பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வேண்டும்- ஏ.கே.செங்கோட்டுவேல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பால் கூட்டுறவு சங்கங்கள் இயங்கிவருகின்றன. இதில் 12,000 பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 17 ஆவின் நிலையங்களுக்கு, பால் உற்பத்தியாளர்கள் 22.5 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 50% அளவுக்குத் தீவனம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூட்டை 200 ரூபாய்க்கு விற்ற தவிடு 400 ரூபாய்; புண்ணாக்கு கிலோ 30 ரூபாய்க்கு விற்றது 40 ரூபாய்; 15 ரூபாய்க்கு விற்ற பருத்திக்கொட்டை 25 ரூபாய்… இதெல்லாம் அரசுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், கடந்த டிசம்பர் மாதம் பாலுக்கு மூன்று ரூபாய் என்று கொள்முதல் விலையை உயர்த்தியது. விலை உயர்வு 50%ஆக இருக்கும்போது வெறும் 15% கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருக்கிறது.

ஆளும் கட்சி பலம்

ஏழை பால் உற்பத்தியாளர்கள் அங்கம் வகிக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில், தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட ஒன்றியத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் போன்ற பொறுப்புகளில் பால் உற்பத்தியாளர் யாருக்கும் பதவி இல்லை. இந்தப் பதவிகள் அத்தனையிலும் ஆளும்கட்சியினர், செல்வாக்கு மிக்கவர், சிபாரிசுப் பேர்வழிகள்தான் இருக்கிறார்கள். சங்கத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இவர்களை மாறிமாறிப் பயன்படுத்திக்கொள்கின்றன.

வேதனை தரும் வெண்மைப் புரட்சி

தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரித்து, வெண்மைப் புரட்சிக்கு வித்திடுவதில் அரசு தயக்கம் காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளில் 24 ஆயிரம் விலையில்லாக் கறவை மாடுகளை அரசு வழங்கியுள்ளதாம். பிற மாவட்டங் களிலிருந்து மாடுகளை வாங்கி, பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்ட மாடுகளாகக் கணக்குக் காட்டுகிறது. இங்குள்ள மாடுகளை இடப்பெயர்ச்சி செய்வதால் என்ன பயன்?

குஜராத் அரசு கலப்புத் தீவனத்தைப் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதோடு, 1.3 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதலும் செய்கிறது. கர்நாடகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்கு மானியமாக லிட்டருக்கு ரூபாய் அளிக்கப்பட்டது. தற்போது 65 லட்சம் லிட்டர் பாலை தினமும் கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் கலப்புத் தீவனம் 11 லட்சம் கிலோ தேவைப்படும் பட்சத்தில், வெறும் மூன்று லட்சம் கிலோ கலப்புத் தீவனத்தை மட்டுமே அரசு அளிக்கிறது. 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு, கடலில் கரைத்த பெருங்காயமாக இந்தக் கலப்புத் தீவனம் உள்ளது. தனியார் நிறுவனங்களில் அதிக விலை கொடுத்துத் தீவனம் வாங்கும் உற்பத்தியாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களுக்கு 22.5 லட்சம் லிட்டர் பாலை வழங்குகின்றனர். தனியார் பால் நிறுவனங்கள் அரசைவிட லிட்டருக்கு ஆறு ரூபாய் அதிகமாக அளிக்கின்றன. தினமும் உற்பத்தியாகும் 1.5 கோடி லிட்டர் பாலில், சொந்த உபயோகத்துக்கு 50% போக, 30 லட்சம் லிட்டர் பால் தனியாருக்கும், 22.5 லிட்டர் பால் ஆவினுக்கும், மீதி சைக்கிள் பால் விற்பனையாளர்களுக்கும் சென்று விடுகிறது. பால் உற்பத்தியைப் பெருக்க நவீன உபகரணங் கள், உயர்தரப் பசுக்கள் போன்றவற்றுக்காக மத்திய அரசின் நிதி உதவியைத் தமிழக அரசு பெற வேண்டும்.

மானியம் வேண்டும்

விலையில்லாப் பொருட்களை வாரிவழங்கும் அரசு, உழைக்கும் வர்க்கத்துக்கு லாபம் கிடைக்காவிட்டாலும், நஷ்டத்தையாவது அவர்கள் தவிர்ப்பதற்கு உதவ முன்வர வேண்டும். விலையில்லாப் பொருட்களை வாரிவழங்கிட நிதி உள்ள அரசுக்கு, பால் உற்பத்தியாளர்களுக்கு மானியமாக லிட்டருக்கு நான்கு ரூபாய் அளிப்பதற்கு யோசிக்கத் தேவையில்லை.

உழைக்கும் வர்க்கத்துக்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம், கிள்ளிக் கொடுத்தால் போதும் என்கிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காதபட்சத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள், பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி பால் உற்பத்தியாளர்களின் பலத்தைப் புரிய வைப்போம். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எல்லாக் கட்சிகளும் எங்களிடம் வருவார்கள். “பால் உற்பத்தியாளர்களுக்கு உதவிகளையும் நலத்திட்டங்களையும் அளிப்பதை ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும்” என்பதுதான் அவர்கள் முன் நாங்கள் வைக்கும் கோரிக்கை.

சந்திப்பும் புகைப்படமும் : வி. சீனிவாசன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE