1991முதல் பொருளாதாரச் சீர்திருத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, அரசின் வரி வருவாய் உயரத் தொடங்கியது. அதே நேரத்தில், மாநில அரசுகளின் செலவுகளும் உயரத் தொடங்கின. மாநிலங்கள் முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதில் குறிப்பாக கல்வி, சுகாதாரம், சாலை அமைத்தல், மின்சாரம், குடிநீர் வழங்குதல் எனப் பல செலவுகள் உயர்ந்தன. எனவே, மத்திய அரசு அதிக வரி வருவாயை மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மத்திய-மாநில வரிவருவாய்ப் பங்கீடு
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எல்லா மாநில அரசுகளும் ஒன்றாகச் சேர்ந்து 13-வது நிதிக் குழு முன் வைத்தன. ஆனால், மொத்த நிதி அளிப்பு மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 39.5%-ஐத் தாண்டக் கூடாது என்று 13-வது நிதிக் குழு பரிந்துரைத்தது. இதுவரை 14-வது நிதிக் குழு மாநிலங்களோடு நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் மத்திய அரசு வரி வருவாயில் 40% முதல் 50% வரை மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் வைத்துள்ளன. மத்திய அரசோ, தனது செலவுகள் அதிகமாகிவருவதைச் சுட்டிக்காட்டுகிறது. கிராம வேலை உறுதித் திட்டம், பள்ளிக் கல்வித் திட்டம், சுகாதாரத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கும், பெட்ரோல், உரம், உணவு மானியங்களுக்கான செலவுகளும் அதிகமாகின்றன. எனவே, வரி வருவாயில் எவ்வளவு மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது 14-வது நிதிக் குழு முன் உள்ள முதல் சவால்.
மாநிலங்களுக்கிடையே பங்கீடு செய்தல்
மாநிலங்களுக்கான நிதியை 28 மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் சூத்திரத்தைப் பரிந்துரைப்பது அடுத்த சவால். ஒவ்வொரு மாநிலத்துக்கும் கொடுக்க வேண்டிய பங்கினை நிர்ணயிப்பதில் இரண்டு நோக்கங்கள் உண்டு.
ஒன்று, மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காகப் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி கொடுப்பது சமத்துவ நோக்கம். இரண்டு, பொருளாதாரரீதியில் திறமையாகச் செயல்படும் மாநிலங்களை ஊக்குவிக்க அவர்களுக்கு அதிக நிதி கொடுப்பது திறன் நோக்கம்.
மாநிலங்களுக்கிடையே நிதியைப் பகிர்ந்துகொடுப்பதற்காக ஏற்படுத்தப்படும் சூத்திரத்தில் எந்த நோக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது அவ்வப்போது நிலவும் நிலைமைக்கேற்ப முடிவு செய்ய வேண்டியது.
14-வது நிதிக் குழுவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டங்களில், வளர்ந்த மாநிலங்கள் (தமிழகம் உட்பட) திறனை மையப்படுத்தியும், வளரும் மாநிலங்கள் சமத்துவத்தை மையப்படுத்தியும் பங்கீட்டுச் சூத்திரத்தை வரைய வேண்டும் என வாதித்துள்ளன. ஆனால், கூட்டாட்சி நாட்டில், எல்லா மாநிலங்களும் வளர்ந்தால்தான், தனி ஒரு மாநிலத்தின் தொடர் வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும் என்று கூட்டாட்சிக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. சமூக நீதியுடன், கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு முறைகளை முன்னெடுத்துச் செல்லத் துடிக்கும் மாநிலங்கள், சமத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிதிப் பங்கீட்டு முறைக்கு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
நிதிப்பொறுப்புச் சட்டம்
நிதிப்பொறுப்புச் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி, அதன்படி பற்றாக்குறைகளைக் குறைத்து, மாநிலத்தின் கடன் அளவையும் குறைக்க வேண்டும் என்று 12-வது நிதிக் குழு ஒரு நிபந்தனையை விதித்தது. அதன்படி செய்தால், மாநிலங்களுக்கான கடன், வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியும் என்று தெரிவித்தது. மேற்கு வங்காளம், சிக்கிம் தவிர மற்ற எல்லா மாநிலங்களும் இதை ஏற்றுச் செயல்படுத்தியதால் 2005-10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.18,690 கோடி வட்டியும் ரூ.19,730 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தக் கடன் ஒருங்கிணைப்பு, கடன் மற்றும் வட்டி தள்ளுபடி 13-வது நிதிக் குழுவினாலும் திருத்தியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 14-வது நிதிக் குழுவுக்கு மத்திய அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறியில், தற்போது உள்ள நிதிப்பொறுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி, அதனைப் பின்பற்றும் மாநிலங்களுக்கு ஊக்கமளிப்பதும், அதனை மீறுபவர்களை ஒழுங்குபடுத்தச் செய்ய வேண்டிய செய்முறைகளைப் பரிந்துரை செய்யச்சொல்கிறது. இங்கு மத்திய அரசே தன்னுடைய நிதிப் பொறுப்புச் சட்டத்தை அவ்வப்போது மீறும்போது, மாநிலங்கள் மேல் அதனைத் திணிப்பது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழுகிறது.
சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி.)
ஜி.எஸ்.டி. என்ற மத்திய, மாநில அரசுகளின் பொருட்கள் மீதான வரிகளை (கலால் வரி, விற்பனை வரி, நுழைவு வரி என்ற பல வரிகளை) எப்படி ஒன்றிணைப்பது, அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யும்படியும் நிதிக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று ஏற்கெனவே இதனை விவாதித்துக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், பல வல்லுநர் குழுக்கள் இது தொடர்பான பரிந்துரைகளை ஏற்கெனவே வழங்கியுள்ளன.
மேலும், வரி அமைப்பை மாற்றுவது என்பது அரசியல் சார்ந்த அம்சம். இதற்கு அரசியல் சட்டத்திலும் ஒவ்வொரு மாநிலச் சட்டத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு அரசியல் மன்றத்தில் விவாதித்தால் மட்டுமே தீர்வு காண முடியும். எனவே, ஜி.எஸ்.டி. தொடர்பான விவாதத்தில் நிதிக் குழு தலையிடாமல் இருப்பது நல்லது.
பொதுச் சேவைக் கட்டணச் சட்டம்
மாநில அரசு வழங்கும் பொதுப் பயன்பாட்டுச் சேவைகளான குடிநீர், பாசனம், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்கச் சட்டம் ஒன்றை ஏற்படுத்த பரிந்துரைக்க நிதிக் குழு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறான சட்டம், அரசு சேவைகளின் கட்டணங்கள் உயர அடித்தளம் அமைக்கும். அதனால், சேவைகளின் தரம் உயர்த்தப் போதிய நிதி அரசுக்குக் கிடைக்கும். கட்டணம் உயர பொதுச் சேவைகளின் தரம் உயர்ந்தால் மக்கள் எதிர்ப்பு இருக்காது என்றாலும், இந்தச் சட்டம் இயற்றினால் மட்டுமே மத்திய அரசின் கொடையைப் பெற முடியும் என்று கட்டாயப்படுத்துவது மத்திய-மாநில நிதி உறவில் புதிய சிக்கலை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மாநிலமும் பல திட்டங்களுக்கு நிதி கேட்டு அறிக்கைகளை நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்கின்றன. மேற்கு வங்கத்துடன் நடந்த நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அந்த மாநிலம் ரூ2.5 லட்சம் கோடி நிதி கேட்டுள்ளது. இதில் பெரும் பகுதி முன்பு இருந்த இடதுசாரி அரசு வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தொடர்பானது. பஞ்சாப் அரசும் ரூ 25,000 கோடி கடன் தள்ளுபடி கேட்டுள்ளது. குஜராத், கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் நகரங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நிதி கேட்கின்றன. அதே நேரத்தில், விவசாயத்துக்குப் பாசன அமைப்பை ஏற்படுத்தவும் நிதி கோரப்பட்டுள்ளது. டிசம்பர் 16, 2013 அன்று 14-வது நிதிக் குழுவுடன் நடந்த கூட்டத்தில் தமிழகமும் பல்வேறு திட்டங்களுக்கு ரூ 41,000 கோடிக்கு மேல் கொடை கேட்டுள்ளது.
இதுவரை வந்துள்ள பதின்மூன்று நிதிக் குழுக்களின் பரிந்துரைகளைப் பார்க்கும்போது, திறனைவிட, சமத்து வத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, வரி வருவாய் பகிர்வு செய்யப்பட்டுள்ளது. கொடைகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நிதிக் குழுவும் புதிய புதிய கட்டுப்பாடுகளைப் பரிந்துரைத்து வந்துள்ளது. இவை எல்லாமே மாநிலங்களின் நிதி மேலாண்மையை மேம்படுத்தச் செய்யப்பட்டன என்று கூறினாலும், இவை மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைக் குறைத்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
- இராம.சீனுவாசன், பேராசிரியர் தொடர்புக்கு: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago