வடலூர் சத்திய தருமசாலை நிறுவப்பட்ட நாள்: வைகாசி 11
உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது...
வடலூரைச் சென்றடைந்தபோது, உச்சி வெயில் தகித்துக்கொண்டிருந்தது. நீண்ட பிராயணத்தின் வழிச் சென்றடைந்ததாலோ என்னவோ, வடலூரே அன்றைக்கு ஒரு அடுப்பு மாதிரி கனன்றுகொண்டிருந்தது. நெய்வேலி சுரங்கம் விரிவாக்கம் நடக்க நடக்க சுற்று வட்டாரம் முழுக்க தகிப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார் உடன் வந்த உள்ளூர் செய்தியாளரும் நண்பருமான முருகவேல். உஷ்ணம் இடத்துக்குள் இருக்கிறதா, காலத்துக்குள் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. பசி வயிற்றை எரித்துக்கொண்டிருந்தது.
மே 22, 2017. வள்ளலார் சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை மூட்டி ஆங்கில நாட்காட்டி கணக்குப்படி, 150 வருஷங்கள் நிறைந்த நாள் அது. 1867 மே 23 (வைகாசி 11) அன்று சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் வள்ளலார். சத்திய தருமச்சாலைக்குச் செல்வதற்கு முன்னதாக, உள்ளூரிலேயே வசித்துவரும் வள்ளலார் வாழ்க்கை வரலாற்று நூல் தொகுப்பாசிரியரும் சத்திய ஞான சபையின் நெடுநாள் அறங்காவலரும் சன்மார்க்க அறிஞருமான ஊரன் அடிகளாரையும் உடன் அழைத்துக்கொண்டு செல்வதாகத் திட்டம். அடிகளாருக்கு அன்றைய நாள் 85-வது பிறந்த நாள். தவிர, அவர் துறவறம் மேற்கொண்டு 50 வருஷ நிறைவு நாள். “பசியோடு வடலூர் வருவதும் பசியோடு சத்திய தருமச்சாலைக்குள் நுழைவதும் சன்மார்க்கத்தை அறிந்துகொள்ள வருபவர்களுக்கு ஒரு சரியான மார்க்கம்தான். ஜீவகாருணியத்தை ஏன் பசியாற்றுதலோடு வள்ளலார் பொருத்தினார் என்பது இங்கு பசியோடு வந்து பசியாறும்போது புரியும்” என்றார் ஊரன் அடிகளார். “150 வருஷங்கள்… எத்தனை லட்சம் வயிறுகள் பசியாறியிருக்கும், எத்தனை லட்சம் பேர் பசித்தீயை இந்த அடுப்பு அணைத்திருக்கும்!” என்றார்.
தீயைத் தீயால் அணைக்க முடியுமா? தீயை எப்படி தீயால் அணைக்க முனைந்தார் வள்ளலார்? பசி, வெப்பம், அடுப்பு, தீ… மாறி மாறி இந்த வார்த்தைகள் மோதிக்கொண்டே இருக்கவும் நாங்கள் சத்திய தருமச்சாலையில் நுழையவும் சரியாக இருந்தது. “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!” - உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலிருந்து ஒலித்த குரல்கள் நூறும் ஒன்றாய் சுவர்களில் மோதி எதிரொலித்து, ஒன்றுக்கு நூறாய் சிதறி வாசல் வழி வந்து வெளியே காற்றில் விழுந்தன.
வள்ளலார் மூன்று அமைப்புகளை உருவாக்கினார். சத்திய சன்மார்க்க சங்கம், சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை. “புத்தர் சங்கத்தை உருவாக்கினார். பௌத்தம் சங்கத்தின் வழி வியாபித்தது. வள்ளலார் சங்கத்தை உருவாக்கினார். ஆனால், சங்கம், சபையைக் காட்டிலும் தருமச்சாலை விரிவாக்கத்திலேயே அவர் மனம் லயித்திருந்தது எனலாம். இன்று சன்மார்க்க நெறியின் அடிப்படைபோலவே ஆகிவிட்டது பசியாற்றுதல். சடங்குகள் கிடையாது. சம்பிரதாயங்கள் கிடையாது. வழிபாடு என்பதே ஜோதி தரிசனம்தான். வடலூருக்கு வந்து வள்ளலாரால் ஆட்கொள்ளப்படும் ஒருவர் ஊர் திரும்பிய பின் இறைவழி என்று நம்பி, அவர் ஆரம்பிக்கும் முதல் காரியம் அவருடைய ஊரில் ஏழைகளுக்கு உணவிடுதலைத்தொ டங்குவதாகத்தான் இருக்கும். இன்றைக்கும் எத்தனை ஆயிரம் இடங்களில் இந்தத் திருப்பணி நடக்கிறது!” ஊரன் அடிகளார் சமையல் கட்டுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு தருமச்சாலையின் கணக்கர் ஞானப்பிரகாசமும் சேர்ந்துகொண்டார்.
வள்ளலார் ஏற்றிவைத்த விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. வள்ளலார் மூட்டிய தீ இன்று காலச் சூழலுக்கேற்றபடி பெரிதாகக் கட்டப்பட்டிருக்கும் கோட்டடுப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவர் மூட்டிய மண்ணடுப்பு அலங்கரிக்கப்பட்ட நிலையில் அருகிலேயே இருக்கிறது. “வழிபாடு என்பதே இங்கு ஜோதி தரிசனம்தான்” என்றபடி இப்போது அடுப்பைக் காட்டியவர் ஞானப்பிரகாசம். விளக்கின் வழி பார்ப்பதும் ஒரே ஜோதி, அடுப்பின் வழி பார்ப்பதும் ஒரே ஜோதி. எது ஜீவகாருணியத்தின் மூலாதாரத்தோடு பசியாற்றுதலைக் கொண்டுபோய் வள்ளலாரை இணைக்கச் செய்தது என்ற கேள்வி விரட்டத் தொடங்கியது.
பசியை விஸ்தீரணமாக எழுதியிருக்கிறார் வள்ளலார். பசி தரும் அவஸ்தைகளைப் படு உக்கிரமாக எழுதியிருக்கிறார். “ஜீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில், ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது; - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது; - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்துவிடுகின்றது; - அது சோரவே பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது; - அது மழுங்கவே குணங்களெல்லாம் பேதப்படுகின்றன; - மனம் தடுமாறிச் சிதறுகின்றது; புத்தி கெடுகின்றது; சித்தம் கலங்குகின்றது; அகங்காரம் அழிகின்றது; பிராணன் சுழல்கின்றது; பூதங்களெல்லாம் புழுங்குகின்றன; வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன; கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது; காது கும்மென்று செவிடுபடுகின்றது; நா உலர்ந்து வறளுகின்றது; நாசி குழைந்து அழல்கின்றது; தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது; கை கால் சோர்ந்து துவளுகின்றன; வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது; பற்கள் தளருகின்றன; மல சல வழி வெதும்புகின்றது; மேனி கருகுகின்றது; ரோமம் வெறிக்கின்றது; நரம்புகள் குழைந்து நைகின்றன; நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன; எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன; இருதயம் வேகின்றது; மூளை சுருங்குகின்றது; சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது; ஈரல் கரைகின்றது; இரத்தமும் சலமும் சுவறுகின்றன; மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது; வயிறு பகீரென்று எரிகின்றது; தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன; உயிரிழந்துவிடுவதற்கு மிகவும் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன!”
பசி நீங்கும் அனுபவத்தையும் வள்ளலார் விவரிக்கிறார், “பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது; இவ்வளவு அவத்தைகளும் ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசிநீங்க - நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம், தழைத்து, உள்ளம் குளிர்ந்து, அறிவு விளங்கி, அகத்திலும், முகத்திலும் ஜீவ களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தி இன்பம் உண்டாகிறது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறிய வேண்டும்!”
பசியாற்றலை ஜீவகாருணியத்தோடு இணைக்கும் வள்ளலாரின் வரிகள் இன்னும் மேன்மை மிக்கவை. “பசியென்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் ஜீவகாருணியம். பசியென்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே ஜீவகாருணியம். கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய ஜீவதேகங்கள் என்கின்ற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே ஜீவகாருணியம். பசியென்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத் தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே ஜீவகாருணியம். பசியென்கிற விஷம் தலைக்கேறி ஜீவர் மயங்குந் தருணத்தில் ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந் தெளியச் செய்வதே ஜீவகாருணியம். பசியென்கிற கொடுமையாகிய தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்றபோது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக் கலக்கத்தை தீர்ப்பதே ஜீவகாருணியம். நேற்று இராப்பகல் முழுவதும் நம்மை அரைப்பங்கு கொன்று தின்ற பசியென்கிற பாவி இன்றும் வருமே - இதற்கென்ன செய்வோம் என்று ஏக்கங்கொள்கின்ற ஏழை ஜீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் ஜீவகாருணியம்!”
ஜீவகாருணியத்தை மனிதர்களுடனோ, வயிற்றுடனோ வள்ளலார் குறுக்கிவிடவில்லை. “சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசி நிவர்த்தி செய்துகொள்ளத்தக்க மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசி வந்தபோது, பசியை நிவர்த்திச் செய்விப்பதே ஜீவகாருணியம். ஜீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருக்குச் சிறிதும் பாத்திர மாகார்கள். அவர்களை ஆன்ம விளக்கமுள்ளவர்களாகவும் நினைக்கப்படாது. ஜீவகாருணியமில்லாது செய்யப்படுகின்ற செய்கைகளெல்லாம் பிரயோஜனமில்லாத மாயாஜாலச் செய்கைகளே ஆகுமென்று அறிய வேண்டும்!”
பசியைப் பற்றி வள்ளலார் எழுதியவற்றை வாசித்துக் காட்டியபோது, “பசி இவ்வளவு செய்யுமா?” என்று கேட்டாள் என் மகள். இன்றைய காலகட்டத்திலிருந்து பசியைப் பார்ப்பதன் விளைவு அது. இன்றைக்குப் பசி என்று நாம் அறிவது ஒரு வேளை பசியின் வலி அல்லது அதிகபட்சம் ஓரிரு நாள் பசியின் வலி. வள்ளலார் காலத்தின் பசியை நம் காலத்தின் பசியிலிருந்து அறிய முடியாது. பஞ்ச காலப் பசியின் வரலாற்றை அறிந்தவர்கள் வள்ளலார் சொல்லும் பசியின் வலி ஆழத்தை உணர முடியும். தாது வருஷப் பஞ்சக் கதைகளைக் கேட்டவர்கள் பசியாற்றுதலின் வழி எப்படி கடவுளை அடைய முடியும் எனும் வள்ளலாரின் ஜீவகாருணிய வழியைப் பிடிக்க முடியும். “இந்த அடுப்பை மூட்டியபோது, ‘உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது’ என்று சொன்னாராம் வள்ளலார் பெருமான். அப்படித்தான் உபகாரம் நடக்கிறது. அன்னம் பரிமாறும் ஏனைய கோயில்கள், மடங்கள்போல இந்தத் தருமச்சாலைக்குச் சொத்து, நிலப்புலங்கள் என்று எதுவும் கிடையாது. ஆனால், எதன் நிமித்தமும் ஒரு நாள்கூட இங்கு அடுப்பு எரியாமல் இருந்ததில்லை. ஒருவேளைகூட இதுவரை அரிசி விலைக்கு வாங்கியது இல்லை. வெளியே நெல்லுக்கு, புழுங்கலரிசிக்கு, பச்சரிசிக்கு என்று தனித்தனியே தானிய உண்டியல் அமைத்திருக்கிறோம். நாளெல்லாம் யாராவது எங்கிருந்தாவது வந்து கொட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பருப்பு விலை உயர்ந்தபோது கொஞ்சம் கவலையோடு யோசித்தோம். மறுநாளே ஒருவர் பருப்பு மூட்டையோடு வந்து சேர்ந்தார். இப்போது பருப்புக்கு என்று தனி உண்டியல் வைத்திருக்கிறோம். இதைத் தவிர ஐயாயிரம் ரூபாய் கட்டி ஒரு பந்திச் செலவை ஏற்பவர்களும் இருக்கிறார்கள்” என்கிறார் ஞானப்பிரகாசம்.
சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இந்த இடத்துக்கு வருபவர்களுக்கு, ‘விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு தருமச்சாலைக்கு’ என்று வேண்டிக்கொள்ளும் நம்பிக்கை மரபு இருக்கிறது. அது காய்கறியோ, தேங்காயோ, பழங்களோ எதுவாக இருந்தாலும் வந்து சேர்ந்துவிடுகிறது. மாட்டு வண்டி ஒன்றிருக்கிறது. சுற்று வட்டாரக் கிராமங்களுக்குச் சென்றால், தருமச்சாலைக்கென்றே ஒரு விறகோ, ஒரு கட்டு விறகோ அவரவர் வசதிக்கேற்ப எடுத்துப் போட்டு வைத்திருப்பார்களாம். வண்டியைப் பார்த்த மாத்திரத்தில் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்களாம். “இன்று வரை விறகும் வாங்கியதில்லை” என்கிறார் ஞானப்பிரகாசம். தருமம் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதா, சத்தியம் தருமத்துக்குக் கட்டுப்பட்டதா என்று தெரியவில்லை. தமிழகம் வரலாறு காணாத வறட்சியில் சிக்கியிருக்கும் இந்நாட்களிலும் வடலூர் தருமச்சாலையின் சமையல் கட்டு கிணற்றில் தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை.
சாப்பாட்டுக் கூடத்தில் பந்தியில் உட்கார்ந்திருப்பவர்களில் பெரும்பான்மையோர் ஏழைகள், முதியவர்கள். அன்றாடம் வெளியூர்களிலிருந்து வரும் சிறு பக்தர் கூட்டம் நீங்கலாக ஏனையோர் பலரும் குடும்பங்களால் கைவிடப்பட்டவர்கள். சாப்பாடு நேரத்துக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, மற்ற நேரங்களில் சுற்றியுள்ள இடங்களில் முடங்கிக்கொள்கிறார்கள். சாப்பாடு மிக எளிமையானது. காலையில் கஞ்சி ஊற்றுகிறார்கள். இரவில் கலவைச்சோறு. மதியம் மட்டும் சாப்பாடு. சோறு, சாம்பார், ரசம், மோர், தொட்டுக்கை. மாத பூச நாளில் வடை, பாயசம் உண்டாம். தை பூச நாளில் வடலூர் கோலாகலம் பூணுகிறது. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் அந்த நாளில், தருமச்சாலை மட்டும் அல்லாமல் வடலூர் பாதை நெடுகிலும் அவரவர் மனப்படி வகை வகையாக உணவு பரிமாறுகிறார்கள். மூன்று மணிக்கு மேல் நாங்கள் பந்தியில் உட்கார்ந்தபோது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மட்டும்தான் இருந்தது. நார்த்தங்காய் ஊறுகாய். சாம்பார், ரசம், மோர் எல்லாவற்றுக்கும் நல்ல தோதாகவே இருந்தது. “ரொம்ப சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனா, வேறு எங்கேயும் கிடைக்காத ஒரு ருசி தெரியும், கவனிக்கிறீர்களா?” என்று கேட்டார் ஊரன் அடிகளார். உண்மைதான். தருமத்தின ருசியாக இருக்கலாம்!
1867-ல் தொடங்கி கடந்த 150 ஆண்டுகளில் மட்டும் எத்தனை பஞ்சங்கள் இந்த இந்திய நாட்டைச் சூறையாடியிருக்கின்றன என்று யோசித்துப் பார்க்கிறேன். 1865-67-ல் 10 லட்சம் உயிர்களைச் சுருட்டிய ஒரிசா பஞ்சம்; 1868-70-ல் 15 லட்சம் உயிர்களைச் சுருட்டிய ராஜபுதன பஞ்சம், 1876-78 -ல் 1.03 கோடி உயிர்களைச் சுருட்டிய சென்னை மாகாணப் பெரும்பஞ்சம், 1896-97-ல் 50 லட்சம் உயிர்களைச் சுருட்டிய இந்தியப் பஞ்சம், 1899-1900-ல் 10 லட்சம் உயிர்களைச் சுருட்டிய வங்கத்துப் பஞ்சம், 1943-44-ல் 50 லட்சம் உயிர்களைச் சுருட்டிய வங்கத்துப் பஞ்சம்… வள்ளலார் தருமச்சாலையைத் தொடங்கிய அடுத்த 10 வருடங்களுக்குள்தான் தாது வருஷப் பஞ்சம் எனும் சென்னை மாகாணப் பெரும் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கிறது தமிழகம். மனிதனை மனிதனே அடித்துக் கொல்லும் அளவுக்குப் பூதாகரம் எடுத்திருந்திருந்தன பஞ்சமும் பசியும். எப்படி அந்நாட்களில் இந்தத் தருமச்சாலை தாக்குப் பிடித்தது!
எத்தனையெத்தனை புயலையும் வெள்ளத்தையும் வறட்சியையும் பஞ்சத்தையும் இந்த உலகம் நூற்றைம்பது ஆண்டுகளில் பார்த்திருக்கும்? உலகின் வரைபடத்தில் எவ்வளவு மாற்றங்கள்? எத்தனை இயக்கங்கள், எத்தனை முழக்கங்கள், எத்தனை பிரயாசைகள் எழுந்தும் குலைந்தும் போயிருக்கின்றன? ஆனால், அதே உலகத்தின் ஒரு சின்ன மூலையில் மானுடத்தின் ஒரு சின்ன பொறி அணையாமல் எரிகிறது - அங்கு பசியால் ஒரு உயிர் போகவே போகாது, உத்தரவாதமாக, தீர்க்கமாக, சத்தியமாக! இது எவ்வளவு மகத்தான காரியம்! இந்த உலகின் ஒட்டுமொத்த ஒழுங்கின்மைகளுக்கும் நடுவே ஊடுருவி, அதைக் கோத்துத் தாங்கிப் பிடித்திருக்கும் ஒழுங்கின் சாரம்போலத் தெரிகிறது இது!
நாங்கள் தருமச்சாலையிலிருந்து வெளியேறும்போது, கந்தல் உடையுடன், ஒடிந்து விழும் தேகத்துடன் இரு கைகளிலும் இரு பிள்ளைகளைப் பிடித்தபடி மூட்டை முடிச்சைத் தோளில் தொங்கவிட்டபடி உள்ளே வந்து நிற்கிறார் ஒரு இளம்பெண். “போம்மா, உள்ளே புதியவர்களுக்கு என்று சோறு எடுத்து வைத்திருப்பார்கள். கேள். சாப்பிடு” என்கிறார் ஞானப்பிரகாசம். தாய்க்குப் புரிவதற்கு முன்னர் அவர் சொன்னது, அந்தப் பிள்ளைகளுக்குப் புரிவதுபோல இருக்கிறது. அவர்களில் ஒருவன் தாயின் கையை உதறிவிட்டு உள்ளே ஓடுகிறான், தாயும் இன்னொருவனும் அவனைப் பின்தொடர்கிறார்கள். இதைத்தான் தருமம் என்கிறார்கள் சிலர். சத்தியம் என்கிறார்கள் சிலர். ஜீவகாருணியம் என்கிறார் வள்ளலார். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணையே அந்த அருட்பெருஞ்சோதி!
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
படங்கள்: என்.முருகவேல், கிராஃபிக்ஸ்: எஸ்.சண்முகம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago