, என் பொண்டாட்டியும் மூணு புள்ளைங்களும் ‘எங்களை ஏத்திக் கொல்லுடா. வண்டி ஏத்திக் கொல்லுடா’ன்னு வண்டிக்கு எதிர்ல ஓடி வர்றாங்களே...” என்றார்.

புரியாமல் பார்த்தேன்.

“நெசமாத்தான் சொல்றேன் தம்பி, நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க” என்றவரை சேலம் அழைத்துச் சென்று, மனநல மருத்துவரிடம் விட்டேன்.

சில நாட்கள் கழித்து மருத்துவர் பேசினார். “விஷுவல் ஹாலுசினேஷன் மோசமான நிலையை அடைஞ்சிருக்கு. வைகுண்டம் விபத்துல மனநிலை பாதிக்கப்பட்டு, அதுக்கப்புறம் ஓவரா குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. வீட்டுலயும் பிரச்சினை. பொண்டாட்டியும் புள்ளைங்களும் ‘எங்களையும் கொன்னுடு’னு அடிக்கடி சண்டை போட்டிருக்காங்க. வீட்டை விட்டு வெளியேறிட்டார். அவரால குடியை விட முடியலை. விஷுவல் ஹாலுசினேஷனால் வண்டி ஓட்டுறப்ப கண் முன்னாடி குடும்பமே வந்து நின்னு மிரட்டுது.”

“சரிபண்ணவே முடியாதா டாக்டர்?”

“முடியும்.”

இது நடந்தது சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது ‘மயக்கம் என்ன?’ தொடருக்காக ஊர் ஊராகப் பயணித்துக்கொண்டிருந்தேன். தற்போது டாக்டரிடம் தொலைபேசியில் பேசினேன். “அந்த டிரைவர் என்ன ஆனார்?”

“ஓடிப்போய் டாங்கர் லாரி முன்னாடி விழுந்து செத்துட்டார்” என்றார். டாக்டரை நேரில் சந்திக்கத் தீர்மானித்தேன்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்