ஜார்ஜ் க்ளெமாசோ, “போர் என்பது வெற்றியில் முடியும் பேரழிவுகளின் தொடர்ச்சி” என்பார். நவீன உள்நாட்டுப் போர்கள் பேரழிவுகளில் முடியும் குழப்பங்களின் தொடர்ச்சி.
சுஸ்தர் ஹோல்ச்சருக்கு 16 வயது. அதிகாலையில் 25 கி.மீ. ஓடுகிறார். தோள்பட்டையில் துப்பாக்கி. கடந்த மாதம் வரை சுஸ்தர் மாணவி. இப்போது சிரியாவின் குர்து இனக் குழுக்களில் ஒன்றான குர்திஷ் இஸ்லாமிய விடுதலை முன்னணியின் வீராங்கனை. லட்சியம் சிரிய குர்திஸ்தான். பொது எதிரி பஷார் அல் அஸாத்.
கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் அபு. இப்போது 'இராக் - சிரிய இஸ்லாமிய தேசம்' அமைப்பின் ஜிகாதி. லட்சியம் இராக்-சிரிய இஸ்லாமிய தேசம். பொது எதிரி பஷார் அல் அஸாத்.
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் - வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை, முரண்பாடான இலக்குகளைக் கொண்டவை, அவற்றில் பல தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்பவை - ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராகக் காட்டுத்தனமாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால்?
சிரியாவில் கடந்த 31 மாதங்களில் ஐ.நா. சபையின் கணக்குப்படி 1.2 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; ஒரு கோடிப் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். சமகாலத்தின் கொடூர வரலாறாகி இருக்கிறது சிரிய உள்நாட்டுப் போர். சிரியத் தாக்குதல்களில் மனித உயிர்களே பிரதான இலக்குகள்.
சிரிய மக்கள்தொகையில் 59% சன்னிகள்; 13% ஷியாக்கள்; தலா 10% கிறிஸ்தவர்களும் குர்துக்களும். 1963-ல் பாத் கட்சியின் கீழ் சிரியா வந்தது. 1971-ல் ஹஃபீஸ் அல் அஸாத் அதிபரானார். ஒற்றையாட்சி. எதிர்க்குரல்களுக்கு 'கைது - சித்தரவதை - கொலை'என்பதே நீதி. 1982-ல் ஹாமா போராட்டங்களின்போது மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 2000-ல் அவருடைய மறைவுக்குப் பின் மகன் பஷார் அல் அஸாத் பதவியேற்றார். முந்தைய ஆட்சியின் நீட்சி. 2010-ல் “உலகில் மனித உரிமைகள் துளியும் இல்லாத நாடுகளில் ஒன்று சிரியா” என்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம். 'அரபு வசந்த'த்தின் தொடர்ச்சியாக 2011 மார்ச்சில் தொடங்கிய போராட்டங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுத்தன. போரின் மைய நீரோட்டம் இன அரசியல்.
அதிபர் அஸாத், ஷியா இனத்தின் உட்பிரிவான அலாவியைச் சேர்ந்தவர். ஏனைய இனங்கள் ஒடுக்கப்படவில்லை என்றாலும், எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினரான அலாவிகளையே முடிவெடுக்கும் பதவிகளில் அமர்த்தியிருக்கிறார் அஸாத். பெரும்பான்மையினரான சன்னிகளிடையே வன்மத்தையும் குர்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரிடையே அரசியல் ஏக்கத்தையும் இது வளர்த்திருந்தது. உள்நாட்டுப் போர் எல்லோருக்குமான வாய்ப்பாகி இருக்கிறது. 10 துப்பாக்கிகள் கிடைத்தால், ஒரு புதிய ஆயுதக் குழு. ஷியாக்கள், குர்துக்கள், கிறிஸ்தவர்களைக் குறிவைத்து சன்னி இனக் குழுக்கள் வேட்டையாடுகின்றன; வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சன்னிகளைப் பழிதீர்க்கின்றனர் ஷியாக்களும் குர்துக்களும். கிறிஸ்தவர்கள் பதுங்குகிறார்கள்; தாக்குகிறார்கள்; பலியாகிறார்கள். ஒவ்வோர் இனத்துக்கும் பல அணிகள். ஒவ்வோர் அணியிலும் பல குழுக்கள்.
நவீன வரலாற்றில் ஸ்பெயின், லெபனான், போஸ்னியா உள்நாட்டுப் போர்களுக்குப் பின் அதிகமான வெளிநாடுகளின் தலையீடும் பயங்கரவாத இயக்கங்களின் நேரடிப் பங்கேற்பும் உள்ள போராகியிருக்கிறது சிரியப் போர். நேரடியாகவும் மறைமுகமாகவும் சிரிய அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஈரான், ரஷ்யா, சீனா, வடகொரியா, பெலாரஸ், இராக், வெனிசுலா, அல்ஜீரியா ஆகியவையும் சிரிய எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், இங்கிலாந்து, சௌதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகியவையும் பங்கேற்றிருக்கின்றன. அஸாத்துக்கு ஆதரவாக ஹெஸ்புல்லா, ஹமாஸ்; எதிராக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், அல்கொய்தா இறங்கியிருக்கின்றன.
அரபுப் போர்களுக்கும் சிரிய உள்நாட்டுப் போருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அவை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் களங்கள்; இது இஸ்லாமிய சர்வதேசியத்தின் பரிசோதனைக் களம்.
அமெரிக்காவின் நோக்கம் இங்கு எண்ணெய் அல்ல (சர்வதேச எண்ணெய் உற்பத்தியில் சிரியாவின் பங்கு அரை சதவிகிதத்துக்கும் குறைவு); ஈரானுடன் நட்பு, இஸ்ரேலுடன் மோதல் எனும் வெளியுறவைப் பேணும் அஸாத்தை ஆட்சியிலிருந்து அகற்றி ஒரு பொம்மை அரசை நிறுவுவதன் மூலம் இஸ்ரேலைப் பலப்படுத்துவது; ஈரானைத் தனிமைப்படுத்துவது; மத்திய ஆசியாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது . ஆனால், அஸாத் எதிர்ப்பு நோக்கில் ஊக்குவிக்கப்பட்ட இந்தப் போரில், இஸ்லாமிய சர்வதேசியம் எடுத்திருக்கும் விஸ்வரூபம் மேற்குலகைக் கையைப் பிசையவைத்துள்ளது.
“ஒரே நாளில் 300 குண்டுகள் விழுந்தன. முதல் மூன்று குண்டுகள் விழுந்த சத்தத்திலேயே என் குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர். அன்றிரவு என் மனைவி இறந்தாள். காலையில் வெளியே பார்த்தபோது நான் மட்டும் ஒரு பைத்தியமாக இருந்தேன்.”
“ஹலபில் எங்கே குண்டு விழ வேண்டும் என்பதை இஸ்தான்புல் தீர்மானிக்கிறது. சிரியாவின் பல தலைமுறைச் சிறுபான்மையினரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கூலிகள் சுட்டுக்கொல்கிறார்கள். இது எப்படி விடுதலைப் போராட்டம் ஆகும்? ஷியாக்கள் என்பதால் சக முஸ்லிம்களையே சன்னிகள் கொல்கிறார்கள். இவர்கள் எப்படி ஜிகாதிகள் ஆவார்கள்?”
“நான் முதல் போராட்டத்துக்குப் போனபோது என்னுடைய கனவு ஜனநாயக சிரியா. இப்போது அச்சமாக இருக்கிறது; போரில் அஸாத் ஜெயித்தால் சர்வாதிகாரம் தொடரும்; அஸாத் தோற்றால் காட்டுமிராண்டிகள் கைகளில் நாடே சிதறும். சிரியா இப்போது நரகம்.”
- குண்டுகள் சத்தத்தின் நடுவே புதைகின்றன மனிதத்தின் குரல்கள். “கடைசியில் போர் எதையுமே சரிசெய்யவில்லை” என்கிற அகதா கிறிஸ்டியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
தொடர்புக்கு: writersamas@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
34 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago