தூய்மையை எங்கே தொடங்க வேண்டும்?

By பி.ஏ.கிருஷ்ணன்

வாரம் ஒரு முறை அனைவரும் சேர்ந்து தெருக்களைக் கூட்டுவதால் இந்தியா தூய்மையாகிவிடாது.

“நம்மை மரணத்தின் பிடியில் தள்ளும் வியாதிகள் பல பரவுவதற்குக் காரணம், நமது சுற்றுச்சூழல் தூய்மையாக இல்லாததுதான். மனிதக் கழிவு, அழுகும் காய்கறிகள் மற்றும் இறந்து, அகற்றப்படாத மிருகங்கள் - இவை ஏற்படுத்தும் நாற்றம் காற்றில் நீக்கமறக் கலந்திருக்கிறது. எங்கு சென்றாலும் - பெரிய நகரங்களானாலும், சிறிய கிராமங்களானாலும் இதே கதைதான்.”

இவர் இன்னும் சொல்கிறார்:

“வீடுகள் நெருக்கமாகக் காற்றோட்டமில்லாமல் இடித்துக்கொண்டிருக்கின்றன. சுற்றிலும் குப்பை. தெருவுக்கு நடுவே சாக்கடை ஓடுகிறது. இதில்தான் வீடுகளிலிருந்து வரும் எல்லாக் கழிவுகளும் அடைக்கலம் ஆகின்றன. தெருக்கோடியில் தண்ணீர் குளம் போலத் தேங்கியிருக்கிறது.”

சொன்னது யார்? நரேந்திர மோடியா? காந்தியா? இல்லை. இது எட்வின் சாட்விக் என்ற பிரிட்டானிய அறிஞர் கூறியது. 1842-ம் ஆண்டு லண்டன் நகரத்தின் அசுத்தமான நிலையைப் பற்றி அவர் எழுதிய அறிக்கையில் இந்த வரிகள் வருகின்றன. அவர் எழுதி 172 ஆண்டுகள் முடிந்துபோன பின்பும், நமக்கு இந்த வரிகள் நேற்று எழுதப்பட்டதுபோல இருக்கின்றன என்றால், பொதுத் தூய்மையில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.

பிரதமரின் தூய்மை பாரதம்

தூய்மை பாரதம் வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது முற்றிலும் சரி. நாம் அனைவரும் அதை வரவேற்க வேண்டும். ஆனால், நம் அனைவருக்கும் தூய்மையாக்குவதில் செலவிடப்படும் பல கோடி ரூபாய்கள் சாக்கடைகளுக்குள் மறைந்து சுவடு தெரியாமல் போய்விடும் என்ற எண்ணம் உண்டாவது ஏன்? இந்தியாவில் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கிய திட்டங்கள் எல்லாம், அநேகமாக கடைசியில் யாருக்கும் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றன என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிந்திருப்பதால்தான்.

இந்தத் திட்டம் நிறைவேறினால், காந்தியின் கனவு நனவாகும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இது வாரம் ஒரு முறை நல்லவர்கள் அனைவரும் சேர்ந்து தெருக்களைக் கூட்டுவதாலும், கழிப்பறைகளைக் கழுவுவதாலும் நிறைவேறக் கூடிய காரியம் அல்ல. கொஞ்சம் சிக்கலானது.

அசுத்தம் ஏழ்மையினால் உண்டாகிறது என்று எட்வின் சாட்விக் திடமாக நம்பினார். ஆனால், இவரது புத்தகத்தை மேற்கோள் காட்டும் எங்கெல்ஸ் அசுத்தம் அசுர வடிவம் எடுத்ததற்குக் காரணம், தொழில் யுகம் தொடங்கியதால்தான் என்கிறார். தொழில் யுகமும் நமது நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்து இன்று பேரசுரர்களை உருவாக்கியிருக்கிறது.

பேரசுரர்களை வீழ்த்துவது குப்பைகளைப் பெருக்குவதால் நடக்காது. கண்ணுக்குத் தெரியாமல் நமது கால்களுக்குக் கீழ் இயங்கும் கழிவு உலகம் மிகப் பெரியது. அதைச் சீர்செய்ய வேண்டுமானால், இன்றைய நடைமுறைகள் மாற வேண்டும். இந்தத் துறையில் இயங்குபவர்கள் உதவியோடு தொழில்நுட்பத்தின் உதவியும் தேவை. ஆனால், இந்தத் துறையில் இயங்கும் தொழிலாளர்களை நாம் எந்த நிலைமையில் வைத்திருக்கிறோம்?

நிலைமை என்ன?

இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நிலைமையைப் பற்றிப் பல அறிக்கைகள் வந்திருந் தாலும், நிலைமை சீரடைந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக, மும்பை நகரில் தினமும் சுமார் 4,000 தொழிலாளர்கள் 50,000-க்கும் மேலான பாதாளச் சாக்கடைகளில் இறங்கி, இரும்புக் கம்பிகளையும், மூங்கில் குச்சிகளையும் வைத்துக்கொண்டு சுத்தம் செய்கிறார்கள். தலைக் கவசத்தைத் தவிர, எந்தப் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.

டாடா சமுதாய அறிவியல் கழகத்தின் அறிக்கை ஒன்றின்படி, மும்பை நகரத் துப்புரவுத் தொழிலாளர்களில் அநேகமாக யாரும் 65 வயதுக்கு மேல் வாழ்வதில்லை. 80 சதவீதத்துக்கும் மேல் 60 வயது ஆகும் முன்பே இறந்துபோகிறார்கள் (இந்தியத் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வு எதிர்பார்ப்பு 45 வருடங்கள் மட்டுமே என்று மற்றொரு அறிக்கை சொல்கிறது). சில ஆண்டுகளுக்கு

முன்னால் வந்த ஓர் அறிக்கை, மும்பை நகரச் சுத்தித் தொழிலாளர்கள் மாதத்துக்கு 25 வீதம் என்ற கணக்கில் இறந்துபோகிறார்கள் என்று சொன்னது. இப்போது இது மாதம் 12 ஆகக் குறைந்துவிட்டது என்று கூறப் பட்டாலும், உலக அளவில் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. உதாரணமாக, நியூயார்க் நகரில் இத்தகைய இறப்புகள் வருடத்துக்கு நான்கு.

சிங்காரச் சென்னை

சென்னையைப் பொறுத்தவரையில் அதன் சாக்கடை களின் நீளம் 2,600 கிலோ மீட்டருக்கும் மேல். பாதாளச் சாக்கடைத் துளைகள் 80,000-க்கும் மேல். இதைத் தவிர 5,000 டன் குப்பைகளை நாம் தினமும் வெளியில் வீசுகிறோம். இதை அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பு சுமார் 10,000 துப்புரவுத் தொழிலாளர்களுடையது. அவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?

தொழிலாளர்களில் 95 சதவீதம் அருந்ததியர். வெறும் கயிற்றை மட்டும் துணையாகக் கொண்டு, சாக்கடையில் இறங்குபவர்களை உங்களில் பலர் பார்த்திருக்கக் கூடும். வெளியில் வந்தால் குளிப்பதற்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம். தமிழ்நாட்டில் மாதம் ஒருவராவது பாதாளச் சாக்கடையில் பாதுகாப்பு இல்லாமல் இறங்கி, இறக்கிறார்.

தூய்மை என்று சொல்லி, இவர்களை அதிக வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் அபாயம் நிச்சயம் இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால் விபத்துகள் அதிகம் நிகழக் கூடும்.

சம்பளம் என்ன?

இவ்வளவு ஆபத்தான தொழில் செய்பவர்களுக்கு நாம் என்ன சம்பளம் கொடுக்கிறோம்? தமிழக அரசின் சமீபத்திய அறிக்கையின் படி இவர்களின் சம்பளம் நாளைக்கு 278 ரூபாய். 25 நாட்கள் வேலை பார்த்தால் மாதம் 7,000 ரூபாய்க்கும் குறைவு.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிக்கை ஒன்றில் 17,000 துப்புரவுத் தொழி லாளர்களைக் கிராமங்களில் பணி நியமனம் செய்யப்போவதாக கூறப்பட்டிருந்தது. அவர்களுக்கு அறிவித்திருந்த சம்பளம் மாதம் 2,000 ரூபாய். 40 ரூபாய் பஞ்சப்படி!

மாறாக, நியூயார்க் நகரில் துப்பரவுத் தொழிலாளர் மாதம் 6,000 டாலர்கள் சம்பளம் வாங்குகிறார். ஒரு ஆரம்ப நிலைக் கல்லூரி ஆசிரியருக்கு அமெரிக்காவில் இதைவிடச் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். மற்றைய இடங்களிலும் துப்புரவுத் தொழிலாளர்களின் கூலி மணிக்கு 12 டாலர்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில் சம்பளம் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்!

இந்தத் தொழில் இயந்திரமயமாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் நமக்கு இருக்கக் கூடாது. பெருநகரங்களில் வேலை செய்பவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பயிற்சி பெறாத துப்புரவுத் தொழிலாளர்களை எந்த நகரங்களிலும் வேலைக்கு அமர்த்தக் கூடாது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பெருநகர் ஒன்றின் அடுக்கு மாளிகைக் கட்டிடத்தின் பாதாளச் சாக்கடையில் இறங்கிய மூவர் மரணமடைந்தனர். அவர்களில் இருவருக்கு வயது 30-க்கும் குறைவு. விசாரணையில், பாதுகாப்பு முகமூடிகளின்றி அவர்கள் சாக்கடையில் இறங்கினார்கள் என்பது தெரியவந்தது. காரணம்? அடுக்கு மாளிகை கொடுக்கும் பணத்தில் முகமூடிகளை வாடகைக்கு எடுப்பது கட்டுப்படியாகாது என்பது. பல லட்சம் செலவழித்து வீடு வாங்குபவர்கள் சில நூறு ரூபாய்கள் அதிகம் கொடுக்கத் தயங்கியதன் விளைவு. நாம் தெருக்களில் இறங்கிச் சுத்தம் செய்வதற்கு முன்னால் மனங்களைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை',
‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்