வேலைவாய்ப்பை அதிகரியுங்கள்

By பால் க்ரூக்மேன்

10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற அமெரிக்கர்களுக்கு இரக்கமற்றவர்களின் சார்பில் கொடூரமான புத்தாண்டுப் பரிசு காத்திருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைச் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன. “மாதக் கணக்காக முயன்றும் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மும்முரமாக வேலையைத் தேடவில்லை என்றுதான் அர்த்தம்” என்கிறார்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் வேலைக்குப் போகிற அனைவரும், வேலை இல்லாதவர்களைவிட நன் றாகவே இருப்பதாகத் தோன்றும். இப்போதுள்ள சந்தை நிலவரத்தில், அதிக நேரத்துக்கு வேலைசெய்யும்படி அவர்களும் கசக்கிப்பிழியப்படுகிறார்கள் என்பதே உண்மை. இப்படி, ‘வெளியில் சொல்லவும் மொழியின்றி, வேதனை தீரவும் வழியின்றி’அவதிப்படும் அவர் களைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

கேட்டால்தான் தெரியும்

சந்தையில் ஒரு பொருளை விற்பதைப் போலத்தான் ஒருவர் வேலைக்குப் போவதும் என்று உங்களுக்கு யாராவது சொல்லியிருப்பார்கள். அதாவது, தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பை - வேலைத் திறமையை விற்கத் தயாராக இருக்கிறார்கள், முதலாளிகள் அதை விலைக்கு வாங்கத் தயாராக இருக்கிறார்கள், இருவரும் வேலை என்ன, கூலி என்ன என்று பேசி உடன்பாட்டுக்கு வருகிறார்கள் - அதுதான் வேலைவாய்ப்பு என்று கூறியிருப்பார்கள். உண்மையிலேயே வேலைக்குப் போய்க் கொண்டிருப்பவர்களிடம் கேட்டால்தான் நிலைமை என்னவென்று தெரியும்.

வேலையை விடுவோர் எண்ணிக்கை

வேலை என்பது அதிகார அடிப்படையிலான உறவுதான். உங்களுக்கென்று ஒரு மேலதிகாரி இருப்பார். நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் கூறுவார். அவர் சொல்கிறபடி செய்யாவிட்டால் உங்களை வேலையைவிட்டு நீக்கிவிடுவார். அப்படியானால் இது மோசமான ஏற்பாடாயிற்றே என்று நினைக்க வேண்டாம். தங்களுடைய தொழிலாளர்களை மதிக்கும் எவரும் நியாயமில்லாமல் நடந்துகொள்ள மாட்டார்கள், சுமக்க முடியாத அளவுக்கு பாரத்தைச் சுமத்த மாட்டார்கள். இருந்தாலும், இது தொழிலாளர்களுக்குச் சாதகமாகவும் இருந்துவிடாது. “இந்த வேலையை எடுத்துக்கொள், அப்படியே தள்ளிவிடு” என்று நாட்டுப்புறத்தில் ஒரு பாட்டு உண்டு. “இந்த டி.வி-யை எடுத்துக்கொள் அதை அப்படியே தள்ளிவிடு” என்று பாட்டு கிடையாது. (அதாவது வேலையை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம், விலைமதிக்க முடியாத நுகர்வோர் பண்டங்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.)

வேலை என்பது அதிகார அடிப்படையிலான உறவு என்று பார்த்தோம். வேலையில்லாத் திண்டாட்டம் உச்ச நிலையில் இருக்கும்போது ஏற்கெனவே வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்குத்தான் அது நெருக்கடியைத் தரும். வேலை கடினமாக இருந்தாலோ, உடனே கவனிக்கப்பட வேண்டிய சொந்த வேலைகள் இருந்தாலோ, ஊதியம் குறைவாக இருந்தாலோ, வேலை செய்யும் இடத்தில் சூழல் சரியாக இல்லாவிட்டாலோ தொழிலாளர்கள் அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டு வேறு வேலை தேடுவது வழக்கம். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கும்போது எத்தனை துயரங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

வேலை நேரத்தை அதிகரித்தாலும் வேலையைக் கடுமையானதாக மாற்றினாலும் வேலையிடத்தில் சலுகைகளைக் குறைத்தாலும் ஊதிய உயர்வு தர முடியாது என்று மறுத்தாலும் அதே வேலையில் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

தொழில்துறையில் மீட்சி ஏற்பட்டு எல்லா நிறுவனங்களிலும் வேலை கிடைக்கிறது, வேலைக்கு ஆள்கள் தேவைப்படுகிறார்கள் என்றால் வேலையை விட்டுத் தொழிலாளர்கள் போவதும் அதிகமாக இருக்கிறது. 2007 – 09 காலத்தில் தொழிலாளர்கள் தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுப் போவது மிகமிகக் குறைவாக இருந்தது. அதற்குப் பிறகு மீட்சி ஏற்பட்டாலும்கூட இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை.

பெருநிறுவனங்கள் பாடு ஜோர்

பொருளாதாரம் நன்றாக இருந்தால் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் தரப்படும், விரும்பினால் வேறு இடங்களிலோ வேறு தொழிற்சாலைகளிலோ கூட வேலைக்குப் போக முடியும் என்று பார்த்தோம். வேலை அதிகமானாலும் கூலி குறைந்தாலும் வேலையை விட்டுவிட முடியும் என்றும் அறிந்தோம். இப்போது அப்படிப்பட்ட நிலைமையா இருக்கிறது? இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி வலுவற்றதாகவும் போதுமானதாக இல்லாமலும் இருக்கிறது. பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்டுள்ள எல்லா சுமைகளும் தொழிலாளர்களின் தோள்களில்தான் ஏற்றப்படுகின்றன. இத்தனை நெருக்கடிகளுக்கும் இடையில் தொழில்நிறுவனங்களின் லாபம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கம்பெனி வரிகளுக்குப் பிந்தைய வருவாயைப் பார்த்தால் 2007-ல் இருந்ததைவிட இப்போது 60% அதிகமாக இருக்கிறது தொழில்நிறுவனங்களுக்கு. 2007-ல்தான் தொழில்துறையில் சரிவு ஏற்படத் தொடங்கியது.

தொழில்நிறுவனங்கள் அடைந்த லாபம்

வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு இல்லாமல், அதிக நேரம் வேலை செய்வதால் தொழில்நிறுவனங்கள் அடைந்திருக்கும் லாபம் எவ்வளவு என்ற கணக்குத் தெரியாவிட்டாலும் நிச்சயம் அந்த லாபத்தில் இது கணிசமாக இருக்கும் என்று ஊகிக்க இடமிருக்கிறது.

தொழில்துறையில் முழு அளவு மீட்சி ஏற்படாவிட்டாலும் பெரு நிறுவனங்களின் லாபம் உச்சபட்சமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஒருவேளை வேலைவாய்ப்பு 100% ஆக இருந்தால்கூட இந்த நிறுவனங்களின் லாபம் இந்த அளவை எட்டியிருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

பொருளாதாரத்தை இப்படியே பலவீனமாக வைத்திருக்க, தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கூட்டாகச் சதி செய்கிறார்கள் என்று கூற மாட்டேன். அதே சமயம் தொழில்நிறுவனங்களுக்கு லாபம் அதிகமாக இருப்பதால், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற அவசரமோ அவசியமோ அரசியல் தலைவர்களுக்கு ஏற்படவில்லை. எனவே, அவர்கள் தொழிலாளர்களின் வேலை நிலவரம் குறித்துக் கவலைப்படவேயில்லை. இதை நீங்கள் புரிந்துகொண்டால், இந்த நிலைமை ஏன் மாற வேண்டும், வேலைவாய்ப்பு பெருக ஏன் முன்னுரிமை தர வேண்டும் என்பதும் உங்களுக்குப் புரியும்.

தொழிலாளர்களுடைய சந்தையானது பலமில்லாமல் இருக்கிறது. தங்க ளுடைய ஊதிய உயர்வுக்காக, பிற உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க முடியாமல் அடங்கிக் கிடக்கிறது. எனவே தான், பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்காலம் எப்படியாகுமோ என்ற பொருளாதார அச்சத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த அச்சத்தைப் போக்க நாம் பல நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அதில் முதலிடம் பிடிப்பது, வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவது.

- பிசினஸ் லைன்,தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்