சிரியாவில் குண்டு, நைரோபியில் குண்டு, பாகிஸ்தானில் குண்டு, சைனாவில் புயல் வெள்ளம், ஜப்பானில் பூகம்பம், இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழர் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி, ஆப்பிளின் புதிய மொபைல் ஆப்பரேடிங் சிஸ்டம் அறிமுகம் - இன்னோரன்ன சங்கதிகளெல்லாம் எந்த மூலைக்கு? சமூகம் கவலைப்பட இவற்றைத் தாண்டியும் என்னென்னவோ இருக்கிறது.
சரி விடுங்கள். உங்களுக்கு டீனேஜ் மகன் அல்லது மகள் உண்டா? அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு என்னெல்லாம் தெரியும், எதிலெல்லாம் குழப்பம் என்று தெரியுமா உங்களுக்கு? அவர்களது பாடப் புஸ்தகப் பையைக் குடைந்து பார்த்திருக்கிறீர்களா? நண்பர்களுடன் அவர்கள் எதைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் கடைசியாகப் பார்த்த படம், நயன்தாரா நடித்த ராம ராஜ்ஜியம்தான் என்று நீங்கள் நினைத்திருந்தால், நீங்கள் ஒரு தத்தி. ஒரு தேர்ந்த துப்பறியும் நிபுணராக, உங்கள் வாரிசைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பாருங்கள்.
முடிந்தால் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அவர்கள் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் வினாக்களைக் கண்டுபிடிக்கப் பாருங்கள். ஆடிப் போய்விடுவீர்கள். ஆவின் பால் தவிர வேறெதுவும் அறியாத பிள்ளையென்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காது சிந்திப்பதில் மெஜாரிடி இடம்பிடிப்பது 'அந்த'ப் பால் உறவு சார்ந்த சங்கதிகள் என்பதறிந்தால் அதிர்ந்து போவீர்களா?
டிபிகல் பெற்றோரே, கொஞ்சம் மன்னியுங்கள்.
காலம் கலிகாலம். சின்னப் பசங்களுக்கு என்னவெல்லாமோ தெரிந்திருக்கிறது. எல்லாம் இந்த டிவி சனியன் கெடுத்து வைக்கிறது. பத்தாத குறைக்கு இண்டர்நெட். எல்லாத்தையும் இழுத்துப் பூட்டி, அடக்கி வைக்க ஒரு வழி வந்தபாடில்லை.
கால பேதமற்ற பெரிசுப் புலம்பலுக்கு இட பேதமும் என்றைக்குமிருந்ததில்லை. சொல்லப் போனால் இதெல்லாம் நம்மைவிட வளர்ந்த நாடுகளில் ரொம்ப ஜாஸ்தி.
வெறும் சிந்தனைச் சிற்பிகளல்ல..செயல் வீரர்களால் சிறப்பிடம் பெறும் தேசங்கள் அவை. உலகிலேயே டீனேஜ் கர்ப்பவதிகளின் எண்ணிக்கை அதிகமிருக்கும் தேசம் அமெரிக்கா. ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். முன்னைக்கு இப்போ பரவாயில்லை என்று புள்ளிவிவரக் கணக்குப்பிள்ளைகள் சொன்னாலும் என்னைக்கும் இது பெற்றோருக்குப் பிரச்னையே அல்லவா? கால் முளைக்கும்போதே காதல் முளைத்துவிடுகிறது.
முளைத்த வேகத்தில் களைத்துப் போய் கழட்டிவிட்டுவிட்டு, காலக்கிரமத்தில் அடுத்ததற்குத் தவ்விப் போய்விடுகிறது, மனமெனும் மர்மக் குரங்கு. தவிரவும் காதலெல்லாம் மனசோடு முடிகிற சங்கதியா?
இருக்கட்டும். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் டீனேஜ் பிள்ளைகளுக்கான ஒரு சிறப்பு சமூக சேவையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு நம்பர். பொதுவான நம்பர். அந்த நம்பருக்கு பதிமூன்று முதல் பத்தொன்பது வயது வரையிலான பாலக பாலகிகள் தத்தமது பாலியல் சந்தேகங்களை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எத்தனை ஏடாகூட வினாவென்றாலும் பிரச்னை இல்லை. மேற்படி குறுஞ்செய்தி சென்று சேருமிடத்தில் சிலபல அமெரிக்க மாத்ருபூதங்கள் உட்கார்ந்திருப்பார்கள். அன்னார் இக்குறுஞ்செய்திகளை வாசித்து, ஒவ்வொருவருக்குமான தக்க பதில்களை மறு செய்தியாக அனுப்பிவைப்பார்கள்.
அட சனியனே, இது புத்திய பாத்தியா? இந்த வயசுல என்னல்லாம் கேக்குது தரித்திரம் புடிச்சது? இரு இரு உங்கப்பாட்டயே சொல்றேன் என்று யாரும் மிரட்டமாட்டார்கள். நம்பலாம். குறுஞ்செய்தி அனுப்பிய இருபத்தி நாலு மணி நேரத்தில் பதில் செய்திக்கு உத்தரவாதம்.
உடல் சார்ந்த வினாக்கள் முதல் மனம் சார்ந்த குழப்பங்கள் வரைக்கும் எல்லையற்ற சந்தேகங்களைக் கொட்டித் தீர்த்து பதில் வாங்கலாம். அப்பா அம்மாவிடம் பேச முடியாத, விவாதிக்க முடியாத எதை வேண்டுமானாலும் இந்தக் குறுஞ்செய்திக் குளத்தில் கல்லெறிந்து விடை பெற முடியும்.
கலிஃபோர்னியாவிலும் வடக்கு கரோலினாவிலும் ஏற்கெனவே இம்மாதிரியான செய்திச் சேவைகள் புழக்கத்தில் உண்டு. நியூ மெக்சிகோவுக்கு இது புதுசு. அங்கே பாலருந்தும் மழலையர்கள் படு தீவிரமாகக் கேள்விகளால் வேள்வி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் இப்போது.
இதனாலெல்லாம் சந்தேகங்கள் தீர்ந்து சாந்தியும் சமாதானமும் நிலவத் தொடங்கினால் சந்தோஷம். குழப்பமே இல்லாமல் தப்புப் பண்ணத் தயாராகலாம் என்று ராங் மேத்தமேடிக்ஸ் போட்டுவிட்டார்களென்றால்தான் பிரச்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago