சமீபத்திய இலங்கைப் பயணத்தின்போது, மத்திய மாகாணத்தின் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள நோர்வுட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இலங்கையின் ‘பிற’ தமிழர்களின் பங்களிப்புக்கான இந்திய அரசின் மிக உயர்ந்த அங்கீகாரமாக அது அமைந்தது. மலையகத் தமிழர்களின் பகுதிக்கு முதன்முதலாகச் சென்ற இந்தியப் பிரதமர் மோடிதான். மலையகத் தமிழர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் கட்டுவதற்கு இந்திய அரசு நிதி வழங்கும் என்றும் மோடி அறிவித்தார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள்போல் அல்லாது, மிகவும் பிற்படுத்தப்பட்ட, உரிமைகள் பெறப்படாத ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை மூத்த அமைச்சரும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவருமான லக்ஷ்மண் கிரியீல்லா, ஓராண்டுக்கு முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் மலையகத் தமிழர்களின் பரிதாப நிலைகுறித்து உரையாற்றினார். “சொந்தமாக ஒரு துண்டு நிலமோ, வீடோ இல்லாத ஒரே சமூகம் இதுதான்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் பங்களிப்பு
மலையகத் தமிழர்களின் பூர்விகம் தமிழ்நாடுதான். குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து இலங்கை சென்றவர்கள். 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவர்களது முன்னோர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக காபி தோட்டங்களில் பணிபுரிவதற்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். பெரும்பாலானோர் தலித்துகள். பின்னர், தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் அவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இன்றுவரை அவர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாகவே பணிபுரிகிறார்கள். 2016-ல் மட்டும் தேயிலை ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.8300 ஆயிரம் கோடி வருவாய் கிடைத் திருப்பது இலங்கைப் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்புக்கு ஓர் உதாரணம். இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் 12.3% அது. மலையகத் தமிழர் களின் எண்ணிக்கை 16 லட்சம் என்று மலையகத் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் கூறுகிறார்கள். எனினும், 2012 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மலை யகத் தமிழர்களின் எண்ணிக்கை 8,40,000. அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 4%.
என்னென்ன தேவைகள்?
வளர்ச்சிக் குறிகாட்டிகளைப் பொறுத்தவரை சிறப்பாக முன்னேறிவரும் நாடு என்று இலங்கை கருதப்பட்டாலும், மலையகத் தமிழர்களின் நிலை முற்றிலும் வேறாக இருக்கிறது. தேசிய அளவில் குழந்தை இறப்பு விகிதம் 1,000-க்கு 11 என்று இருக்கும் நிலையில், மலையகத் தமிழர்களின் பகுதிகளில் அது 1,000-க்கு 29 ஆக இருப்பதை அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு தேசிய அளவில் 18% என்றால், மலையகப் பகுதிகளில் 42%. அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் ஒரு காலத்தில் ‘நாடற்றவர்கள்’ எனும் நிலையில் இருந்த மலையகத் தமிழர்களிடையே, இன்றைக்கு ஆறு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் இருவர் கேபினட் அமைச்சர்கள்.
அதிகாரபூர்வ கணிப்பின்படி, கடந்த ஒரு நூற்றாண்டாக ‘லைன் வீடுகள்’ என்று அழைக்கப்படும் முகாம் பாணிக் கட்டிடங்களில் சுமார், 1.6 லட்சம் மலையகத் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்குப் புது வீடுகள் கட்டித்தரப்பட வேண்டியிருக்கிறது. அடிப்படையான இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டிருக்கும் இந்திய அரசு, 4,000 வீடுகள் கட்டித் தர முன்வந்திருக்கிறது. முதற்கட்டமாக, 1,134 வீடுகளின் கட்டுமானப் பணி நடந்துவருகிறது. மேலும், 30,000 லைன் வீடுகளைச் செப்பனிட்டுத் தரும் பணியில் இந்தியா உதவும் என்று மலையகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பெரிய அளவில் இந்தியாவின் உதவி தேவைப்படும் மற்றொரு விஷயம், கல்வி என்கிறார் கண்டியைச் சேர்ந்த மூத்த சிவில் சமூகச் செயல்பாட்டாளர் பி.முத்துலிங்கம். இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலச் செல்லும் 25,000 பேரில், 150 பேர்கூட மலையகத் தமிழர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. மலையகத் தமிழர் சமூக மாணவர்களுக்குச் சிறப்புக் கல்வி உதவித்தொகையை இந்திய அரசு வழங்கலாம். தொழிற்பயிற்சி ஆசிரியர்களில் தமிழர்களில் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவு. மலையகத் தமிழர்களின் தேவைகள் மிக அடிப்படையானவை; எளிதானவை. நீண்டகாலமாகக் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் மலையகத் தமிழர்களின் நலனுக்காக மேலும் பல திட்டங்களை இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்க வேண்டும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago