வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயண முக்கியத்துவம் குறித்து, டெல்லியில் வங்கதேச ஹை-கமிஷனராக முன்னர் பணியாற்றிய தாரிக் கரீம் ‘தி இந்து’ ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி:
2010-ல் ஹசீனா டெல்லி வந்தபோது, ஹை-கமிஷனராகப் பணியாற்றினீர்கள். 7 ஆண்டுகளுக்குப் பிந்தைய இந்தப் பயணத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?
கடந்த முறைகூட வங்கதேசப் பிரதமராகப் பதவியேற்று, ஓராண்டு முடிவில்தான் ஹசீனா டெல்லி வந்தார். டெல்லி பயணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியபோது, இருதரப்பும் ஆக்கபூர்வமாக உடன்படக்கூடிய விஷயங்களை முதலில் முடிவுசெய்துகொள்வோம் என்று கூறினேன். அந்தப் பயணம் இரு நாடுகளிடையே உறவை வலுப்படுத்தியதுடன், புதிய பாதையில் பயணிக்கவும் உதவியது. இரு பிரதமர்களும் எதிர்காலத் திட்டங்களை முன்வைத்தனர். அப்போதிருந்த பிரதமர் மன்மோகன் சிங், பிறகு வங்கதேசத்துக்கும் வந்தார். அறிவிக்கப்பட்ட பல முடிவுகள் அமல்படுத்தப்பட்டன. காங்கிரஸ் அரசு கையெழுத்திட்ட சில ஒப்பந்தங்களை, பாஜக அரசு ஆட்சிக்கு வரும்வரை செயல்படுத்த முடியவில்லை என்பது தனி விஷயம். இரு நாடுகளுக்கும் இடையில் நிலத்திட்டுகளைப் பரிமாறிக்கொள்வதில் சுமுகமான உடன்பாடு, ரயில் பேருந்து போக்குவரத்து வழித்தட உடன்பாடு ஆகியவற்றுக்குப் பிறகு, 2015-ல் மோடியின் வருகை இயல்பாக அமைந்தது. தீஸ்தா நதிநீர்ப் பகிர்வு தவிர, இதர உடன்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்படுகின்றன.
தீஸ்தா ஏன் தீர்வு காணப்படாமலேயே இருக்கிறது?
கடந்த காலங்களில் தீஸ்தா நதிநீர்ப் பகிர்வு தொடர்பான பூர்வாங்க நடைமுறைகள் நிர்வாகக் கட்டமைப்பின்படி பின்பற்றப்பட்டன. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை, பிரதமர் ஹசீனாவின் ஆலோசகர் கோவர் ரிஸ்வி மாதந்தோறும் ஒரு நாள் சந்தித்துப் பேசுவார். இதுவரை என்ன நடந்திருக்கிறது, இனி என்ன நடக்க வேண்டும் என்று இருவரும் ஆய்வுசெய்வர். இந்த ஏற்பாடு தொடரப்பட வேண்டும். அதிகாரிகள் நிலையில் சந்தித்துக்கொள்ளட்டும் என்று விட்டால், ஆரம்பத்தில் வேகமாக நடக்கும், போகப்போக சுரத்தின்றித் தொய்வுகள் ஏற்பட்டுவிடும். பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பதவிக் காலத்தின் இரண்டாவது பாதியில் இருக்கிறார். உலகின் எந்த நாட்டிலும் ஆட்சியாளர்களுக்குச் சோதனையாக இருப்பது ஆட்சிக் காலத்தின் பின்பகுதிதான். இந்தியாவுடன் வங்கதேசம் 100 உடன்பாடுகள் செய்துகொண்டு அதில் 90 உடன்பாடுகள் அமலாகியிருந்தாலும் - எஞ்சியவை அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் - எதிர்க்கட்சிகள் என்னவோ, ஏன் இன்னும் தீஸ்தாவில் உடன்பாடு ஏற்படவில்லை என்றுதான் கேட்கும்.
2014-ல் அளித்த பேட்டியில், தீஸ்தா நதிநீர்ப் பகிர்வுதான் இரு நாடுகளுக்கும் இடையில் அக்கினிப் பரீட்சையாக இருக்கும் என்று கூறியிருந்தீர்கள், ஏன் அப்படி?
இது இரு நாடுகளின் வரலாறு நமக்கு விட்டுவைத்திருக்கும் சீதனம். தீஸ்தாவில் உடன்பாடு கண்டுவிட்டால், நாம் பகிர்ந்து கொள்ளும் 54 நதிகளுக்குமான ‘வடிநில மேலாண்மை’ சாத்தியமாகிவிடும். தீஸ்தாவைப் பிரித்துக் கொடுக்குமாறோ, பகிர்ந்துகொள்ளலாம் என்றோ ஹசீனா கேட்கப்போவதில்லை. இரு நாடுகளும் சேர்ந்து தீஸ்தாவை எப்படி நீர்மேலாண்மை செய்யலாம் என்றுதான் பேசவிருக்கிறது. நிலத்தைப் பிரிக் கலாம். நீரையோ, சுற்றுச்சூழலையோ அப்படிப் பிரிக்க முடியாது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உலக உடன்பாட்டு முறைமைக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டோம். நம்முடைய தேசியத் தன்மையைக் காப்பதில் அளவுக் கதிகமாகக் கவலைப்படுகிறோம். அதனால், தேசிய எல்லைகளைக் கடந்தவை தொடர்பாக, நியாயமான வற்றைக்கூட செய்யத் தவறுகிறோம். தீஸ்தா அதைப் போன்ற உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது.
நிலைமை இப்படியிருக்க, தீஸ்தாவில் சுமுக உடன்பாடு காணாமல் அவரால் எப்படித் திரும்பிச் செல்ல முடியும்?
அரசியல்ரீதியாக அது மிகவும் கடினம். அவரை வீழ்த்த தீஸ்தா பிரச்சினையைத் தான் எதிர்க்கட்சிகள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. ‘ஹசீனா இந்தியாவின் நல்ல நண்பர் என்றால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுடன் நல்ல நட்புறவை அவர் பராமரிக்கிறார் என்றால், தீஸ்தா ஒப்பந்தத்தை ஏன் அவரால் இறுதிசெய்ய முடியவில்லை’ என்றே எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருகிறார் என்றால், நல்ல பரிசாக அவர் எதையாவது கையில் எடுத்துச் செல்ல வேண்டும். தீஸ்தாவை நீக்கிவிட்டுப் பார்த்தால், இரு நாடுகளுக்கும் இடையில் சச்சரவு ஏற்படக்கூடிய அம்சங்கள் ஏதும் இல்லை. தீஸ்தா நதி ஓட வேண்டும், இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளக்கூடிய குறைந்தபட்சத் தண்ணீர் அளவைப் பராமரிக்க வேண்டும், அதற்கும் மேல் கிடைப்பதைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதற்கான ஒப்பந்தம் பேசி இறுதி செய்யப்பட்டுவிட்டது, கையெழுத்துப் போடுவதுதான் எஞ்சியிருந்தது.
புதுடெல்லி, டாக்கா இடையில் அப்போது கையெழுத்திடப்பட முடியாமல் போனது ஏன்?
இங்குதான் இந்தியா கடைப்பிடிக்கும் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ தத்துவம் குறுக்கே வருகிறது. மேற்கு வங்க அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவால் இதில் கையெழுத்திட முடியவில்லை. கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவம் காரணமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைக் கைவிட முடியும் என்றால், ‘தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு’ என்ற கொள்கைக்காகக் கூட்டுறவுக் கூட்டாட்சி, தத்துவத்தைக் கைவிட்டால் என்ன? இதனால், இரு நாடுகளிடையேயான நட்பு, எல்லை கடந்து விரியும், அதனால் உங்களுக்கு ஏற்படப்போகும் பலன்களும் மிகப் பெரியதாக இருக்கும்.
மேற்கு வங்க முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் இடையே சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், இதில் முன்னேற்றம் காண வேறு வழிகள் என்ன?
தீஸ்தா இல்லாவிட்டால் வேறு எதை ஹசீனாவால் திரும்ப எடுத்துச் செல்ல முடியும் என்று பார்க்க வேண்டும். வங்கதேசத்துக்கு இரண்டு வகைகளில் பாதுகாப்பு தேவை. ஒன்று, நீர் தொடர்பானது. மற்றொன்று, எரிசக்தி தொடர்பானது. கங்கை மீதான தடுப்பணை தொடர்பாக உதவுவோம் என்று இந்தியா கூறினால் நல்லது. கங்கை மீது தடுப்பணை கட்ட எங்களிடம் பணம் இல்லை. எங்களுக்கு நிதி தரத் தயாராக இருப்பவர்களோ இரு நாடுகளும் குறைந்தபட்சத் தண்ணீர்ப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு செய்துகொண்டால்தான் பணம் தருவோம் என்கின்றனர். அப்போதிருந்த அரசியல் கூட்டணியால் உடன்பாடு சாத்தியப்படவில்லை. இப்போது கங்கை அணை தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டால், ஹசீனா டாக்கா திரும்பி, ‘என்னுடைய தகப்பனாரின் கனவை நிறைவேற்றிவிட்டேன்’ என்று பெருமையாகக் கூறிக்கொள்ள முடியும். பிறகு, கங்கை வடிநில மேலாண்மை தொடர்பாக நம்முடைய கவனம் திரும்பும். இன்னும் ஆக்கபூர்வமான பேச்சுகளுக்கு அது வழிவகுக்கும்.
நீங்கள் சில மாற்று யோசனைகளைத் தெரிவித்தீர்கள். ஹசீனாவின் ஆலோசகரோ ஆற்றின் மேல்பகுதி ஆயக்கட்டுதாரரான சீனாவைப் பேச்சுக்கு அழைக்கலாம் என்று கூறியிருந்தார். இது எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டிய விஷயம் இல்லையா?
இந்தியா இதை ஏற்றுக்கொள்ளாதுதான். வெளிப்படையாகச் சொல்வதானால், எங்களுடைய பேச்சை சீனாவும்கூடக் கேட்காது. நதியின் 70% நீர் இன்னமும் இந்தியாவிலும் வங்கதேசத்திலும்தான் பாய்கின்றன. இதன் நீரை அதிகபட்சம் நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றுதான் பார்க்க வேண்டும். இப்போது நதிநீரில் 60% நேராகக் கடலுக்குத்தான் போகிறது. நம்மால் என்ன முடியும் என்று பார்த்துச் செயல்பட வேண்டும், தடைகளைத் தாண்டி வர வேண்டும். சார்க் அமைப்பில் இதைத்தான் செய்தோம். வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம் ஆகியவை கூட்டாகச் செயல்பட்டன.
போக்குவரத்துத் தொடர்புக்காகப் பெருந்தொகையை இந்தியா கடனாக அறிவிக்கவுள்ளது. ரயில் - சாலை மார்க்கமாக மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. ஆயினும், வங்கதேசத்தில் சீனம் வாக்குறுதி அளித்த உதவிகள் பற்றித்தான் அதிக முக்கியத்துவம் தந்து பேசப்படுகிறது. சீனத்தின் ‘ஒரே பிரதேசம் - ஒரே பாதை’ என்ற திட்டத்தில் வங்கதேசம் சேர்ந்துள்ளது. வங்கதேசத்தில் சீன செல்வாக்கு அதிகரிப்பது குறித்து இந்தியா கவலைப்பட வேண்டுமா?
இந்தியா ஏன் ரயில் - சாலை மார்க்கத் திட்டங்களுக்கு உதவுகிறது, வங்கதேசம் முழுக்க எளிதாகச் சென்று வருவதற்குத்தானே? வங்கதேசத்தின் சாலைகள் சர்வ தேசத் தரத்துக்கு ஈடானவை அல்ல. பிரிட்டிஷ்காரர்கள் நதிகளை இணைக்கும் வாய்க்கால்களை நிறைய உருவாக்கி னார்கள், அவை மறைந்துவிட்டன. ரயில் பாதைகளை உருவாக் கினார்கள், ஆனால் அவை நதிகளைக் கடக்கவில்லை. ஜப்பானிய நிதியுதவியுடன் கொரிய நிறுவனத்தின் மூலம் 1998-ல் ஜமுனா பாலத்தைக் கட்டியிருக்கிறோம், சீன உதவியுடன் பத்மா நதி மீது பாலம் கட்டவிருக்கிறோம். இவற்றைக் கட்டுவதற்கு முதலீடு தேவை. இந்தியாவுக்கு நட்புறவு தொடர்பாகப் பெரிய லட்சியங்கள், திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பணம்தான் இல்லை. வங்கதேசம் தன்னுடைய ஜிடிபியை உயர்த்த விரும்புகிறது. ஏழு சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்களை உருவாக்க ஹசீனா விரும்புகிறார். சாலை வசதியும் மின்சாரமும் இல்லாமல் இவற்றை ஏற்படுத்த முடியாது. பூடானும் இந்தியாவும் சேர்ந்து வங்கதேசத்துக்கு மின்சாரம் அளிக்க முன்வருவதை இந்தப் பயணத்தின்போது பார்க்கலாம். எங்களுடைய அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்ய சீனம் முன்வருகிறது. சீனா கட்டும் அந்த சாலையைப் பயன்படுத்தி இந்தியர்கள்கூட வங்கதேசத்தின் கிழக்குப் பகுதிக்குப் பயணிக் கலாம். சீனாவுக்கும் இந்தியா வடகிழக்கில் கட்டப்போகும் சாலைகள் அவசியம், அவற்றின் மூலம் அது வங்கதேசத் துக்குள் வரும். எனவே, இந்தியாவின் அச்சத்தில் நியாயம் இல்லை.
சீனா பற்றிய இந்திய அச்சம் மிகைப்படுத்தல் என்கிறீர்கள், அதைப் போல இந்தியா குறித்து வங்கதேசிகளுக்கு இருப்பதாகக் கூறப்படும் அச்சமும் மிகைப்படுத்தப்பட்டது அல்லவா? பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. வங்கதேச எதிர்க்கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமே போதும் என்கின்றன.. ஏன் தயக்கம்?
மக்களுடைய சிந்தனைகளை எளிதில் மாற்றிவிட முடியாது. பாஸ்டில் சிறைச் சுவர்களை எளிதில் தகர்த்துவிட முடியும், நம் சிந்தனைகளில் உள்ள சிறைகளை உடைப்பது கடினம். 1978-ல் சீனத்துடன் வங்கதேச அதிபர் ஜெனரல் ஜியா உர் ரஹ்மான் ராணுவ உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அதிலிருந்து ராணுவம் எங்களுடைய பெரிய கூட்டாளியாக இருக்கிறது. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஹசீனாவும் கருதுகிறார். இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளவில்லையே தவிர, ஒத்துழைத்து வருகிறோம். உள்துறை அமைச்சர்கள் பேசிக்கொள்கிறார்கள். ராணுவத் துறையிலும் நம்மால் ஒத்துழைக்க முடியும். புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்படியாக இருக்க முடியும். நீங்கள் அவசரப்பட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும். முதலில் அரசியல்ரீதியாகக் கருத்துகள் உருவாக்கப்பட வேண்டும். சீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். ஆனால், இந்தப் பயணத்தில் ராணுவ ஒத்துழைப்பு மீது நாம் கவனம் செலுத்தக் கூடாது.
2001 பொதுத் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததற்குக் காரணம், இந்திய உளவுப் படையினர்தான் என்று மார்ச் மாதத்தில் வானொலியில் பேசினார் ஹசீனா.. இந்த எண்ணம் ஏன் தொடர்கிறது?
இது வெறும் அரசியல்.. அரசியல்ரீதியாகத் தன்னைக் காத்துக்கொள்வதற்காகப் பேசியிருக்கிறார். நான் இந்தியா வின் கைப்பாவை அல்ல, இந்தியாவின் தவறைச் சுட்டிக் காட்ட என்னால் முடியும் என்று காட்டுவதற்காகப் பேசியிருக்கிறார்.
2014 பொதுத் தேர்தலாகட்டும், போர்க்குற்ற நடுவர் மன்றமாகட்டும் ஹசீனா அரசை இந்தியா 100% ஆதரித்தது. மார்ச் 25-ஐ ‘உலகப் படுகொலை நினைவு தின’மாகக் கொண்டாட வேண்டும் என்ற வங்கதேசத்தின் வேண்டுகோளையும் இந்தியா ஆதரித்துள்ளது. அப்படியிருந்தும், இந்திய எதிர்ப்புணர்வு ஏன் நிலவுகிறது?
வங்கதேசத்தில் நடந்த 2001 பொதுத் தேர்தல் தொடர் பாகப் பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்கின்றன. அதை நாங்கள் எதிர்கொண்டாக வேண்டும். அவாமி லீக் கட்சிக்கும் பி.என்.பி. கட்சிக்கும் இடையே அரசியல் போட்டி எப்போதும் இருக்கிறது. அதுதான் இந்தியாவைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டங்களுக்குக் காரணமாக அமை கிறது. சமீபத்திய ஆண்டுகளில் பி.என்.பி. கட்சித் தலைவர் கள்கூட இந்தியத் தலைவர்களைச் சந்திக்க டெல்லிக்கு வருகின்றனர். இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமும் மாறிக் கொண்டிருக்கிறது. வங்கதேசத்திலும் எல்லா கட்சிகளும் சேர்ந்து கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகளை எடுக் கின்றன. எனவே, எதிர்காலத்தில் இவையெல்லாமே மாறும்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி ‘தி இந்து’ ஆங்கிலம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
25 days ago
கருத்துப் பேழை
25 days ago