பிரெஞ்சுப் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டியின் ‘கேபிட்டல் இன் த ட்வெண்ட்டி-ஃபர்ஸ்ட் சென்ச்சுரி’ என்ற புத்தகத்தை இந்த ஆண்டின் சிறந்த பொருளாதாரப் புத்தகமாக மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த பொருளாதாரப் புத்தகம் என்றும்கூடச் சொல்லலாம்.
வருமானம், சொத்துடைமையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு போன்ற விஷயங்களில் பிக்கெட்டிதான் உலக அளவில் தலையாய வல்லுநர். பொருளாதாரரீதியில் உயர்தட்டில் காணப்படும் ஒரு சிறிய குழுவினரின் கையில்தான் வருமானம் எல்லாம் போய்ச்சேர்கிறது என்பதை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வேறொரு விஷயத்தையும் பிக்கெட்டி செய்திருக்கிறார்.
வாரிசு முதலாளித்துவம்
‘வாரிசு முதலாளித்துவம்’ என்ற நிலையை நோக்கி நாம் எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தப் புத்தகத்தில் அவர் வலுவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். பொருளாதாரத்தின் அதிகாரமட்டம் என்பது வெறும் செல்வத்தால் மட்டுமல்லாமல், வாரிசு வழிச் சொத்துகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுவதுதான் ‘வாரிசு முதலாளித்துவம்’. இதில் முயற்சியையும் திறமையையும்விட ஒருவருடைய பிறப்புதான் முக்கியம்.
சிலராதிக்கத்தை நோக்கி…
ஆனால், நாம் இன்னமும் அந்த நிலையின் உச்சத்தை அடைந்துவிடவில்லை என்கிறார் பிக்கெட்டி. இதுவரை, அமெரிக்காவின் ‘உயர்மட்ட ஒரு சதவீதத்தினர்’ என்னும் வர்க்கம் கவர்ச்சிகரமான ஊதியம், சிறப்பூதியம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கிறதே தவிர, முதலீடுகளிலிருந்து வரும் வருமானத்தாலோ இன்னும் சொல்லப்போனால் பரம்பரைச் சொத்து மூலமாகக் கிடைக்கக்கூடிய வருமானத்தாலோ அல்ல.
என்றாலும்கூட, அமெரிக்காவின் மிகப் பெரிய 10 பணக்காரர்களில் ஆறு பேர் பெரும் செல்வந்த வாரிசுகளாகத்தான் இருக்கிறார்கள். எனவே, இன்றைய பொருளாதார உயர் வர்க்கத்தினரின் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை ஏகபோகமான ஒரு இடத்திலிருந்தே தொடங்குகிறார்கள். “சிலராதிக்கத்தை, அதாவது தொழில்துறை, நாடு போன்றவை சிலரது ஏகபோகத்தில் இருக்கும் நிலையை, நோக்கிய நகர்வு என்பது உண்மைதான். இந்த நிலை நமக்குச் சிறிதும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை” என்கிறார் பிக்கெட்டி.
யார் நலன் முக்கியம்?
உண்மைதான். உங்கள் நம்பிக்கை இன்னும் குறைய வேண்டுமென்றால், அமெரிக்க அரசியல்வாதிகளெல்லாம் எதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். அமெரிக்காவில் துளிர்விடும் சிலராதிக்கம் இன்னும் முழுதாக உருப்பெறாமல் இருக்கலாம். ஆனால், இரண்டு பிரதானக் கட்சிகளுள் ஒன்று, சிலராதிக்கத்தின் நலனைக் காப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறது.
தாங்கள் அப்படியெல்லாம் இல்லை என்று குடியரசுக் கட்சியினர் அவசரஅவசரமாகப் பூசி மழுப்ப முயல்கின்றனர். ஆனாலும், ‘பழம்பெரும் கட்சி’ (குடியரசுக் கட்சி) சாதாரண மக்களின் நலனைவிட செல்வந்தர்களின் நலன்மீதே அக்கறை கொண்டுள்ளது என்று மக்களுக்குத் தெரியாதா, என்ன? இருந்தும், சம்பளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட, சொத்துகளின் மூலம் கிடைக்கும் லாபத்தின்மீதே குடியரசுக் கட்சி அக்கறை கொண்டுள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஊதியங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட, பரம்பரை சொத்திலிருந்து வரக்கூடிய வருமானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான், அதாவது வேலையைவிட சொத்து பிரதானமாக இருப்பதுதான் ‘வாரிசு முதலாளித்துவம்’ என்பதெல்லாம்.
செல்வந்தர்களுக்கு வரிகள் தேவையில்லையா?
அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் பார்த்தால், நான் சொல்வது என்ன என்பது உங்க ளுக்குப் புரியும். செல்வந்தர்களுக்கான வரிகளைத் தளர்த்துவதற்குக் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் தன்னால் இயன்றதையெல்லாம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நடுத்தர வர்க்கத்தினரின் வரிகளைக் குறைத்ததெல்லாம்கூட அரசியல் லாபத்துக்கான சலுகைகள்தான்.
இந்த வரிச்சலுகைகளால் அதிகபட்ச லாபமடைந்தது அதிக ஊதியம் பெறுபவர்களல்ல, பங்குபத்திரங்கள் வைத்திருப்பவர்களும் பெரும் சொத்துக்கு வாரிசுகளாக இருப்பவர்களும்தான் என்பது பலருக்கும் தெரியாது. ஊதிய வருமானத்துக்கான வரி வரம்பு 39.6 சதவீதத்தி லிருந்து 39.6 சதவீதத்துக்குக் குறைந்ததென்பது உண்மை தான். ஆனால், லாப ஈவுக்கான (டிவிடெண்டு) வரி என்பது 39.6 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்துக்குக் குறைக்கப் பட்டது. சொத்துவரியோ முழுவதுமாக நீக்கப்பட்டது.
சில மாற்றங்கள்…
ஜனநாயகக் கட்சியின் ஒபாமா அதிபரான பிறகு, இந்த நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், ஒரு விஷயம் தெளிவு, புஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட வரிக்குறைப்புகளெல்லாம் ஊதியமாக இல்லாத வருமானத்தின் மீதான வரிகளைக் குறைத்த செயல்கள் தான்.
நாடாளுமன்றத்தின் ஒரு அவையைக் குடியரசுக் கட்சியினர் கைப்பற்றியபோது, அந்தக் கட்சியின் பிரதிநிதி ஒரு திட்டத்தை முன்வைத்தார். வட்டி, லாப ஈவு, மூலதன ஆதாயங்கள் மற்றும் சொத்துக்கள் ஆகியவை மீதான வரிகளை நீக்குவது என்பதுதான் அந்தத் திட்டம். முழுக்க முழுக்கப் பரம்பரைச் சொத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் எந்த வரியையும் செலுத்தத் தேவையில்லை.
முதலாளிகளைப் போற்றுவோம்!
செல்வந்தர்களின் நலன் சார்பாக முடிவெடுப்பது என்ற மனச்சாய்வு குடியரசுக் கட்சியினரின் பேச்சுகளிலும் பிரதிபலிக்கிறது. ‘வேலை தருவோ’ரை அடிக்கடி புகழும்போது குடியரசுக் கட்சியினர், அமெரிக்கத் தொழிலாளர்களை வசதியாக மறந்துவிடுகின்றனர். 2012-ல் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி எரிக் கேன்டர் முதலாளிகளைப் போற்றி டிவிட்டர் பதிவிட்டதன் மூலம், தொழிலாளர் தினத்தை (செப்டம்பர் 1) கொண்டாடினார். பெரும்பாலான அமெரிக்கர்கள் பிறருக்காக வேலை செய்பவர்கள் என்றும் ஒருமுறை அவர் கூறியிருக்கிறார்.
ராஜபோகமான குழு
உண்மைதான். பெரும்பாலான அமெரிக்கர்கள் சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கவில்லைதான். அதுமட்டுமல்ல, தொழில் வருமானம், மூலதன வருமானம் போன்றவையும் ஒருசிலருடைய கைகளில் போய்ச்சேர்வதென்பது அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. 1979-ன்படி அமெரிக்காவில் ‘உயர்மட்ட ஒரு சதவீதத்தினர்’வருமானம் நாட்டின் தொழில் வருமானத்தில் 17%.
ஆனால், இப்போது அந்த ஒரு சதவீதத்தினர் தொழில் வருமானத்தில் 43 சதவீதத்தை யும் மூலதன ஆதாயங்களில் 75 சதவீதத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். இருந்தும், ‘பழம்பெரும் கட்சி’யின் அன்பையும், அதன் கொள்கை உருவாக்கத்தின் கவனத்தையும் ராஜபோகமான இந்தச் சிறிய குழுதான் பெறுகிறது.
செல்வமும் செல்வாக்கும்
இது ஏன் நடக்கிறது? பெருஞ்செல்வம் பெரும் அரசியல் செல்வாக்கை விலைக்கு வாங்குகிறது, தேர்தல் நேரத்து நன்கொடைகளால் மட்டுமல்ல. நிபுணர்களும் ஒருசில பெரும்கொடையாளர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கும் ஊடகமும் ஒருங்கே இருக்கக்கூடிய ஒரு அறிவுக்கோளத்துக்குள்தான் பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் வசிக்கின்றனர். எனவே, சிலராதிக்கத்துக்கு நல்லது எதுவோ அதுவே அமெரிக்காவுக்கும் நல்லது என்று அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் என்ன?
நான் முன்னமே கூறியதுபோல் இதன் விளைவுகளெல் லாம் சிலசமயம் கேலிக்குரியதாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்தக் கோளத்துக்குள் இருக்கும் நபர்களிடம் வானளாவிய அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர்கள் தங்கள் புரவலர்களுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். இப்படியாக, சிலராதிக்கத்தை நோக்கிய நகர்வு தொடர்கிறது.
© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago