கடந்த வாரம் மிகுந்த தயக்கத்துடன் விமான நிலையம் சென்றேன். ஏற்கெனவே 2 மணி நேரம் தாமதமாகிவிட்ட அந்த பெங்களூரு விமானம் ரத்து செய்யப்படக்கூடாதா என்றுகூட நினைத்தேன். கிரிக்கெட் பற்றிய சிந்தனையாலோ, உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா குழு கிரிக்கெட் வாரியத்தின் மீது நடத்திய துல்லியத் தாக்குதல் பற்றிய நினைப்பாலோ அப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகவில்லை. அப்போது மல் யுத்தம் பற்றியே சிந்தித்தேன். 46 விநாடிகளுக்குள் சோபியா மாட்சனிடம், பபிதா போகாட் தோற்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்திய ரசிகர்களில் சிலர் சோபியாவைக்கூட ஆதரித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்! பிறகு நிர்மலா தேவி, கரோலினா கேஸ்டிலோ இடால்கோவை புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். அப்போது அரங்கில் தோன்றியவர் முகம் பரிச்சயமாக இருந்தது. அவர் அசர்பைஜானின் டொக்ருல் அஸ்கரோவ். உலகின் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவர். அவரை எதிர்த்துக் களத்தில் நின்றவர் அதிகம் நாம் பார்த்திராத இந்தியர் விகாஸ் குமார். முதல் சுற்றில் பின்தங்கியவர், இரண்டாவது சுற்றில் ஆவேசம் வந்தவரைப்போல தாக்கி வெற்றி பெற்றார்.
இந்தியாவில் மல்யுத்தப் போட்டிகளில் நிறையப் பணம் கொட்டுகிறது. என்சிஆர் பஞ்சாப் ராயல்ஸ் அணிக்காக, மும்பை மகாரதி அணிக்கு எதிராகப் போட்டியில் கலந்து கொண்டார் அஸ்கரோவ். உலகத் தரமுள்ள வீரர்களை வெல்லவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் இந்தியாவிலும் மல்யுத்த வீரர்கள் தயாராகிவிட்டனர்.
இன்னொரு விளையாட்டு சேனலில் பேட்மிண்டன் (பூப்பந்து) போட்டிகள் காட்டப்பட்டன. பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) என்ற அந்தப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த், டென்மார்க்கைச் சேர்ந்தவரும் உலகின் இரண்டாமிட ஆட்டக்காரருமான ஜேன் ஆஸ்டர்கார்ட் ஜோர்கன்சனை வென்றார். காந்த் உலக அளவில் 15-வது இடத்தில்தான் இருக்கிறார். காந்த் ‘அவர் வாரியர்ஸ்’ அணிக்காகவும் ஜோர்கன்சன் ‘டெல்லி ஏசர்ஸ்’ அணிக்காகவும் விளையாடினர்.
இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்குப் புரவலராக இருப்பவர் இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவரான அகிலேஷ் தாஸ். இவர் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் பனாரசி தாஸின் மகன். பேட்மிண்டன் போட்டிகளில் தேசத்துக்காக ஆடியவர் இல்லை அவர். ஆனால் மிகச் சிறந்த நிர்வாகி.
இந்திய மல்யுத்த சம்மேளனம் என்ற அமைப்பு, உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் என்பவரின் உடமையைப் போல உள்ளது. 16 வயதிலேயே குற்ற வழக்குக்கு உள்ளானவர், பாபர் மசூதி இடிப்பு இயக்கத்தில் சேர்ந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர், தடா சட்டப்படி சிறைவாசம் அனுபவித்தவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் போல (பி.சி.சி.ஐ.) மல்யுத்த, பூப்பந்து சங்கங்களையும் உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உள்படுத்தினால் அகிலேஷ், பிரிஜ் பூஷண் சரண் நிர்வாகிகளாக இருக்க முடியாது.
அபய் சவுடாலா தலைவராக இருந்த 2007 முதல் 2012 வரையில் குத்துச் சண்டைப் போட்டிகள் பிரபலமடைந்தன. அவர் நீக்கப்பட்ட பிறகு குத்துச் சண்டைக்கே ஆதரவு குறைந்தது. பிறகு ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தலைமையில் குத்துச் சண்டை சம்மேளனம் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. உலக கபாடி சம்மேளனத் தலைவராக ஜனார்த்தன் சிங் கெலோட் பதவி வகிக்கிறார். இவரும் தீவிர அரசியல்வாதி. இந்திய கபாடி சங்கத்துக்கு இவருடைய மனைவி மிருதுள் படவ்ரியா தலைவராக இருக்கிறார்.
விளையாட்டு சங்க நிர்வாகிகளாகப் பதவி வகிக்க லோதா குழு நியமித்துள்ள வயது, தொழில், பதவிக்கால வரம்பு ஆகிய நியதிகளை இவர்களுக்குக் கட்டாயமாக்கியிருந்தால் இவர்களுடைய பங்களிப்பில் வளர்ந்த விளையாட்டுகள் எதுவுமே இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்காது.
அதலடிக்ஸ் சம்மேளனத் தலைவராக முன்னணி அதலடிக் வீரர் ஆதில் சுமாரிவாலா பதவி வகிக்கிறார். மிக வேகமாக ஓடுவதில் வல்லவர். அவர் ஒரு அதலட் என்பதுடன், பதவி வகிப்பதற்கான வயது வரம்பிலும் இருக்கிறார்.
இப்போது மீண்டும் கவனிப்பையும் வெற்றிகளையும் பெற்றுவரும் விளையாட்டு ஹாக்கி. ஆனால் இந்திய ஹாக்கி சம்மேளனம் நன்றாக நிர்வகிக்கப்படுகிறதா, இல்லையா என்று கேட்டால் உறுதியாகக் கூற முடிய வில்லை. சம்மேளனத்தின் தலைவர் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி கே.பி.எஸ். கில். தேசிய அணியில் இடம் பெறுவதற்கு வீரர்களிடம் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சிலர் லஞ்சம் வாங்கியது ரகசிய கேமராவால் படம் பிடிக்கப்பட்டு அம்பலமானது. ஹாக்கி இந்தியா என்ற அமைப்பை மத்திய விளையாட்டு அமைச்சகமும் சுரேஷ் கல்மாடி தலைமையிலான இந்திய ஒலிம்பிக் சங்கமும் சேர்ந்து உருவாக்கின. சுரேஷ் கல்மாடி ஊழல் புகாருக்கு ஆளாகி விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்திய ஹாக்கி சங்கத் தலைவராக நரீந்தர் பாத்ரா பதவி வகிக்கிறார். இவர் டெல்லியில் பிரபலமான பாத்ரா மருத்துவமனையின் நிறுவனர். இவர் சர்வதேச ஹாக்கி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் பதவியை தேசிய ஹாக்கி வீராங்கனையான மரியம்மா கோஷிக்கு அளித்திருக்கிறார் பாத்ரா.
இப்படி குழப்பம் தரும் தகவல்களிலிருந்து நாம் எந்த முடிவுக்காவது வர முடியுமா? வயது, அரசியல் தொடர்பு, பணக்காரப் பின்புலம், சொந்தமான விளையாட்டுச் சாதனைகள் ஆகியவை இரு்பபதாலோ, இல்லாமல் இருப்பதாலோ ஒரு விளையாட்டு சங்கத்தை வெற்றிகரமாக நிர்வகித்துவிட முடியாது. அப்படியென்றால் என்னதான் அடிப்படைத் தகுதிகள், அதுவும் கிரிக்கெட்டுக்கு. இந்தியாவின் ராஜ விளையாட்டு கிரிக்கெட் என்றால் மிகையில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியம் பகிரங்கமாக அல்லாமல் திரைமறைவில்தான் செயல்படுகிறது, அதில் ஊழல்கள் அதிகம். உச்ச நீதிமன்றமும் அது நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழுவும் கிரிக்கெட் வாரியத்தை எப்படிச் சீர்படுத்த முடியும்?
நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்காமல் அலட்சியப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை வாரியம் செய்துவிட்டது. லோதா குழுவின் பரிந்துரையை அமல் செய்துதான் தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை கோபத்தில் இடப்பட்ட ஆணையாகவே கருத வேண்டியிருக்கிறது. நீதிமன்றமோ அது நியமித்த குழுவோ வாரியத்தைச் சீர்திருத்தும் வேலையில் நேரடியாக இறங்கியிருக்கக்கூடாது. லோதா குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்திருக்க வேண்டும்; அந்த அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று நீதிமன்றம் கேட்டிருக்க வேண்டும்.
நவீன காலத்தில் விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. பணத்தைப் போட்டு பெருக்கும் தொழில்முனைவோர்கள் இதில் ஈடுபடும்போது இது வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் கேளிக்கை, விற்பனை, லாபம் என்று பல இலக்குகளுடன் நடத்தப்படுகிறது. கிரிக்கெட் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட பெரிய வியாபாரம். இதை மனதில் கொள்வது அவசியம்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago