உலகிலேயே உலகமயமாதல் பற்றி முதலில் சொன்னவன் தமிழன். புதுமைப்பித்தன் இன்று உயிரோடு இருந்திருந்தால் இப்படிச் சொல்வதற்காக என்னை நெல்லை பாஷையில் திட்டியிருப்பார். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதை உலகமயமாதல் என்றே நான் புரிந்துகொள்கிறேன். மனிதர்கள் தொடர்ந்து மொழி, மத, இன அடையாளங்களைத் தாண்டி, ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்துகொண்டுதான் வாழ்ந்துவருகின்றனர். கிழக்காசிய நாடுகள் முழுவதிலுமே தமிழ்க் கலாச்சார அடையாளங்களை நாம் பார்க்க முடியும். பாங்காக் நகரின் மத்தியில் ஒரு பிரம்மாண்டமான விநாயகர் சிலை இருக்கிறது. தாய்லாந்து மக்கள் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்களுக்கு கணேஷா ஒரு பௌத்த குரு.
இந்தப் பின்னணியில், கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் இதுவரையிலான மனித குல வரலாற்றிலேயே நடந்திருக்காது எனத் தோன்றுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை இன்றைய மனித வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. 15,000 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒருவரோடு இன்று முகம் பார்த்துப் பேச முடிகிறது. இது பற்றி யோசிக்கும்போது, உலகமயமாக்கலுக்கு முந்தைய 25 ஆண்டுகளை நோக்கி என் நினைவு தாவுகிறது. இன்றைய சென்னை வாழ்க்கைக்கு முந்தைய என்னுடைய டெல்லி வாழ்க்கையையும் அதற்கு முந்தைய நாகூர் வாழ்க்கையையும். அந்த நாட்களில் டெல்லியில் பாலும் உருளைக்கிழங்குமே பிரதான உணவு. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பசு மாடுகளைக் கொண்டுவந்து நிறுத்தி, பால் கறந்து கொடுப்பார்கள். அந்தப் பாலில் தயிர் தோய்த்து உண்டால் கையைக் கழுவ ஒரு முழு சவுக்காரம் தேவைப்படும். ஆனால், மின்சாரம் இருக்காது. ஒரு நாளில் நான்கைந்து மணி நேரம் இருந்தால் பெரிது. ஐந்து டிகிரி குளிரில் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் கொடுமையை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. நூதன் ஸ்டவ்வில் வெந்நீர் வைக்கலாம் என்றால், மண்ணெண்ணெய் கிடைக்காது. அந்த வகையில் அது ஒரு காட்டுமிராண்டி வாழ்க்கை.
உலகமே நம் உள்ளங்கையில்
அப்போது ஓஒய்டி (OYT) என்று ஒரு திட்டம் இருந்தது. ‘ஓன் யுவர் டெலிபோன்’ என்பது அதன் பெயர். நீங்கள் ஒரு பிரமுகராக இருந்தால், தொலைபேசி இணைப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போது என்ன நிலை என்று நமக்குத் தெரியும்.
புத்தகங்கள் வாங்க வேண்டுமானால் கனாட் பிளேஸில் இருந்த ‘பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்’ என்ற புத்தக விற்பனை நிலையம்தான் புத்திஜீவிகளின் அடைக்கலம். தேவையான நூல்களுக்காகப் பல மாதங்கள் காத்திருந்திருக்கிறேன். விமானத்தில் வரவழைத்தால் விலை அதிகம் என்பதால் கப்பலில் வரும். குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும்.
இப்போது, எவ்வளவு அரிதான புத்தகம் என்றாலும் இரண்டு மூன்று தினங்களில் வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள். வெறும் கைபேசியிலேயே உலகின் எல்லா முக்கியமான புத்தகங்களையும் படித்துவிட முடிகிறது. உலகின் முக்கியமான நூலகங்களில் உள்ள நூல்களையும் மென்பிரதியாகவே வாசிக்க முடிகிறது. பி.டி.எஃப். அல்லது கிண்டில் மூலம் காகித நூல்களும் வீட்டு நூலகங்களும் தேவையில்லாத வாசிப்பு நிலைக்கு நாம் வளர்ந்துவிட்டோம். சுருக்கமாகச் சொன்னால், உலகமே நம் உள்ளங்கையில் இருக்கிறது.
கனவுகூடக் காண முடியாதவை
பதிப்புத் துறையை எடுத்துக்கொண்டால், 1990-க்கு முன்பு என் புத்தகங்களைப் பதிப்பிக்க எழுத்தாளர்கள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சி.சு. செல்லப்பா ‘எழுத்து’ பத்திரிகையையும் பதிப்பகத்தையும் நடத்த மேற்கொண்ட சிரமங்கள் மகாபாரதத்தில் ஹரிச்சந்திரன் கதையைப் போல் கண்ணீர் வரவழைக்கக் கூடியது. ஆனால், இன்று புத்தகத்தை எழுதி முடித்த சில மணி நேரங்களில் மென்பிரதியாகவே வெளியிட்டு விடலாம். ஓரிரு தினங்களில் அச்சுப் புத்தகங்களைக் கொண்டுவந்து விட முடிகிறது. அதிலும் 50 பிரதிகளே தேவையெனில் 50 பிரதிகளை மட்டுமே அச்சடித்துக்கொள்ளலாம். 1990-க்கு முன்னால் இவையெல்லாம் கனவுகூடக் காண முடியாதவை.
ஆதிகாலம் தொட்டே உலகமயமாதல் என்ற செயல்பாடு இருந்து கொண்டிருந்தாலும், 90-களில் கணினி, கைபேசி போன்ற சாதனங்களின் வருகையோடு உலகமயமாதலும் சேர்ந்து தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. உலகமயமாதலால் ஏற்பட்ட இன்னொரு மாற்றம், பெண்களின் வாழ்வில் நடந்தது; அடுக்களையிலும் ரேழிகளிலும் இருந்த பெண்கள் மென்பொருள் துறையில் பணியாற்ற வெளியே வந்தார்கள். மனித குலம் தோன்றியதிலிருந்தே நடந்திராத புரட்சி இது.
ஆனாலும், இந்த மாற்றத்தையெல்லாம் இந்தியர்கள் - குறிப்பாகத் தமிழர்கள் - உள்ளபடியே அனுபவிக்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. எப்படி சினிமா என்ற கலைச் சாதனம் இங்கே வெறும் அசட்டுக் கேளிக்கையாக மாறியதோ, எப்படி கணினி என்ற அற்புதமான அறிவுச் சாதனம் வெறுமனே சாட்டிங் மற்றும் போர்னோ பயன்பாட்டுக் கானதாக ஆகிவிட்டதோ, எப்படி வைன் என்ற கொண்டாட்ட பானம் உயிர் குடிக்கும் விஷமாக மாறியதோ அதேபோல் உலகமயமாதலும் நவீன விஞ்ஞானத்தின் பல்வேறு பயன்பாடுகளும் மனித அழிவுச் சக்திகளாக மாறிவிட்டன.
உயிர் கொடுத்த உருளைக்கிழங்கு
கடந்த பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா பெரும் வறுமையில் உழன்றது. பிளேக் நோயினால் மனிதர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தனர். உருளைக்கிழங்கு மட்டும் இருந்திராவிட்டால் ஐரோப்பாவில் மனிதர்களே இருந்திருக்க மாட்டார்கள். கார்ல் மார்க்ஸுக்கு அந்தக் கடுமையான குளிரில் ஒரு நல்ல கம்பளிக் கோட்டுகூடக் கிடையாது. மனித குலத்துக்கு அளப்பரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அளித்த மேரி க்யூரி 1891-ல் பாரிஸில் உள்ள லத்தீன் குவார்ட்டர் என்ற இடத்தில் பயின்றுகொண்டிருந்தபோது, பல நாட்கள் தின்ன ஒரு துண்டு ரொட்டி இல்லாமல் பட்டினி கிடந்து மயங்கி விழுந்திருக்கிறார். ஆனால், இன்று ஐரோப்பா அகதிகளின் புகலிடமாக விளங்குகிறது.
ஐரோப்பியர்கள் 1945-ல் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். தேசியம் பட்டினி போடும்; செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவிட்டுவிட்டு நாம் உருளைக் கிழங்கைத் தின்று வாழ வேண்டுமா என யோசித்தார்கள். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தார்கள். விசா போன்ற அனுமதிச் சீட்டுகள் இல்லாமலேயே ஐரோப்பா முழுவதையும் ஒருவர் சுற்றி வர முடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே பணம். ஆனால், இங்கே ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் ஒன்றை ஒன்று விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாவுக்குக்கூட லாகூருக்குப் போக மனம் தயங்குகிறது. எல்லா அரசுமே தேசத்தின் செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவழித்துவிட்டு மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைச் சுத்தமாகக் கை கழுவிவிட்டன. அதனால், எத்தனை விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் எத்தனை துரிதமாக உலகமயமாதலில் இந்தியா ஐக்கியமானாலும் இந்திய விவசாயி தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடியவில்லை. மேக வெடிப்பு நடப்பதுபோல் மழை வெள்ளத்தில் ஊரே மிதந்தாலும், அந்த நீரை சேமித்துக்கொள்ளும் வழிவகை தெரியாமல் மழை முடிந்தவுடனேயே பிளாஸ்டிக் குடமும் கையுமாக அலையும் மனிதர்களை வேறு எந்த தேசத்தில் பார்க்க முடியும்?
மழைக் காலம் ஓய்வுக் காலம்
நாகூர் போன்ற ஒரு சிற்றூரில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தை இன்றைய நவீன குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். மனிதர்களைவிடப் பன்றிகளே அதிகம் வாழ்ந்த ஒரு தெரு. வலப்பக்கம் காட்டுநாய்க்கர், தொம்பர்; இடப்பக்கம் குயவர்கள். கொல்லைப் பக்கத்தில் சுடுகாடு. எங்கள் வீட்டில் ஆறு குழந்தைகள். நைனா படித்தது ஈஎஸ்எல்சி. எட்டாம் வகுப்பு. ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். சில சமயங்களில் வீட்டு உரிமையாளர் வாசலில் வந்து நின்று வாடகைக்காகச் சத்தம் போடும்போது மட்டும் அவமானமாக இருக்கும். மற்றபடி எட்டுப் பேர் இருந்த எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் ஆறு பேரும் ஒரு அரசுப் பள்ளியில் படித்தோம். இலவசக் கல்வி. 20 வயது வரை அங்கே இருந்தேன். எங்களில் யாருக்குமே உடம்புக்கு வந்ததில்லை. ஜுரம், ஜலதோஷம் என்றால் அஞ்சறைப் பெட்டியிலிருந்து சுக்கு - மிளகு - திப்பிலிக் கஷாயம் கிடைக்கும். ரொம்ப உடம்புக்கு என்றால் ஒரு மரத்துக் கள்ளு. அம்மாவுக்கு ஆறு பிரசவமும் அம்மாச்சி பார்த்தது. வெயில் காலம் முழுவதும் கடும் உழைப்பு. மழைக் காலத்துக்கான விறகை வெட்டிச் சேகரிப்பது, சாணி திரட்டி ராட்டி (வறட்டி) தட்டிக் காய வைத்துக்கொள்வது, நெல்லை அவித்துக் காயவைத்து அரிசியாக்கிக்கொள்வது, கடாவை வெட்டி உப்புக் கண்டம் போட்டுக்கொள்வது என்று அம்மாவின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கும். மழைக் காலம் ஓய்வுக் காலம். அம்மா ஒரு மகாராணிபோல் வாழ்ந்தார்கள் என்றே தோன்றுகிறது.
இன்று இரண்டு லட்சம் ரூபாய் மாத வருமானம் கொண்ட ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள். யாருமே சந்தோஷமாக இல்லை. பள்ளியில் படிக்கும் மகனுக்கோ, மகளுக்கோ நிம்மதி இல்லை. பள்ளிக்கூடம் ஒரு வதைக் கூடமாக மாறிவிட்டது. கல்விக்காகச் செலவாகும் பெரும் தொகையை உத்தேசித்து பெற்றோர் எப்போதுமே மன உளைச்சலில் இருக்கிறார்கள். 90 மதிப்பெண்கள் பெற்றாலே குழந்தைக்குத் திட்டு விழுகிறது. கணவன் மீது மனைவிக்குக் குறை. கணவனுக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்பு. 40 வயதில் உள்ள ஒருவரைக்கூட சந்தோஷமான மனிதராகப் பார்க்க முடியவில்லை.
மேலே குறிப்பிட்டபடி, நம் வாழ்வில் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. எது என்று கண்டுபிடித்தாக வேண்டும்!
- சாரு நிவேதிதா, எழுத்தாளர், தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago