சிரியாவைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் என்னை அமெரிக்க மக்களுடனும் அமெரிக்க நாட்டுத் தலைவர்களுடனும் நேரடியாகப் பேசத் தூண்டியுள்ளன. இரு சமூகங்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் போதுமான அளவுக்கு இல்லாததால் நேரடியாகப் பேசுவது அவசியமாகிறது.
நம்மிரு நாடுகள் இடையேயான உறவு பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது. பனிப்போர் காலத்தில் நாம் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றோம். ஒரு காலத்தில் நாம் ஒரே அணியில் இருந்து நாஜிகளைத் தோற்கடித்தோம். அப்படியொரு சேதம் உலக நாடுகளுக்கு இனி ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை அப்போது உருவாக்கப்பட்டது.
போராக இருந்தாலும் சமாதானமாக இருந்தாலும் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை அப்போது தோற்றுவித்த தலைவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவின் ஒப்புதலோடுதான் வீட்டோ எனும் ரத்து அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்படி பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்காவிட்டால் ஒரு முடிவு செல்லுபடியாகாது என்று நம்முடைய முன்னோர்கள் தீர்க்கதரிசனத்துடன் தீர்மானித்தார்கள். அதனால் இதுவரை உலக அமைதியும் சமாதானமும் பராமரிக்கப்பட்டுவருகிறது. செல்வாக்கு மிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஒன்றியத்தை மீறித் தன்னிச்சையாகப் போர் நடவடிக்கைகளை எடுத்துவிட முடியாது என்ற நிலை பராமரிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளும் போப்பாண்டவர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த பின்னரும் சிரியா மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடுத்தால் அங்கு மோதல் முற்றும். அதிக எண்ணிக்கையில் அப்பாவி பொதுமக்கள்தான் பலியாவார்கள். பிறகு அந்த மோதல் சிரியா நாட்டு எல்லையோடு நின்றுவிடாமல் வேறு நாடுகளுக்கும் பரவி அளவற்ற சேதங்களை ஏற்படுத்தும். வன்முறை அதிகரித்துப் பயங்கரவாதச் செயல்களை அலையலையாகக் கிளம்பச் செய்யும். ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியைத் தடுக்கவும் இஸ்ரேல்–பாலஸ்தீனம் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்தவும் பன்னாட்டு அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். மத்தியக் கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அதிகப்படுத்தும். சர்வதேசச் சட்டமே நிலைகுலையும் அளவுக்கு நிலைமை விபரீதமாகும்.
சிரியாவில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட்டம் நடக்கவில்லை. பல்வேறு மதங்களைக் கொண்ட அந்த நாட்டில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் சண்டை நடக்கிறது. சிரியாவில் ஜனநாயகம் மலர்வதற்காகப் போராடுகிறவர்கள் ஒரு சிலரே. ஆனால் அல் காய்தா ஆதரவாளர்களும் பிரிவினைவாதிகளும் கணக்கில் அடங்காமல் பெருத்திருக்கிறார்கள். அல் நுஸ்ரா முன்னணி, இராக்கின் இஸ்லாமிய தேசம், லெவன்ட் ஆகிய அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியிருக்கிறது. அந்த அமைப்புகள்தான் தங்களுடைய ஆதரவாளர்கள் உதவியுடன் சிரியாவின் அரசுக்கு எதிராகப் போராடிவருகின்றன. உள்நாட்டுக் கலவரவாதிகளுக்குக் கிடைத்த வெளிநாட்டு ஆயுதங்களால் மோதல் படுகோரமாக வலுவடைந்திருக்கிறது. இதனாலேயே உலகிலேயே மிக மோசமான உள்நாட்டுப் போர் சிரியாவில் நடந்துவருகிறது.
அரபு நாடுகளிலிருந்து வந்த கூலிப்படையினர் அங்கே சண்டையிடுகிறார்கள். மேற்கத்திய நாடுகளிலிருந்து மத அடிப்படையில் வந்த நூற்றுக் கணக்கான தீவிரவாதிகளும் ரஷியாவிலிருந்து சென்றவர்களும்கூட அங்கே சண்டையிடுகிறார்கள். இது நம் அனைவருக்குமே கவலையைத் தரக்கூடிய விஷயம். அங்கே சண்டையிட்டு அனுபவம் பெற்றவர்கள் பிறகு அவரவர் நாடுகளுக்குத் திரும்பி அரசுகளுக்கு எதிராகக் கலகத்தில் இறங்க மாட்டார்களா? லிபியாவில் சண்டைக்குச் சென்ற கூலிப்படையினர்தான் பிறகு மாலியில் அதே வேலையில் இறங்கி நாசப்படுத்தினார்கள். இது நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை.
ஆரம்பத்திலிருந்தே நாங்கள், சிரியர்கள் தங்களுக்குள் பேசி, சமாதானத் தீர்வை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றே கூறிவருகிறோம். நாங்கள் சிரிய அரசைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை, சர்வதேசச் சட்டத்தைத்தான் மதித்து நடக்க வேண்டும் என்கிறோம். சட்டப்படியான ஆட்சியே எல்லா நாடுகளிலும் நடக்க வேண்டும். அதற்கு சர்வதேசச் சட்டங்களை மதித்து நடந்தால்தான் உலக நாடுகளிடையே சண்டை மூளாமல் சமாதானம் நிலவும். ஐ.நா. சபையின் பாதுகாப்பு ஒன்றியத்தை சிரியா விவகாரத்தில் பயன்படுத்த விரும்புகிறோம். சட்டம் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ... ஆனால், அது சட்டம்; அதை நாம் மதித்து நடக்க வேண்டும்.
ஒரு நாடு தற்காப்புக்காகவோ ஐ.நா.வின் பாதுகாப்பு ஒன்றியத்தின் ஒப்புதலோடோதான் பலத்தைப் பிரயோகிக்க முடியும். அதற்கு மாறான எந்த நடவடிக்கையும் ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அது ஐ.நா. சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசச் சட்ட முறைமைகளுக்கு எதிரானதாகவும் கருதப்படும்.
சிரியாவில் விஷ வாயு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதை சிரிய ராணுவம் பயன்படுத்தவில்லை, வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்பதற்காக அரசு எதிர்ப்பாளர்களால்தான் பயன்படுத்தப்பட்டது என்று எண்ணுகிறோம். அப்படி நடந்தால்தான் வெளிநாட்டுப் படைகளோடு சேர்ந்து செயல்பட முடியும் என்று அரசை எதிர்க்கும் மத அடிப்படைவாத குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளன. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதையே சாக்காக வைத்துக்கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மத அடிப்படைவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.
வெளிநாடுகளில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களை அடக்கக்கூட ராணுவரீதியாகத் தலையிடுவது சரியே என்று அமெரிக்க அரசு விபரீதமாக நினைப்பது கவலை அளிக்கிறது. இது அமெரிக்காவின் நீண்ட கால நலனுக்கு நல்லதா. எனக்கென்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது. உலகின் கோடிக் கணக்கான மக்கள் அமெரிக்காவை இப்போது ஜனநாயகத்துக்கு முன்மாதிரியான நாடாக நினைக்கவில்லை. நீ எங்களோடு இருக்கிறாயா, எதிராக இருக்கிறாயா என்று பிற நாடுகளைக் கேட்டு அதற்கேற்ப ராணுவக் கூட்டுகளை ஏற்படுத்திக்கொண்டு தாக்கும் முரட்டு சக்தியாகவே பார்க்கிறார்கள்.
ராணுவ பலத்துக்கு பலனும் இல்லை, அர்த்தமும் இல்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆப்கானிஸ்தான் இப்போது உள்நாட்டு நிலைமைகளால் நிலைகுலைந்துபோயிருக்கிறது. பன்னாட்டுப் படைகள் அந்த மண்ணிலிருந்து வெளியேறிய பிறகு அங்கே என்ன நடக்கும் என்று யாராலும் ஊகிக்கக்கூட முடியவில்லை. லிபியா இப்போது பழங்குடி இனப் பகுதிகளாகவும் தலைக்கட்டுகளின் ஆதிக்கப் பகுதிகளாகவும் கூறுபோடப்பட்டுவிட்டது. இராக்கில் தினமும் சண்டையும் கார்குண்டு வெடிப்பும் நடந்து டஜன் கணக்கில் மக்கள் இறக்கிறார்கள். அமெரிக்காவிலேயே பலர் இராக்குடன் சிரியாவை ஒப்பிட்டு அதே தவறை மீண்டும் செய்ய வேண்டுமா என்று கேட்கின்றனர்.
அமெரிக்கா என்னதான் கம்ப்யூட்டர் உதவியுடன் குறிவைத்து ஏவுகணைகளை ஏவித் தாக்கினாலும் சிரியாவைச் சேர்ந்த முதியவர்களும் குழந்தைகளும் ஏராளமாக பலியாவது நிச்சயம். சிரிய நாட்டு அப்பாவிகளை, குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களைக் காப்பதுதான் லட்சியம் என்று கூறிவிட்டு ஏவுகணைகளை வீசி அவர்களையே அழிப்பதற்கே இந்த தாக்குதல் உதவும்.
சர்வதேசச் சட்டங்கள் உங்களைக் காப்பாற்றாது, எனவே சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று இதன் மூலம் உலக நாடுகளுக்கு நாம் கூறுவதாகவே ஆகிவிடும். இதையடுத்து ஏராளமான நாடுகள் மக்களைப் பெரும் எண்ணிக்கையில் அழிக்கும் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கும். உங்களிடம் அணுகுண்டு இருந்தால் உங்களை யாரும் தாக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அனைத்து நாடுகளின் மனங்களிலும் விதைக்கப்படும். இதன் விளைவாக, நாம் காலம்காலமாகக் கூறிவரும் அணு ஆயுதப் பரவல் என்ற லட்சியம் சிதைந்து அணு ஆயுதக் குவிப்பு வலுத்துவிடும். தாக்குவோம், அழிப்போம் என்று ஆவேசமாகப் பேசுவதை விடுத்து நாகரிகமான முறையில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வுகாண வேண்டும்.
தன்னிடமிருக்கும் ரசாயன ஆயுதங்களையும் கிடங்குகளையும் சர்வதேசப் பார்வைக்கு உள்படுத்தத் தயார் என்று சிரியா கூறியிருப்பதை நல்ல வாய்ப்பாகக் கருதி ஏற்க வேண்டும். சிரியா மீதான நடவடிக்கை குறித்து ரஷியாவுடன் தொடர்ந்து பேசத் தயார் என்று அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதை வரவேற்கிறோம். சிரியா மீது நாம் படையெடுப்பதைத் தவிர்த்தால் சர்வதேச அளவில் நிலைமை மேம்படும். ஒருவரையொருவர் நம்புவது அதிகமாகும். இந்த வெற்றியால் சிக்கலான பிற பிரச்சினைகளுக்கும் ஒத்துழைப்பு மூலம் நாம் தீர்வுகாண்பது வலுப்படும்.
அதே சமயம் அதிபர் பராக் ஒபாமா கூறிய ஒரு விஷயத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “அமெரிக்கா எந்த விதத்தில் வித்தியாசமானது, நாம் தனித்துவம் மிக்கவர்கள் என்பதால்தான் அமெரிக்கா வித்தியாசமானதாக இருக்கிறது” என்று ஒபாமா பேசியிருக்கிறார். உலக நாடுகளிலே பணக்கார நாடுகள் உள்ளன, ஏழை நாடுகள் உள்ளன, முதிர்ந்த ஜனநாயக நாடுகள் உள்ளன, ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைக்க முயலும் நாடுகள் உள்ளன. நாடுகளுக்கிடையேயான கொள்கைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால் நாம் அனைவருமே கடவுளின் ஆசியைப் பெற வேண்டுகிறோம் – காரணம், கடவுள் நம் எல்லோரையும் சமமாகவே படைத்திருக்கிறார்!
(c) தி நியுயார்க் டைம்ஸ் தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago