தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துகொண்டிருந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நண்பர்கள் அழைத்த வண்ணம் இருந்தார்கள். தமிழர் அல்லாத நண்பர்களுக்கு அது ஆச்சர்யம். தமிழ் நண்பர்களுக்கோ அது பெரிய குஷி. “நம்ம பசங்க எல்லோரையும் திரும்பிப் பார்க்க வெச்சிட்டாங்க. இங்கெல்லாம் ரொம்ப மரியாதையோடு பார்க்குறாங்க.”
இங்கே தமிழ்நாட்டில் எப்போதுமே நாம் நெஞ்சை நிமிர்த்தி விரைத்துக்கொண்டு நடக்கிறோம் என்றாலும், தமிழகத்துக்கு வெளியே செல்பவர்களுக்குத்தான் சாதாரண நாட்களில் ‘மதராஸி’ ஆக இருப்பதன் துயரம் புரியும். தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் நமக்குச் சேர்த்து வைத்திருக்கும் ‘அடிமைப் பெருமை’ அப்படி!
ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்தப் பிம்பத்தைக் கணிசமான அளவுக்கு மாற்ற முனைந்தது. போராட்டத்தின் உள்ளடக்கம் ஜல்லிக்கட்டாக இருந்தாலும், அதன் வெளிப்பாடு ஆட்சியாளர் களுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான துணிச்சலான அறைகூவல் என்பதை நாடு சரியாகவே உணர்ந்தது. தமிழகத்தைத் தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் டெல்லியிலும் ஆட்சியாளர்களை இந்தப் போராட்டம் பதைப்பதைப்பில் தள்ளியதற்கான நியாயம் உண்டு. இத்தகைய போராட்டங்கள் நாடு முழுக்கப் பரவக் கூடியவை.
பெரும் திரளான மக்கள் கூட்டத்தை அதிகாரம் கண்டுகொள்ளாமல் விட்டதன் பின்னணியில் ஆரம்பத்தில் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆளும் அதிமுகவின் புதிய தலைமைக்கு எதிரான அதிருப்தி குரல்களிலிருந்து மக்களின் கவனம் திசை திரும்ப அனுமதிப்பதே அது. அடுத்தடுத்த நாட்களில், போராட்டம் தமிழகம் எங்கும் விசுவரூபம் எடுத்ததும் மாணவர்கள் ஜல்லிக்கட்டைத் தாண்டி மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இரு தரப்பையுமே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதும் தமிழக அரசு எதிர்பாராதது. ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்தச் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள முனைந்தன. அதற்கும் மாணவர்கள் அனுமதிக்கவில்லை. ஆக, பாரம்பரிய அரசியல் கட்சிகள் பெரும்பாலானோருக்கு எரிச்சலூட்டியபடி போராட்டம் தொடர்ந்தது. ஜனவரி 26 நெருங்கிய சூழலில், மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடியாகப் பணிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
ஜல்லிக்கட்டு தொடர்வதற்கேற்ப சட்டப்பேரவையில் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவதோடு கூட்டத்தைக் கலைக்க இரு அரசுகளும் முடிவெடுத்தன. தொடக்கத்தில் கூறியபடி, இந்தப் போராட்டத்துக்கான உள்ளடக்கம் ஜல்லிக்கட்டு என்றாலும், அதன் உண்மையான இலக்கும் மக்கள் வெளிப்படுத்திய கோபமும் ஜல்லிக்கட்டைத் தாண்டியவை. போராட்டக்காரர்களும் இதை உணர்ந்திருந்தனர். அரசும் உணர்ந்திருந்தது. பொதுச்சமூகமும் உணர்ந்திருந்தது. ஊடகங்களும் இதை அறிந்திருந்தன. என்றாலும் எல்லோருக்குமே ஜல்லிக்கட்டு முகமூடியே பாதுகாப்பானதாகத் தோன்றியது. கூடவே ஜல்லிக்கட்டைத் தாண்டிய அரசியல் கிளர்ச்சியாக இது உருமாறுமா என்ற அந்தரங்க எதிர்பார்ப்பும் பலரிடமும் தெரிந்தது.
ஒரு குறிப்பிட்ட முழக்கத்தோடு தொடங்கும் போராட்டம் அந்த முழக்கத்தைத் தாண்டி அமைப்பைப் புரட்டிப்போடும் புரட்சியாக உருவெடுப்பது வரலாற்றில் பல முறை நடந்திருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு நீண்ட கால முன் தயாரிப்பின் வழி ஒரு சமூகத்தின் எல்லா முனைகளிலும் சாத்தியங்கள் முகிழ்ந்திருக்க வேண்டும். அரசியல்ரீதியாக அடியாழத்தில் சிக்குண்டு கிடக்கும் தமிழகத்தில் அப்படியான சூழல் ஏதும் இன்று உருவாகியிருக்கவில்லை. விளைவாக, ஜல்லிக்கட்டு கோரிக்கை நிறைவேறும் சூழல் உருவாகியதும் ஏக்கப் பெருமூச்சுடன் பொதுச் சமூகம் அத்துடன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. கூடவே பெருந்திரளான மாணவர்களும் நிறுத்திக்கொண்டனர்.
இதுவரை இவ்வளவு பெருந்திரளைப் பார்த்துப் பழகியிராத எல்லா அரசியல் அமைப்புகளுக்குமே இந்தக் களத்தைக் கைப்பற்றும் வேட்கை இருந்தது. மாணவர்கள் கட்சி சாயம் வேண்டாம் என்றதால், பிரதான அரசியல் கட்சிகள் ஒதுங்கி நின்றன. அவர்களுடைய மாணவர் பிரிவினர் மட்டும் கட்சி அடையாளமின்றி, உள்ளே சென்றனர். மாணவர் முழக்கங்களோடு தத்தமது முழங்கங்களையும் சேர்த்து முழங்கிவிட்டு, பெரும் கூட்டம் கலைந்தபோது அவர்களில் பெரும் பகுதியினர் வெளியேறினர். ஆனால், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சில குழுக்கள் - பொது அமைப்புகள் எனும் அடையாளத்தில் - மாணவர்களோடு களத்தில் கலந்திருந்தன. சட்ட அறிவிப்பிற்குப் பின், பெருமளவிலானோர் வெளியேறிவிட்ட நிலையில், சிறு குழுக்கள் அங்கேயே தங்கியதையும் ஒரு கலகத்துக்கான பரிசோதனை முயற்சியாக இந்தப் போராட்டத்தை மாற்றும் வேலை அங்கே தொடங்கியதையும் பல தரப்புகளிடமும் பேசுகையில் உணர முடிந்தது.
ஆக, ஒரு போராட்டத்தின் பெயரில் இன்னொரு போராட்டம் தொடங்கியது. ஜல்லிக்கட்டு இலக்கைத் தெளிவாகத் தாண்டிய இப்போராட்டம், ஜல்லிக்கட்டைத் தாண்டிய போராட்டமாக அறிவிக்கப்படவும் இல்லை; உருக்கொள்ளவும் இல்லை. இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு கோரிக்கை அர்த்தமிழந்து, வறட்டு கோஷமானது. போராட்டம் இலக்கற்றதாக வெளியே தெரிந்தது.
சென்னை கடற்கரையில் கூட்டத்தைக் கலைக்கச் சென்ற காவல் துறையினரை மிரட்டும் வகையில், மாணவர்களை இக்குழுக்கள் கடல் நோக்கித் தள்ளிய கணம் மிக மோசமான தருணம். அது அரசின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்ட தருணம். ஒருவகையில் தற்கொலை மிரட்டல்; இன்னொரு வகையில் அமைப்பு அதுவரை காத்திருந்த வேட்கைக்கான பலியை உருவாக்கித் தந்த தருணம். கடலில் மாணவர்களின் காலடிகள் நீளும் கணத்தை நீட்டிக்கத் துடித்தன பல மனங்கள்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். முந்தைய நாள் மெரினாவில் கூடியவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேல். பிரச்சினை அன்று கடலில் காலடி வைத்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டாது. மீண்டும் நினைவூட்டுகிறேன். உண்மையில் ஒரு போராட்டத்திற்குள் இரு போராட்டங்கள் நடந்தன. இரண்டும் ஒரே இடத்தில், ஒரே கோரிக்கையின் பெயரில், ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன.
முக்கியமான வேறுபாடுகள் உண்டு. முதலாவது போராட்டம் பெருந்திரள் போராட்டம். அதன் அடிப்படையானது, நல்லெண்ணங்களை விதைத்து எல்லாத் தரப்புகளையும் உள்ளிழுக்கும் இயல்பைப் பெற்றிருந்தது. அது வன்முறையைக் கைகொள்ளவில்லை. இரண்டாவது போராட்டம், மாணவர்களை மனிதக் கேடயங்களாகக் கொண்ட சிறு குழுக்களின் போராட்டம். வெளிப்படையாக அறிவிக்கப்படாத அதன் இலக்கு கலகம். இந்தச் சூழலை அரசியல் களத்தில் தமக்கேற்ப மாற்றவுமான முயற்சிகள் இதற்குள் கடற்கரைக்கு வெளியே தொடங்கியிருந்தன.
அன்றைய தினம் அலுவலகம் செல்லும் வழக்கமான பாதை மறிக்கப்பட்ட நிலையில், வெவ்வேறு வழிகளினூடே செல்ல முற்பட்டேன். நகரின் பிரதான சாலைகளை அடையும் இணைப்புகள் பலவும் யாரோ உத்தரவிட்ட மாதிரி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அடைக்கப்பட்டன. இந்த மறியல்களில் ஈடுபட்டவர்கள் எவர் முகங்களும் முந்தைய நாட்கள் போராட்டங்களில் ஈடுபட்ட முகங்களுடன் ஒப்பிட முடியவில்லை. மறியல்களுக்குப் பழக்கமான, நன்கு ‘அரசியல் பயிற்சி’ பெற்றவவையாகவே அந்த முகங்கள் தெரிந்தன. முதலில் ஐந்தாறு பேர் சாலையை மறித்து உட்கார்ந்தனர். பின்னர், பக்கத்துப் பகுதிகளிலுள்ள எளிய மக்கள் அங்கு கூடினர்; கூட்டிவரப்பட்டனர்.
இதனிடையே மெரினா கடற்கரையில் பதற்றம் அதிகரித்திருந்தது. திருவல்லிக்கேணியில் காவல் துறையினரே வன்முறை, தீ வைப்பில் ஈடுபட்டுவருகிறார்கள் என்ற செய்தி வந்தபோது, ‘தாக்குதலுக்கான சாட்சியங்கள் தயாரிப்பு’ தொடங்கிவிட்டதை உணர முடிந்தது. இதற்குப் பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஒரு பெரும் சதியின் வெவ்வேறு இழைகள். பலரது கரங்கள் வெவ்வேறு நோக்கங்களில் இணைந்தது அது. காவல் துறையின் கரத்துக்கு இந்தக் கலவரத்தில் இருக்கும் பங்களிப்பைச் சமூக வலைதளங்கள் முதல் பிபிசி வெளியிட்டிருக்கும் காணொலிகள் வரை அம்பலப்படுத்துகின்றன.
அலுவலக நண்பர்கள் பரத், பிரபு இருவருமே புகைப்படம் எடுக்கச் செல்கையில், கலவரப் பகுதியில் சிக்கினர். பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்களுடன் பாய்ந்த ஒரு கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்தது. வாகனங்கள் சேதத்துக்குள்ளான நிலையில், தப்பி ஓடி மீண்டு வந்தார்கள். இப்படி அன்றைக்கு வன்முறையில் சிக்கிய ஊடகவியலாளர்கள் பலருடனும் பேசினேன். உறுதியாகச் சொன் னார்கள், “வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல”.
குறைந்தது மூன்று தரப்புகள் இந்த வன்முறைகளின் பின்னணியில் தெரிவதைக் காண முடிகிறது. மாணவர்கள் உயிரைப் பகடைக்காயாக்கி கலகத்துக்கு முற்பட்ட ஒரு தரப்பு. உருவாகிவரும் பதற்றச் சூழலைப் பயன்படுத்தி, முன்னதாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் சேர்த்துப் பாடம் கற்பிக்க முற்பட்ட அதிகாரத் தரப்பு. இவர்களோடு மூன்றாவதாக ஒரு தரப்பு இணைந்தது. அது தொடக்கம் முதலாக இந்தப் போராட்டங்களை எரிச்சலாகப் பார்த்துவந்தவர்களின் தரப்பு.
இந்த மூன்று தரப்பு ஆட்டங்களின் விளைவுகளையே இன்றைக்கு மாணவர்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக எழுதப்படும் புனைகதைகளாகப் பார்க்கிறோம். நண்பரும் வங்கி ஊழியர் சங்க நிர்வாகியுமான சி.பி.கிருஷ்ணன், ‘போராட்டங்களை அதிகாரம் எப்படிக் கையாளும்’ என்பதற்கு அடிக்கடிச் சொல்லும் ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. “நாங்கள் பத்துக் கோரிக்கைகளோடு போராட்டத்தில் உட்காருவோம். போராட்டத்தின் உச்சத்தில் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடுவார்கள். பேச்சு நடக்கும். அவர்களால் முடியாது என்ற நிலையை எட்டும்போது, எங்களில் மூன்று பேரைப் பணியிடை நீக்கம் செய்வார்கள். அதுவரை கோரிக்கைகளைத் தூக்கிக்கொண்டு அலைந்த எங்களை அதற்குப் பின் வேலைப் பிரச்சினையைத் தூக்கிக்கொண்டு அலைக்கழியவிடுவார்கள்.”
சட்டப்பேரவையில் கலவரம் தொடர்பாகப் பேசுகையில் வெளியிட்ட தன்னுடைய ஒன்பது பக்க அறிக்கையில் போகிறபோக்கில் ஒரு பத்தியில், கலவரத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் விவகாரத்தைக் கடந்துபோகிறார் முதல்வர் பன்னீர்செல்வம். அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறைக் கூடுதல் ஆணையர் சேஷசாயி பேசியதைப் போலவேதான் இருந்தது சட்டப்பேரவையில் முதல்வரின் பேச்சும். “யாரோ சில போலீஸ்காரர்கள் கல்லெறிந்தார்கள், அடித்து நொறுக்கினார்கள், தீ வைத்தார்கள் என்பதைக் காட்டி போலீஸ்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று பேசுவது கேவலமானது” என்றார் சேஷசாயி. முதல்வர், “காவலர்கள் தவறிழைத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார். இதே முதல்வர் யாரோ ஒருவர் எங்கோ தனித் தமிழ்நாடு கோஷமிட்டதை ஒட்டுமொத்த போராட்டமும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை நோக்கி நகர்ந்தது போன்ற தொனியில் தாக்குதலை நியாயப்படுத்த குறிப்பிட்டது நகைமுரண்.
மேலும், காவலர்கள் வன்முறையில் ஈடுபட்ட விவகாரம் தனித்த சங்கதி அல்ல. யாரோ ஓரிரு காவலர்கள் ஒரு காவல் நிலையத்தின் தனியறையில் ஒரு கைதியிடம் நடந்துகொண்ட அத்துமீறல் புகாரைப் போன்றதல்ல இது. காவலர்கள் படையாகச் செல்லும்போது, அதிகாரிகள் சம்மதமின்றி ஒரு காவலர் எப்படித் தனித்து தீவைப்பில் ஈடுபடுவார்? பல இடங்களில் படையாகவே வன்முறைகளில் ஈடுபடுகிறார்களே, அவர்களுக்கு அதற்கான உத்தரவை அளித்தது யார்? அந்த உத்தரவின் பின்னிருந்த ஆட்சியாளர் யார்? அந்த உத்தரவின் பின்னிருந்த திட்டம் என்ன? நாட்டுக்குத் தெரிய வேண்டும்.
இந்த வன்முறையில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இந்த வன்முறை எல்லா இடங்களிலும் தீயிடலை இலக்காகக் கொண்டிருப்பது. நீண்ட கால உளவியல் தாக்குதலுக்கான வலுவான ஆயுதம் தீ. கருகியவை காலமெல்லாம் நம் நினைவிலிருந்து அகல மறுப்பவை. திருவல்லிக்கேணியில் அன்று எரிக்கப்பட்ட வாகனங்கள் இன்றும் சாலையில் எலும்புக்கூடாய் கிடக்கின்றன. இன்னும் பல நாட்களுக்கு அவை அங்கு கிடக்கும். அப்போதுதானே மக்களுக்குப் போராட்டத்தின் மீதுள்ள பயம் நீடிக்கும்!
இந்த நாட்டை ஆளும் அதிகாரச் சக்திகள் தம் கையில் வைத்திருக்கும் வலுவான ஆயுதம் பயம். அதுவே இந்தியாவில் மக்களைப் பெருமளவில் அரசியலை விட்டு விலக்கிவைத் திருப்பதற்கான இரும்புச் சுவராகவும் இருக்கிறது. மாணவர்கள் போராட்டம் நிகழ்த்திய மகத்தான சாதனை ஓங்கி அந்தப் பயத்துக்கு ஒரு அடி கொடுத்தது. ‘‘மக்கள் ஒன்றிணைந்தால், ஒரு நியாயமான கோரிக்கைக்காகப் போராடினால், ஆட்சியாளர்களுக்குப் பணிவதைத் தவிர வேறு வழியே இல்லை’’ எனும் செய்தியை இந்தப் போராட்டம் மறைமுகமாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சொன்னது.
ஆட்சியாளர்களைத் தாண்டியும் பாரம்பரிய அரசியல்வாதிகள் பெரும்பாலானவர்களுக்கு இந்தப் போராட்டம் பெரும் எரிச்சலை உருவாக்கிவந்ததைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் அரசியல் ஆட்டத்தின் பல விதிகளையும் போக்குகளையும் மாணவர்கள் தம் போராட்டத்தின் மூலம் உடைத்து நொறுக்கினர். தேசிய ஊடகங்களில் மாணவர்கள் போராட்டத்துக்கு அன்று கிடைக்காத முக்கியத்துவம் இன்று வன்முறைக்குக் கிடைத்தது அமைப்பின் நோக்கத்தைத் தெளிவாகச் சொல்கிறது. இனி காலத்துக்கும் போராட்டம் அல்ல; இந்த வன்முறையே மக்கள் நினைவில் நிற்க வேண்டும்.
பல பரிமாணங்கள் கொண்ட இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருந்தால், அதன் தொடர்ச்சியாக அந்தப் பல்வேறு பரிமாணங்களையும் தேசம் இன்றைக்கு விவாதித்துக்கொண்டிருக்கும். இங்கே மக்கள் அடுத்தடுத்து காவிரி, முல்லைப்பெரியாறு, கோக் - பெப்ஸி என்று கூடவும் பேசவும் ஆரம்பிப்பார்கள். நாட்டின் 58% சொத்துகளை வைத்திருக்கும் 1% பெருமுதலாளிகள் விவகாரம் வரை அது நீளக்கூடும். அப்படி நடந்துவிடக் கூடாது. இன்னொரு சமயம், இப்படியான கூடுகைக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. மக்களுக்குப் பயம் வேண்டும்; பயம் இருக்கும் வரைதான் அவர்களை ஆள முடியும். அதற்கு வன்முறை வேண்டும். அமைப்பு எப்போதும் அதற்காகக் காத்திருக்கிறது.
இப்படியாக, எதிர்பாராத ஒரு வரலாற்று எழுச்சிப் போராட்டம், தீர்மானிக்கப்பட்ட ஒரு முடிவோடு முடிக்கப்பட்டது. பயத்துக்காக மூட்டப்பட்ட தீ சாலைகளில் அணைந்துவிட்டது. மக்கள் மனதில் அது கனன்றுகொண்டிருக்கிறது. போராட்டத்தில் தம்மோடு கை கோத்தவர்களையும், எதிரில் நின்ற அமைப்புசார் சதிகளையும் மட்டும் அல்ல; சுயநல இலக்கோடு மாணவர்கள் கூடவே நின்று, தங்களால் ஒருபோதும் கட்ட முடியாத ஒரு பெரும் போராட்டத்தின் திசையைத் திருப்பி, மறைமுகமாக அமைப்பின் கைகளில் போராட்டத்தைக் கையளித்த துரோகிகளின் சதிகளையும் மக்கள் தம் மனதில் இருத்தி வைத்திருக்க வேண்டும். அதுவே ஒரு அறவழிப் போராட்டத்தின் பயணத்தைக் கடைசி வரை அவர்கள் கைகளில் வைத்திருக்கும் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்!
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago