2013-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ஐ. நா. ஆதரவுடன் செயல்படும் 'ரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனம்’ என்ற சிறு அமைப்பொன்று பெறுகிறது. 'முறைசாராத ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில்’நார்வீஜிய நோபல் குழு இதைத் தேர்வுசெய்தது. சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணி மூலம் சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருக்கும் அமைப்பு இது.
'உலக அமைதிக்கான பங்களிப்பை எங்கள் அமைப்பு ஆரவாரமின்றியும் உறுதியாகவும் செய்துவருகிறது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். கடந்த சில வாரங்களின் சூழல் எங்கள் பணியைச் சர்வதேசச் சமூகம் முழுவதற்கும் தெரியப்படுத்தியிருக்கிறது’என்று நெதர்லாந்தின் டென் ஹாக்ஸ் நகரில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் இந்த அமைப்பின் இயக்குநர் அஹ்மெத் ஊஸூம்ஸூ.
வெளித் தெரியாதபடி பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு அமைப்புக்கு, முக்கியத்துவம் கிடைக்கச் செய்யும் உச்சப்புள்ளிதான் இந்த நோபல் பரிசு என்று அயலுறவு அதிகாரிகள் சிலர் கருதுகிறார்கள். சிரியர்களில் சிலரோ, ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்புக் குழுவைப் புகழ்பவர்கள் பட்டியலிலிருந்து விலகி நிற்கின்றனர். சிரியாவில் 31 மாதங்கள் நீடித்த உள்நாட்டுப் போரில் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் உயிரிழக்கக் காரணம் வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், ஏவுகணைத் தாக்குதல் போன்ற மரபான ஆயுத முறைகளே என்பது அவர்களின் கருத்து.
இந்த அமைப்பின் பணிக்கு உரிய அவசரத்தன்மை, அபாயம் ஆகியவை காரணமாக இந்த அமைப்பு நோபல் பரிசை வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சிறுமிகளின் கல்விக்காகப் போராடிவருபவரும், அந்தப் போராட்டத்தில் தனது உயிரையே பணயம் வைத்தவருமான பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்குத்தான் இந்த விருது கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்தால் மிகவும் இள வயதில் நோபல் வென்றவராக அவர்தான் இருப்பார் என்றும் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய சில நாட்கள் பரபரப்பாகப் பேச்சு இருந்தது.
'ரசாயன ஆயுதங்களின் பயன்பாடு, சர்வதேசச் சட்டத்தின்படி தடைசெய்யப்பட வேண்டியது’என்று இந்த அமைப்பும் 1997-ல் இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த ஒப்பந்தமும் சொல்கின்றன என்று நோபல் பரிசின் பாராட்டுரை தெரிவிக்கிறது. 'சமீபத்தில் சிரியாவில் நடந்த நிகழ்வுகள் இது போன்ற ஆயுதங்களை ஒழிப்பதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன’என்றும் அந்தப் பாராட்டுரை தெரிவிக்கிறது.
ஆஸ்லோவைத் தலைமையிடமாகக்கொண்ட நோபல் குழு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இது போன்ற ஓர் அமைப்புக்கு விருது வழங்கியிருக்கிறது. 2012-ல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.
189 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த அமைப்பின் ஆய்வாளர்கள் ஆக்ஸ்ட் 21-ல், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பிறகு, இந்த மாதத் துவக்கத்திலிருந்து சிரியாவுக்கு வர ஆரம்பித்தார்கள். ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஏற்பாட்டின்படி ரசாயன ஆயுதங்களைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன்மூலம் இந்த அமைப்பின் 190-வது உறுப்பு நாடாக ஆவதற்கு சிரியா சமீபத்தில் ஒப்புக்கொண்டது.
ரசாயனத் தாக்குதல் நடந்த பிறகு, சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற சூழலில் ரஷ்யாவின் தலையீட்டால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இந்த சமரசத்தின் அடிப்படையில் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
'ரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனம், ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதில் இடைவிடாது பணியாற்றிவருகிறது.நோபல் பரிசுக்குத் தகுதியானதுதான் இந்த அமைப்பு’என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான மிகைல் கொர்பசேவ்.
'ஆல்ஃப்ரெட் நோபல் மட்டும் தற்போது உயிரோடு இருந்தால், ஆயுத ஒழிப்பு என்பது மனித குலத்துக்குச் செய்யும் மகத்தான தொண்டு என்பதைத் தனது அமைப்பு மீண்டும் ஒருமுறை அங்கீகரித்திருக்கிறது என்று எண்ணி அகமகிழ்ந்திருப்பார்’என்று ஐ.நா-வின் ஆயுத ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரியும் ரசாயன ஆயுதத் தடுப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியவருமான ஏஞ்ஜெலா கேன் தெரிவித்திருக்கிறார்.
"யூத இன அழிப்பின்போது ஹிட்லரின் ராணுவத்தினராலும் அதற்குப் பிறகு வெவ்வேறு நாடுகளாலும் போராளிக் குழுக்களாலும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன" என்கிறார் நார்வேயின் முன்னாள் பிரதமரும் நோபல் பரிசுக் குழுவின் தலைவருமான தோர்பிஜ்யன் ஜாக்லந்து. "கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசுகளை மனதிற்கொண்டு விருது ஐரோப்பாவை மையம்கொண்டுவிட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் ஜாக்லந்து 'இந்த விருது உலகம் முழுவதற்குமானது" என்கிறார்.
1997-ல் ஏற்படுத்தப்பட்ட ரசாயன ஆயுத ஒப்பந்தம் நான்கு இலக்குகளைக் கொண்டது:
1, சர்வதேசச் சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் ரசாயன ஆயுதங்கள் யாவும் அழிக்கப்படுதல். 2, புதிய ரசாயன ஆயுதங்கள் உற்பத்திசெய்வதைத் தடுத்தல். 3, ரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்படி உலக நாடுகளுக்கு உதவுதல். 4, ரசாயனப் பொருட்களைப் பாதகமில்லாத முறைகளில் பயன்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல். இந்த இலக்குகளைச் செயற்படுத்துவதைத் தனது நோக்கமாகக்கொண்டது இந்த அமைப்பு.
தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை 86 நாடுகளில் 5,000 ஆய்வுகளை இந்த அமைப்பு அரவமின்றியும் விளம்பரப்படுத்திக்கொள்ளாமலும் செய்திருக்கிறது. இந்த அமைப்பு ஆய்வு நடத்தியதிலேயே பெரிய நாடுகள் அமெரிக்காவும் ரஷ்யாவும்தான். ரசாயன ஆயுத ஒப்பந்தத்தில் சிரியா நீங்கலாக இதுவரை கையெழுத்திடாத நாடுகள் அங்கோலா, எகிப்து, வடகொரியா, தெற்கு சூடான். இஸ்ரேலும் மியான்மரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், கையெழுத்தானதை அவற்றின் அரசாங்கங்கள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
சிரியா மீதான நடவடிக்கை அதன் அவசரத்தன்மையிலும் ஆபத்திலும் முன்னுதாரணமற்றது. 2014-ன் மத்தியில் சிரியாவில் உள்ள பயங்கர ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற நெருக்கடியான கால அவகாசத்தை ஐ.நா-வின் பாதுகாப்பு சபை இந்த நடவடிக்கைக்குக் கொடுத்தது.
"ரசாயன ஆயுதங்களை அழிக்கும்படி ரசாயன ஆயுதங்களைப் பெருமளவு வைத்திருக்கும் நாடுகளுக்கு இந்தப் பரிசு நினைவுறுத்தும். ஏனென்றால், 'சிரியா போன்ற நாடுகள் ரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதால் நாங்களும் வைத்திருக்கிறோம்’என்று சொல்பவர்கள் அவர்கள்” என்கிறார் ஜாக்லந்து.
"பேரழிவுக்கான ஆயுதங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு இப்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைச் சாதித்தால் வரலாற்றிலேயே மிக முக்கியமான நிகழ்வாக அது இருக்கும்" என்றும் சொல்கிறார் ஜாக்லந்து.
சிரிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் இந்த விருதைப் பற்றி எவருடைய கருத்துகளையும் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், சிரியாவைச் சேர்ந்த பலரையும் சிரியா மோதலை உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் பலரையும் இந்த விருது கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ரசாயன ஆயுதங்கள் என்பவை சிரியா விவகாரத்தைப் பொறுத்தவரை திசைதிருப்பும் விஷயம்தான் என்கிறார்கள் அவர்கள். காஃப்ரான்பெல் நகரில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார்கள். குண்டு மழை பொழிவதுபோலவும் புகைமூட்டம் எழுவதுபோலவும் ரத்த வெள்ளத்தில் சடலங்கள் கிடப்பதுபோலவும் அருகில் செயலிழக்க வைக்கப்பட்ட ரசாயனக் குண்டுக்கு மேலே ஸ்பானர் ஒன்றைக் கையில் பிடித்தபடி வெற்றிக்களிப்புடன் நீலத் தலைக்கவசத்தை அணிந்த ஐ. நா. பணியாளர் நிற்பதுபோன்றும் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரும் சிரிய அரசின் முக்கியமான ஆதரவாளருமான செர்கெய் லாவ்ரொவ், சிரியாவின் ஆயுதங்கள் சர்வதேசச் சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்படுவது திட்டமிட்ட காலத்துக்குள் செய்துமுடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"இந்த அமைப்பு சிரியாவில் எங்கே சென்றாலும் சரி, சிரியாவுக்குச் சமாதானத்தை ஏற்படுத்தப்போவதில்லை. போரைத் துவக்குவதில் சிரியாவின் அதிபர் அசாதுக்கு உள்ள திறனில் இந்த ரசாயன ஆயுதங்களுக்கு முக்கியப் பங்கு இல்லை. அதனால்தானே அவர் இந்த ஆயுதத் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க இசைந்தார்" என்கிறார் ரையான் கிராக்கெர். ஆஃப்கானிஸ்தான், இராக், சிரியா போன்ற நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக இருந்தவர் இவர்.
- நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago