லெனின் இன்று தேவையா?

லெனின் உலகை வலம் வருகிறார். / கருப்பு, வெள்ளை, பழுப்பு / எல்லா நிறத்தவரும் அவரை வரவேற்கின்றனர். / மொழி தடையே அல்ல. / அவரை அரிதினும் அரிதான மொழியைப் பேசுபவர்களும் நம்புகின்றனர்.

ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான லாங்ஸ்டன் ஹ்யூஸ் எழுதிய இந்த வரிகள், சென்ற நூற்றாண்டின் 70-கள் வரை உண்மையாக இருந்தன. இன்றைய உண்மை வேறு. லெனினைப் பற்றி அறிந்தவர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது. இதற்குக் காரணங்கள் பல. லெனினின் வழி வந்தவர்கள் செய்த தவறுகளும் இவற்றில் ஒன்று. ஆனால், முக்கியமான காரணம், தொழில்நுட்பத்தின் துணைகொண்டு முதலாளித்துவம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம். இந்த முன்னேற்றம் ஏற்றத்தாழ்வை ஒழிக்குமென்றோ அல்லது போரற்ற சமுதாயத்தை உருவாக்குமென்றோ நம்பிக்கை கொள்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மாறாக, முதலாளித்துவத்துக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த நெருக்கடிகளைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களின் கரங்களை ஓங்க வைக்கும் வழிமுறைகளை நமக்குக் காட்டும் தலைவர்கள் இன்று இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

விடுதலை இயக்கமும் லெனினும்

உலகத் தலைவர்களில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தவர்களில் முதன்மை யானவர் லெனின். இதை நமது விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட எல்லாத் தலைவர்களும் நன்றியோடு நினைத்தனர். காந்தி சொன்னது இது: “லெனின் போன்ற மனவலிமை மிக்க பெருந்தலைவர்கள் லட்சியத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு நிச்சயம் பலனை அளிக்கும். அவரது தன்னலமற்ற தன்மை பல நூற்றாண்டுகளுக்கு ஓர் உதாரணமாக விளங்கும். அவரது லட்சியமும் முழுமை அடையும்.”

நேருவைப் படித்த எவரும் அவருக்கு லெனின் மீதிருந்த பெருமதிப்பை உணரத் தவற மாட்டார்கள். பகத் சிங் தூக்குமேடை ஏறுவதற்கு முன்பு படித்த கடைசிப் புத்தகம் லெனினின் வாழ்க்கை வரலாறு என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

லெனினும் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார். உதாரணமாக, 1910ம் ஆண்டு பிரிட்டனின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்ல சாவர்க்கர் முயன்றபோது பிரெஞ்சு அரசு அவரைச் சிறைபிடித்தது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் லெனின் முக்கியமானவர் என்று சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன.

லெனினின் தேவை

சரி, விடுதலை இயக்கத்தின்போது அவர் தேவையாக இருந்திருக்கலாம். இன்று அவரது தேவை என்ன?

லெனின் 1918-ல் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்’ புத்தகத்தைப் படித்தால் பதில் கிடைக்கும். ஏகாதிபத்தியத்தின் ஐந்து முக்கியக் கூறுகளை இந்நூலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

1. ஏகபோக முதலாளித்துவம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுவது.

2. நிதி நிறுவனங்களின் கை ஓங்குவது.

3. நிதி ஏற்றுமதியின் முக்கியத்துவம் அதிகரிப்பது.

4. ஏகபோக முதலாளிகள் உலகப் பொருளாதாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது.

5. உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது.

இவற்றில், கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பங்கீடு முதல் உலகப் போருக்குப் பின் நடந்தது என்பது உண்மை. ஆனால், முதலாளித்துவ நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்களால் நடந்த இரண்டாவது உலகப் போரின் விளைவாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாலும் நேரடியாகப் பங்கிட்டுக்கொள்ளப்பட்ட நாடுகளுக்குப் பெயரளவில் விடுதலை கிடைத்தது. ஏகாதிபத்தியம் லெனின் கூறிய மற்றைய அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் மக்களுக்கு என்ன கேடு என்று சிலர் கேட்கலாம். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் நேற்று கனவாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று அது முற்றிலும் சாத்தியமானது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அதைச் சாத்தியமாக்குகிறது. இவை வளர்ந்ததற்கு முதலாளித்துவம் முக்கியமான காரணம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், வளர்ச்சியின் பயனை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு அதனிடம் இல்லை. இருந்தால் அது முதலாளித்துவமாக இருக்காது. இதனாலேயே இன்று உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. போர்கள் தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மதவாதி களும் பழமைவாதிகளும் தூக்கி நிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் எவரும் ஏகாதிபத்தியம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்ல மாட்டார்கள்.

லெனின் முக்கியமான மற்றொன்றையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஏகாதிபத்தியம் ‘லேபர் அரிஸ்டோக்ரசி’ என்று அழைக்கப்படும் உயர் குலம் ஒன்றை, உழைக்கும் மக்களிடையே உருவாக்குவதைப் பற்றி. இன்று இந்த உயர்குலம் முன்னேறிய நாடுகளில் மட்டுமன்று, முன்னேறும் நாடுகளிலும் உருவாகியிருக்கிறது. உழைக்கும் மக்களுக்காகப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள், இந்த உயர்குலத்துக்காகப் பேசும் அவலத்தையும் நாம் காண்கிறோம்.

காலத்துக்கேற்ற மறுவாசிப்பு

1902-ம் ஆண்டு லெனின், ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற புத்தகத்தை எழுதினார். இது உழைக்கும் மக்களுக் கான கட்சி எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறது. என்ன சொல்கிறது என்பதுபற்றி மார்க்ஸிய அறிஞர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிக்கு உழைக்கும் மக்களின் தேவைகள் என்ன என்பதுபற்றிய புரிதலும் அவர்களுடன் எவ்வாறு சேர்ந்து இயங்க வேண்டும் என்பதுபற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற லெனினின் அடிப்படைக் கருத்துகுறித்து எந்த வேறுபாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் புரிதலும் தெளிவும் உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிகளுக்கு இருந்திருந்தால், இன்று கேஜ்ரிவால்களின் தேவை இருந்திருக்காது. தேசியப் பேரினவாதக் கட்சிகளும் சாதிக் கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் தலைதூக்கியிருக்க முடியாது. எனவே, இந்தியாவைப் பொறுத்தமட்டும் மக்களுக்கு அடிப்படை விடுதலை இன்றுவரை கிட்டவில்லை என்று கருதுபவர்கள் காந்தியையும் அம்பேத்கரையும் மார்க்ஸை யும் ஏங்கல்ஸையும் குறிப்பாக லெனினையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். கூடவே, முதலாளித்துவத் தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிய அறிதலும் இருந்தாக வேண்டும். அது லெனினுக்கு நிச்சயம் இருந்தது.

என்றும் தேவையானவர்

லெனினுடைய பெயர் வரலாற்றின் அடிக்குறிப்பு களுக்குள் தள்ளப்படும் நாட்கள் தொலைவில் இல்லை என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். லெனின் அவ்வளவு எளிதாக மறையக் கூடியவர் அல்ல. ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்கப்படுதல், ஏகாதிபத்தியத்தின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்கள், முற்றுகைகள், ஏகபோக முதலாளிகளுக்குத் தரப்படும் தங்குதடையற்ற சுதந்திரம் போன்றவை உலகில் இருக்கும்வரை, லெனின் சொன்னவை எல்லாம் நினைவில் இருக்கும். ‘எல்லோரும் ஓர் நிலை, எல்லோரும் ஓர் நிறை’ ஆகும் நாள் வரும்போது அவரது பெயர் நன்றியோடு சொல்லப்படும்.

- பி.ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்