இனியும் ஏகாதிபத்தியம் செல்லுபடியாகாது! - ஹோர்ஹே க்ளாஸ் எஸ்பினெல் பேட்டி

ஈக்வடார் தொடர்ந்து சர்வதேசத்தின் கவனத்தில் இருக்கிறது.

‘விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ் சேவுக்கு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமளித்தபோது, ஈக்வடாரின் துணிச்சல் அனைவராலும் பாராட்டப் பட்டது. அமேசான் காடுகளை மிக மோசமான அளவு மாசுபடுத்திய காரணத்துக்காக அமெரிக்க எண்ணெய்க் குழுமத்தின் மீது ஈக்வடார் நீதிமன்றம் விதித்திருந்த பல நூறு கோடி டாலர் அபராதத்தை நீக்க அந்த நிறுவனம் என்னென்னவோ செய்தும் அமெரிக்க நிர்பந்தங்களுக்கு ஈக்வடார் இன்னும் இடம் கொடுக்கவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரும் நாடாக ஈக்வடார் இருக்கிறது. ஈக்வடாரில் தொலைத்தொடர்பு, எரிசக்தி போன்ற முக்கியமான துறைகளைத் தனியார்மயத்திலிருந்து விடுவித்ததில், துணை அதிபரான ஹோர்ஹே க்ளாஸ் எஸ்பினெலுக்கு முக்கியமான பங்கு உண்டு. சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் அவர். ஈக்வடாரில் அகழ்வு மற்றும் உற்பத்திப் பணிகளை இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் கழகத்தின் வெளிநாட்டுக் கிளையான ஓஎன்ஜிசி விதேஷ் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தப் பயணத் தின்போது கையெழுத்தானது. ஹோர்ஹே க்ளாஸ் எஸ்பினெலுடனான உரையாடலிலிருந்து…

வளர்ச்சிக்காக ஈக்வடார் பின்பற்றும் வழிமுறை மிகவும் பாராட்டப்பட்டிருக்கிறதே…

வேறெந்த லத்தீன் அமெரிக்க நாடுகளைவிடவும் அடிப்படைக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் நாங்கள் மூன்று மடங்கு முதலீடு செய்திருக்கிறோம். வேலைவாய்ப்பின்மை பிரச்சினை என்பது லத்தீன் அமெரிக்காவிலேயே இங்கேதான் மிகவும் குறைவு என்பதுடன் வறுமையைப் பெருமளவு ஒழித்திருப்பதும் நாங்கள்தான். ரஃபேல் கொரியா 2007-ல் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து வறுமை ஒழிப்புக்குதான் அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. 2016-க்குள் வறுமையை ஒழித்துவிடும் முயற்சியில் இருக்கிறோம். இதை சாதிப்பதற்காக, உத்வேகமிக்க ஒரு வளர்ச்சித் திட்டத்தைத் தயார்ப்படுத்தியிருக்கிறோம். எட்டு நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தத் திட்டங்களெல்லாம் மின்சாரத்தைப் பொறுத்தவரை தற்சார்பு உடையதாக ஈக்வடாரை ஆக்கும். ஈக்வடாரில் உற்பத்தி செய்யப்படும் எரிசக்தியில் 93% புதுப்பிக்கக் கூடிய சக்தியாக இருக்கும். இதுதான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. படிம எரிபொருளைப் பயன்படுத்தாத வழிமுறையை நோக்கி எங்கள் ஆற்றல் உற்பத்தித் துறையின் அடிப்படையை நாங்கள் நகர்த்த விரும்புகிறோம்.

இந்தியா மிக முக்கியமான வகையில் எங்களுக்கு உதவிசெய்ய முடியும். எங்களிடம் ஏராளமான கனிம வளங்கள் இருக்கின்றன; ஒவ்வொரு நாளும் 2,00,000 பீப்பாய் எண்ணெயை நாங்கள் உற்பத்திசெய்கிறோம். பெட்ரோலியம், உலோகங்கள் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் ஒத்துழைப்பு ஏற்பட முடியும். நாங்கள்

எண்ணெயை ஏற்றுமதி செய்யும் அதே நேரத்தில், பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

யாசுனி மழைக் காட்டில் எண்ணெய் மற்றும் கனிமவள அகழ்வுகளை மேற்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறீர்கள் அல்லவா நீங்கள்…

யாசுனி காப்புக்காடுகளில் (யாசுனி ரிசர்வ்) இன்னும் பல பகுதிகள் வணிகப் பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஈக்வடார் அரசால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மிகவும் சரியான நடவடிக்கை. குறிப்பிட்ட அளவே எண்ணெயை நாங்கள் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். காட்டைக் காக்கும் முயற்சிகள் மட்டுமல்லாமல் அங்கே இருக்கும் அளப்பரிய எண்ணெய் வளத்தின் மூலம் பலன் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தேசிய சட்டசபையின் ஒப்புதலில் நிறைய நிபந்தனைகள் இருக்கின்றன. அங்கே வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். எங்கள் தேசியப் பூங்காக்களின் பாதுகாப்புக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம்.

ஈக்வடாருக்கு ‘சேவ்ரன்’ நிறுவனத்துடன் உள்ள பிணக்கில் ஏதாவது முன்னேற்றம் காணப்படுகிறதா?

அமேசான் பகுதியில் அவர்கள் எப்படிப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இழப்பீடு வழங்குவார்கள் என்றால், பிரச்சினையை எளிதாகத் தீர்த்துவிட முடியும். பாதிக்கப்பட்ட மக்கள் இந்த சேதங்களுக்கான இழப்பீடுகளை வேண்டிக் கடந்த 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நீதிமன்றங்களில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நியூயார்க்கில் உள்ள ஒரு நீதிமன்றம் ‘சேவ்ரன்’ நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தாலும், அந்த நிறுவனம் ஈக்வடாரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில்தான் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியது. இப்போது, ஈக்வடாரில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும்கூட அது செல்லாது என்கிறது.

1992-ம் ஆண்டிலோ 1993-ம் ஆண்டிலோ நாட்டை விட்டு ‘சேவ்ரன்’ வெளியேறியது.

1997-ல் ஈக்வடாருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறிய பிறகும் மோசமான விதத்தில் ‘சேவ்ரான்’ நடந்துகொண்டது. ஹேக் நகரில் இருந்த நீதிமன்றத்தை அணுகி, 1997-ம் ஆண்டு ஒப்பந்தத்தை அடிப்படையாகக்கொண்டு ‘சேவ்ரான்’ தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக்கொண்டது. சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பானது மூன்றாம் தரப்பு ஒன்றின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. எங்கள் நாட்டின் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் இதுதான். எங்கள் நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு அவர்கள் (அதாவது மேலை நாட்டினர்) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை, எங்கள் இறையாண்மையின்மீது தாக்குதல் நடத்துவதற்கென்று அவர்களிடம் நீதிமன்றங்கள் இருக்கின்றன.

ஜூலியன் அசாஞ்சேயின் விவகாரம் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறதா?

தீர்வு எங்கள் கையில் இல்லை. ஜூலியன் அசாஞ்சே விவகாரத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக நாங்கள் கருதியதால், அவருக்குத் தஞ்சமளித்தோம். தஞ்சமளிக்கப்படுவதற்குத் தேவையான நிபந்தனைகளை அவர் பூர்த்திசெய்தார். இந்தப் பிரச்சினை எங்கள் அதிகாரத்துக்கு உட்படாதது. தீர்வு, வெளியுறவுத் துறையின் கையிலும் இங்கிலாந்து நடந்துகொள்ளும் விதத்திலும்தான் இருக்கிறது. எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. இறையாண்மை கொண்டது எங்கள் நாடு. தஞ்சமளிப்பதற்குத் தேவையான நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்களுக்குத் தஞ்சமளிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

தஞ்சம் கேட்டு எட்வர்டு ஸ்னோடென் கோரிக்கை விடுத்தபோது, அதை மறுக்க வேண்டுமென்று உங்களுக்கு நெருக்குதல் தரப்பட்டது இல்லையா?

ஈக்வடார் என்பது இறையாண்மை பொருந்திய ஒரு நாடு. அதற்கு வேறு எந்த நாடும் நெருக்குதலோ அச்சுறுத்தலோ கொடுக்க முடியாது. ஏகாதிபத்தியங்கள் விதிக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் சில முறை எங்களை வெற்றிகொண்டிருக்கலாம். ஆனால், அதெல்லாம் அந்தக் காலத்தில். இப்போது நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜனநாயக நாடாக உருவெடுத்திருக்கிறோம்; வளர்ச்சியைப் பொறுத்தவரை பன்னாட்டு நிதியத்தின் அல்லது பிற நாடுகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் எங்களுக்கேயான பிரத்தியேகமான ஒரு வழிமுறையை நாங்கள் உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.

ஈக்வடாரில் இருக்கும் ஊடகங்களெல்லாம் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதாக மேல்நாட்டு ஊடகங்களில் செய்திகள் உலவுகின்றன…

பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் வைத்திருக்கும் மரியாதையை பொய், புரட்டுகள், வதந்திகள் ஆகியவற்றோடு சேர்த்து நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. எங்கள் செயல்திட்டங்களை அணுகுவதில் ஊடகங்களின் சில பகுதிகள் நேர்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் பிரச்சினை.

21-ம் நூற்றாண்டில் சோஷலிஸத்துக்கு எதிர்காலம் இருக்கிறதா?

சந்தேகமே வேண்டாம், 21-ம் நூற்றாண்டின் சோஷலிஸம் தயாரிப்பு நிலையில் இருக்கிறது. ஒற்றை வழிமுறை என்று ஏதும் கிடையாது. எங்கள் நாட்டு மக்கள் அவர்களுடைய தேவைகளெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழலில் வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். இந்த நோக்கம் ஜனநாயகத்தின் அடிப்படையிலே செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதுதான் மிக முக்கியமான அளவுகோல். மறுவிநியோகக் கொள்கைகளை நாங்கள் அனுசரித்துவரும் அதே நேரத்தில், தனியார் சொத்துரிமைக்கும் தனியார் தொழில் முயற்சிகளுக்கும் நாங்கள் உரிய மரியாதை கொடுத்துவருகிறோம். மருத்துவப் பராமரிப் பையும் கல்வியையும் பெறும் வழிமுறைகளை எளிதாக்குவதுதான் எங்கள் இலக்கு.

சந்தை என்பது சமூகத்தின் நலனுக்காகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, சந்தையின் நலனுக்காக சமூகம் என்ற நிலை இருக்கக் கூடாது. மூலதனம் என்பது மனிதர்களைவிட உயர்ந்ததல்ல என்பதுதான் முக்கியமான விஷயம். புரட்சி, வளர்ச்சி ஆகிய நிரந்தரக் கோட்பாடுகளுடன் நாம் 21-ம் நூற்றாண்டில் நுழைந்திருக்கிறோம்.

ஃபிரண்ட் லைன், தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்