முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் ‘இலவச சர்க்கரை’சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை வீட்டிலேயே வாங்கி வைத்து தினசரி ஆகாரத்துக்கு முன்பும், பின்பும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. தலைச்சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் போன்ற புகார்களுடன் மருத்துவர்களை அணுகினால், உடனடியாக சர்க்கரை நோய் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆக, நாட்டில் சர்க்கரை நோய் தேடித் தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறது. நல்லது. ஒரே ஒரு கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு ‘சர்க்கரை நோய்’இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதைக் குணப்படுத்தும் மருந்து யாரிடம் உள்ளது? அலோபதி மருத்துவத் துறைதான், நோய்களின் பிரச்சாரத்தை உலகப் போர் நடத்துவதைப் போல் நடத்திக்கொண்டிருக்கிறது. சரி, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அலோபதியில் இருக்கிறதா? இல்லை என்பதுதான் அலோபதி மருத்துவர்களே ஒப்புக்கொள்ள வேண்டிய விடை. அதுதான் உண்மையும்கூட.
இந்திய அரசின் மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டம் 1940, 1945, 1995, தனது அட்டவணை ஜெ பிரிவில் 51 நோய்களை வகைப்படுத்தியுள்ளது. ‘இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றோ, தடுக்க முடியும் என்றோ, அவ்வாறான எண்ணங்களை வேறு ஏதேனும் வகையிலோ மக்களுக்கு அளிக்கக் கூடாது’என்கிறது அச்சட்ட விதி. இந்த 51 நோய்களின் பட்டியலைப் பார்த்தால், நாட்டில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு அலோபதி மருந்துகளை வாங்கவே தேவையில்லை என்று புரிந்துவிடும். இந்தப் பட்டியலில் 14-வது நோயாக சர்க்கரை நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய அரசின் சட்டம்தான். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்குத்தான் இந்திய அரசின் பிரமாண்டமான கட்டமைப்பில் எவரும் இல்லை. மருத்துவம் என்பது ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அந்த நோயைத் தீர்த்து, நோயாளியை முழு நலமுடைய மனிதராக வாழச் செய்ய வேண்டும். அந்தத் திறன் அலோபதிக்கு இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோய் விஷயத்தில். சட்டப்படியும் நடைமுறைப்படியும் மருந்து இல்லாத நிலையில், எந்த மருத்துவராவது தம்மிடம் வரும் நோயாளியிடம், ‘எங்கள் முறையில் இதற்கு மருந்து இல்லை. ஆகவே, வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்’என்று கூறுவதுண்டா? எவரேனும் இருந்தால், அவர் நேர்மையாளர். மாறாக, ‘சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும்’என்றுதான் கூறுகிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரைகள் விழுங்கிவிட்டு, இறுதியில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, பரிதாபமான நிலையை அடைகிறார்கள் மக்கள். புண்கள் வந்தால் உறுப்புகளே நீக்கப்படுகின்றன.
சர்க்கரை ஒன்றும் புத்தம் புதிய நோய் அல்ல. பல காலமாக இருந்துவருவதுதான். சர்க்கரை நோயை நம்முடைய மரபு மருத்துவ முறைகள் கட்டுப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்திலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சமீபமாகப் பரவலாகிவரும் தொடுசிகிச்சை முறையும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
இவ்வளவு ஏன்? உணவுப் பழக்கத்தையும், சில வாழ்க்கை முறைகளையும் மாற்றினாலே போதும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும். இந்த உண்மைகள் இப்போது மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால், பெரும் வணிக நோக்கம் இருக்கிறது.
சர்க்கரை நோயை மையமாக வைத்து எவ்வளவு பொருட்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்பதைச் சற்றே உற்றுப் பாருங்கள். மருந்து மாத்திரைகளில் துவங்கி, ஊட்டச் சத்துப் பொருட்கள், உடற்பயிற்சிக் கருவிகள், செருப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் என எல்லாமே வணிகமயம். இவ்வளவு பொருட்களும் சேர்ந்து, சர்க்கரை நோயைத் தீர்த்தால்கூடச் சகித்துக்கொள்ளலாம். ஆனால், இவை எல்லாம் சேர்ந்து, அலோபதி மருத்துவர்கள் மொழியில் கூறுவதானால், ‘சர்க்கரையைக் கட்டுப்பாட்டில்’வைக்கின்றன.
இந்திய அரசின் சுகாதாரத் துறைக்கென என்னதான் கொள்கை இருக்கிறது என்று புரியவில்லை. ஒருபுறம் சட்டத்தில் ‘இந்த நோய்களுக்கு அலோபதியில் குணமளிக்கும், தடுக்கும் மருந்துகள் இல்லை’என்கிறது. மறுபுறம், அந்த நோய்களைத் தீர்க்கும் உள்நாட்டு மருத்துவ முறைகளை ஓரங்கட்டி வைக்கிறது. மக்கள் நோயினால் நொந்து, சிகிச்சையினால் கடன்பட்டு, சொத்துகளை இழந்து, உறுப்புகளை இழந்து மாண்டுபோகட்டும் என்பதுதான் அதன் கொள்கையா?
பல கோடிகள் செலவிட்டு, நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும்போது, அந்த நோய்களை எந்த மருத்துவ முறைகளில் தீர்க்க முடியும் என்பதை ஏன் அரசு கூறுவதே இல்லை? என்ற கேள்வியைக் குடிமக்கள் கேட்க வேண்டும்.
சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் நடைப்பிணங்களாக மாற்றப்பட்டுவருகின்றனர். தமிழக அரசு 30+ விளம்பரங்களோடு கடமையை முடித்துக்கொண்டால், அதன் அறுவடையும் அலோபதி கருவூலங்களுக்குத்தான் சென்று சேரும். தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு, சட்டப்படியும் மனித நேயப்படியும் மரபு மருத்துவ முறைகளை நெறிப்படுத்தி, சர்க்கரையை விரட்டி, மக்களைக் காக்க வேண்டும்.
செந்தமிழன், இயக்குநர். சர்க்கரை நோயை மையமாக வைத்து அவர் எடுக்கும் ‘இனிப்பு’ ஆவணப்படத்தின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. தொடர்புக்கு: senthamizhan2007@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago