காந்திக்குப் பிறகு இந்தியாவும் உலகமும் மதித்த தலைவராக இருந்த நேரு, எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பிடிக்காமல் போனார்? காஷ்மீர் பிரச்சினையைச் சரியாகக் கையாளாதவராக, சீனப் போரில் இந்தியாவின் தோல்விக்குக் காரணமானவராக அவரது பிம்பம் அவசர அவசரமாக இன்று கட்டமைக்கப்படுகிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டை நாசமாக்கிவிட்டார் என்றும், காலனிய ஆட்சியின் நீட்சியாகச் செயல்பட்டார் என்றும் தொடர்ந்து அவர் தாக்கப்படுகிறார். குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்தார் என்று, சந்ததியினர் செய்த பாவத்துக்கு நிகரற்ற ஜனநாயகவாதியான அவரைக் குற்றவாளியாக்கிவிட்டார்கள். இவ்வளவுதான் நேருவா?
இல்லை. நேருவின் நிர்வாகத் தவறுகளைவிட நேருவின் சாதனைகள் இந்திய ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் பெரும் கல்வி, அறிவியல் நிறுவனங்கள் பலவற்றைத் தொடங்கியது நேருதான் என்பதே மறந்துபோகும் அளவுக்கு அவற்றின் அதிகாரமும் செயல்பாடுகளும் இன்று துருத்திக்கொண்டிருக்கின்றன. பசியிலும் ஏழ்மையிலும் துவண்டுபோயிருந்த தேசத்தைத் தொழிற்புரட்சி நோக்கிக் கரம்பிடித்து நேரு அழைத்துச் சென்றார். அவரது ஆட்சிக்காலத்தில் தொழில்துறையின் வளர்ச்சி சராசரியாக 7%. உற்பத்தி மும்மடங்காகித் தொழில்துறை வளர்ச்சியில் ஏழாவது இடத்தைப் பிடித்தது இந்தியா. ஆங்கிலேய அரசின் கீழ் வலுவான அமைப்பாக உருவாகியிருந்த ராணுவத்தைக் குடியாட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வெற்றிகரமாக நேரு கொண்டுவந்தார்; இல்லையேல் என்னவாகியிருக்கும் என்பதற்கு பாகிஸ்தானே சிறந்த உதாரணம். அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற பல அமைப்புகளின் பின்னால் இருக்கும் நேருவின் பங்களிப்பு அளப்பரியது. நேரு அமைப்புகளை உருவாக்கியவர்; எனவே, அதே அமைப்புகளின் பின்னால் அவர் ஒரு வரலாறாக மறைந்துபோவது இயற்கைதான்.
காந்திக்குப் பிறகு இந்தியாவின் பன்முகத்தன்மையை உணர்ந்தவர் நேரு. “இந்தி வேண்டுமா.. வேண்டாமா என்பதை இந்தி பேசாத மாகாண மக்களிடமே விட்டுவிடுகிறேன்” என்றார். மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக வழிசெய்தார். என்னதான் சுதந்திரம் கிடைத்தாலும் பொதுவான கலாச்சாரம் இல்லாத தேசம் நிச்சயமாக உடைந்து சிதறிவிடும் என்று உலகமே அவநம்பிக்கையுடன் கவனித்துக்கொண்டிருந்தபோது, அத்தேசத்தை உயிர்த்திருக்கச் செய்யும் சாகசத்தை நேரு நிகழ்த்திக் காட்டினார். வேற்றுமையை அங்கீகரித்து ஒற்றுமையாக இருக்கும் மதச்சார்பற்ற இந்தியாவை ஜனநாயக வழியில் கட்டமைத்தார்.
பிரிவினை கால இந்து - முஸ்லிம் மதக் கலவரச் சூழ்நிலைகளில் நேருவின் செயல்பாடுகளை உணர்ந்துகொள்வது இன்றைய இந்தியாவுக்கு மிகவும் அவசியம். நேரு பொறுப்பை எடுத்துக்கொண்டபோது, இந்தியா மிக மோசமான உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. ஜின்னாவின் வெறுப்பரசியலால் உருவான பாகிஸ்தான் கருத்தாக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை போன்ற இந்து அடிப்படைவாத இயக்கங்கள் தலைநகரிலேயே வன்முறையை வளர்த்தன. இந்து அடிப்படைவாத இயக்கங்களுக்கு எதிராக நின்றுகொண்டு, காங்கிரஸையும் கவனித்தபடி, அகதிகளையும் ஏற்றுக்கொண்டு நேரு அரசாங்கம் சந்தித்த அழுத்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதன் பின்னணியிலேயே காந்தி ஏன் நேருவை வாரிசாக அறிவித்தார் என்பதைப் பார்க்க வேண்டும்.
1942-ல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டியில்தான் காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக நேருவை அறிவிக்கிறார். “என்னுடைய வாரிசு ராஜாஜியோ சர்தார் வல்லபபாய் படேலோ கிடையாது. ஜவாஹர்லாலே என் வாரிசு. இப்போது நான் என்ன செய்கிறேனோ, அதை எனக்குப் பிறகு அவர் தொடர்வார். அந்த வேலையைத் தொடர்வது மட்டுமல்ல, நான் பேசுகின்ற மொழியிலேயே அவரும் பேசுவார்” என்கிறார் காந்தி. அப்போதுதான் வெறுப்பு விதையை ஜின்னா ஆழமாகத் தூவ ஆரம்பித்திருந்தார். தேசம் வன்முறையால் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருந்தது. மேலும், பெண்களையும் ஒடுக்கப்பட்டோரையும் சமமாக, சக மனிதர்களாகப் பாவிக்கும் இந்திய சமூகத்தை உருவாக்கும் அவசியம் இருந்தது. அதுவும் வெவ்வேறு அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தியாவை ஒற்றுமையாக வைத்துக்கொண்டே அந்த சாகசத்தைப் புரிய வேண்டியிருந்தது. எனவே, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஜனநாயகவாதியான நேருவாலேயே இத்தேசத்தை ஒன்றுபடுத்தி, அதில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது காந்தியின் உறுதியான நம்பிக்கை.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு ஜனவரி 1948-ல் ஒரு கடிதம் எழுதுகிறார் நேரு. “... நடக்கும் கொலைவெறித் தாண்டவத்தையும் சக மனித வெறுப்பையும் ஆரம்பித்தது பாகிஸ்தானும் அதன் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தவர்களும்தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை; அதே வேளையில், இரண்டு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. இதில் எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்போது நம் கண்முன்னே இருக்கும் பிரச்சினை, பாகிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்பதல்ல; நம் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே” என்கிறார். அதற்குச் சில நாட்கள் முன்பு ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர்களின் பண்புகளைப் பாராட்டியிருந்தார். அதை சுட்டிக்காட்டிய நேரு, “நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஊக்குவித்துப் பேசியதாக அறிந்தேன்; அதை எண்ணி வருந்துகிறேன். இந்தியாவில் இயங்கிவரும் விஷமத்தனமாக இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ். முக்கியமானது” என்று கவலைப்படுகிறார்.
காந்தி கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, சர்தார் வல்லபபாய்க்கு நேரு கடிதம் எழுதுகிறார். “கடந்த சில வாரங்களாக டெல்லியில் உருது, இந்தி செய்தித்தாள்கள் விஷம் தோய்ந்த எழுத்துகளை எழுதிவருகின்றன. அவற்றில் சில இந்து மகாசபையின் அதிகாரபூர்வ இதழ்கள்... நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இது போன்ற பத்திரிகைகள்தான் முழுக் காரணமாக விளங்குகின்றன என்பது உண்மை. இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் போகிற போக்கைப் பார்க்கும்போது, அவர்களிடம் நடுநிலை காட்டுவது கடினமாகிக்கொண்டே வருகிறது” என்கிறார் நேரு. இதுதான் இந்தியாவின் அப்போதைய நிலைமையாக இருந்திருக்கிறது.
காந்தி கொல்லப்படுவதற்கு முன், அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஷ்யாம பிரசாத் முகர்ஜிக்கு நேரு கடிதம் எழுதுகிறார். “இந்து மகாசபையின் நடவடிக்கைகளால் நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். அது வெறுப்பையும் வன்முறையையும் தொடர்ந்து தூண்டியபடி இருக்கிறது. மிகவும் ஆபாசத்தோடும் அநாகரிகத்தோடும் விஷ வார்த்தைகளால் காந்தியைத் தாக்குவதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ‘காந்தியே செத்துப்போ’ என்று கத்துகிறார்கள். ‘நமது குறிக்கோள் நேருவையும், சர்தார் படேலையும், மௌலானா ஆசாத்தையும் தூக்கில் தொங்கவிடுவதே’ என்று இந்து மகாசபையின் முக்கியத் தலைவர் கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக, அடுத்தவரின் அரசியலில் நாம் தலையிடக் கூடாது… ஆனால், அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதனால்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். நீங்கள் இந்து மகாசபையோடு நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறீர்கள். இந்து மகாசபையின் இப்போக்குக்கு உங்களின் நிலைப்பாடு என்ன என்று அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையிலும் பொதுவெளியிலும் எங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று நீங்களே ஒரு யோசனையை எங்களுக்குச் சொல்லுங்களேன்” என்று கேட்கிறார் நேரு. காந்தி கொல்லப்பட்ட பிறகு ஷ்யாம பிரசாத் முகர்ஜிக்கு நேரு இரண்டாவது கடிதத்தை இப்படி எழுதுகிறார்: “அரசியலில் இனி மதவாத இயக்கங்கள் பங்குபெறவே கூடாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். குறிப்பாக, உங்களைப் போன்ற மத்திய அமைச்சர் ஒருவர் இந்து மகாசபையோடு நெருக்கம் பாராட்டுவது உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் தலைக்குனிவாக இருக்கிறது. இந்து மகாசபை போன்ற மதவாத இயக்கங்களோடு தொடர்பை முறித்துக்கொள்ளுங்கள். அவற்றுக்கு எதிராக வெளிப்படையாகவே உங்கள் குரலை உயர்த்த வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அவ்வாறு நீங்கள் செய்யும் எந்தக் காரியத்துக்கும் காங்கிரஸ் கட்சியும் இந்திய நாடும் உங்களை மனமார வாழ்த்தும்.”
நேரு தவறே செய்யாதவர் அல்ல; ஆனால் அத்தவறுகளை விட, நேரு செய்த சாதனைகள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘நேரு தன் தவறுகளைவிட உயர்வானவர்’ என்பார் பிரதாப் பானு மேத்தா. இன்று வளர்ந்துவரும் அடிப்படைவாதத்துக்கு எதிராக நேருவிடம் பதில்கள் நிறைய இருக்கின்றன; அவரை நாம் துணைகொள்ள வேண்டும்.
வ. விஷ்ணு, மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: vishnuvaratharajan@gmail.com
மே 27 நேரு நினைவு நாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago