சம்பா சாகுபடி: நெல்வளமும் சொல்வளமும்

By செய்திப்பிரிவு

காவிரிப் படுகையின் சம்பா நெல் சாகுபடி கிட்டத்தட்ட நிறைவுபெற்றுவிட்டது. சம்பாவுக்கு மண்வளம், நீர்வளத்தோடு தொடர்பு இருப்பதுபோலவே சொல்வளத்தோடும் தொடர்பு உண்டு.

வயலும் வரப்பும் வைக்கோலுமாக இருக்கும் இடத்தில் நுட்பத்துக்கும் துல்லியத்துக்குமான சொற்கள் இருக்குமா? உடலைக் கொண்டே உழைக்கும் இடத்தில் பண்பாட்டின் மென்மையைக் காட்டும் வழக்கங்களும் சொற்களும் உண்டா?

சம்பாவும் செம்பாளையும்

ஒருவரது மேனியின் வாளிப்பை வியப்பவர்கள் “சும்மாவா! செம்பாளைச் சோறும் பசு நெய்யும்” என்று காரணம் கூறுவார்கள். செம்பாளை என்பது ஏகமாகப் புழக்கத்திலிருந்த ஒரு நெல் வகை. செம்பழுப்பாக, நல்ல சுணையோடு, ஆள் உயரம் வளர்ந்து கதிர் பழுத்ததும் சாய்ந்து படுத்துவிடும்.

ஆனாலும், நிதானமாகவே அறுக்கலாம். ஆடி முதலுக்கு விதைவிட்டால் தை முதலுக்கு அறுவடை. நாள் பார்த்துப் பொன்னேர் கட்டி, விதை முகூர்த்தம் நடக்கும். வயலில் ஈசானிய மூலையில் கொத்தி, தாழங்குருத்துச் சாத்தி, பிள்ளையார் பிடித்துவைத்துக் கும்பிட்டு, மாட்டுக்கும் கலப்பைக்கும் சந்தனம், குங்குமம் இட்டு, கிழக்கு முகமாக ஏர் ஓட்டுவார் கள். தென் கிழக்கிலிருந்து வடமேற்காகவும் ஓட்டுவது உண்டு.

காய்ந்து வெடித்துக்கிடக்கும் வயலுக்கு முதன்முதலில் தண்ணீர் வைப்பதை வெங்கார் பாய்ச்சுவது என்பார்கள். தண்ணீர் பட்டவுடன் மண் பூவாக மலர்ந்துவிடும். இந்த மலர்ச்சியின் மென்மைக்குப் பெயர் பூங்கார். பூங்கார்ப்பு இருந்தால் உழவு எளிது.

ஆறும் ஆறுமாகவே எல்லாம்

ஒரு மா (ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு) நிலத்துக்கு ஆறு மரக்கால் விதை.பதினெட்டு மரக்கால் விதையை வைக்கோலால், வைக்கோல் பிரியைக் கொண்டே கோட்டையாகக் கட்டி, சாணிமெழுகி இருப்பில் வைத்திருப்பார்கள். ஒரு மாவுக்கு ஆறு குழி (நூறு குழி ஒரு மா) நாற்றங்கால், நடுவதற்கு ஆறு நடவாட்கள்.

காலையில் கோட்டையை ஆற்றிலோ குளத்திலோ போட்டு அந்திப்பொழுதில் கரையேற்றி மறுநாள் உச்சிப்பொழுதுவரை நனைத்துக்கொண்டிருப்பார்கள். பொழுது சாயும்போது, விதை பன்றிக் கொம்பாகப் பருவம் கண்டிருக்கும். முளைக்காவிட்டால், விதை பழுது. நாற்றங்காலில் தண்ணீரைக் கட்டிவைத்து விதையைப் பட்டம்போட்டுத் தெளித்துவிடுவார்கள். ஊறப் போட்ட மறுநாள் பருவம் காணாவிட்டால், மூன்றாவது நாளில் தெளிப்பது வழக்கம்.

இது மூன்றாங்கொம்பு - மூன்றாம் பிறையின் கோடுபோல முளையைப் பார்க்கலாம். விதையை ஊற வைக்காமல் தெளிப்பதும் உண்டு. இது வெள்விதை.

விதைத்த மறுநாள் நாற்றங்காலை வடிய விட்டு, வெடிப்பு கண்டவுடன் சீராகத் தண்ணீர் வைப்பார்கள். இது மூன்றாந்தண்ணீர். வடிய வைக்க முடியாமல் மழை பெய்துவிட்டால் விதை பகை. முனையில் துளை போட்ட கருங்கல்லை நாற்றங்காலின் நான்கு ஓரத்திலும் சேற்றில் அழுந்த இழுத்தால் வாய்க்கால் உண்டாகி தண்ணீர் அதில் இறங்கி வடியும். இது வாய்க்கால் அல்ல, தோண்டிக்கால். இறைகூடையால் இறைப்பதும் உண்டு.

ஆறு மரக்கால் விதை ஆறு கட்டு நாற்றாகும். நாற்றை இரண்டு பிடி பறித்து ஒன்றுசேர்த்தால் ஒரு முடி. பத்து முடி ஒரு குப்பை. பத்து குப்பை ஒரு கட்டு. நாற்று பறிக்காமல் இருக்கும்போது அது நாற்றங்கால். பறித்தபிறகு பறியங்கால். கோடையில் தரிசாகக் கிடக்கும் வயல் பட்டக்கால்.

இதுதான் அதிசயம்

நடும்போது மூன்று, நான்கு நாற்றுகளாக ஊன்றுவார்கள். இது ஒரு முதல். ஒரு ஒட்டை இடை வெளியில் அடுத்த முதல். கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் முடிந்தவரை விலக்கிப் பிடித்தால், அந்த இடைவெளி ஒட்டை. இப்படி விரலால் ஊன்றியே பழைய நஞ்சையும் புதுநஞ்சையுமாகப் பதிமூன்றேகால் லட்சம் ஏக்கர் நிலத்தை நாற்றால் மூடிவிடுவார்கள் பெண்கள்! உலக அதிசயங்கள் எல்லாம் அதிசயமல்ல, இதுதான் அதிசயம்.

நட்டுவிட்டால் நாற்று முதலாகும். முதல் நிமிர்ந்தால் பயிராகும். பிறகு கதிர். அறுத்து நெல்லைப் பிரித்து விட்டால், அதுவே தாள். தாளைப் போரடித்துத் துவைத்துவிட்டால் வைக்கோல்.

நாற்றால் சிறைப்பிடிக்கலாம்

நடவின்போது பண்ணையின் சின்ன ஆண்டை வயலில் இறங்கினால், நடவாட்கள் சுற்றிலும் நாற்றை நட்டுச் சிறைவைத்துவிடுவார்கள். பிணைப்பணம் கொடுத்துதான் நாற்றுச் சிறையிலிருந்து மீளலாம். நடவு வயலின் சிலிர்ப்புத் தண்ணீர் மீது வெள்ளிக் கம்பிகளாக, தங்க இழைகளாக முடிவில்லாமல் நீண்டு, குரலின் நீட்சியே ராகமாக நடவுப் பாட்டுகள் பெருகிவரும். நடவு முடியும் நாளில், நடவாட்கள் நாற்று முடி ஒன்றை மீந்த முதலாக வீட்டுக்குக் கொண்டுவருவார்கள். அன்று அவர்களுக்கு வெற்றிலைப்பாக்குடன் பணம் கொடுப்பார்கள்.

வண்ண வண்ணச் சேலை

தைப்பிறப்பு நெருங்கிவிட்டால், வெளிர் ஊதாவும் மஞ்சளும் பச்சையுமாக வரப்பும் வாய்க்காலும், ஆரைக்கீரையும் பாய்க்கோரையும், மீன்முள்ளும் கானா ஓலையும், சேம்பையும் சீலைப்பில்லும், குறிஞ்சாவும் நரிப்பயறுமாகத் தழைத்து வண்ணச் சேலை ஒன்று விரித்திருக்கும்.

அறுவடையின் துவக்கமாக ஈசானிய மூலையிலிருந்தே, நிலம் தெளியாத காலையில், புதிர் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து குத்துவிளக்கேற்றிக் கும்பிடுவார்கள். பனிப்பதத்திலும் புதிர்த் தாளும் நெல்லு மாக உரசிக்கொண்டு புதுக் கருக்குப் பட்டுப்புடவையின் சரசரப்போடு வீட்டுக்குள் வரும். மாவுக்கு நான்கு பேர் நின்று கதிரைப் பட்டமாக அறுத்துப் போடுவார்கள்.

மூன்று பிடி அறுத்துப்போட்டால் ஒரு அரி. மூன்று அரி ஒரு கோட்டு. கோட்டுகளைத் தலைப்பு மாற்றிக் கட்டி களத்துக்குத் தலைச்சுமையாகக் கொண்டுவருவார்கள்.

வயற்களம்

டெல்டாவில் பெரும்பாலும் வயற்களம்தான். தாளை அறுத்துச் சேறு உலர்ந்தவுடன் வயலைத் தென்னையின் அடிமட்டையால் தட்டிச் சமமாக்கினால் வயற்களம். பொரியுருண்டை எல்லாம் களம்களமாகக் கொண்டுவந்து நெல்லுக்கு விற்பார்கள்.

கட்டு கட்டுவதற்கும், கோட்டுப் பிடித்து அடிப்பதற்கும் கட்டுப்பழுதை, கோட்டுப்பழுதை என்று தாளைத் திரித்துத்தான் கயிறு. கண்டுமுதலாகும் நெல் அன்றைக்கு அன்றையே வீட்டுக்குப் போவதில்லை. களத்திலேயே சேர்த்துவைத்துப் பிறகு எடுத்துச்செல்வார்கள். இப்படிச் சேரும் நெல்லுக்குப் பட்டறை என்று பெயர். தாளின் மேல் பட்டறை போட்டு தாளைக் கொண்டே மூடிவிடுவார்கள். சாணிப் பாலைக் கொண்டு பட்டறைக்குக் குறிமந்தையால் குறியிடுவார்கள். பட்டறைக் கட்டாமல் (திருடாமல்) பார்த்துக்கொள்ள தலையாரிக் காவல் உண்டு.

கீழத் தஞ்சையில் அறுவடைக்கு விழுந்த கூலி முறை: கண்டுமுதலாகும் நெல்லுக்குக் கலத்துக்கு இரண்டு மரக்கால் கூலி. ஆறு மூட்டைக்கு ஒரு மூட்டை. சோழர்கள் அரசிறை கொண்ட வீதம்! கூடுதலாக மேங்கூலியும் கொடுப்பது உண்டு. தூற்றிய நெல் நீளவாக்கில் கிடக்கும். இது பொலி.

களக்குறுணி

பொலியை மரக்காலால் அளக்கும்போது “ஒன்று, இரண்டு ...” என்று சொல்லாமல் “லாபம், இரண்டு...” என்று அளப்பார்கள். ஒரு கை நெல் ஒரு சேரை. இரண்டு கையையும் சேர்த்து அள்ளினால் ஒரு கை. ஒரு மரக்கால் குறுணி. இரண்டு குறுணி பதக்கு. பன்னிரெண்டு மரக்கால் ஒரு கலம். ஐந்து கலம் ஒரு உறை. ஒரு உறை அளந்தால் கணக்குக்காக ஒரு சேரை உறை நெல்லைக் களத்தில் தனி இடத்தில் வைப்பார்கள்.

அடுத்த உறைக்கு மேலும் ஒரு சேரை. மரக்காலோடு நெல்லைக் கையால் கட்டி அளந்தால் கட்டளவை, விரல் மட்டும் தொட்டிருக்க அளந்தால் கீரளவை. உறை நெல் கிராமப் பூசாரிக்கு - இது உறைப்பிச்சை. பண்ணையிலிருந்தும் பூசாரிக்குக் களத்துக்குக் குறுணி (களக்குறுணி) உண்டு. ஆட்களும் கூலியிலிருந்து தலைக்கு ஒரு கை நெல் பூசாரிக்குக் கொடுப்பார்கள். இது கூலிப்பிச்சை. தலையாரிக்கும் களக்குறுணி உண்டு. வெட்டுமை (நீராணிக்கம்) பார்ப் பவருக்கு ஒரு கோட்டு கதிரும் ஒரு கோட்டு தாளும்.

ஏடாங்கரிசி

அறுவடையின் நிறைவில் ஏடாங்கரிசி என்று ஒரு வழக்கம். தென்மேற்கு மூலையில் கதிரை அறுத்துவந்து களத்தில் தட்டி, நிறை மரக்கால் நெல் அளந்து, அதன் மேல் வெற்றிலைப்பாக்கோடு ஆட்கள் பண்ணைக்குக் கொடுப்பார்கள்.

பண்ணையிலிருந்து வெற்றிலைப்பாக்கு, பூ, பழம், சந்தனம் வழங்கி ஆட்களுக்குக் களம்விடுவார்கள். அன்றைக்குக் களத்து நெல்லைப் பண்ணையில் ஒட்ட அளந்துகொள்ளாமல், பட்டுக்கம்பளம் விரித்ததுபோல் களத்தில் விட்டுவிடுவார் கள். பாக்குப்பதிய களம் விடுவது என்று பழக்கம். ஒரு கொட்டைப்பாக்கை எறிந்தால் நெல்லில் புதைந்து மறையும் அளவுக்கான நெல்.

ஆடியில் பொன்னேர் கட்டி ஈசானிய மூலையில் துவங்கும் சாகுபடி, நேர்எதிர் மூலையான தென்மேற்கில் தை மாத ஏடாங்கரிசி அறுவடையோடு நிறைவடையும். மாரிக்கால முடிவில் மார்கழி கர்ப்போட்டத்தின்போது ஈசானிய திக்கிலிருந்துதான் பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் புறப்பட்டு வான வீதியில் தென் மேற்குக்குப் பயணிக்கும்.

சொல் வளமே சிந்தனை வளம்

சம்பா சாகுபடியின் இந்த விவரிப்பில் உள்ளவையும் இல்லாதவையுமான பல சொற்கள் நிலஉடைமைச் சமுதாயத்தைக் கட்டமைப்பவையாக அடையாளம் ஏற்று, கட்டுடைந்து காணாமற் போயின. மொழி வகுத்த தடத்தில் சிந்தனை பயணிக்கிறது. மொழிக்கு வெளியே நிற்பது சிந்தனைக்கு எட்டாது. நெல்வளம் நமக்குக் காட்டும் சொல்வளம் சிந்தனை வளமன்றி வேறென்ன?

- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்