ஈழத் தமிழர் வாழ்வில் பொங்கல் இனி பொங்குவது பிள்ளைகளுக்காக…

பொங்கல் என்றாலே வாயில் இனிக்கிறது. ஆனால், அந்த இனிப்பை வாயில் போட்டுக்கொள்வதுதான் ரொம்பக் கடினம் பாரதிக்கு. போருக்குப் பிறகு, நான்கு ஆண்டுகளாகப் பொங்கலைத் தவிர்த்துவந்தாள். “எங்கள் வீட்டில் பொங்கல் கிடையாதா அம்மா?” என்று பிள்ளைகள் கேட்டபோது, அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியவில்லை. பிள்ளைகளை வாரியணைத்துக்கொண்டு ஒரு கணம் விம்மினாள். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அக்கம்பக்கமெல்லாம் பொங்கலுக்காகக் களைகட்டும்போது, தங்கள் வீட்டில் மட்டும் பொங்கல் இல்லையென்றால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? அதனால், இந்த ஆண்டு பொங்கியே ஆக வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறாள் பாரதி.

இனிப்பை மட்டுமே தேடியவள்

வன்னி - இறுதிப் போரிலே அவளுடைய கணவன் காணாமற்போன பிறகு, அவள் பொங்கலைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அதைப் பற்றிச் சிந்திக்கும் நிலையிலும் அவள் இல்லை. கணவனைத் தேடிக்கொண்டிருக்கும்போது, அவரைப் பற்றிய எந்தத் தகவலுமே கிடைக்காத போது, அவர் இல்லாதபோது, எப்படிப் பொங்குவது? ஆனால், இனிக்கிற மாதிரி வாழ்க்கை இல்லா விட்டாலும் இனிப்பைத் தேடும் மனதை விட்டுவிட முடியுமா? பிள்ளைகளின் மனம் இனிப்பையே தேடிக்கொண்டிருக்கிறது. இளங்கன்றுகள் எதைத்தான் அறியும்? அவள்கூட இளைய வயதில் இனிப்பை மட்டுமே தேடியவள்.

பொங்கல் என்பது கடந்த காலமா?

முல்லைத்தீவுக்குக் கிழக்கே இருக்கும் குமுழமுனை என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில், அவளுடைய பொங்கல் நாட்கள் வீடும் சுற்றமும் என இனிப்பாகவே இருந்தன.

ஒரு வாரத்துக்கு முன்பாகவே வீட்டை ஒழுங்குபடுத்தத் தொடங்கிவிடுவாள் அம்மாச்சி. வேலியையும் வளவையும் சீர்படுத்திப் புதிதாக்கி விடுவார் ஐயா. வருவது தை அல்லவா! மாரி மழையில் புதிதாகத் துளிர்த்திருக்கும் செடிகள் தையை வரவேற்கிற மாதிரியே செழித்துப் பூத்திருக்கும். வயலில் கதிர்கள் முற்றிச் சரியத் தொடங்கும். வயலும் வீடும் என்றிருக்கும் ஐயா, பொங்கலுக்காகப் பின்னேரங்களில் வேளையோடு வீட்டுக்கே வந்துவிடுவார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலை. மண்ணில் அடுப்புகளைப் பிடித்துக் காயவைப்பது, மாட்டுப்பட்டியைத் துப்புரவாக்குவது. எருது களுக்குக் கழுத்துச் சலங்கைகளைப் புதிதாக்கிக் கட்டுவது, சந்தைக்குப் போய்ப் புதுப் பானை, பாத்திரங்கள், பட்டு, பழம், பாக்கு - வெற்றிலை, புதிய உடுப்புகள், வெடிப்பெட்டிகள் (பட்டாசு) எல்லாம் வாங்கிவருவது என்று ஆயிரம் வேலைகள். மட்டுமா, தோட்டத்தில் கரும்பு, இளநீர், தேங்காய் எல்லாவற்றையும் கொண்டுவருவது என்றும் பல. இதைவிட, வீட்டில் எந்த நாளும் தயிர் இருந்தாலும் பொங்கலுக்காகத் தயிர் போடுவது அம்மாவின் விசேஷம். நெய், தேன் வேறு. பொங்கல் என்றால் சும்மாவா? அதிலும் தைப்பொங்கல் என்றால்? தமிழர் திருநாள் அல்லவா! என்பதால் வாரமாக வீடே குதூகலிக்கும். வீடு மட்டுமா, ஊர், தெரு, சந்தை எல்லாம்தான்.

கிறிஸ்தவர்களும் கொண்டாடினார்கள்

அந்த அளவுக்கு ஈழத்தில் தைப்பொங்கல் எல்லா மக்களிடமும் நிறைந்த கொண்டாட்டம். சூரியனுக்கு விவசாயிகள் காணிக்கை செலுத்தி வணங்கும் நாள் என்று சொல்லப்பட்டாலும், தமிழர்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள்கூட அதைக் கொண்டாடினார்கள். எல்லா வீடுகளும் அந்த நாட்களில் குதூகலித்திருந்தன. பொங்கற் பானையும் கரும்பும் தேனும் நெய்யும் நிறைந்த முற்றங்களே எங்குமிருந்தன. பட்டாசுகள் வெடிக்கும் சத்தமே ஊரில் நிறைந்திருந்தது. ஆட்டமும் பாட்டமும் விருந்தும் கொண்டாட்டமும் என்று நாளே இனித்தது. தைப்பொங்கல் முடிந் தால், மறுநாள் பட்டிப் பொங்கல். உழவுக்கு, உழவர்களுக்கு துணையாக இருக்கும் மாடுகள், பாலையும் எருவையும் தரும் பசுக்கள் எல்லாவற்றுக்கும் மரியாதை செலுத்தும் விதமான பொங்கல். மாடுகளுக்குக் குளிப்பாட்டி, மாலை அணிவித்து, பட்டியையும் மாடுகளையும் அலங்கரித்து நடத்தும் பொங்கல். ஊர்களே அலங்காரத் தோரணத்தின் கீழ்தான் இருந்தன.

பொங்கல் காணாமல் போன ஆண்டு: 1983

எல்லாம் யுத்தம் வராதவரைதான். 1983 இன வன்முறையோடு நாடு தலைகீழாயிற்று. அதற்குப் பிறகு, பட்டாசுச் சத்தத்துக்குப் பதிலாக துப்பாக்கிச் சத்தங்களே கேட்டன. ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் புதல்வர்களும் புதல்விகளும் ‘சொல்லாமல் போனார்கள்.’ பிள்ளைகள் இல்லாத வீடுகளில் பொங்கல் எதற்கு, கொண்டாட்டம் எதற்கு, என்றாயிற்று நிலைமை. மெல்ல மெல்ல வீடுகள் துயரில் உறைய, ஊர்களும் இருளில் உறைந்தன. யுத்தம் வளர்ந்துகொண்டிருந்தது. முட்காடாக அது வளர வளர… ஊர்களை விட்டுப் பெயர்ந்த மக்கள் மர நிழல்களிலும் பள்ளிகளிலும் அகதி முகாம்களிலும் தஞ்சமடைந்தனர்.

முற்றத்தை இழந்த பின் எப்படிப் பொங்குவது? எங்கே பொங்குவது? பொங்கல் ஏறக்குறைய செத்துப்போயிற்று என்ற நிலைதான். எங்காவது சில வீடுகளில் சம்பிரதாயமாக எந்த விதமான குதூகலங்களும் இல்லாமல் பொங்கிக்கொண்டார்கள். பட்டாசோ கரும்போ கிடையாது. அப்படிப் பொங்கினாலும் மனதில் அதன் சங்கடம் குற்றவுணர்வாகவே உறுத்திக்கொண்டிருக்கும். பொதுவில் 80-களின் பிறகான பெரும்பாலான குழந்தைகளுக்கு முற்றம் தெரியாது. பொங்கலும் பண்டிகைகளும் தெரியாது. என்றாலும், இடையில் தலைநீட்டிய போர் நிறுத்தம் - பேச்சுவார்த்தை போன்ற இடைஅமைதிக் காலங்களில் பொங்கல் மெல்லத் துளிர்க்கும்.

அமைதிக்காலப் பொங்கல்

2002-ல் அப்படித்தான். ரணில் - பிரபாகரன் உடன்படிக்கையை அடுத்து வந்த போர்நிறுத்தக் காலத்தில் ஒரு பொங்கல் நடந்தது. அப்பொழுது புலிகளில் பல விதமான போக்கை உடையவர்கள் துலக்கமடையத் தொடங்கினார்கள். ஒரு சாரார் தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் திருநாள் - தமிழரின் திருநாள் - என்பது தைத்திரு நாளே என்று தைப்பொங்கல் நாளைக் கொண்டாடி னார்கள். இதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் சிறப்பாக அமைக்கப்பட்ட முற்றத்தில் பொங்கல் நடந்தது.

இது வழமையான பொங்கல் அல்ல. தமிழர்களின் பாரம்பரியத்தையும் அடையாளத்தை யும் புதுப்பிக்க வேண்டும் என்ற பிரகடனத்தோடு இறைச்சி வகைகளைப் பானையிலிட்டுப் பொங்கல் நடந்தது. தமிழர்களின் இசை என பறையும் உடுக்கும் முழங்கின. புலிகளின் தளபதிகளில் சிலரும் பொறுப்பாளர்களில் சிலரும் இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். பொங்கலை அடுத்து அதைப் பற்றிய ஒரு விளக்க அரங்கும் சில கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த மாதிரிப் பொங்கல் செய்வதை அனுமதிக்கலாமா? இது சரியானதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் கிளம்பத் தொடங்கின. பொங்கல் பானையில் இப்படி இறைச்சியைப் போட்டுக்கொள்ளலாமா? இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அபிப்பிராயங்கள் அன்றே இன்னொரு பக்கத்தில் எழுந்தன. எங்கும் குழப்பம். இது நடந்தது பகலில். இரவு, இந்தப் பொங்கலைப் பற்றி பிரபாகரன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அந்தப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டவர்கள் தங்களின் தலைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. ஆனாலும், விசாரணைகள் கடுமையாக நடக்கவில்லை. இந்தப் பொங்கலில் தனக்குத் திருப்தியில்லை என்ற செய்தியை வெளியே தெரியப்படுத்தி, விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் பிரபாகரன். “போராட்டம் வென்ற பின்னர், நாங்கள் வைத்ததே சட்டம். நாங்கள் தீர்மானிப்பதே நடைமுறை. அதற்குள் இப்படிப் பகிரங்கமாக அவசரப்பட்டு மக்களைக் குழப்பிவிடாதீர்கள்” என்று பொங்கலைச் செய்தவர்களையும் சமாதானப்படுத்தினார் பிரபாகரன். அந்தப் பொங்கல் அதனுடன் முடிந்தது. ஆனால், வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் வழமையான பொங்கல் சுமாராக நடந்தது.

2009, ஜனவரி 13

இறுதிப்போர் மூண்டது. நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து, தருமபுரத்தில் இருந்தோம். அகதிகளால் நிறைந்திருந்தது தருமபுரம். 2009 ஜனவரி 13. மறுநாள் பொங்கல். அந்த நினைவே யாருக்கும் இல்லை. பெரும்பாலானவர்கள் வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தனர். வேறு கதியின்றி வயல்நிலப் பகுதிகளில் குடிசைகளை அமைத்திருந்தவர்களை மாரி மழையின் வெள்ளம் பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. அந்த நிலையில்தான் அன்று மதியம் தரும புரத்தை நோக்கி வந்தன எறிகணைகள். வந்த நான்கு எறிகணைகளில் மூன்றும் சனங்களின் குடியிருப்பில் வீழ… எங்களின் குடிசைக்கு அண்மையாக ஆறு பேர் சிதறி மாண்டனர். 2009 பொங்கல் யாருக்குமே அமையவில்லை.

போர் முடிந்த பிறகு, மீள்குடியேற்றத்தின் மூலம் ஊர் திரும்பினாலும், யாரும் பொங்கல் செய்யக் கூடிய நிலையில் இருக்கவில்லை. வீடுகளும் முற்றங்களும் இரவல் போலவே இருந்த நிலை. யுத்தத்தின் வடுக்கள் எளிதில் ஆறிவிடுவதில்லை அல்லவா! ஆனாலும் காலம் எந்தக் காயத்தையும் ஆற்றிவிடும் பெருமருத்துவனாயிற்றே. இனிக்கிற மாதிரி வாழ்க்கை இல்லாதுவிட்டாலும், இனிப்பைத் தேடும் மனம் பொங்கல் பானையை முற்றத்தில் வைக்கத் தூண்டுகிறது. அதுதானே இயல்பும் யதார்த்தமும்.

கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பொங்கல் கொண்டாட்டங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சந்தைகளும் தெருக்களும் வீடுகளும் களைகட்டுகின்றன. பட்டாசுகளை வெடிக்க வைக்கும் பிள்ளைகளின் முகத்தில் தெரிவது, தன்னுடைய இனிப்பான காலமே என்று தெரிகிறது பாரதிக்கு. இதுவரையும் பொங்காமல் விட்டது கணவருக் காக. இனி பொங்குவது பிள்ளைகளுக்காக. இது பிள்ளைகளின் உலகம். நாளைய நாட்கள் அவர்களுடையவை, அவர்களுக்கானவை அல்லவா?!

- கருணாகரன், கவிஞர், சுயாதீன ஊடகவியலாளர், தொடர்புக்கு: poompoom2007@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்