பிச்சை எடுத்துதாம் பெருமாளு, அதைப் பிடுங்கித் தின்றதாம் அனுமாரு என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதைப் போல, மனித உடலில் வாழும் நுண்ணுயிரியான பாக்டீரியா நம்மை அண்டிப் பிழைக்க, அந்த பாக்டீரியா மீதே ஒட்டுண்ணியாக வாழும், அதைவிட மிக நுண்ணிய உயிரிகளைச் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவத் துறையைச் சார்ந்த ஜெஃப் மக்லீன் (Jeff McLean) என்பவர், மனித உமிழ்நீரில் உள்ள டிஎன்ஏ எனப்படும் கரு அமில மூலக்கூறுகளை ஆராய்ந்துவருபவர். இவர் அந்த மூலக்கூறுகளை உமிழ்நீரிலிருந்து பிரித்தெடுத்து, அவற்றைச் சோதனைக்கூடத்தில் நுட்பமாக ஆராய்ந்தார். அப்போது எல்லாவிதமான டிஎன்ஏ கூறுகளும், உமிழ்நீரில் வாழ்ந்த ஏதாவது ஒரு அறிமுகமான பாக்டீரியாவின் பகுதியாக இருந்தது. ஆனால், ஒரே ஒரு டிஎன்ஏ கூறு மட்டும் எதனோடும் பொருந்தாமல் தனித்துக் கிடந்தது. நம் வீட்டை ஒருவர் ஆராய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தம்பியின் ஸ்கூல் பேக், நம்முடைய பேண்ட், அப்பாவின் லேப்டாப், அம்மாவின் நகைப்பெட்டியைத் தவிர, யாருக்கும் சொந்தமில்லாத ஒரு மர்மப்பெட்டி கிடந்தால் எப்படியிருக்கும்? அதுபோல தனித்துக் கிடந்த அந்த டிஎன்ஏ அவரது ஆர்வத்தைத் தூண்டியது.
இது யார் விட்டுச்சென்ற பொருளாக இருக்கும் என்று ஆராய்வதைப் போல, அவர் மனித உமிழ்நீரில் வாழும் அனைத்து வகை பாக்டீரியாக்களையும் நுட்பமாக ஆராய ஆரம்பித்தார். கடைசியில், பொருளுக்குரியவன் அகப்பட்டுக்கொண்டான். அதாவது, உமிழ்நீர் பாக்டீரியாவான ஆக்டினோமைசெஸ் ஓடொன்டுலிடிகஸ் (Actinomyces odontolyticus)ஐ நுண்ணோக்கியில் ஆராய்ந்தபோது, அதன் முதுகில் இன்னும் நுணுக்கமான நுண்ணுயிரி சவாரி செய்வது தெரியவந்தது. மர்மமாகக் கிடந்த டிஎன்ஏ கூறானது, அந்தப் புதிய நுண்ணுயிரி என்பதைக் கண்டுபிடித்தார். இந்த ஒட்டுண்ணியின் ஒட்டுண்ணியான நுண் பாக்டீரியாவுக்கு பிடல்லோவிப்ரையோ (Bdellovibrio) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஓடொன்டுலிடிகஸ் பாக்டீரியாவில் சுமார் 2,200 மரபணுக்கள் இருக்க, அதன் முதுகில் தொற்றிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டும் பிடல்லோவிப்ரையோ நுண்ணுயிரியில் வெறும் 700 மரபணுக்களே உள்ளன. எனவே, தனக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களையும் தனக்குத் தானே தயாரித்துக்கொள்ள முடியாது.(அது தெரிஞ்சா ஏன், உன் முதுகுல தொத்திக்கிட்டுத் திரியுறேன்?) தலைமுடி இல்லாமல் பேன் இருக்க முடியாது என்பதுபோல, ஓடொன்டுலிடிகஸ் இல்லாமல் இந்த பிடல்லோவிப்ரையோ தனித்து வாழவே முடியாது.
இன்னொரு விஷயத்தையும் கண்டுபிடித்திருக்கி றார்கள். இது எல்லோருடைய உமிழ்நீரிலும் அதிகமாக இருப்பதில்லை. ஈறு தொல்லை உள்ளவர்கள், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனும் கொடிய நோய் உள்ளவர்களின் எச்சிலில்தான் கூடுதலாகக் காணப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், நாற்றம்பிடித்த வாய்தான் இதற்குப் பிடிக்கும்போல.
அதெல்லாம் இருக்கட்டும்… இந்த நுண்ணுயிரியைக் கண்டுபிடித்ததால் நமக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்கிறீர்களா?
மாட்டின் முதுகில் உட்கார்ந்திருக்கிற காகம் அதன் உடலில் உள்ள உண்ணிகளைத் தின்று அதற்கு உதவுவதைப் போல, இந்த நுண்ணுயிரி பாக்டீரியாவானது, ஆக்டினோமைசெஸ் பாக்டீரியாவுக்குச் சில நன்மைகளைச் செய்கிறது. உதாரணமாக, ஆக்டினோமைசெஸ் பாக்டீரியா பல் ஈறு வீக்க நோயை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அதனை நம் ரத்தத்தில் உள்ள மேக்ரோபேஜ் செல்கள் அழித்துவிடுகின்றன. அதேநேரத்தில், இந்த ஒட்டுண்ணியுடன் இருந்தால், அந்த ஆக்டினோமைசெஸ் பாக்டீரியாவானது தப்பிவிடுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, ஒட்டுண்ணியுடன் இருக்கும் இந்த பாக்டீரியாவை, ஸ்ட்ரெப்ட்டோமைசின் எனும் நுண்ணுயிர்க் கொல்லியால்கூட அழிக்க முடிவதில்லை என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எனவே, இந்த நுண்ணுயிர்கள் கண்டுபிடிப்பானது ஆய்வு உலகின் புதிய கதவைத் திறந்து வைத்துள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல இதுபோன்ற நுணுக்க நுண்ணுயிரிகளைக் கொண்டே நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களுக்கு மருந்து தயாரிக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
வேணுமின்னா பாருங்க... அந்த நுணுக்க நுண்ணுயிரி மேலேயும் ஏதோ ஒண்ணு ஒட்டிக்கிட்டு வாழ்ற மாதிரி இருக்குன்னு புதுசா யாராவது கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிப்பாங்க.
- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago